அமெரிக்காவில் மருத்துவ காப்பீடு : ஒர் அலசல் – 1

 

உடல் நல பராமரிப்புத் துறையில் பலவித மாற்றங்களை, சீர்திருத்தங்களை கொண்டுவர அரசு முயற்சிக்கும் இந்த நேரத்தில் இன்னொருமுறை அமெரிக்க உடல்நல காப்பீடு பற்றி அறிந்துகொள்வது அவசியமாகிறது. ஆண்டொன்றுக்கு கிட்டதட்ட 30% உள்நாட்டு உற்பத்தியின் நிதி இதை பராமரிக்கவே செலவாகிறது. வளர்சியடைந்த நாட்டின் பொதுமக்களின் உடல்நல பராமரிப்புக்காக அரசாங்கம் செலவிடுதல் அவசியம்தான் என்றாலும், இதில் பலவித குறைகள் இருக்கின்றன அதை உணர்ந்து அதை களைவதும் அவசியமாகிறது. தனியார் நிறுவனங்களால் நடத்தப்படும் உடல்நல காப்பீடு நிறுவனங்களும் அதை வழங்கும் பொருட்களில் பல தனிப்பட்ட சிறப்பு அம்சங்களும் வாய்ப்புக்களும் மக்களுக்கு தேர்ந்தெடுக்க பல வாய்ப்புகள் தருவதால் மிகவும் நேர்த்தியாகவும் நல்ல தகுதியுடனும் இருப்பது நல்லதே. எந்த ஒரு freemarketலும் இததகைய வாய்ப்புகள் மக்களுக்கு நன்மையைத்தரவல்லன. இந்த கருத்தை பலர் ஒப்புக்கொள்ளப்போவதில்லை என்றாலும், ஒரு காப்பீடு, தனக்குத் தேவையான மருத்துவர், அவர் பணி இவற்றை தேர்ந்தெடுக்கும் உச்சகட்ட உரிமை தனிமனிதனுக்கே உண்டு. அதற்கான விலையை நிர்ணயிப்பதற்கான உரிமைகூட கூட ஓரளவிற்கு தனிமனிதனிடம் இருக்கிறது. கனடாவில் உடல்நல பராமரிப்பு அரசாங்கத்தாலே நடத்தப்படுகிறது. ஆனால் இங்கே 47% அரசாங்க உதவியோடு இலாபத்திற்காக நடத்தப்படும் தனியார் நிறுவனங்களாலே நடத்தப்படுகிறது. ஆகையால் மொத்த செலவும் அதற்கடுத்த வருடம் பயனார்களின் மீதே திணிக்கப்படுகிறது. ஒருவகையில் காப்பீடு நிறுவனங்கள் மருத்துவர்கள் செயல்பாட்டு முறையே இதன் காரணம் என்று கூறினாலும், நிறைய கட்டுரைகளை படித்தும் நிறைய தொலைகாட்சி நிகழ்சிகளை படித்தும் மருத்துவ அறிவோடு வரும் நோயாளிகள் அதிக பரிசோதனைகள் செய்யாமல் இருந்தால் திருப்தி அடைவதில்லை, ஆஸ்திரேலியா, நியுசிலாந்து, கனடா ஜெர்மனி போன்ற நாடுகளோடு ஒத்து நோக்கும்போது ஒரு சர்க்கரை நோயை உறுதி செய்யவே இங்கு 6 வித பரிசோதனைகள் செய்யப்படுவதாகவும் மற்ற நாடுகளில் இரண்டு அல்லது மூன்று பரிசோதனைகளே செய்யப்படுவதாகவும் தெரிகிறது. இதனாலேயே மருத்துவர்கள் தேவையே இல்லாமலும் நிறைய பரிசோதனைகளை செய்ய வேண்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் சிக்கலான நோய்கள் இருப்பதாக அறியப்படுமானால், மூன்று நான்கு மருத்துவர்களை நாடி அவர்கள் கருத்தை கேட்க நோயாளிகள் விழைகிறார்கள். இதற்காக அந்த மருத்தவ செலவு எல்லாம் வருட இறுதியில் கணக்கிடப்பட்டு மொத்தப் பயனாளர்களே பகிர்ந்து கொள்ளப்படவைக்கிறார்கள். மிக அதிக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கின்றது என்பதாலேயே இங்கே 40 மில்லியன் மக்கள் காப்பீடே இல்லாமல் இருக்கிறார்கள்.
 
காப்பீடுதான் இதை அனுமதிக்குமே என்று நோயாளிகளும், காப்பீடுதானே கொடுக்கப்போகிறது என்று மருத்துவர்களும் செயல்படுவதால் இங்கே உடல்நலதிட்டங்கள் இடியாப்ப சிக்கலாகி கிடக்கின்றன. உடல்நல காப்பீடுகளுக்கான கட்டணம், மக்கள் பணிசெய்யும் நிறுவனங்கள் மூலமாக முழுதும் அல்லது 60-80 சதவவிகித கட்டணம் கட்டப்படுவதால் பெரும்பாலோர் இதை கண்டுகொள்வதில்லை. தனியார் நிறுவனக்கள் பலவகை காப்பீடுகள் திட்டங்கள், பலவித நுணுக்கங்கள் கொண்டிருக்கின்றன. இதை படித்துப் புரிந்து தெரிவு செய்வதே கூட சராசரி மனிதர்களுக்கு சிரமாமனது. மிகவும் பரவலாக மக்கள் தேர்ந்தெடுக்க கூடிய HMO திட்டத்தில் பயனர்கள் தன் தனிப்பட்ட மருத்துவராக ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். இவ்வாறு தேர்ந்தெடுகப்பட மருத்துவருக்கு அந்த பயனாருக்கென வருடம் ஒரு குறிப்பிட தொகையை அரசு மருத்துவருக்கு வழங்குகிறது. உதாரணமாக ஒரு மருத்துவரை தங்கள் தனி மருத்துவராக ( personal care provider) தேர்ந்தெடுத்தால் மாதம் ஒருவருக்காக $100 அவருக்கு கிடைக்கிறது , ஆனால் அந்த 100 பேருமே அவரிடம் சிகிச்சைக்காக செல்வதில்லை. இது அவர்களுக்கு கிடைக்கும் அதிகப்படி ஊதியம். இதனால் அந்த மருத்துவர் சில பரிசோதனைகளுக்கு காப்பீடுகள் தரும் அல்லது நிர்ணயிக்கும் தொகையை ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். ஆனால் மருத்துவர்கள் இதை முறியடிக்க காப்பீடு ஒரு குறிப்பிட்ட சிகிச்சைக்காக 30% தான் உச்சகட்ட ஊதியமாக நிர்ணயித்து இருந்தால், அவர்களுக்கு சேரவேண்டிய 100% கிடைக்க அவர்கள் அதிகபட்ச கட்டணத்தை கேட்டு பில் அனுப்புவார்கள். உதாரணம்: காய்ச்சலை கவனிக்க மருத்துவரின் கட்டணம்: $45. ஆனால் இன்சூரன்ஸ் 30% தரும். எனவே மருத்துவர் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு அனுப்பும் இன்வாய்ஸ் $150. அதில் 30% அவருடைய கட்டணம்: $45. உங்களுக்கு வரும் படிமத்தில் இன்சூரன்ஸ் எவ்வளவு திருப்பித்தந்திருக்கிறது, எவ்வளவு கட்டணம் கேட்கப்பட்டது போன்ற விவரங்கள் இருக்கும். அதிகப்படியாக மருத்துவர்கள் வசூலிக்காத போது, மீதித்தொகையை அவரவர் இன்சூரன்ஸ் திட்டப்படி நோயாளிகளே செலுத்த வேண்டும். இதை தவிர்க்க தங்கள் காப்பீடு ஒப்புக்கொள்ளாத மருத்துவரிடம் நோயாளிகள் சிகிச்சைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். 
 
இதே காப்பீடே இல்லாத ஒருவர் மருத்துவரிடம் சென்றால் மருத்துவர் அவரிடம் அந்த $45 தொகையை மட்டுமே வசூலிப்பார். காப்பீடுகள் சில குறிப்பிட்ட மருத்துவர்களை மட்டுமே தங்கள் நிறுவனம் ஒப்புதல் தந்தவர்களாக தெரிவு செய்கிறது. பயனர்கள் ஒரு குறிப்பிட்ட மருத்துவரை தனது மருத்துவராக அறிவித்தபின் அவரை மட்டுமே தனது உடல் நல கோளாறுகளுக்காக சந்திக்க முடியும். அவருடைய அலுவகம் சிபாரிசு செய்தால் மட்டுமே அவருடைய கடிதத்துடன் ( referral) மற்ற ஸ்பெஷலிஸ்ட்களை பார்க்க முடியும். மறந்து போய் பயனர்கள் ஏதேனும் ஸ்பெஷலிஸ்ட்களை பார்த்துவிட்டால், காப்பீடுகள் அவர்களின் பணிக்கான கட்டனத்தை தருவதில்லை, அது பயனர்களை சார்ந்ததே. ஆனால் அந்த நெட்வெர்க்கில் இருக்கும் ஸ்பெஷலிஸ்ட்களை பரிந்துரைக்க நோயாளிகளுக்கு உரிமை உண்டு. மருத்துவர் சொல்பவரிடம்தான் செல்ல வேண்டும் என்பதில்லை. தங்களுக்குப் பிடித்த மருத்துவர் பெயருக்கு சிபாரிசுக் கடிதம் பெற்றுக்கொள்ளலாம். என் மகனுக்கு சில முக்கிய பரிசோதனைகள் செய்ய வேண்டி வந்தபோது நான் பிலடெல்பியா மருத்துவமனைக்கே இன்சூரன்ஸ் அனுமதி பெற்று அழைத்துச் சென்றேன். நோயாளிகள் தங்கள் மருத்துவரை காய்ச்சல் போன்ற ஏதேனும் உடல்நலம் சரியாக இல்லாத போது சந்திக்க வேண்டுமானால், பெரும்பாலும் உடனே நேரம் கிடைப்பது அரிது. பொதுவாகவே காப்பீடுகள் அங்கிகாரம் பெற்ற மருத்துவர்களை நிறைய பயனர்களை தங்கள் கிளையண்டுகளாகப் பெற்றிருப்பதால், எப்போதுமே கூட்டம் இரூக்கும், அவர்களை நிறைய நோயாளிகளை பெற சொல்லி காப்பீடுகள் கட்டாயப்படுத்தும், எனவே அவர்கள் அலுவகதில் 10 பேர் பார்க்க வேண்டிய நேரத்தில் 15 பேருக்கு அனுமதி தந்திருப்பார்கள். அவரவர் வரும் நேரத்தை பொருத்தே மருத்துவர் நேரம் தரப்படும்     (first come first served) எனவே காத்திருக்கும் நேரம் மிக அதிகமாக வாய்ப்பு உண்டு. இதனாலே குழந்தைகளுக்கான மருத்துவர்கள் தங்கள் நோயாளிகளை அவசர சிகிச்சைக்கு அழைத்து வர சொல்வார்கள். ஏனேனில் இரத்த பரிசோதனை முதல் எல்லாவற்றையும் உடனே செய்ய முடியும். இதனாலே அமெரிக்காவில் அவசரசிக்கிசைக்கு செல்லும் நோயாளிகள் அதிகரித்திருக்கிறார்கள். சாதரணமாக $100 ஆகும் ஒரு பணிக்கு இப்போது $1000 வரை செலவாகும். அவசர சிகிச்சைப்பிரிவுக்கான கட்டணம் மருத்துவமனைக்கு மருத்துவமனை மாறுபடும். ஒரு குழந்தைநல மருத்துவர் சில குறிப்பிட்ட மருத்துவமனைகளில் தங்கள் நோயாளிகள் வர அனுமதி பெற்றிருப்பார்கள். இதை தக்கவைக்க அவர்கள் அந்த மருத்துவமனைக்கு ஒரு கட்டணம் செலுத்துவார்கள். 
 
காப்பீடு அங்கிகாரம் பெற்ற மருத்துவர்களிடம் காத்திருக்கும் நேரம் அதிகம் என்றால், மத்திய அரசால் நடத்தப்படும் ஏழை மக்களுக்கான இலவச மருத்துவமனைகளில் கூட்டம் பற்றி கற்பனை செய்து பாருங்கள். சில துறை தேர்ச்சி பெற்ற மருத்துவர்களை சந்திக்க வேண்டுமானல் அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்த பிறகும் அவருடைய அலுவகத்தில்  மணிக்கணக்காய் காத்திருந்த அனுபவம் கூட உன்டு. ஆனால் ஒரு முறை மருத்துவர்களை சந்தித்து அவருடைய நிரந்தர கிளையண்டாய் ஆனபின் இந்த காத்திருத்தல் கொஞ்சம் கொஞ்சமாக குறையலாம். ஒருமுறை நான் ஒரு இருதய நோய்க்கான மருத்துவர் அலுவலகத்தில் காத்திருக்க வேண்டியதாகிவிட்டது. மருத்துவர் காலதாமததிற்கு மன்னிப்பும் கேட்காதது ரொம்பவே சினத்தை ஏற்படுத்த நான் காப்பீடு நிறுவனத்திற்கு தொலைபேசி, அவருக்கு அந்த பணிக்கான கட்டணத்தை கொடுக்க கூடாது என்று கடிதங்கள் எல்லாம் எழுதியபின், இப்போதெல்லாம் உடனுக்குடன் பார்க்க முடிகிறது. இதைப் பெரும்பாலான மக்கள் பயன் படுத்துவதில்லை. மருத்துவரின் சிகிச்சை பிடித்திருக்கிறது ஆனால் அவரின் கஸ்டமர் சர்வீஸ் பிடிக்கவில்லை என்றால் இன்சூய்ரன்ஸ் நிறுவனத்திற்கு புகார் தரக்கூடிய உரிமை மக்களுக்கு உண்டு. நானும் அதே துறையில் இருப்பதால் நிறைய நேரங்களில் நான் காத்திருக்காமல் பார்க்க முடியும். இது இந்தியாவிலும் அகில இந்திய வைத்திய விஞ்ஞான கழகம் போன்ற மருத்துவமனைகளில் ரொம்பவே உபயோகமாக இருந்திருக்கிறது. இங்கே மருத்துவரை சந்தித்து பிறகு இரத்த பரிசோதனைக்காக செல்லவேண்டுமானல் அங்கேயும் காத்திருத்தலுக்கான நேரம் மிக அதிகம். அங்கே இருந்து ரிசல்ட் வரும் நேரமும் பிறகு மருத்துவர் மீண்டும் அழைத்து பேசி மருந்து தருவதற்குள் உங்கள் காய்ச்சல் எல்லாமே போயே போய்விடும். இதனாலேயே நிறைய மருத்துவர்கள் ஒரு பிராட் ஸ்பெக்ட்ரம் ஆண்டிபயாடிக் எழுதிக்கொடுத்து விடுகிறார்கள். மருத்துவர் இரத்த பரிசோதனைக்காகவோ அல்லது எக்ஸ்ரே எடுக்கவோ அனுப்பினால் அங்கேயும் இரண்டு வித கட்டணங்கள் உண்டு. எடுத்துக்காட்டாக ஒரு மார்பக எக்ஸ்ரேவிற்கு அரசாங்கம் மெடிக்கேர் மூலமாக $104 தான் தரும். ஆனால் தனியார் காப்பீடு நிறுவனங்கள் இன்னும் அதிகமாக $250 வரை தரும். அதே இன்சூரன்ஸ் இல்லாமல் நீங்கள் சென்றால் ரேடியாலஜிஸ்ட் பொறுத்து கட்டணம் குறையும். 
 
இன்சூயரன்ஸ் இருந்தால், எக்ஸ்ரே எடுக்கும் முன் பெறக்கூடிய முன்கூட்டியே அங்கீகாரம் பெற்ற எண்  ஒவ்வொருவகை பரிசோதனைக்கும் தனிபட்ட கொள்கை, சட்டங்கள் உண்டு.. அவசர நிலையில் எடுக்கப்படும் எக்ஸ்ரே, ஒரு குறிப்பிட்ட நோய் இருக்கிறதா என்பதை கவனிக்க (diagnostic), பொதுவாக ஸ்கிரீனிங் செய்யப்படும் எக்ஸ்ரே பொருத்தே உங்கள் காப்பீடு அதை அனுமதிக்கும்.
 
அரசாங்க அலுவலகங்களில் நாங்கள் ஒரு இரத்த பரிசோதனைக்கு $10, ஒரு மார்பக நிழல்படத்திற்கு $94 என  கட்டணம் நிர்ணயித்திருக்கிறோம். இது பொதுவாக காப்பீடுகள் வசூலிப்பதில் 60% தான். ஆனால் இன்சூரன்ஸ் இல்லாதவர்கள் கிட்டதட்ட $500 வரை தரவேண்டியதாக இருக்கும். ஸ்க்ரீனிங் எக்ஸ்ரேவிற்கும் டயக்னாஸ்டிக் எக்ஸ்ரேவிர்கும் கட்டணம் வேறு வேரறு. ஒரு காப்பீடு அவசரத் தேவைக்காக ஒரு ஸ்க்ரீங் எக்Sரே அனுமதிக்க, அங்கே மருத்துவர் தவறுதலாக டயக்னாஸ்ட்க் எண்ணை எழுதிவிட்டால், ரேடியாலஜிஸ்ட் டயக்னாஸ்டிக்கான கட்டணத்தையே வசூலிப்பார். அதை காப்பீடு தராது, எனவே அது நோயாளிகளின் பொறுப்பாகிறது. இது போன்ற பல நுண்ணிய சட்டங்அளை படித்து நினைவில் நிறுத்தி சிகிச்சை பெறுவது படித்தவர்களுக்கே கஷ்டம், அதில் இதை கொஞ்சம் கூட புரிந்துகொள்ள முடியாதவர்கள் நிலையை என்ன சொல்வது?
 
பெரும்பாலான நேரம் ஒரு நோயாளி அறுவை சிகிச்சைக்கு பின் எத்தனை காலம் மருதுவமனையில் இருக்க வேண்டும் என்பதை மருத்துவர்கள் தீர்மானிப்பார்கள். ஆனால் இங்கே அதை நிர்ணயம் செய்வது காப்பீடுகளே. அதற்கான ஒரு அட்டவணையே உண்டு. 
 
பரிசோதனைகள், சிறப்பு பணி மருத்துவர்கள், அவசர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை பற்றிய விவரங்கள் அடுத்த பகுதியில்…
 
(தொடரும்)

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : January 11, 2012 @ 10:39 pm