நியுஜெர்சிக்கு வந்த சுப்பரமணிய சாமி

 

 
தி சாணக்யா கனெக்‌ஷன் மேற்கூறிய தலைப்பில் டாக்டர்.சுப்ரமணிய சுவாமி அவர்கள் உரையாற்றுவதாக தெரிந்ததும்! ஹார்வர்டுக்குத்தேன் என்னை மாணவனாக கொள்ளும் பாக்கியம் கிட்டவில்லை, ஹார்வர்ட் பேராசியருக்காவது எமது விஸ்வரூப தரிசனத்தை அருளச்செய்யலாம் என்ற நல்லெண்ண அடிப்படையில் ஸ்ரீக்ருஷ்ண விருந்தாவன் நோக்கி சென்றேன்.
 
ஹார்வர்ட் அனுபவமோ என்னமோ எந்தவித முஸ்தீபுகளுமின்றி சடக்கென்றுதான் பேச வந்த சப்ஜெக்ட்க்குள் நுழைந்துவிட்டார்! நான் ரசித்தது அவரின் ஆங்கில மொழியாளுமை/மொழிப்பிரவாகமும், நிறுத்தி நிதானமாய் ஆனால் ஓங்கிய கணீர் குரலில் பேசியதையும்தான். உண்மையாகவே 72 வயது ஆசாமி என்று கூறவே முடியாத குரல் மற்றும் தேகம்!
 
சாணக்கியர் மற்றும் மௌரிய குப்தர்களின் வரலாற்று தேதிகள் மேற்கத்தியவர்களால் தவறாக கணிக்கப்பட்டுள்ளதாக கூறினார். சாணக்கியர் கிருஸ்துவிற்கு 300 வருடங்களுக்கு முன்பே இந்தியா என்ற நாட்டின் மனவுருவாக்கம் நிகழ்ந்துவிட்டதையும், அப்படியான முக்கடல்களால் சூழ்ந்த ஒரு தேசத்தை ஒரே அரசர் ஆளவேண்டும் என்பதே சாணக்கியரின் அவா என்பதை சான்றுகளுடன் பேசினார். சாணக்கியர் தன் காலத்திலேயே அப்படியான ஒரு பெரும் நாட்டை Decentralization மூலம் தான் ஆட்சி செய்யமுடியும் என்பதையும் கூறி இருப்பதாக கூறினார். சாணக்கியர் 350 கிமுவிலேயே பொருளாதாரம், அரசியல், வெளியுறவுத்துறை, போர் முறைகள் பற்றியும் நீதித்துறை, தனிமனித மற்றும் ராஜ ஒழுக்கம் பற்றியும் எழுதியிருப்பதாக கூறினார். மாக்கியாவில்லி பல நூற்றாண்டுகளுக்கு பிறகு எக்ஸ்ட்ரீமாய் சொல்வதைத்தான் சாணக்கியர் முன்னரே சொல்லியிருப்பதாய் அடிக்கோடிட்டார்.
 
இந்த இடத்தில் எனக்கு ஒரு சிறிய சந்தேகம் வந்தது. திமுக தலைவர் டாக்டர்.மு.க அவர்களும் ஒரு சமயம் மாக்கியவில்லியை உதாரணம் காட்டிய நினைவும். அவருடைய கட்சியும் மாநில சுயாட்சியை வழியுறுத்திவரும் நினைவும் சேர்ந்தே வந்தது. சாணக்கியரும் அதைத்தான் சொல்லிவருகிறார். சுப்ரமணிய சாமிக்கும் அதுதான் விரும்பம் போல. அப்புறம் ஏன் அடிச்சிக்கிறாய்ங்க?
 
அடுத்து பொருளாதாரக்கொள்கைகளில் கேப்பிடலிஸமும், மார்க்கிஸமும், சோசியலிசமும் பணம் சார்ந்த கொள்கைகளாகவும், ஆனால் சாணக்கியரின் பொருளாதார கொள்கைகள் அதையும் கடந்து ஆன்மீகம் மற்றும் ஒழுக்கம் சார்ந்த விழுமியங்கள் உள்ளதாய் குறிப்பிட்டார். இந்த தருணத்தில் எவ்வாறு அவை வேறுபடுகிறது என்று சில தகவல்களை தருவார் என்று எதிர்பார்த்தேன், ஆனால் மேல் தகவல்கள் கொடுக்கவில்லை! அதைப்போலவே நம் போர் முறைகளையும் நம்மீது படையெடுத்த அன்னியர்களின் போர் முறையும் வேறு, அதனால் தான் நாம் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டோம் என்று கூறினார்! இதற்கு உதாரணமாக கஜினி நம் மீது 16 முறை படையெடுத்துவந்த போது விடியற்காலை 3 மணிக்கே நாட்டிற்குள் புகுந்து கலவரங்கள் உண்டு பண்ணும் சூத்திரம் வைத்திருந்ததாகவும், அதை கஜினியின் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதையும் சுட்டினார். இந்திய போர்முறைகளில் சூரிய உதயத்திற்கும் முன்பும், அஸ்தமனத்திற்கு பிறகும் போர் நடவடிக்கைகள் இருக்காது என்பதை சுட்டினார். இப்படியாப்பட்ட வரையறுத்திராத நெறிமுறைகளை உடைத்தெடுத்த முதல்கைந்திய அரசர் சக்ரவர்த்தி சிவாஜிதானாம். நேரு சிவாஜியின் இந்த செயல்களை கண்டித்திருந்தாலும், சிவாஜி அன்றைய காலகட்டத்தில் அப்படியான ஒரு நடைமுறை தகர்த்தெறிப்பு செய்ததுதான் சரி என்று வாதிட்டார்!
 
இதற்கிடையே சாணக்கியர் காலம் தொட்டே இந்தியா என்ற உருவாக்கம் இருந்தது. ஆர்ய இனம் என்று ஒன்று தனியாக இல்லை. ராவணனின் மனைவியர் வட இந்தியர்தான். ஆரிய படையெடுப்பு, ஆங்கிலேயரின் போலி கண்டுபிடிப்பு! அவ்வவ்போது ,மு.கருணாநிதியையும், சோனியா ராகுல் கும்பலையும் முடிந்தவரை தனக்கே உரிய பாணியில் நையாண்டி செய்தார். சீனாவில் உள்ள ராவணகுளம் என்ற ராவணனின் பெயர் தாங்கிய குளம் இருப்பதாகவும் அந்த குளம் பெரும் விஷக்குளம் என்றும் அறிந்து சாமி அங்கு சென்றிருந்தபோது ஒரு புட்டியில் அந்த நீரை அடைத்துவந்து மு.கருணாநிதி அவர்களுக்கு வழங்கியதாகவும், அதை ராவணனின் பக்தனாகிய அவர் பருகலாமே என்று தெரிவித்ததாகவும் கிண்டலாய் சொன்னார். சோனியா பற்றி குறிப்பிடும் போது எப்படி ராவனன் கபட வேடம் பூண்டு சீதையை களவாண்டாரோ அப்படித்தான் சோனியாவின் இந்த இந்திய தோற்றமும் கபட தோற்றம் என்றார்!
 
இதற்கிடையே அவர் ஹிந்து தனி நாடு, போலி மதச்சார்பின்மை பற்றியும் பேசினார். ஆனால் அதன் ஊடே, மற்ற மதத்தவர்களுக்கும் “ஹிந்து தேசத்தில்” இடம் உண்டு, ஆனால் அவர்கள் தங்கள் தாய் மதம் ஹிந்து மதம் என்பதை உணர்ந்து ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கூறினார். (இந்திய) கிருஸ்துவம், இஸ்லாம் எல்லாம் ஹிந்து மதத்தின் கிளை நதிகள் போன்றவை, அவை எல்லாம் ஹிந்து என்ற பெருநதியில் கலந்துவிடவேண்டும் என்ற கருத்தை தெரிவித்தார்! அப்படி ஏற்காதவர்களுக்கு “ஹிந்து நாட்டில்” இடமில்லை என்று கூறினார்! சிவாஜி எப்படி இந்திய தர்ம போர்முறைகளை மாற்றி அமைத்து வெற்றி கொண்டாரோ, அதைப்போலவே சநாதன அமைதிவழி ஹிந்துக்கள் ”விராத் ஹிந்துக்களாக” உருமாற்றம் கொள்ளவேண்டும் என்பது தெரிவித்தார். ”விராத் ஹிந்து” மெஜாரிட்டி அரசால் ஊழலை ஓரளவு ஒழித்து இந்திய வல்லரசாக மாற வழிவகுக்கும் என்றார்.
 
 
 
இனி என் கருத்ஸ். இப்படியான தீவிர ஹிந்து அடிப்படைவாத கொள்கைகளின் மேல் எனக்கு சிறிதளவும் நம்பிக்கை இல்லை! சுப்ரமணிய சாமிக்கு இப்படியான கருத்துக்கள் இருப்பது துரதிஷ்டவசமானது. ஆனால் அந்த கருத்துக்களை நம்ப, முன்னெடுத்து செல்ல அவருக்கு  முழு உரிமையும் உண்டு. அவர் கூறிய பல கருத்துக்களும் (அரசியல் தவிர்த்து பொருளாதாரம் சார்ந்ததுகூட) மிகவும் மேலோட்டமாய் இருப்பதாகவே உணர்ந்தேன். எதையும் அடுத்த கட்ட விவரிப்புகூட இல்லாமல் மேடை பேச்சாளர் போல பேசி சென்றது எனக்கு உவப்பளிப்பதாய் இல்லை. ஹார்வர்ட் பேராசிரியர் ஏதோ பட்டிமன்ற பேச்சாளர் போல பேசியது என் எதிப்பார்ப்பை வெகுவாய் தகர்த்தது. ஹிந்து யுனிட்டி டே வில் பேசியதால் இப்படி ஹிந்து தனி நாடு பற்றி பேசினாரா என்பதை நானறியேன். ஆனால் பல கருத்துகள் ஆழ்ந்த ஆய்வுகளின் அடிப்படையில் அமைந்ததாக இல்லை. எல்லா கருத்துகளையும் சும்மா தொட்டு மட்டுமே சென்றார். உதாரணத்திற்கு அவர் கூறியபடி மாக்கியவில்லிஸத்திற்கும் சாணக்கியரின் அரசியல் நிலைபாடுகள் பற்றியும் ஒரு 15 நிமிடமாவது விளக்கியிருச்க்கலாம். பொருளாதார கொள்கைகளை பற்றி பேசும்போது ஸ்வீப்பிங் ஸ்டேட்மெண்ட்களை விட்டு சென்றாரே ஒழிய அதில் முதல் திரியைக்கூட அவர் கிள்ளவில்லை! அடிப்படையற்ற சில சேதிகளையும் பொதுபுத்தி சார்ந்த சமாச்சாரங்களையே பேசிச்சென்றார். ஒரு பேராசியருக்குரிய ஆழ்ந்த ஞானபூர்வ விவாதத்தன்மை இல்லை. கொடுக்கப்பட்ட நேரம் குறைவானதாக இருந்திருக்கலாம், ஆனால் கண்டிப்பாய் ஆவர் கருத்துக்களை வேறு தளத்தில் சற்றே ஆழமான கருத்துக்களோடு பதிவு செய்வார் என்று நம்புகிறேன்.
 
அவருடைய பெரும்பான்மை பேச்சு பட்டிமன்ற பேச்சை ஒத்தே இருந்தது பெரும் அசூயையாக உணர்ந்தேன்!
 
பேச்சைமுடித்துவிட்டு தவறாமல் பொட்டலத்தில் வழங்கிய உணவுபண்டங்களை வாங்கிக்கொண்டேன். இலவச உணவு வழங்கிய விருந்தாவனத்திற்கு நன்றி! வெளியேரும் போது சுவாமியின் "ராம சேது" புத்தகத்தை விற்பனைக்கு வைத்திருந்தார்கள். ஐந்து டாலருக்கு சீப்பாக கிடைத்ததால் நானும் ஒரு புத்தகம் வாங்கி இந்தியாவின் அடுத்த பிரதமர் என்று சற்றுத்தீவிரமாகவே நம்பிய கூட்டத்தை விலக்கிகொண்டு சாமியிருக்கும் திசையில் நடந்து அவர் முன் புத்தகத்தை நீட்டிய போது,. நல்வாழ்த்துகள் என்று ஆங்கிலத்தில் எழுதி தன் ஒப்பத்தை அளித்தார்.
 
ஓசியில் கிடைத்தாலும் நிறைவாய் இல்லை, சாப்பாட்டு பொட்டலமும் சரி, சாமியின் பேச்சும் சாரி !

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : July 30, 2012 @ 12:32 am