நெடுந்தொடர்களின் ரசிக ரசிகைகளின் கவனத்திற்கு

இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் சன் தொலைக்காட்சியின் திருமதி செல்வம், தென்றல் மற்றும் செல்லமே தொடர்களை விரும்பிப் பார்க்கிறார்களே என்று தொடர்களைப் பார்க்கலானேன். நெடுந்தொடர்களின் நெடிய சிந்தைனைகள் என்னை நெளிய வைத்தது.
 
திருமதி செல்வம் தொடரில் கதா நாயகன் செல்வத்தின் தங்கை ராணி அலுவலக விஷயமாகத் தன்னுடன் பணிபுரியும் சொந்தக்காரருடன் சிதம்பரம் சென்றது அறிந்து வெகுண்ட காதல் கணவனும் அவனது குடும்பமும் மிகவும் மங்கலகரமான வார்த்தைகளைப் பயன்படுத்தி அந்தப் பெண்ணின் ஒழுக்கத்தைச் சின்னாபின்னபடுத்தி தொடருக்கே அழகு சேர்த்தது.
 
இதே நாள் அரை மணி நேரம் கழித்து வந்த 'தென்றல்' தொடரில் அம்மாவின் பேச்சையும் யாரோ ஒரு மூன்றாம் நபரின் பேச்சையும் கேட்ட காதல் கணவன் அருமையாக மணி மணியாக வார்த்தைகளை வீசி 'இனி உன்னுடன் வாழ முடியாது' என்று வீட்டை விட்டு வெளியே துரத்தி, அந்தப் பெண்ணையும் பெண்ணைப் பெற்றவரையும் அவமரியாதை செலுத்தியது கொடுமையிலும் கொடுமை. அதாவது கட்டின மனைவி பேச்சைக் கேட்காமல் மீதி யார் என்ன துர்போதனை செய்தாலும் அதைக் கேட்டு குத்தாட்டம் ஆடும் அருமையான நாயகனைக் காட்டும் தொடர்.
 
அட இந்த இரண்டு தொடர்களையும் இயக்குவதும் குமரன் என்ற இயக்குனர் தான். இவருடைய தொடரான 'திருமதி செல்வம்' பெயரிலேயே ஒரு இணையத்தளம் இயங்கி அந்தத் தொடரின் பாத்திரங்கள் செய்தது சரியா? தவறா? என்று விவாதித்துக் கொண்டிருக்கிறது ஒரு ரசிகர் கூட்டம்.
 
இவர் தேர்ந்தெடுத்த கதையையோ கதைக்களத்தையோ நடிகர்- நடிகையரை வேலை வாங்கிய முறையையோ இயக்கத்தையோ குறை கூறவில்லை. வேண்டாத அபத்தங்களை நீக்கி அழகான ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை விதைத்து வித்தியாசம் காட்டலாமே. இதைப் பார்க்கும் எத்தனை குடும்பங்களில் பொருளாதார நெருக்கடியால் வேலைக்குச் செல்லும் மருமகளைச் சந்தேகப்பட்டு பாடாய்ப் படுத்தப் போகிறார்களோ?
 
ராதிகாவின் 'சித்தி' 'அண்ணாமலை' தொடர்கள் நன்றாக இருந்ததே, 'செல்லமே' நன்றாக இருக்குமா என்று ஆராய்ந்தால் 'எனக்கு உன் மேல் நம்பிக்கை இல்லை, வெளியில் போ' என்று செல்லம்மாளைத்(ராதிகாவை) துரத்துகிறார் கணவன். தன் குழந்தையை நார்த்தனார் எடுத்துப் போய் விட, குழந்தையைக் கேட்கும் செல்லம்மாளிடம், 'இந்தக் குழந்தை எனக்குப் பிறந்தது என்பது உண்மையானால் இந்த இடத்தை விட்டு ஓடிப் போ' என்னே அருமையான உரையாடல்கள். அடுத்து செல்லம்மாளின் சின்ன நாத்தனார் மாமியார் கொடுமை தாங்காமல் தோழியுடன் தங்க, திரும்ப அவளது புகுந்த வீட்டிற்கு அழைத்து வருகிறார் செல்லம்மா. அதற்கு அந்தப் பெண்ணின் மாமியார் பேசும் வார்த்தைகள் அடடா தமிழ் அகராதியில் இப்படி எல்லாம் கெட்ட வார்த்தைகள் போட்டுத் திட்ட முடியுமா? என்று மெய் சிலிர்க்க வைத்தது.
 
'ரா ஒன்' தமிழில் பார்த்தவர்களுக்குத் தெரியும், கரீனா கபூர் அந்தத் திரைப்படத்தில் வசவு வார்த்தைகள் பற்றி ஆய்வுக்கட்டுரை எழுதுவார். அவர் பேசும் வார்த்தைகளைக் கூட நல்ல வார்த்தைகளாகச் சேர்த்துக் கொள்ளும் அளவிற்கு இந்த மெகா சீரியல்களின் ஆண்களும் பெண்களும் தீய சொற்களும் அருவெறுக்கத்தக்க செயல்களும் செய்கிறார்கள். 'அவ நல்லா இருக்க மாட்டா, வயிறெரிஞ்சு சொல்லறேன், நாசமாப் போவா', 'என் பையன் கட்டின தாலியை நீயே அறுக்கிறியா? நான் அறுத்து எறியட்டுமா?' 'நீ ஒரு அப்பனுக்குப் பிறந்திருந்தா ' நீ பொறந்திருக்கவே கூடாது, உன் தோஷம் ஒட்டுவாரொட்டி' அச்சில் ஏற்ற முடியாத வாய் கூசும் வார்த்தைகளைப் பேசுகிறார்கள்.
 
இரவு நேரத்துத் தொடர்கள் மட்டுமில்லாமல் மதிய நேரத்துத் தொடர்களும் இதே லட்சணம் தான். ஐந்தாறு ஆண்டுகளாக வலம் வரும் 'அத்திப்பூக்கள்' தொடரில் பன்னிரெண்டு ஆண்டுகள் கழித்து கர்ப்பமாகும் நாத்தனாரின் கருவைப் பில்லி, சூனியம் வைத்துக் கலைத்து கணவருடன் சேர விடாமல் விவாகரத்து வாங்க வைத்துத் தன்னுடன் வைத்துக் கொள்கிறாள் பணத்திற்கும் சொத்திற்கும் ஆசைப்படும் வில்லி. படிக்கும் போதே அடி மனதைப் பிசைகிறதே, பார்த்தால் என்னாகும்? இதைப் பார்க்கும் துர்தேவதைகள் சீரியலில் காட்டியதை நடைமுறைப்படுத்தினால்?
 
ஒரு திரைப்படத்தில் வடிவேலு அவசரம் என்பதால் 4, 5 பெண்களைச் சந்து பொந்துகளில் எல்லாம் கஷ்டப்பட்டு ஆட்டோவில் ஓட்டி வந்து வீட்டில் விட்டால் யாருக்கோ ஆபத்து என்று அவர்கள் பேசிக் கொண்டது சீரியலில் என்பதைப் புரிந்து நொந்து போவாரே அதே நிலைமை தான் பார்ப்பவருக்கும் எங்கே சென்று கொண்டிருக்கிறது தமிழ் நெடுந்தொடர்கள்? அதிலும் பரபரப்பு என்ற பெயரில் இவர்கள் நடத்தும் அட்டகாசங்களைக் கேட்பாரில்லையா?
 
இந்தத் தொடர்களை இயக்கும் இயக்குனர்கள் மற்றும் வசனகர்த்தாக்களின் புண்ணியங்களே இந்த வசவு வார்த்தைகள். பெண்களின் கற்பை அசிங்கப்படுத்தும் வார்த்தைகள், வேலைக்குப் போகும் பெண்களின் ஒழுக்கத்தைச் சந்தேகக்கண்ணோடு பார்க்கச் செய்யச் சொல்லும் சீரழிவு அதிலும் இப்படிப்பட்ட அபத்தங்களை ஊக்குவிப்பது பெரும்பாலும் பெண்களே. கெட்ட வார்த்தைகள், கள்ள உறவு, பெண்ணிற்குப் பெண்ணே எதிரி என்று காட்டுவது. அதிலும் சித்தி, மாமியார், நாத்தனார், காதலி என்று இந்தத் தொடர்களின் எதிர் நாயகிகள் அனைவரும் பெண்களே.
 
விசு, விக்ரமன் போன்றவர்கள் குடும்பக்கதைகளை இயக்கி வந்தார்கள். விசுவின் 'சம்சாரம் அது மின்சாரம்' எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தட்டுவதில்லை. கூட்டுக் குடும்பத்தின் மேன்மையையும் மருமகள் என்றால் லட்சுமி போல இருக்க வேண்டும், எப்படி வாழ வேண்டும்? எப்படி வாழக்கூடாது? என்று அழகாகப் பாத்திரங்கள் வழியே காட்டிய குடும்பச்சித்திரம். முன்பெல்லாம் குடும்பப்படங்கள், பக்திப்படங்கள் என்று ஆர்வத்துடன் பார்க்கச் சென்றவர்கள் இன்று திரையரங்குகள் பக்கமே செல்லாமல் சீரியலே கதி என்று மதி மயங்கிக் கிடக்கிறார்கள். நல்வழிப்படுத்தினால் சரி, தவறான பாதையைக் காட்டினால் நம் மக்களின் நிலை என்னாவது?
 
இந்தப் பொன்னான தொடர்களைப் பார்ப்பது பெரும்பாலும் குடும்பப்பெண்கள். சில நேரங்களில் குழந்தைகளும் உடனிருப்பார்கள். அப்படி இருக்கும் போது இந்த மாதிரி தொடர்களும் அவை தெரிவிக்கும் சிந்தனைகளும் சமுதாயத்திற்கும் வளரும் தலைமுறைக்கும் ஆரோக்கியமானதா?
 
படித்தவரும் படிக்காதவரும் பாரபட்சமின்றிப் பார்க்கும் பொழுது போக்கு சாதனம் தொலைக்காட்சித் தொடர்கள். அவை நல்ல கருத்துக்களை அறிவுறுத்தும் நோக்கில் இருக்க வேண்டுமே தவிர குட்டையைக் குழப்புவதாக அமையக் கூடாது. பொழுது போக்கிற்காய் நாங்கள் நெடுந்தொடர்களைப் பார்த்தே தீருவோம் என்று தொடர்களைப் பார்க்க விரும்புவர்கள் பிஞ்சு நெஞ்சில் நஞ்சைக் கலக்கும் தவறான பாதையைக் காட்டும் தொடர்களைத் தயவுசெய்து குழந்தைகளுடன் பார்க்காதீர்கள்.
 
இதற்குப் பதில் இசை நிகழ்ச்சிகள் அல்லது பாடல்களைக் கேட்டு ரசிக்கலாமே.

தொடர்புடைய படைப்புகள் :

3 thoughts on “நெடுந்தொடர்களின் ரசிக ரசிகைகளின் கவனத்திற்கு

 • January 19, 2012 at 9:49 pm
  Permalink

  மெகாத்தொடர்கள் விறுவிறுப்பிற்காகப் பரபரப்பான காட்சிகளை அமைத்து மக்களைச் சிந்திக்க விடாமல் தடுக்கின்றனர். காவல் நிலையம், மருத்துவமனைக் காட்சிகள் இல்லாத தொடர்களே இல்லை. கள்ள உறவுகள், வசவு வார்த்தைகள் இதைக் காட்டாத தொடர்களுமில்லை. எப்படியோ இதைப் படிக்கும் சிலரது மனதில் மாற்றம் ஏற்பட்டாலே போதும்.

  திருமதி புவனா, அரவிந்த் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

  Reply
 • January 19, 2012 at 5:31 am
  Permalink

  அக்கா இதை தம் வீட்டிலேயே அமல்படுதலாமே!நல்ல முயற்சி!

  Reply
 • January 17, 2012 at 10:06 pm
  Permalink

  …. immensely paining Mrs. Gayathri Venkat as you say, Ignorant people being brain washed & negatively biased in the name of entertainment…a MUST READ ARTICLE…Hope our people read & ponder…

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : January 13, 2012 @ 5:20 pm