சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு

தற்பொழுது இந்தியா முழுவதும் கடையடைப்புக்கள். போராட்டங்கள் மத்திய மந்திரிகள் ராஜினாமாவென்று நாளொரு பொழுதும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.  காரணம். மத்திய அரசின் புதிய பொருளாதாரக் கொள்கைதான். சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு 51% வரை இருக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்து விட்டது.  இதனால் மக்கள் பெறப் போகும் நன்மையென்ன?  

விவசாயிகள் தங்கள் பொருள்களை தரகர்கள் மூலம் விற்க வேண்டாம்.  நேரடியாகவே இந்த அங்காடிகள் விவசாயிகளிடமிருந்து விளைபொருட்களைக் கொள்முதல் செய்யும். இடைத்தரகர்கள் இல்லாததால் நல்ல விலைக்கு விவசாயிகள் விற்க முடியும்.
 
தற்பொழுது விவசாயப் பொருள்களைப் பாதுகாக்க வசதிகள் (Cold Storage) சரியாக இல்லை. இதனால் பொருள்கள் பாழாகின்றன.  இந்த அயல் நாட்டு அங்காடிகள் பொருள்களைச் சேமித்து வைக்க தேவையான கிடங்குகளை உண்டாக்கியாக வேண்டும். இதற்கு முதலீட்டில் 50%மாவது செலவழிக்க வேண்டும். இதனால் சேதமாகும் பொருள்கள் மிகக் கணிசமாகக் குறையும்.
 
மற்றும் விற்பனைக்கு வாங்கும் பொருள்களில் குறைந்தது 30% மாவது சிறு தொழில், மற்றும் நடுத்தரத்தொழில்களிடமிருந்து வாங்கியாக வேண்டும். இதனால் சிறு தொழில் நடுரகத்தொழில்கள் பெருகும்.  இத்தகைய நிபந்தனைகள் சீனா, சிங்கப்பூர்,அர்ஜெண்டைனா போன்ற நாடுகளில் கிடையாது. இருப்பினும் அங்கெல்லாம் சிறு தொழில்கள் நன்றாக வளர்ந்துள்ளன. இதனால் உள் நாட்டில் வேலை வாய்ப்புக்கள் பெருகும்.
 
அந்நிய அங்காடிகளின் போட்டியின் காரணமாகப் பொருட்களின் விலை குறையும். மக்கள் பயன் அடைவார்கள்.  
 
இவைகளெல்லாம் அரசாங்கம் எடுத்துக் கூறும் காரணங்கள்.  ஆனால் எதிர்க்கட்சிகள் கூறும் காரனங்கள் இதற்கு எதிர்மாறாக இருக்கின்றன.
 
அயல் நாடுகள் தங்கள் நாட்டில் உற்பத்தியாகும் பொருள்களை இந்தியாவில் விற்பனை செய்யும். அதனால் இந்தியாவில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு விற்பனை வாய்ப்புக்கள் குறைந்து நம் சிறு மற்றும் நடுரகத்தொழில்கள் அழிந்து போகும்.
சில்லரை வியாபாரிகள்  அயல் நாட்டு அங்காடிகளுடன் போட்டி இடமுடியாமல் அழிந்து போவார்கள்.
 
அயல் நாட்டு அங்காடிகள் நம்நாட்டு விவசாயிகளுக்கு அவர்கள் விளைவித்த பொருள்களுக்கு உரிய விலை கொடுக்காமல் மிகக் குறைந்த விலைக்குப் பொருட்களை வாங்கி விவசாயிகளை அழித்து விடுவார்கள்.
 
ஆகவே அந்நிய அங்காடிகளை இந்தியாவுக்குள் வரவிடக் கூடாது.
 
நாம் சுமார் 30 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்வோம்.  அப்போதுதான் கணினி நம் நாட்டில் கால் எடுத்து வைத்த சமயம்.  அரசாங்கம்  கணினியை எல்லாத் துறையிலும் புகுத்த முயற்சி செய்த சமயம்.  எல்லாத்துறையிலும் கணினியைப் புகுத்தினால் பொருளாதாரம் பெருகும் என அரசாங்கம் கூறியது.  ஆனால் நம் எதிர்க் கட்சிகளும் தொழில் சங்கங்களும் வெகுண்டு எழுந்தன.  ஒரு அலுவலகத்தில் ஒரு கணினி வந்தால் பத்துப்பேர் வேலையை இழப்பார்கள்.  10ப் பேர் வேலையை ஒரு கணினி செய்து விடும். வேலையில்லாத் திண்டாட்டம் பெருகும். நம் நாட்டிற்கு கணினி தேவை இல்லை.   மேல் நாடுகளில் மக்கள் தொகை மிகக் குறைவு. ஆகவே அவர்களுக்குக் கணினி தேவை.  நம் நாட்டில் தேவையான மக்கள் தொகை இருக்கிறது. ஆகவே நமக்குத் தேவை இல்லை என்று எதிர்க் கட்சிகள் கூவின.  தினசரிப் போராட்டங்களும் கூச்சல்களும் குழப்பங்களும் நிலவின.
 
இன்று இவர்களால் கணிணி இல்லாது ஒரு மணி நேரம் வேலை செய்ய முடியுமா ? அதே எதிர்க் கட்சிகளும் தொழில் சங்கங்களும் இன்று  என்ன சொல்லப் போகின்றன ?
 
அதேபோல்தான் இந்த அந்நிய முதலீடும். இதில் வரப் போகும் லாப நஷ்டக் கணக்கை பொருளாதார மேதைகளிடம் விட்டுவிடுவோம். அவர்கள் நாட்டை  நல்ல முறையில்ச் கொண்டுசெல்வார்கள்.  அதைவிடுத்து அரசியல் வாதிகளின் கூக்குரலுக்குச் செவிசாய்க்க வெண்டாம்.

தொடர்புடைய படைப்புகள் :

2 thoughts on “சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு

 • September 24, 2012 at 7:54 am
  Permalink

  Read the below also:

  சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு உண்மையில் இந்தியாவுக்கு நல்லதா? அது கிராமப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்துமா, விவசாய உற்பத்தி வீணாவதைக் குறைக்குமா, மேலும் விவசாயிகளுக்கு அவர்களுடைய பயிர்களுக்கு நல்ல விலை கிடைக்கச் செய்யுமா? சில்லறை வணிகத்தின் நன்மைகள் பற்றி நிறைய எழுதியும் பேசப்பட்டும் வந்திருக்கிறது. சில பெரிய நன்மைகள் என்று கூறப்படுபவை குறித்துப் பதிலளிக்க முயற்சி செய்கிறேன்.

  விவசாயம்: சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு விவசாயிகளுக்குப் பெரிய வரம் என்று பிரதமர் திரும்பத் திரும்ப உயர்த்திப் பிடித்து வருகிறார். துரதிர்ஷ்டவசமாக இது உண்மையல்ல. அமெரிக்காவில் கூட பெரிய சில்லறை வணிக நிறுவனங்கள் விவசாயிகளுக்கு உதவவில்லை. அமெரிக்கக் கூட்டாட்சி ஆதரவு தான் விவசாயத்தை லாபகரமாக வைத்துள்ளது. கடந்த 2008ல் கொண்டுவரப்பட்ட அதன் விவசாயச் சட்டம் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு விவசாயத்திற்கு 307 பில்லியன் டாலர் சலுகை வழங்கியுள்ளது.

  பெரிய சில்லறை வணிகம் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கச் செய்கிறது என்றால் இவ்வளவு பெரிய சலுகை எதற்கு வழங்கப்படவேண்டும்? மேலும் ஏராளமான மானியங்கள் இருந்தும் கூட ஒவ்வொரு நிமிடமும் ஒரு ஐரோப்பிய விவசாயி விவசாயத்தை கைவிட்டுச் செல்கிறார் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

  ‘பெரிய சில்லறை வணிகம் விவசாயிகளை இடைத்தரகர்களிடமிருந்து விடுவிக்கிறது, விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கச் செய்கிறது’ என்பது இரண்டாவது வாதம். இதுவும் உண்மைத் தகவல்களின் படி சரியல்ல. அமெரிக்காவில் இருபதாம் நூற்றாண்டில் 70 விழுக்காடா இருந்த விவசாயிகளின் நிகர வருமானம் 2005ல் வெறும் 4 விழுக்காடாகக் குறைந்து போயுள்ளது என்பதைச் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

  ஏனென்றால் பெரிய சில்லறை வணிக நிறுவனங்கள் உண்மையில் புதிய இடை மனிதர்கள் வரிசையைக் கொண்டுவந்துள்ளது. அவர்களின் பெயர்கள் தரக்கட்டுப்பாட்டாளர், தரப்படுத்துபவர், சான்றிதழ் முகாமை செயல்படுத்துபவர், பொட்டல ஆலோசகர் மற்றும் இன்னபிற ஆகும். இந்த இடை மனிதர்கள் தாம் லாபங்களை அள்ளிச் செல்கின்றனர். விவசாயிகளின் பிழைப்புக்கு வாழ்வாதாரம் மானியங்கள் தாம்.

  ஏகபோக சக்தி இந்த நிறுவனங்களை கற்கால விலை நிலவரங்களுக்குக் கொண்டுசெல்ல உதவுகிறது. லத்தீன் அமெரிக்க, ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளின் பேரங்காடிகளில் நுகர்பொருள் விலைகள் குறித்த அனுபவ ஆய்வுகள் வெளிச் சந்தை விலைகளை விட 20-30 விழுக்காடு கூடுதலாகவே இருந்து வருவதைக் காட்டுகின்றன.

  பல முத்திரை சில்லறை வணிகம் அறிவியல்பூர்வ இருப்பு வைப்பு முறைகளை வழங்கி பல லட்சக்கணக்கான டன்கள் உணவு தானியம் அழுகிப் போவதிலிருந்து பாதுகாக்கும் என்று வாதிடப்படுகிறது. உலகில் எந்த நாட்டில் பெரிய சில்லறை வணிக நிறுவனங்கள் தானிய இருப்பு வைப்பு கிடங்கு வசதிகளை வழங்கியிருக்கின்றன என்று எனக்குத் தெரியவில்லை.

  இருப்பு வைப்பில் நேரடி அந்நிய முதலீடு ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ளது; எந்த முதலீடும் வரவில்லை. ஒற்றை முத்திரை சில்லறை வணிகத்தில் 30 விழுக்காடு உள்ளூரில் கொள்முதல் செய்ய வேண்டும் என்று அனுமதிக்கப்பட்டும் அது ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்ற கேள்விக்கான பதிலை வர்த்தக அமைச்சகம் கிடப்பில் போட்டுள்ளது.

  வேலைவாய்ப்பு : 40,000 கோடி டாலர் மதிப்புள்ள இந்திய சில்லறை வணிகச் சந்தையில் 120 லட்சம் சில்லறை வணிகர்கள் உள்ளனர். இதில் 4 கோடி பேர் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர். வால்மார்ட்டின் மொத்த விற்பனை மட்டுமே 42000 கோடி டாலர். அது 21 லட்சம் பேருக்கு மட்டுமே வேலை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய சில்லறை வணிகத் துறையில் வேலை பார்ப்போரில் ஒரு மிகச் சிறிய எண்ணிகையை மட்டும் வைத்துக்கொண்டு வாலமார்ட் அதே விற்பனை அளவை எட்ட முடியுமானால, பெரிய சில்லறை வணிகம் வேலை வாய்ப்பை உருவாக்கும் என்று எப்படி நம்ப முடியும்? பெரும் சில்லறை வணிக நிறுவனங்கள் பல லட்சக்கணக்கானவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கவே செய்யும்.

  மாநில அரசின் தனிப்பட்ட உரிமை: சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதில் இறுதி முடிவை மத்திய அரசு தந்திரமாக, மாநில அரசாங்கத்திடம் விட்டுவிட்டுள்ளது. இது பெரிய அங்காடிகளுக்கு எதிராக உள்ள மாநில அரசுகளை ஓரளவு சமாதானப்படுத்தும். இருப்பினும், பன்னாட்டு வர்த்தக நிபந்தனைகளின் படி உறுப்பினர் நாடுகள் தேசிய அளவில் இதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது அன்னிய சில்லறை வணிக நிறுவனங்களுக்குத் தெரியும். இருதரப்பு முதலீட்டு மேம்பாடு மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்டிருப்பதால் இந்திய அந்நிய முதலீட்டாளர்களுக்கு தேசிய அளவில் வாய்ப்பை வழங்கவேண்டும். 70க்கும் மேற்பட்ட நாடுகளுடன் ஏற்கனவே ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுவிட்டன. எனவே மாநில அரசுகள் பேரங்காடிகளைத் திறக்க அனுமதித்தாக வேண்டும், இல்லாவிட்டால் அவை நீதிமன்றங்களை நாடி அனுமதி பெற்றுக்கொள்ளும்.

  மேலும், மிக முக்கியமாக, பெரிய நகரங்களில் தான் திறக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தாலும் பேரங்காடி நச்சுக்கிருமி எப்படிப் பரவுகிறது என்பதைப் பார்க்க வேண்டும். மெக்சிகோவில் பத்தாண்டுகளில் வால்மார்ட் எப்படி ஏறத்தாழ நாட்டின் 50 விழுக்காடு சில்லறை வணிகச் சந்தையைக் கைப்பற்றியது என்பது பற்றி அண்மையில் நியூயார்க் டைம்ஸ் இதழ் அம்பலப்படுத்தியுள்ளது. ‘வால்மார்ட் துணை நிறுவனங்கள மூலம் லஞ்சம கொடுத்து 2011ல் 431 அங்காடிகளைத் திறந்துள்ளது, இது பற்றிய உள் விசாரணை அதன் தலைமையகத்தால் மறைக்கப்பட்டுவிட்டது’ என்று நியூயார்க் டைம்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.

  இந்தியாவில், வால்மார்ட் மட்டுமே ‘செல்வாக்கு’ செலுத்துவதற்காக இரண்டு ஆண்டுகளில் ரூ.52 கோடி செலவிட்டுள்ளது என்பது அமெரிக்காவில் வெளியிடப்பட்டுள்ள ஓர் அறிக்கையில் வெளியிடபட்டுள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அது அண்மையில் அதற்குப் பயனளித்துள்ளது.

  நன்றி: இந்து நாளிதழ், 15.09.2012.

  – தேவிந்தர் சர்மா

  தமிழில்: வெண்மணி அரிநரன்

  Reply
 • September 22, 2012 at 12:49 am
  Permalink

  Very good article.

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : September 21, 2012 @ 3:50 pm