அமெரிக்க அரசியல் 2012 – 1

அமெரிக்க அரசியலில் மறுபடியும் இது ஒரு சலசலப்பான நேரம்!
 
4 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு அச்சாரங்கள் போடப்படும் நேரம். நவம்பர் 2012ல் தேர்தல் நிச்சயமாக உண்டு.
 
ஜனநாயகக் கட்சியைப் பொருத்தவரை 2012 எலெக்‌ஷனுக்கு அதிபர் யார் என்பதில் பிரச்னை எதுவும் இல்லை. ஒபாமாவுக்கு 98 சதவீத கட்சி வாக்குகள் பதிவாகி, அடுத்த எலெக்‌ஷனிலும் அவர்தான் நிற்பார் 
 
என்பது தெளிவாகவே சொல்லப்பட்டு விட்டது. அவரை எதிர்த்து நிற்க அங்கே ஆள் இல்லை.
 
ஆனால் ஒபாமாவை எதிர்த்து யார் குடியரசுக் கட்சியின் சார்பாக நிற்கப் போகிறார் என்பதில்தான் அந்தக் கட்சிக்குள் பெருங்குழப்பம், பேய்க்குழப்பம்!
 
Herman Cainகடந்த சில பல மாதஙகளாகவே ரிக் பெர்ரி, ரான் பால், ஸாரா பாலின், நியூட் கிங்ரிச், மிட் ராம்னி, ரிக் ஸாண்டோரம், ஹெர்மன் கெய்ன், மைக்கேல் ஸ்டீல் போன்ற பெயர்கள் அடிபட்டுக் கொண்டிருந்தன. இதில் 
 
சிலர் அந்தந்த மாநில கவர்னர்கள் அல்லது கட்சிப் பிரபலங்கள் அல்லது கட்சித் தூண்கள்.
 
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஒருவர் நிற்கிறாரென்றால் அவருக்கு மிகப்பெரும் பணபலம், ஆள்பலம், மீடியா பலம் இருந்தால் மட்டும் போதாது. ஒருவர் தேர்தலுக்கு நிற்கப்போகிறேன் என்று சொல்லிவிட்டால் 
 
போதும். ஆரம்ப கட்டத்திலேயே ஊடகங்கள் இந்த ‘ஹோப்ஃபுல்கள்’ பற்றி தோண்டித் துருவி விசாரித்து, ஆராய்ந்து, அவர்களை ஒரு வழியாக உயிரோடு சமாதியும் கட்டி விடுவார்கள்.
 
“மூன்றாம் வகுப்பில் நீ ஒரு முறையாவது ரப்பர் திருடி இருக்கிறாயா?”, “ஆபீஸ் ஸ்டேஷனரி செலவில் எத்தனை தடவை உன் சொந்த காரியத்துக்கு ஸ்டாம்ப் ஒட்டி உபயோகித்திருக்கிறாய்?” என்பதில் 
 
ஆரம்பித்து, கேர்ள் ஃப்ரண்ட்ஸ், பாய் ப்ரண்ட்ஸ், பார்களில் தெரிந்தோ தெரியாமலோ அடித்து கூத்துகள், பிரஸ் மீட்டிங்குகளில் எடுத்த அபத்த வாந்திகள், பெண்டாட்டிக்குத் தெரியாமல் பிறந்த குழந்தைகள், 
 
புருஷனுக்குத் தெரியாத கள்ள உறவுகள், செல்ஃபோன் விடியோக்கள் என்றெல்லாம் இது பக்காவாக நீளும்.
 
இந்த முறையும் அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது. 
 
“அய்யய்யோ, இதெல்லாம் கிராஃபிக்ஸ், மார்ஃபிங் வேலை” என்றெல்லாம் நித்தியமாக, ஐ மீன், சத்தியமாக யாரும் தப்பித்துக்கொள்ள முடியாது. மானத்தை வாங்கித் தோலுரித்து உலர்த்தியும் விடுவார்கள்.
 
தகாத உறவுமுறைகள் வைத்திருந்ததாகவும், பெண்களை அவமானப்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டதாகவும் கறுப்பரான ஹெர்மன் கெய்ன் சமீபத்தில் மீடியாவில் மாட்டிக்கொண்டு பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல. 
 
“இந்த விவகாரமே வேணாம், ஆளை விடுங்கடா சாமி” என்று அலறிக்கொண்டு அவர் ஓடிய கதையை படித்திருப்பீர்கள். ஸாரா பாலின் விவகாரம், வேண்டாம், அதுவும் நாறிப்போன நாரி சமாசாரம்.
 
Iowa Caucus என்கிற சொற்பிரயோகம் அடிக்கடி பேப்பர்களில் அடிபடுகிறதே, அப்படியென்றால் என்ன?
 
நம் ஊரில் திராவிடக் கட்சிகள் வட்டம், மாவட்டம், கோட்டம், உட்கோட்டம் என்றெல்லாம் தமிழ்நாட்டையே பங்குபோட்டு பிரித்துக் கொள்வதில்லையா? ஆட்சி வசதிக்காக என்று சொல்லி பிரித்துக் 
 
கொள்வதில்லையா? 
 
அதேபோல்தான் ஐயோவாவிலும் 99 கோட்டங்கள் என்று பிரித்திருக்கிறார்கள். இந்த 99 கோட்டங்களிலும், அவற்றின் 1774 உட்பிரிவுகளிலும்  முறையே குடியரசு, ஜனநாயகக் கட்சிகளின் கூட்டங்கள் நடக்கும். 
 
குவார்ட்டர், பிரியாணி, குத்துப்பாட்டு எல்லாம் அங்கேயும் உண்டு. அந்தந்த கட்சிகளின் பதிவுபெற்ற வாக்காளர்கள் தத்தம் ஆட்களுக்கு வோட் போடுவார்கள். பிடிக்காதவர்களுக்கு நெகடிவ் வோட்டும் குத்துவார்கள்.
 
அது சரி, தம்மாத்துண்டு மாநிலமான ஐயோவாவுக்கு மட்டும் அப்படி என்ன முக்கியத்துவம்?
 
அதென்னவோ தெரியவில்லை, இதுக்கெல்லாம் நான் பொறுப்பில்லை சாமி, இதெல்லாம் நான் அமெரிக்கா வருவதற்கு முன்பிருந்தே ‘இனிமே அதெல்லாம் அப்படித்தான்’ ரகம். ஆனால் 1972ல் இருந்து இது 
 
நடைமுறையில் இருந்து வருகிறது. இதனால் அந்த மாநிலத்துக்கு எக்கச்சக்கமான டூரிஸ்ட்கள், பப்ளிசிடி, நல்ல வருமானம் கிடைப்பதென்னவோ உண்மை. 
 
சரி, இந்த முறை ஐயோவாவில் ’நடந்தது என்ன’?!
 
டெக்ஸாஸ் கவர்னர் ரிக் பெர்ரி தான் இங்கே ஜெயிப்பார் என்றுதான் பலரும் நினைத்தார்கள். ஆனால் கடைசி நிமிடத்தில் “அதெல்லாம் இல்லை, ரிக் ஸாண்டோரம் தான்” என்றார்கள். ஆனால், கட்டக்கடைசியில் 
 
எட்டே வோட் வித்தியாசத்தில் மாஸசூஸெட்ஸ் கவர்னரான மிட் ராம்னி இங்கே வெற்றி பெற்றிருக்கிறார்.
 
அப்படியானால் மிட் ராம்னிதான் குடியரசுக் கட்சியின் வேட்பாளரா?
 
அப்படி மிக நிச்சயமாகச் சொல்லிவிட முடியாது. ஏனென்றால் இந்த ஆரம்பநிலை தேர்தலில் ஜெயித்து, ஆனால் அதன்பின் கட்சியின் ஏகோபித்த வேட்பாளராக மிளிர முடியாமல் ஓடி ஒளிந்த சரித்திரப் பிரபலங்கள் 
 
பலர் உண்டு. இப்போதைக்கு மிட் மாமாவுக்கு சனிப்பெயர்ச்சி வொர்க் அவுட் ஆகி இருக்கிறது என்பதே இன்றைய உண்மை. இன்னமும் கட்சியில் உள்ள ராகுக்கள் அவர் காலைக் கடித்து கீழே இறக்கிவிடாமல் 
 
இருக்கவேண்டும். பிரஸ் மீட்டிங்களில் அவர் எதையாவது பெனாத்தாமல் இருக்கவேண்டும், கட்சி வேட்பாளரானாலும் தொலைக்காட்சி நேர்முகங்களின்போது எதையாவது பிதற்றாமல இருக்கவேண்டும், இப்படி பல 
 
’டும்டும்’கள் உண்டு.
 
இந்த எலெக்‌ஷன் முடிவுகளால் ‘நடக்கப்போவது என்ன?’
 
ஐயோவாவுக்கு அடுத்தது ‘நியூ ஹாம்ப்ஷைர்’. அப்படியே இது அனுமார் வால் போல் நீண்டு நாடு முழுவதுமாக செல்லும்.
 
இதனாலெல்லாம் ஒபாமாவை குடியரசுக் கட்சி வீழ்த்தி விடமுடியுமா?
 
ஆகட்டும், பார்க்கலாம் !

தொடர்புடைய படைப்புகள் :

One thought on “அமெரிக்க அரசியல் 2012 – 1

 • January 6, 2012 at 8:51 am
  Permalink

  ** அது சரி, தம்மாத்துண்டு மாநிலமான ஐயோவாவுக்கு மட்டும் அப்படி என்ன முக்கியத்துவம் **

  இதனால்தான் IOWA இத்தனை முக்கியத்துவம்.

  http://history.howstuffworks.com/american-history/iowa-caucus.htm

  ஹெர்மன் கெய்ன் செய்த தில்லாலங்கடி மேட்டர் பற்றி கூடுதலாக எழுத முடியுமா ? 🙂

  தேர்தல் முடியும்வரை இந்த தொடர் தொடருமா ? இல்ல கபாலி பாதியில காணாம பூடுவாரா ?

  உங்க கணிப்பில் யார் ஜெயிப்பார் ? யார் ஜெயிக்கணும் ?

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : January 5, 2012 @ 11:18 pm