இருத்தல் தொலைத்த‌ வார்த்தைகள்…

 

Man Woman

சில நேரங்களில், மெளனம் ஒரு பெரிய ஆயுதம். சொல்லாத வார்த்தைகளுக்கு அர்த்தங்கள் மிக அதிகம். இருத்தல் தொலைத்த வார்த்தைகள் மிக மிக சுதந்திரமானது. அப்படிச் சில வார்த்தைகள், தம் இருத்தலை தொலைத்திருந்தன அந்த மாயாஜால் உணவுவிடுதி மேஜையில். தொலைக்காத வார்த்தைகளை உதிர்த்துக்கொண்டிருந்தனர் அந்த‌ இருவரும்.

'இப்ப என்னதான் சொல்ற' மெளனம் கலைத்து சீறினான் கார்த்திக்.

'ரமேஷ் உனக்கு முன்னாடியே எனக்கு ஃப்ரண்ட். அவன் ஃப்ரண்ட்ஷிப்ப உனக்காக என்னால விட முடியாது'. பதிலுக்கு பாய்ந்தாள் ஜினிதா

'அப்போ அவ்ளோதானா நம்ம ரிலேஷன்ஷிப்? நம்ம காதல் அவ்ளோதானா? என்ன விட அந்த ரமேஷ் உனக்கு பெரிசா போயிட்டானா?'.

'நான் அப்படி சொல்லல. ஆனா நீ இவ்ளோ நாரோ மைன்டடா இருப்பனு நான் நினைக்கல'.

'நாரோ மைன்டடா?  நானா?'.

'ஆமா நீ நாரோ மைன்டட் தான். இப்ப என்ன நடந்து போச்சுனு இப்படி கத்துற. ஆபிஸ் பத்து மணிக்கு தான் முடிஞ்சுது. சோ மைக்கேலோட பர்த்டே ட்ரீட்க்கு நான் போறப்போ 11 ஆயிடிச்சு. விஷ் பண்ணேன். கிஃப்ட் குடுத்தேன். இவ்ளோதான். இதுக்கு ஏன் கத்துற'.

'தட்ஸ் இட்' அழுத்தமாய் லேசான சத்தத்துடன் மேஜையில் தன் இரு உள்ளங்கைகளும் பதியுமாறு வைத்து, தன் மனம் போன போக்கை கோடிட்டு காட்டியவன், ஒன்றும் பேசாமல் எழுந்துகொண்டு, அவளின் பதிலுக்கு காத்திராமல் உணவுவிடுதியை விட்டு போய்விட்டான் கார்த்திக். கார்த்திக் தன் பைக்கில் மாயாஜாலை விட்டு வெளியேறிச் செல்வதை கண்ணாடி சன்னல் வழியே பார்த்துக்கொண்டிருந்தவள் 'ம்ச்' என்றவாறே, இது ஒன்றும் புதிதல்ல என்ற தோரணையில் பாதி பருகிவிட்டு வைத்திருந்த பழச்சாற்றை தொடர்ந்தாள் ஜினிதா. 

வீடு நோக்கி பைக்கில் விரைகையில் கார்த்திக்கிற்கு எரிச்சலாக வந்தது. காலையில் நான் கேட்டபோது லேட் ஆனால் போக மாட்டேன் என்று சொன்னவள். ராத்திரி 12 மணிக்கு ஸ்கூட்டியில் வீடு வந்திருக்கிறாள். மைக்கேலின் ஃப்ரண்ட் இவனுக்கும் ஃப்ரண்ட். அந்த ட்ரீட்டை அவன் காமிரா மொபைல் ஃபோனில் பதிவு செய்திருந்ததை இவனும் பார்க்க நேர்ந்தது. அதில் மைக்கேலை கைக்குலுக்கி இவள் விஷ் செய்ததும், இருவரது உடல்கள் உரசிக்கொள்ளும் தூரத்திலேயே ட்ரீட் முடியும் வரை நின்றதும், பேசிக்கொண்டதும், சிரித்துக்கொண்டதும் கார்த்திக்கிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை. 

ஜினிதாவை ம‌ன‌த‌ள‌வில் ம‌னைவியாக‌வே பாவித்திருந்தான் கார்த்திக். ஒன்றுமே ந‌ட‌ந்திருக்க‌வில்லையென்றால் இதை அவ‌னும் பெரிய‌தாய் நினைத்திருக்க‌ மாட்டானோ என்ன‌வோ. ஆனால், நேற்று கூட‌ ஒன்று ந‌ட‌ந்த‌து. வெண்டிங் மெஷின் அருகே ராஜேஷும் இன்னும் சில‌ரும் பேசிக்கொண்டிருந்த‌ போது, ஒரு க‌ப் டீ எடுக்க‌ வ‌ந்த‌வ‌ன் காதில் எரிம‌லைக் குழ‌ம்பாய் வ‌ந்து விழுந்த‌ வார்த்தைக‌ளில் அவ‌னைக் குழ‌ம்ப‌வைத்த‌ன‌. 

'மைக்கேல் பெரிய‌ ஆளுடா, நேத்து பாக்க‌னுமே. க‌ண் கொள்ளாக் காட்சிதான். இப்ப‌டி ந‌ம‌க்கும் அமைஞ்சா ந‌ல்லா தான் இருக்கும். இந்த‌ கீ ச‌ரியான‌ ஆளு ம‌ச்சி. அவ‌ளுக்கும் அவ‌னை இப்ப‌வும் புடிச்….' என்ற‌ ராஜேஷ், கார்த்திக்கின் நிழ‌லாடுவ‌தைக் க‌ண்ட‌வ‌னாய் ச‌ட்டேன‌ நிறுத்தி வேறு பேச்சை மாற்ற‌, டீ எடுக்கும்வ‌ரை ஒரு புழு ஊர்வ‌தான‌ இன்ன‌தென்று சொல்ல‌ முடியாத‌ ஒரு உண‌ர்வில் ம‌ர‌க்க‌ட்டையாய் நின்று விட்டு, அக‌ண்டான் கார்த்திக். பொது இட‌ங்க‌ளில் பேசும்போது இன்னாரென்று தெரியாம‌ல் இருக்க‌ ச‌ங்கேத‌ப் பெய‌ர்க‌ளில் குறிப்ப‌து வ‌ழ‌க்க‌ம்தான் என்ப‌தை அறிந்தே இருந்தான். ஆங்கிலத்தில் கீ என்பது சாவியைக் குறிக்கும். 'கீ' என்ப‌து ஜினிதாவைத்தான் என்ப‌தை ஒருவாறு யூகித்தே இருந்தான். ஏனெனில் இத‌ற்கு முன்பும் சில‌ நேர‌ங்க‌ளில் அந்த‌ கும்ப‌ல் அப்ப‌டிப் பேசும் போது, தான் குறுக்கே வ‌ரும் நொடிக‌ளில், தேவையே இல்லாம‌ல் வேறு டாபிக் பேசுவ‌தாக‌ அவ‌ர்க‌ள் பாவ்லா செய்வ‌தை க‌வ‌னித்தே இருந்தான். அப்போதெல்லாம் சொல்லி வைத்தாற்போல் 'கீ' என்று சொல்லித்தான் பேசிக்கொண்டிருப்பார்க‌ள். இவ‌னைப் பார்த்த‌தும் ந‌க்க‌ல் சிரிப்பு செயற்க்கையாய் வேறு வேட‌ம் பூண்டு, வேறு டாபிக் பேசுவ‌தாய் ந‌டிக்கும். இவன் கடந்து போனதும் பழையபடி அரிதாரம் பூசிக்கொள்ளும். ஆபீஸ் பாத்ரூம் கதவுகளில் 'மைக்கேல்' என்று எழுதப்பட்டு அருகாமையில், எழுதப்பட்ட ஒன்றை மறைக்க முயற்சித்து அழித்த சுவடுகள் இருக்கும். 

ஜினிதாவிடம் சொன்னால் மைக்கேலைத் தனக்குப் பிடிக்காத‌தால் தான் அவனைப் பற்றி தப்பாகப் பேசுவதாய் தன்னையே குறை சொல்கிறாள். மைக்கேலுக்காக பரிந்து பேசி  தன்னையே ஓரம் கட்டுகிறாள். இதுமாதிரி இதுவரை பல முறை நடந்தாகிவிட்டது. சண்டை வருவது தான் மிச்சம். இம்முறை விடுவதாயில்லை. பார்க்கலாம் என்னதான் நடக்கிறதென்று. அவளாகப் பேசும் வரை தானாக ஏதும் பேசுவதில்லை என்று முடிவு செய்துகொண்டான். 

ஜினிதா தனது ஸ்கூட்டியில் வீடு வந்து சேரவும் அவளின் அலைபேசி சினுங்கவும் சரியாக இருந்தது. கூப்பிட்டது மைக்கேலே தான்.

'ஜினிதா, யு வர் லுக்கிங் க்ரேட் இன் தட் ரெட் சல்வார் யார்'.

'தாங்க்ஸ் மைக்' ஜினிதா வாயெல்லாம் பல்லாக சிரித்தபடியே தன் பெட்ரூம் நுழைந்தாள். பின்னாலேயே அவளின் பெட்ரூம் கதவு சாத்தப்பட்டது.  

இரவு 11 வரை எரிந்து கொண்டிருந்துவிட்டு பிற்பாடுதான் அணைந்தது அவளின் பெட்ரூம் லைட். 

மறு நாள், லேட்டாக எழுந்தவள் அலுவலகம் தாமதமானாள். தாமதித்த நேரத்தை ஈடுகட்ட இரவில் வேலை பார்த்தாள். அவளுக்குத் துணையாக மைக்கேல் இருந்ததில் கார்த்திக்கின் நினைவு ஜினிதாவிற்கு வரவேயில்லை. நான்கைந்து நாட்களில், அவளை அமெரிக்கா வர சொல்லி மின்னஞ்சல் வந்தது. அமெரிக்கா செல்ல ஒரு வாரமே இருந்த நிலையில், ஷாப்பிங்கும் விமான டிக்கேட்டிற்குமான அலுவலக ஃபார்மாலிட்டிஸும் அவள் நேரத்தை வெகுவாக தின்று தீர்த்தன. 

எத்தனை பெரிய சாதனை இது. 23 வயதில் வெளி நாட்டுப் பயணம். தன் கடின உழைப்பிற்கு அலுவலகம் தரும் கவுரவம். அப்பா, அம்மா, உறவுகள், நண்பர்கள், பக்கத்து வீடு, எதிர் வீடு என எல்லோரும் வாழ்த்தியதில் ஜினிதாவின் கால்கள் தரையிலேயே இல்லை. வாய் வலிக்க நன்றி சொன்னாள். ஓடி ஒடி நட்புகளிடம் பயண தொடர்பான அறிவுரைகள் கேட்டாள். ஆசுவாசிக்கக் கிடைத்த சில நொடிகளில், கார்த்திக்கிற்கு தன் அமேரிக்க பயணம் குறித்து தான் அனுப்பிய எஸ்.எம்.எஸ்ஸுக்கு பதில் வராதது ஏன் என்று யோசித்தாள். அதற்க்குள் பெட்டி படுக்கைகள் எடுத்து வைக்கும் வேலைகள் அவள் கவனத்தை கொள்ளையடித்தன. 

அடுத்து வந்த ஞாயிற்றுக்கிழமையில் காலை 6 மணி ஃப்ளைட் அவளை அள்ளிக்கொண்டு பறந்தது. கடைசி நொடிவரை கார்த்திக்கை விமான நிலையத்தில் எதிர்பார்த்து ஏமாந்ததில் அவள் கோபம் அதிகரித்தது. என்ன காதலன் இவன். எத்தனை பெரிய அங்கீகாரம், வாய்ப்பு தனக்கு கிடைத்திருக்கிறது. ஊரே தனக்கு வாழ்த்துச் சொல்கிறது. ஒரு வருட கால ஆன்சைட். கார்த்திக் அதுவரை ஆன்சைட் சென்றதில்லை என்பது நினைவுக்கு வந்தது. இந்த ஆண்கள் ஏந்தான் இப்படி இருக்கிறார்களோ? இவனுக்கு கிடைக்காத ஆன்சைட் எனக்குக் கிடைத்தால்தான் என்ன? இது ஒரு சாதனை இல்லையா? பெண் சாதிப்பது இந்த குறுகிய மனப்பான்மை கொண்டவனுக்கு பிடிக்கவில்லை போலும். என்ன இருந்தாலும் இவனும் ஆண் தானே. அந்த புத்தி தானே இவனுக்கும் இருக்கும். நாம் ஏன் இறங்கிப் போக வேண்டும். வேண்டாம். அவனாகவே வரட்டும். தன்னைப் புரிந்து கொண்டு வரட்டும். மைக்கேலின் மலர்க்கொத்து அவள் மடியில் அவளைப்பார்த்து புன்னகைத்தது. மிக நீண்ட ஒரு பெருமூச்சு அவளை சாய்ந்து அவரச் செய்தது. ரயில் பயணங்களில் கூடவே பயணப்பட்ட மேகங்கள், இப்போது விமான சன்னல்களுக்கு அந்தப்பக்கம் வேகமாக கடந்து போவதை ரசித்திருந்தாள் ஜினிதா.

அமெரிக்கா சென்றவளை அமேரிக்க வாழ்க்கை பெரிதும் கவர்ந்தது. சுத்தமான தெருக்கள், மிதமான சீதோஷ்ன நிலை, ஷாப்பிங், புது நட்புகள், புதிய சமூகம் அவளைப் பெரிதும் ஈர்த்தது. அலுவலகத்தில் இனிமையாகப் பழகினான் திவாகர். திவாகர் வீட்டிற்கு ஒரே பிள்ளை. சொத்துக்கள் அதிகம். அமேரிக்க வாழ்க்கை அவனைப் பொறுத்தவரை ஒரு பொழுதுபோக்கு. அதனாலேயே அமெரிக்காவின் அனேக இடங்களைச் சுற்றிப் பார்த்திருந்தான். அமேரிக்க பயணத்தை சாதனையாய் ஜினிதா நினைப்பதை தெரிந்து கொண்டவன், உள்ளுக்குள் சிரித்துக்கொண்டே ஜினிதாவை சாதனையாளினி என்று புகழோ புகழென்று புகழ்ந்தான். மைக்கேலின் மறு உருவமாய் திவாகரைப் பார்த்தாள் ஜினிதா. த‌ன் சாத‌னைக‌ள் அங்கீக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌தில் புல‌காங்கித‌ம் அடைந்தாள். த‌ன்னையும் அறியாம‌ல், திவாக‌ரின் வ‌ளையில் தானாக‌ப் போய் விழுந்தாள்.

இருவரும் ஒன்றாக சினிமா போனார்கள். ஷாப்பிங் போனார்கள். நேரம் கடந்து போன சில நாட்களில் ஜினிதாவின் அறையிலேயே தங்குமளவிற்கு நெருங்கினான் திவாகர். ஆனால் ஜினிதா அவனை தன் வீட்டில் ஹாலைத்தாண்டி வர விட வில்லை. அடுத்தவர்களை வெறுப்பேற்றி புறம் பேசித் திரிவதை மட்டுமே தங்கள் வாழ் நாளில் கற்றிருந்த சில வாய்களுக்கு இச்செய்திகள் கடல் கடந்து வந்ததில் கார்த்திக் பெருமளவில் ரகசிய நகைப்புக்களுக்கு ஆளானான். அவர்கள் கார்த்திக்கை வெறுபேற்றவேனும் அங்கு நடப்பதை கார்த்திக்கிற்கு சொல்லலானார்கள். கார்த்திக் அமெரிக்காவில் உள்ள தன் நண்பர்களிடம் உண்மையை கேட்டுத் தெரிந்து கொள்ளத் தவறவில்லை. அதில், திவாக‌ர் ஜினிதாவின் வீட்டு ஹாலைத் தாண்ட‌வில்லை என்கிற‌ செய்தி ம‌ட்டும் துண்டாகி எங்கோ விழுந்துபோன‌து. அத‌ன் கார‌ண‌மாய் காட்சிகள் தந்திரமாய்த் திரிக்கப்பட்டது. இருத்தல் தொலைத்த வார்த்தைகள் வேறுவிதமான அர்த்தங்களைத் தந்திருந்தது.

ஜினிதா வார நாட்களில் கடினமாய் வேலை பார்த்தாள். கார்த்திக்கின் நினைவு வராதிருக்க செய்யுமாய் திவாகரின், ஜினிதாவின் நேரத்தைக் களவாடும் செய்கைகளில், ஒன்றிரண்டு நொடிகள் கார்த்திக்குக்காக ஒதுங்கவே செய்தன ஜினிதாவால். ஆனால் கார்த்திக்கின் அலைபேசி எண் உபயோகத்தில் இல்லை என்பதாக சொல்லப்பட்டது. தனக்கு ஏன் புதிய நம்பரை கார்த்திக் சொல்லவில்லை என்று யோசித்தவளின் கவனங்களை திவாகரும், அலுவலகமும் பிய்த்துத் தின்றன. ஒரு வருட காலத்தில் நாட்கள் வேகமாகக் கரைந்தது. மீண்டும் இந்தியா செல்ல மூன்று மாதங்களே உள்ள நிலையில், மெதுவாக திவாகர் தொடர்பில் இருந்து கழன்று கொண்டான்.  அவன் எண்ணம் ஈடேறவில்லை என்பதை உணராமல், தான் பழகிய நட்பு காணாது போனதில் பொம்மையை தொலைத்த சிறு குழந்தையாய் உண‌ர்ந்தாள் ஜினிதா. 

ஒரே குழப்பமாக இருந்தது. தன்னைச் சுற்றி ஏதோ நடப்பதை மிகத் தாமதமாக உணரத் தொடங்கியவளின் புத்திக்கு, என்ன நடக்கிறது என்பது முழுவதும் புரியாமலே இருந்தது. கார்த்திக் சென்ட் ஆஃப் செய்யக்கூட வரவில்லை. இப்போதுவரை தகவலுமில்லை. மைக்கேல் அத்தனை பாசமாய் மலர்ச்செண்டு தந்தவனிடமிருந்து, அதன் பிறகு தன் எந்த மின்னஞ்சலுக்கும் பதில் அனுப்பவில்லை. வேலை பலுவாக இருக்குமோ என்று பட்டது அவளுக்கு. நன்றாய் பழகிய திவாகர், இப்போதெல்லாம் வருவதில்லை. பேசுவது கூட இல்லை. கடைசி 3 மாதங்கள் சிறமப்பட்டுத்தான் போனாள். கார்த்திக்கை உள்ளம் தேடியது. 

ஒரு வருட காலம் முடிந்தது. ஜினிதா இந்தியா திரும்பும் நாள் வந்தது. ஜினிதாவை முந்திக்கொண்டு ஜினிதாவும், திவாகரும் பழகிய நாட்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இந்தியா வந்து சேர்ந்து விட்டிருந்தன. அவற்றுள் சில கார்த்திக்கின் கடிதப்பெட்டிக்கும் வந்திருந்தது. அவை கவனமாக பார்க்கப்பட்டு சத்த‌மில்லாமல் குப்பையில் கொட்டப்பட்டன. இது ஏதும் அறியாமல் ஜினிதா சென்னை வந்து சேர்ந்தாள். பெற்றோர் ஜினிதாவை வீட்டிற்கு அழைத்து வந்தனர். 

உலகமே மாறியிருந்தது. கார்த்திக் அவன் கம்பெனி மூலமாக ஆஸ்திரேலியாவிற்கு அலுவலக வேலையாக அனுப்பப்பட்டிருந்தான். தன்னிடம் சொல்லாமல் சென்றதும், அவன் ஆன்சைட் சென்றதை வேறு ஒருவர் மூலமாக தான் அறிய நேர்ந்ததை உனர்ந்ததும் முதல் முறையாக தனக்கும் அவனுக்கும் இடையில் எத்தனை பெரிய இடைவெளி விழுந்திருக்கிறதென்று உண‌ர்ந்தாள். கார்த்திக்கின் கையிலிருந்த கனியைத் தட்டிப் பறித்த இருமாப்பில் இருந்த மைக்கேல் இப்போது வேறு ஒருத்தனின் கையிலிருந்த கனியைப் பறிக்க குறிவைத்திருந்ததில் ஜினிதா பழைய கதையாகிவிட்டிருந்தாள். மனிதர்களின் முகங்கள் முகமூடி கழட்டினால் எப்படி இருக்குமென்று இப்போதும் கவனிக்கத் தவறியிருந்தாள். அவளுக்கு முன் இந்தியா வந்திரங்கிய அவளும் திவாகரும் எடுத்துக்கொண்ட ஃபோட்டோக்கள் பற்றி இப்போதும் அவளுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. 

மைக்கேல் வேலை பலுவில் தொலைந்துவிட்டதாய் நம்பத் தொடங்கினாள். திவாகர் அமெரிக்காவோடு முடிந்து போன ஒன்று என்று எண்ணிக்கொண்டாள். கார்த்திக் ஆண் வர்க்கத்தின் இன்னொரு பிரதிநிதி எனக் குறிப்பெடுத்தாள். பழகிய மனிதர்களுடன், பழகாத சூழல் உறுவாவதை உணர்ந்தவளாய், வேறு கம்பெனி நுழைந்தாள். அங்கே அவளுக்காய் இன்னொரு மைக்கேல் காத்திருப்பதை உணராதவளாய்…

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : June 1, 2010 @ 11:15 am