Are You Watching Closely?

இந்தப் பெயரைக்கேட்டதும் நம் தலைமுடிகள் அலறும். ’படம் பார்ப்பது டைம் பாஸ் மட்டுமல்ல மறக்க முடியாத அனுபவம்’ என்று பலருக்கு உணர்த்தியவர் நோலன். வழக்கமாக திரைப்படங்களில் சஸ்பென்ஸ் உருவாக்கப்பட்டு, முடிவில் உடைக்கப்படும். ஆனால் நோலனின் படங்களின் விஷேசமே பல விஷயங்கள் பார்வையாளனின் முடிவுக்கு விடப்படும். வீடு வந்து சேர்ந்தும் துரத்தும் அந்த சஸ்பென்ஸ். திரைக்கதையை மேஜிக் போல் அமைப்பதில் வல்லவரான நோலன் கையில் ஒரு மேஜிக் பற்றிய கதையே கிடைத்தால்….அதகளம் தான்.

 
படத்தின் கதை மேஜிக்கில் உள்ளது போல் மூன்று நிலைகளில் (Pledge, Turn, Prestige) சொல்லப்படுகிறது.
 
The Pledge:
 
மேஜிக் மேன் ஒரு பொருளைக் காட்டுவார். சில சமயங்களில் அந்தப் பொருள் உண்மையானதுதானா என பார்வையாளர்களை விட்டே சோதிக்கச் சொல்வார். ஆனால் அது உண்மையானதல்ல!
 
19ம் நூற்றாண்டில் நடக்கிறது கதை. ஆஞ்சியரும்(Angier) ஆஞ்சியர் மனைவியும், போர்டனும்(Bortan) ஒரே மேஜிக் மேனின் கீழ் வேலை செய்யும் இளம் மேஜிக் மேன்கள். ஒரு மேஜிக் ஷோவின் போது, போர்டன் போடும் தவறான முடிச்சால் ஆஞ்சியரின் மனைவி உயிரிழக்கிறார். போர்டன் வேண்டுமென்றே செய்ததாக நினைக்கும் ஆஞ்சியர் போர்டனைப் பழி வாங்க நினைக்கிறார். 
 
மேஜிக் ஷோவை வடிவமைக்கும் இஞ்சினியரான கட்டர், ஆஞ்சியரை மேஜிக்கின் மேல் கவனம் செலுத்த வைத்து, குறிப்பிடத்தக்க ஆளாக்குகிறார். போர்டன் ஒரு பெண்ணைக் காதலித்து மணந்து, ஒரு குழந்தையுடன் வாழ்கிறார். வாழ்வதற்காக பார் போன்ற இடங்களில் மேஜிக் செய்து காட்டிப் பிழைக்கிறார். ஆஞ்சியரை விடத் திற்மைசாலியான போர்டனுக்கு ஆஞ்சியர் அளவிற்கு பெரிய வாய்ப்புகள் அமைவதில்லை.
 
போர்டனின் மேஜிக் ஷோவில் புகுந்து, போர்டனைக் கொல்ல முயல்கிறார் ஆஞ்சியர். போர்டனும் பதிலுக்கு ஆஞ்சியர் ஷோவில் பிரச்சினை உண்டாக்கி, ஆஞ்சியரின் கரியரைக் காலி செய்கிறார். இந்த விளையாட்டு தொடர்கையில், ’ட்ரான்ஸ்போர்ட்டேட் மேன்’ எனும் புதிய ஷோவினால் பிரபலம் ஆகிறார் போர்டன். ஒரு கதவிற்குள் சென்று மறையும் போர்டன், ஒரு சில வினாடிகளில் மேடையின் மறுபுறம் அமைந்திருக்கும் கதவின் வழியாக வெளி வருவதே அந்த ஷோ. 
 
போர்டன் என்ன ட்ரிக்கை உபயோகிக்கிறார் எனத் தெரிந்துகொள்ள, தன் குரூப்பில் உள்ள, தன்னைக் காதலிக்கும் ஒலிவியாவை வேவு பார்க்க அனுப்புகிறார். ஒலிவியா போர்டனின் டைரியை ஆஞ்சியருக்குத் தருகிறார். அமெரிக்காவில் வாழும் விஞ்சானி டெஸ்லா தான் அந்த ஷோவின் சூத்திரதாரி என்று ’புரிந்துகொள்ளும்’ ஆஞ்சியர், அமெரிக்கா சென்று டெஸ்லாவைச் சந்திக்கிறார்.
 
The Turn:
 
மேஜிக் மேன் அந்தச் சாதாரணப் பொருளை எடுத்து, ((மறைய வைப்பது போன்ற..)அசாதாரணமான ஒன்றைச் செய்கிறார்.. இப்போது அதன் ரகசியத்தை அறிய விரும்புகிறீர்கள். ஆனால் உங்களால் அறியமுடியாது. ஏனென்றால் உண்மையில் நீங்கள் பார்ப்பதில்லை. உண்மையில் அதை அறிந்துகொள்ள நீங்கள் விரும்பவில்லை!
 
போர்டனைப் பற்றிய ஒரு ரகசியத்தை அறியும் அவன் மனைவி சாரா, தன்னால் இப்படி வாழ முடியாதென தற்கொலை செய்துகொள்கிறார். வேவு பார்க்க வந்து, பின்னர் போர்டனின் மேல் காதல் கொண்ட ஒலிவாவும் போர்டனைப் பிரிகிறார்.
 
அமெரிக்க விஞ்சானியான டெஸ்லாவிற்கும் போர்டனின் ஷோவிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆனாலும் டெஸ்லா கண்டுபிடிக்கும் புதிய மெஷினுடன் திரும்பும் ஆஞ்சியர் ‘புதிய ட்ரான்ஸ்போர்டேட் மேன்’ ஷொவை அதன் உதவியுடன் நடத்தி மீண்டும் புகழ்பெறுகிறார். 
 
இந்த ஷோவின் ரகசியத்தை அறிய விரும்பும் போர்டன், தன் ஷோவின் உதவியாளர் & இஞ்சினியரான ஃபாலனின் வார்த்தையையும் மீறி ஆஞ்சியர் ஷோவிற்குச் செல்கிறார். அங்கே நடக்கும் அசம்பாவிதத்தில் ஆஞ்சியர் உயிரிழக்கிறார்; கொலைப்பழி போர்டனின் மேல் விழுந்து, போர்டன் தூக்கிலிடப் படுகிறார்.
 
The Prestige:
 
ஒரு பொருளை மறையச் செய்வதால் நீங்கள் கை தட்டுவதில்லை. ஏனென்றால் அது ஒரு மேஜிக் ஷோவிற்குப் போதுமானதல்ல. அதைத் திரும்பக் கொண்டுவரவேண்டும். அதனால்தான் மேஜிக்கில் மூன்றாம் நிலை தேவைப்படுகிறது. மிகவும் கடினமானது அதன் பெயர் தி ப்ரெஸ்டீஜ்.
 
போர்டனின் ட்ரான்ஸ்போர்டேட் மேன் ஷோவின் ரகசியம் கடைசிக்காட்சியில் உடைக்கப்படுகிறது. பல சிக்கலான விஷயங்களுக்குத் தீர்வு, சிக்கலானதாகத் தான் இருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை. பல நேரங்களில் உண்மை நம் கண் முன்னே இருந்தாலும் நமக்கு அது தெரிவதில்லை, ஆஞ்சியருக்கு நேர்ந்ததைப் போலவே.
 
மூன்றாம் நிலை, கடைசி 5 நிமிடங்கள் தான். ஐந்து நிமிடங்களில் ஐந்திற்கும் மேற்பட்ட ட்விஸ்ட்டைக் கொடுக்க நோலனால்தான் முடியும். படம் முழுக்க பல க்ளூக்களை விட்டிருக்கிறார்கள். ஆனாலும் The Turn-ல் சொன்னது போல் உண்மையில் நாம் படம் பார்க்கவில்லை என்பதை க்ளைமாக்ஸில் தான் உணர்வோம். அப்புறமென்ன..வழக்கம்போல் நோலனின் படத்தை முதலிலிருந்து பார்க்கத் துவங்குவோம்.
 
நோலனின் விஷேசம் நான் – லினியர் திரைக்கதை மட்டுமல்ல, கடைசியில் அவர் கொடுக்கும் ட்விஸ்ட். அதைப் புரிந்து கொள்ள படத்தைப் பலமுறை நாம் பார்க்கவேண்டும்..மெமெண்டோ பட்த்தை ஏழு முறைக்கு மேல் பார்த்திருக்கிறேன். இந்தப் படம் இப்போதே இரண்டு முறை பார்த்தாகிவிட்ட்து.
 
இந்தப் படத்தின் திரைக்கதையை கிறிஸ்டோபர் நோலனும் அவரது சகோதரரான ஜொனாதன் நோலனும் இணைந்து எழுதியிருக்கிறார்கள். நிகழ்கால நிகழ்வாக கோர்ட் மற்றும் ஜெயில் காட்சிகள் நகர்கின்றன. ஜெயிலில் போர்டன், ஆஞ்சியரின் டைரியைப் படிக்கிறார்(1). இப்போது நிகழ்வுகள் கடந்த காலத்தில் விரிகின்றன. அதில் ஆஞ்சியரின் வாழ்வும், அவர் போர்டனின் டைரியைப் படிப்பதும் காட்டப்படுகிறது(2). டைரியில் வரும் போர்டனின் வாழ்க்கை தனியாகக் காட்டப்படுகிறது(3). இந்த மூன்றும் எவ்விதமான ஒளிப்பதிவு/கலர் டோன் வித்தியாசமும் இல்லாமல் காட்டப்படுகின்றன. இருக்கும் இடமும் உடுத்தும் உடையுமே க்ளூக்கள்..நாம் தலைமுடியைப் பிய்த்துக் கொள்ள இது போதாதா…(ஆனாலும் படத்தைப் புரிந்துகொள்ள அவை தடையாக இல்லை.)
 
ஆஞ்சியராக ஹக் ஜாக்மேனும் போர்டனாக க்றிஸ்டியன் பேலும் கலக்கி எடுக்கிறார்கள். சாராவாக வரும் ரிபெக்கா ஹால், தற்கொலைக்கு முந்தைய காட்சியில் நடிப்பில் பின்னிவிட்டார். ஒலிவியாவாக நடித்திருக்கும் ஸ்கார்லெட் ஜோஹன்சன் ம்ம்ம்ம்ம்!
 
மைக்கேல் கெயின் கட்டராக பொருத்தமான தேர்வு. நோலன் எப்போதும் குறைவான கேரக்டர்களை வைத்துக் கொள்வது வழக்கம். இதிலும் அப்படியே. முக்கிய கேரக்டர்கள் பத்தைத் தாண்டாது..
 
படத்தின் கதை க்றிஸ்டோபர் ப்ரீஸ்ட் என்பவர் எழுதிய நாவலாகும். அதைப் படமாக்க பலர் முன்வந்தபோதும், நோலனைத் தேடி வந்து இதைப் படமாக்குமாறு கேட்டுக்கொண்டார் ப்ரீஸ்ட்..’மூளையைக் குழப்பும் கதைக்கு இவனுக தான் இதுக்குச் சரியான ஆளுக’ன்னு கரெக்டாக் கணிச்சிருக்கார்.
 
டேவிட் ஜூலானின் ’மெஸ்மரிக்கும்’ இசையும், வேலி பிஸ்டரின் ஒளிப்பதிவும், மெமெண்டோவைப் போலவே இதிலும் கலக்கல். நான் லீனியர் திரைக்கதைக்கு லீ ஸ்மித்தின் எடிடிங் பெரிய அளவில் கை கொடுக்கிறது. ஒரே இடம் தொடர்ந்து 5 நிமிடங்கள்கூட காட்டப்படுவதில்லை. மேஜிக் ஷோவின் பிண்ணனியை கெவின் கவனா ஆர்ட்டின் ஆர்ட் நமக்கும் புரியும் வண்ணம் விளக்குகிறது.
 
ஒரு படைப்பு, ரசிகனும் பங்கு பெறுவதற்கான வாய்ப்பைக் கொடுக்கும்போது  இலக்கியம் ஆகிறது. மோனலிசா ஓவியம், பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவித அனுபவத்தைக் கொடுப்பது போல..நோலனும் பல விஷயங்களைத் தன் படங்களில் வாசகனின் அனுமானத்திற்கே விட்டுவிடுகிறார். இதிலும் போர்டன் போட்ட முடிச்சு பற்றி விவாத்தை உருவாக்கினார். என்னைப் பொறுத்தவரை அது தற்செயலாக நடந்த விபத்து மட்டுமே.
 
ஒரு அழகிய, புத்திசாலித்தனமான படம் பார்க்க விரும்புவோர் கண்டிப்பாகப் பார்க்கவும்.
 

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : September 17, 2012 @ 8:28 pm