தூத்துக்குடி மருத்துவர் படுகொலை

தூத்துக்குடியில் ஜனவரி 2, திங்கள் கிழமை இரவு சுமார் 10 மணிக்கு 55 வயதான Dr. சேதுலட்சுமி அவருடைய தனியார் மருத்துவமனையில் நோயாளிகளைப் பார்த்துக் கொண்டிருந்த பொழுது மகேஷ் என்ற ஆட்டோ ஓட்டுனரால் கொடூரமாக வெட்டிக் கொல்லப் பட்டார். இந்தச் சம்பவம் தமிழகத்தில் மருத்துவ வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
சம்பவம் நடந்ததற்கு மூன்று நாள் முன்னர், டிசம்பர் 30, வெள்ளிக்கிழமை மகேஷ் அவருடைய 24 வயதான ஆறு மாத கர்ப்பிணி மனைவி நித்யாவை வயிற்று வலி, கை கால் வீக்கம் உள்ளது என்று தூத்துக்குடி ஈ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அழைத்து  வந்திருக்கிறார். நித்யாவிற்கு கர்ப்பக்கால உயர் இரத்த அழுத்தம் (Pregnancy-induced Hypertension, pre-eclampsia) உள்ளது என்றும் வயிற்றில் உள்ள சிசு இறந்துவிட்டது என்பதையும் Dr. சேதுலட்சுமி தெரிந்துகொண்டார். உயர் இரத்த அழுத்தம் மற்றும் ப்ரீ எக்ளாம்ப்சியாவால் தாயின் உயிருக்கே ஆபத்து உள்ளது என்பதை விளக்கி 
 
இறந்துவிட்ட சிசுவை வெளியே எடுக்க அவசரமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர் சொல்லியிருக்கிறார். இந்த மாதிரியான சமயத்தில் சிசுவை உடனடியாக வெளியே எடுப்பதுதான் தாய்க்கு  நல்லது. உலகத்தில் எந்த நாட்டில் இருந்தாலும் அதுதான் சிகிச்சை. அவசரமாக சிசேரியன் அறுவை சிகிச்சை செய்து சிசுவை வெளியே எடுக்க ஏற்பாடு செய்தார் மருத்துவர். சிசேரியன் அறுவை சிகிச்சை செய்துக் கொண்டிருக்கையில் நித்யாவிற்கு ஹெல்ப் சிண்ட்ரோம் (HELLP syndrome) என்ற இரத்த அழுத்தம் மற்றும் ப்ரீ-எக்ளாம்ப்சியாவின் கொடிய பின் விளைவு தாக்கியுள்ளது. எளிதாக விளக்க வேண்டும் என்றால், உயர் இரத்த அழுத்தத்தால் கருப்பையினுள் கட்டுப்படுத்த முடியாத உதிரப் போக்கு ஏற்ப்பட்டு அதிர்ச்சி (hemorrhagic shock) நிலைக்குச் சென்றார் என்று சொல்லலாம்.  
 
ஹெல்ப் சிண்ட்ரோமால் வரும் அதிர்ச்சி நிலையிலிருந்து ஒரு கர்ப்பிணிப் பெண்ணைக் காப்பாற்றுவது என்பது சகல வசதிகளும் கொண்ட பெரிய மருத்துவமனைகளிலேயே கஷ்டமான விஷயம். இதை அறிந்த மருத்துவர் நித்யாவை உடனடியாக  ஆம்புலன்சில்  தூத்துக்குடியில் உள்ள ஒரு பெரிய தனியார் மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றார். கவனிக்க. மருத்துவர் நோயாளியை தனியாக அனுப்பவில்லை. தானும் அதே அம்புலன்சில் உடன் சென்றார். தனியார் மருத்துவமனையைச் சென்று அடையும் முன் நித்யா இறந்துவிட்டார். 
 
பத்திரிக்கை செய்திகளின்படி இறந்த நித்யாவின் உடலைப் பெற்றுச் செல்லும் பொழுது குடும்பத்தினர் மருத்துவர் சேதுலட்சுமியிடம் அவர் உயிரைக் காப்பாற்ற இவ்வளவு முயற்சி எடுத்ததற்கு நன்றி சொல்லிவிட்டுப் போனார்களாம். 
 
ஆனால் மூன்று நாள் கழித்து குடி போதையில் தன்னுடன் மூன்று சகாக்களை ஆட்டோவில் கூட்டி வந்து மருத்துவரின் தனியார் மருத்துவமனையில் அவரை வெட்டிச் சாய்த்துவிட்டான் மகேஷ். 
 
சில ஊடகச் செய்திகளில் மருத்துவரின் கவனக்குறைவால் (negligence) நித்யா இறந்துவிட்டார் என்பதைப் போன்ற செய்திகள் வெளியாகியுள்ளன. நடந்தவற்றை முழுமையாக விசாரிக்காமல் பரபரப்புச் செய்தி கொடுத்திருக்கிறார்கள். 
 
இதில் மருத்துவர் செய்திருக்கக்கூடிய தவறுகள் மிகச்சிலவே. அவைகளில் முக்கியமானது, சூழ்நிலையின் முக்கியத்துவத்தையும், அவசரத்தையும், அபாயத்தையும் குடும்பத்தாரிடம் விபரமாக விளக்காமல் போனது. ஆனால் அந்த அவசரக் கட்டத்தில் விபரமாக விளக்கமளிக்க அவருக்கும் நேரம் இருந்திருக்காது, குடும்பத்தாருக்கும் அதைப் புரிந்துகொள்ளும் மனநிலை இருந்திருக்காது என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். இன்னொரு தவறு – அது இனிமேல் இந்த மாதிரி சூழ்நிலையைச் சந்திக்கும் அனைத்து மருத்துவர்களும் நினைவு கூறவேண்டியது – இந்த மாதிரியான இக்கட்டான நிலைமையில் தங்களிடம் வரும் நோயாளிகளை அவர்களுக்கு சிகிச்சை செய்யும் அனைத்து வசதிகளும் இல்லை என்றால் உடனடியாக அந்த வகையான வசதிகள் இருக்கும் பெரிய மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப் பரிந்துரைக்க வேண்டும். 
 
நித்யா இறந்தபின் அவருடைய கணவன் மகேஷ் மருத்துவர் சேதுலட்சுமியை மிரட்டியதாகவும், மருத்துவர் இதைப் பற்றி காவல் துறையில் புகார் கொடுத்ததாகவும் சில செய்திகள் வந்துள்ளன. மகேஷ் காவல்துறையினருக்குப் பரிச்சையப்பட்ட குற்றவாளி, ஏற்கனவே அவன் மேல் கொலைக் குற்றம் உள்ளது. மருத்துவரின் புகாரை காவல்துறையினர் அலட்சியப் படுத்திவிட்டார்கள் என்று மருத்துவ வட்டாரங்களில் பேச்சு நிலவுகிறது.
 
கடந்த சில ஆண்டுகளாக மருத்துவமனைகளும் மருத்துவர்களும் வன்முறைத் தாக்குதலுக்குண்டாகும் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. அவைகளின் உச்சக்கட்டமாக இந்தக் கொடூரக் கொலை நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து தமிழக அரசு மருத்துவர்கள் சங்கமும், இந்திய மருத்துவச் சங்கத்தின் தமிழகக் கிளையும் ஜனவரி 4, 5, புதன், வியாழன் இரண்டு நாள் கண்டன வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப் போகிறார்கள். புதன்கிழமை அரசு மருத்துவமனைகளிலும், வியாழக்கிழமை தனியார் மருத்துவமனைகளிலும் வேலை நிறுத்தம் நடைபெறும்.  அவசரகால சேவைகளைத் தவிர மற்ற அனைத்து மருத்துவச் சேவைகளும் இவ்விரண்டு நாட்கள் இயங்காது.   தகவல் ஆதாரம் : ஹிந்து

தொடர்புடைய படைப்புகள் :

One thought on “தூத்துக்குடி மருத்துவர் படுகொலை

  • January 9, 2012 at 12:02 pm
    Permalink

    Hello, I heard that that doc is an anestheologist and is not a gynae and she shudn’t be doing any operations at all, and she did an operation for a pregnant woman is the biggest crime of all. Isnt that enuff to punish that doctor?.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : January 4, 2012 @ 1:59 pm