Happy Birthday Twitter

முதல் ஒன்றரை வருடங்களில் .5 மில்லியன் பயனீட்டாளர்கள். மூன்று வருடங்களில் ஒரு பில்லியன் ட்விட்கள். ஆறு வருடங்களில் 140 மில்லியன் பயனீட்டாளர்கள், நாளுக்கு 340 மில்லியன் ட்விட்கள் என நான் வளர்கிறனே மம்மி என வளர்ந்துக் கொண்டே இருக்கிறது.
முதல் ட்விட் மார்ச் மாசம் வந்திருந்தாலும், பொது மக்களுக்கு மூன்று மாதம் கழித்து ஜூலை வாக்கில் தான் திறந்து விட்டார்கள். ஏப்ரல் 2007-ல் தான் கம்பெனியை அதிகாரபூர்வமாக தொடங்கினார்கள். ஆனால் இந்த குறுகிய காலத்திற்குள், சி.இ.ஒ, சேர்மன் ஆவது பின்னர் வெளியேறுவது பின்னர் மீண்டும் எக்ஸியூகிட்டிவ் சேர்மன் ஆவது என தலைமை பதவிகளில் இருப்பவர்கள் மியூசிக்கல் சேர் விளையாட்டும் உள்ளே வெளியேவும் நிறைய விளையாடினர்.
நெருங்கிய நண்பர்கள் அல்லது ஒன்றாக வேலை செய்பவர்களுக்கிடையே எஸ்.எம்.எஸ் அனுப்புவதற்கு என்று ஆரம்பிக்கப்பட்ட டிவிட்டர், இன்று ஒரு விளம்பர நிறுவனமாக, செய்திகளை முந்தி தரும் செய்தி நிறுவனமாக, மட்டும் என்று இல்லாமல் அடக்குமுறைகளுக்கு எதிராக போராட, அரசாங்கங்களைத் தூக்கி எறியவும் பயன்படுகிறது. [நம்மவர்கள் தவிர, சந்தில் சில்லறை சண்டைகள் போட ட்விட்டரை மற்றவர்களும் பயன்படுத்துகிறார்களா என்ன?]
ooOoo
பேஸ்புக்கில் இருந்துக் கொண்டு பார்ம்வில்லி, சிட்டிவில்லி எல்லாம் விளையாடவில்லை என்றாலும் குறைந்த பட்சம் கண்ணிலாவது பட்டிருக்கும். இந்த விளையாட்டுகளை எல்லாம் உருவாக்கும் ஸிங்கா (Zynga) கம்பெனியும் அதன் தலைவரும் சரியான வில்லன்கள் என்று வால்ஸ்டீரிட் ஜர்னல் குற்றம் சாட்டியுள்ளது. இது போன்ற குற்றம் குறைகள் ஸிங்கா மீது சுமத்தப்படுவது புதிதல்ல. இவர்கள் மட்டும் மாபியா வார்ஸ் என்ற பெயரை காப்பியடிக்கலாம் ஆனால் மற்றவர்கள் யாரும் வில்லி என்ற பெயரில் முடியுமாறு யாரும் கேம்ஸ் தயாரிக்கக் கூடாது என்று எல்லாம் இம்சை செய்தார்கள். இது எல்லாம் ஒரு வருடத்திற்கு முந்தைய கதை!

இது போன்ற டெக்னாலஜி ஸ்டார்ட் அப்களில் சேர்பவர்களுக்கு கம்பெனியின் பங்குகள் கொடுக்கப் படும். பிற்காலத்தில் அந்த பங்குகள் மூலம் பில்லியனர் ஆக வில்லையென்றாலும் பில்லா ரேஞ்சுக்கு ரிச்சாக சுற்றலாம் என்ற ஆசை தான். அதனால் தான் பெரிய வேலை சம்பளம் எல்லாவற்றையும் தலையை சுற்றிப் போட்டு விட்டு ஸ்டார்ட் அப்களில் சேருகிறார்கள்.
உங்களுக்கு 100 பங்குகள் தருவோம் என்று சொல்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் சேரும் போதே அதை மொத்தமாக கொடுத்து விட மாட்டார்கள். முதல் வருடம் 25, அடுத்த வருடம் 25 என்று கொஞ்சம் கொஞ்சமாகத்தான் தருவார்கள். இதற்கு நடுவில், உதாரணமாக இரண்டு வருடங்கள் கழித்து வேலையை விட்டுப் கிளம்பி விட்டாலோ, (அல்லது கிளம்பு காத்து வரட்டும் என்று சொல்லப்பட்டாலும்) ஆரம்பத்தில் சொன்ன 100 பங்குகளில் அது வரை வாங்கிய பங்குகளை வைத்துக் கொள்ளலாம். ஆனால் மீதி பங்குகளைத் தர மாட்டார்கள். இது தான் எல்லா இடங்களிலும் பின்பற்றப்படும் நியதி.
இங்கு தான் ஸிங்கா சிறிது வித்தியாசம் காட்டியது! வேலைக்கு சரிப்பட்டு வராதவர்களை போய் வாருங்கள் என்று சொல்லி இருக்கலாம். ஆனால் அதை விட்டு விட்டு கம்பெனி உள்ளே வேறு வேலைகளுக்கு மாற்றியது. அந்த வேலை என்று தான் உங்களுக்கு அவ்வளவு பங்குகள் தருகிறோம் என்று சொன்னோம். இப்பொழுது தான் நீங்கள் அதற்கு சரிப்பட்டு வர மாட்டீர்கள் எனத் தெரிந்து விட்டதே. அப்புறம் எதற்கு உங்களுக்கு அவ்வளவு பங்குகள். இந்த வேலைக்கு இவ்வளவு பங்குகள் தான் இனித் தர முடியும் என்று சொன்னதற்கு தான் இவ்வளவு கூப்பாடும்.
ஒரு கம்பெனியில் உங்களை ஒரு பதவிக்கு மாசம் இவ்வளவு சம்பளம் என்று சொல்லி வேலைக்கு சேர்த்துக் கொள்கிறார்கள். நீங்கள் சரியாக வேலை பார்க்கவில்லை.ஒரு வருடம் கழித்து உங்களை வேலையை விட்டு தூக்கி விடலாமா அல்லது உங்களை அந்த பதவியிலிருந்து கீழே இறக்கி சம்பளத்தை குறைத்து விடலாமா? இதில் எது சரி என உங்களுக்குப் படுகிறதோ அதைப் பொறுத்து தான் ஸிங்கா செய்தது சரியா தவறா என சொல்ல முடியும்.
ooOoo

ஆனது ஆகட்டும் என்று ஆரக்கிள் மட்டும் கோதாவில் குதித்தால் டெக்னாலஜி உலகம் இது வரை பார்த்திராத சண்டைக் காட்சிகள் அரங்கேறும்!