‘சாணக்கியர்’ கருணாநிதிக்கு என்ன ஆச்சு?
முதலமைச்சரும், எதிர்கட்சித் தலைவரும் சட்டசபையிலேயே கிட்டத்தட்ட நேருக்கு நேர் மோதிக் கொண்டிருக்கிறார்கள்.
நாக்கை மடக்கி, விரலை உயர்த்தி தனது படங்களின் க்ளைமாக்ஸ் காட்சிகளுக்கு சற்றும் தொய்வில்லாமல் விஜயகாந்த் சட்டமன்றத்தில் கோபப்பட்டு டிஸ்மிஸ் ஆகி வந்திருக்கிறார்.

சரி.. வெளியில் இதான் சாக்கு என்று புகுந்து விளையாடும் முன்னாள் அரசியல் ‘சாணக்கியர்’ கருணாநிதிக்கு என்ன ஆச்சு?
இது தான் அரசியல் பார்வையாளர்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டிருக்கும் கேள்வி.
ஆடிக் காத்தில் அம்மியே பறக்கும் போது அவர் எப்படி என்ன செய்து விட முடியும் என்ற கேள்வி ஒரு புறம் இருந்தாலும், இந்த மாதிரி சந்தர்ப்பத்தை எப்போதுமே எதிர்பார்த்து திண்ணையிலேயே காத்துக் கொண்டிருக்கும் தம்பி தானே அவர் என்ற பழைய வரலாறுகளைப் புரட்டிப் பார்க்கும் போது, இன்றைய நிலவரம் கலவரமாகத் தான் இருக்கிறது.
அவர் வீட்டுப் பஞ்சாயத்தையே சரி செய்ய முடியவில்லை. இதில் எங்கே அவர் அடுத்தவருக்கு சப்போர்ட் செய்யப் போகிறார்?
இருந்து இருந்து இந்த நேரம் பார்த்து தானா கட்சியின் பொதுக்குழு, செயற்குழு என்றெல்லாம் கூட்டித் தொலைத்திருக்க வேண்டும் என்ற புலம்பல் கோபாலபுரம் பக்கத்தில் கேட்பதில் ஆச்சரியமில்லை தான்.
“என்னை தலைமை ஏற்கச் சொன்னால் கண்டிப்பாக ஏற்றுக் கொள்வேன்” என்று முழங்கியிருக்கிறார் அஞ்சாநெஞ்சன் அழகிரி. அடடா… இன்பத் தேன் வந்து பாய்ந்திருக்கும் கருணாநிதி காதினிலே!
இது போதாதென்று திஹாரிலிருந்து வெளியில் வந்த கனிமொழி சும்மாவா இருப்பார்? அவர் பங்குக்கு என்ன நெருக்கடியோ? கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவியை அவருக்கு தருவதற்காக ஏற்கனவே கொ.ப.செ.வாக இருக்கும் அண்ணன் ஆ. ராசாவிடம் போய்க் கேட்டிருக்கிறார்களாம் கட்சியின் முன்னோடியினர். அடடே.. இத்தனை நாட்கள் கட்சியின் கொள்கை திஹாரிலே பரப்பப்பட்டதா என்ற விபரம் எதுவும் தெரியவில்லை. கொ.ப.செ. என்பதனை கொள்கைப் பரப்புச் செயலாளர் என்பதற்குப் பதிலாக ஒரே ஒரு எழுத்தை மாற்றி வைத்திருக்கலாம். பொருத்தமாக இருந்திருக்கும்!
இந்த நேரம் பார்த்து தானா வீரபாண்டி ஆறுமுகம் பிரச்னையைக் கிளப்ப வேண்டும்? அது சரி.. அவருக்கு மட்டும் குழந்தை, குட்டிகள் இல்லையா என்ன?
ஜனநாயக முறைப்படி அவரும் தனது வாரிசுகளை தலைவராக்க வேண்டாமா?
ooOoo
இத்தனை நாட்களாக இலங்கைக் கடற்படையினர் தான் தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொன்று கொண்டிருந்தனர். இப்போது அடுத்த கட்டமாக ‘இத்தாலி’யக் கப்பலில் வந்தவர்களும் இரண்டு மீனவர்களைக் கொன்று விட்டுச் சென்றிருக்கின்றனர்.
இத்தாலி கப்பலில் வந்தவர்கள் போகிற போக்கில் சுட்டு விட்டு சென்று கொண்டே இருக்க நம்மவர்கள் காக்கா, குருவியை விட கேவலமானவர்களாக ஆகி விட்டார்களோ?
’இத்தாலியர்’ ஒருவரின் பேருதவியால் தான் இலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் துள்ளத் துடிக்க கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பது அனைவரும் அறிந்த விஷயம். அப்போது மறைமுகமாக கொன்றவர்கள், இப்போது நேரடியாக கொன்றிருக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ள வேண்டியது தான் போல!
அடுத்து எந்த நாட்டுக்காரன்டா வந்து கொல்லப் போறீங்க?
ooOoo
’உண்மைக்குப் புறம்பான செய்திகளை புறக்கணியுங்கள்’ என்று திமுக தலைமைக் கழகத்தின் சார்பில் கட்சியின் தொண்டர்களுக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.
அடடே.. இப்படி அவசரப்பட்டு அறிக்கை வெளியிட்டால் விற்கிற கொஞ்ச நஞ்ச முரசொலியும் விற்காம போயிடப் போகுதுங்க!
குழந்தை குட்டிகள் இல்லாத “அம்மா” உ.பி.ச என்று ஒருவரை அறிவித்து, அந்த குடும்பம் போட்ட ஆட்டம் அனைவரும் அறிந்ததே. (பத்திரிகை செய்திகளின்படி தன் உயிரை காப்பற்றதான் அவரை வெளியேற்றி உள்ளார், தமிழகத்தை அல்ல) இதில் சொந்த பந்தங்கள் உள்ள மு.க தடுமாறுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை