விநோதன்

அவன் இயல்பில் அப்படி நிற்பவன் அல்ல. ஆனால் அன்று நின்றிருந்தான், நடுத்தெருவில். இடது புறம் ஒரு சைக்கிள்காரரும், வலதுபுறம் ஒரு மொபெட்காரரும் கடந்து செல்கையில் இவனை வினோதமாக பார்த்துச்செல்கின்றனர். ஆனால், அதைப் பற்றிய பிரங்ஞை இல்லாமல் அவன் பார்வைக்கு தெரிந்த சில நொடிக்காட்சிகள் அப்படியே நின்று விட்டன.  தெருவில் சென்றுகொண்டிருந்த ஏனையோர் அவனை வினோதமாய் பார்த்திருக்க, அவனது பார்வையோ எங்கோ நிலைகுத்தியிருந்தது. கோடு போட்ட அரைகை சட்டையும், கறுப்பு நிற கால்சட்டையும் மறைத்திருந்த அவன் உடலில் எந்த வித அசைவும் இன்றி சிலையாய் நின்றிருந்தான்.

அவன் பார்வை சிறையெடுத்த காட்சியில், அவனே கைதியாகிடும் படிக்கு தோன்றிய‌து , அவள் மட்டும்தான். அவள் லாவண்யா. சிகப்பு நிற சல்வாரில், தலை நிறைய மல்லிப்பூவுடன், நிலம் பார்த்தபடி, நடந்து சென்றுகொண்டிருந்தாள். அவளைத்தவிர சுற்றி இருந்த அத்தனையும், விலக எத்தனிக்கும் பனிமூட்டம் போலவே பதியும் அவன் நினைவுகளில். அவளுடன் யாரும் இல்லை. தனியே தான் நடந்து கொண்டிருந்தாள். மிக வேகமாயும் இல்லாமல், மிக மெதுவாகவும் இல்லாமல், நிதானமாக, அவளைத் தாங்கும் நிலம் கூட அவள் இருப்பை உணர்ந்திருக்குமா என்று சந்தேகம் கொள்ளும் விதத்துக்கு நடந்திருந்தாள். எல்லாம் சில நொடிப்பொழுதுகள் தான்.

எங்கிருந்தோ அவனைத் தாண்டி கடந்து போன ஒரு கனரக‌ வாகனம் அவன் பார்வை கோணத்தை கத்தரித்துச் செல்ல, துண்டாகிப் போன மறுபாதியில் அவள் எங்கோ மறைந்துவிட்டிருந்தாள். அவள் பார்வையில் பட்ட அதிர்ச்சியினின்று மீள்வதற்குள்ளாக, சட்டென அவள், கண்களை விட்டு அகன்றதை ஜீரணிக்க முடியாமல், அனிச்சையாக அவளை தேடத்தொடங்கியிருந்தான். 

அவ‌ள் நின்றிருந்த‌ இட‌த்தில், இருள் சூழ பூட்டிக் கிடந்த வீட்டின் முன், அக்கம்பக்கத்திலிருந்த கடைகளில், இந்தப்புறம், அந்தப்புறம் என எந்தப்புறம் நோக்கினும் அவளைக் காண‌வில்லை. நடுக்கடலில் தத்தளிக்கையில், தூரத்தே தெரிந்து, உயிர் பிழைப்பதற்கான நம்பிக்கையூட்டி பின் அப்படியே பார்வையினின்று மறைந்து போன கப்பலைப் போல உணர்ந்தான். அவனை விட மூன்று வயது மூத்தவளிடம் தனக்கு ஏன் இந்த மாதிரியான ஒரு உணர்வு என்று அந்த நேரம் அவனுக்கு தோன்றினாலும், 'இப்படித்தான் கடந்த நான்கு வருடமாய் தோன்றுகிறது, ஆனாலும் இது மாறுவதற்கில்லை, மாறுவதும் பிடித்தமில்லை' என்பதாக அவனுக்கு தோன்றியது வழக்கம்போல். 

மனத்திற்கு எது சாசுவதம் என்பது பல சமயங்களில் ஒரு முரணின் பிம்பமாகவே இருக்கின்றது. அவனுக்கு அவள் பிடித்தம். இத்தனைக்கும் இந்த நான்கு வருடங்களில் எதிர்வீடாக இருந்தபோதிலும் அவளுடன் அவன் பேசியது இல்லை. பேசவென்று அவன் முயன்றதில்லை. அவள் மேல் அவன் காதல் வயப்பட்டிருக்கவில்லை. தோழி என்றழைத்திட அவளுடன் பேசியுமிருக்கவில்லை. வலியப் போய் அறிமுகப்படுத்திக்கொள்ளவோ, பேசவோ காரணங்களில்லை. வலுக்கட்டாயமாய்க் ஒரு உறவை வளர்த்து அதற்கு காதல் என்று பெயரிட்டு உலவ அவனுக்குத் தேவைகள் இருக்கவில்லை. ஆனால் அவளைப் பார்த்துக்கொண்டிருக்க பிடிக்கிறது. அதில் ஏதோ இருக்கிறது. மனம் லேசானது மாதிரி, வர வேண்டிய இடத்துக்கு வந்தாயிற்று என்பது போல. பூர்வ ஜென்ம பந்தமாக இருக்குமோ என்று கூட அவ்வப்போது யோசித்திருக்கிறான். 

அவளைப் பார்க்கும் போது ஒரு அமைதி கலந்த சாசுவதம் மனதில் பரவுகிறது. அந்த நேரம் அது போதும். எந்த பேச்சும் வேண்டாம். பேசி என்னாகப்போகிறது. இந்தப் பார்வையில், ஆயிரம் கோடி காதல்கள் கூடுமே. அவ்வப்போது இவன் புறமாக அவள் திரும்புவது போதுமே. அது தன்னைப் பார்க்கவா, சீ சீ வேறு யாரையோ பார்க்கவா? இப்படி ஏன் யோசிக்கவேண்டும்? 

கோயிலுக்கு போகிறோம். அம்பாள் தன்னைப் பார்க்கிறாளா? இல்லையா? என்பது அனாவசியம். அம்பாளின் மேல் த‌னக்கு பக்தி இருக்கிறது. அந்த பக்திக்கு உண்மையாய் இருத்தல் போதும். அது போதும் த‌னக்கு என்பதாகும்போது, அம்பாள் எதைப் பார்க்கிறாள், எப்படிப் பார்க்கிறாளென்றெல்லாம் கண்டேனா? எதையும் எதிர்பார்க்காமல் அன்பு செலுத்துவதில் இது அடங்கிப்போகுமா? உண்மையில் அப்ப‌டி அன்பு செலுத்துவ‌துதான் அவ‌ன் இய‌ல்பு அல்ல‌து அவ‌ன் விருப்ப‌ம். விருப்ப‌மே இய‌ல்பாகியிருக்க‌லாம். அதனை அவன் தன் இயல்பென  நினைத்திருக்கலாம்.

அவ‌ள் பார்வையில் அக‌ப்ப‌ட‌வில்லை. அவ‌ன் பார்வை மீண்டும் மீண்டும் அலைபாய்ந்த‌து. ஆறு மாத‌ங்க‌ளுக்கு முன்பு வீடு மாற்றி சென்றுவிட்டது அவ‌ள் குடும்ப‌ம். அன்றிலிருந்து இந்த‌ தேடல். அவ‌ளை போகும் இட‌மெல்லாம் தேடும் வேத‌னை. காணும் பெண்க‌ளிலெல்லாம் அவ‌ளைத் தேடும் பிர‌ங்ஞை. 

இன்று அவளே எதிர்படுகையில், எதிர்பட்டது அவள் தானா என அவதானிக்கையிலேயே, அவள் மறைந்துவிட்டிருந்தாள். எங்கேயாவது அவளை மீண்டும் பார்த்திட மாட்டோமா என் ஏங்கியது அவன் மனம். சளைக்காமல் இங்குமங்கும் பார்த்தபடியே இருந்தான் அவன். குறைத்தபடி ஓடும் நாய், பேப்பர் பொறுக்கும் சிறுவன், தனியே சுழலும் காற்றோடு சேர்ந்து சுழலும் குப்பை காகிதங்கள், கையில் காய்கறிக்கூடையுடன் கடந்து போகும் குடும்பப்பெண்கள் என எல்லோர் மத்தியிலும் அவளைத் தேடிக்கொண்டே தெரு முனைக்கு வந்துவிட்டிருந்தான். அந்தத் தெரு இருபுறமும் பிரிந்தது. அதில் வலது புறம் பிரிந்த தெருவில் அவன் பார்வை படர்ந்த போது அவள் மீண்டும் அகப்பட்டாள். அதே சிகப்பு நிற சல்வார். 

அவளை மீண்டும் கண்ணால் கண்டது மிகவும் சந்தோஷமாக இருந்தது. மனதுக்கு இதமாக இருந்தது. இதயத்தின் மூலையில் எரியத் தொடங்கிய ஏதோ ஒரு ஜ்வாலை மீது பனிக்குடம் கவிழ்ந்தது போலிருந்தது. அவளின் வசிப்பிடம் தெரிந்துகொள்ளும் ஆவலில் அவளைத் தொடரலானான். அவள், அவன் பார்வைக்கு, காற்றிலே மிதந்தபடி, அருகாமையில் இருந்த கோயிலை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள். அவள் பின்னாலேயே அவனும் சென்றான். அவ‌ன் வேக‌த்தில், அவ‌ளை கோயிலுக்கு முன்ன‌மேயே ச‌ந்தித்து விடுவோமோ என‌த் தோன்றிய‌து. அது நாள் வ‌ரை பேசாத‌ அவ‌ளிட‌ம் திடீரென்று என்ன‌ பேசுவ‌து. அவ‌னுக்கு ஒன்றும் தோன்ற‌வில்லை. பிற்பாடு பேச‌லாம், இப்போதைக்கு அவ‌ளின் இருப்பிட‌ம் அறிய‌லாமென்று சற்றேன வேகம் குறைத்து ந‌ட‌க்க‌லானான். 

சாலையோர‌ம் ஒரு வீட்டின் முகப்புக்கதவில் கட்டப்பட்டிருந்த நாய் அவளையும், சற்று பின்னாலேயே வரும் அவனையும் பார்த்து என்ன நினைத்ததோ, குறைக்கத் தொடங்கியது. அவ‌ள் கோயிலை நெருங்கினாள். அவ‌னும் பின்னாலேயே நெருங்கினான். அவ‌ள் ச‌ட்டென‌ வ‌ல‌துபுற‌ம் திரும்பி, கோயிலை ஒட்டியிருந்த‌ வீட்டினுள் நுழைந்தாள். அதுதான் அவ‌ள் வீடாக‌ இருக்க‌ வேண்டும். அவ‌ன் நினைத்துக்கொண்டான். இத்த‌னை ப‌க்க‌மாக‌வா இருக்கிறாள். இது நாள் வ‌ரை எப்ப‌டி க‌வ‌னியாது போனோம் என‌ ஆச்ச‌ரிய‌ம் கொண்டான். வீட்டு வாச‌லில் நீர் தெளித்து கோல‌மிட‌ப்ப‌ட்டு, அந்த‌ கோல‌ப்பொடியை சில‌ எறும்புக‌ள் ஓர் ஓர‌மாய் மொய்த்திருந்த‌ன‌. வீடு, முக‌ப்பிலிருந்து, துளசி மாடத்தை மையமாகக் கொண்ட, பல்வேறு பூச்செடிகள் நிறைந்த,  சீராக‌ ந‌டைபாதை அமையப்பெற்ற‌ தோட்ட‌த்தைத் தாண்டி, உள்வாங்கியிருந்த‌து.

அவ‌ன், உள்ளே செல்வ‌தா வேண்டாமா என்ற‌ த‌ய‌ங்கிய‌வாறே நின்றிருந்தான். என்ன‌வென்று சொல்லிச் செல்வ‌து என்று யோசித்த‌ப‌டியே நின்றிருந்தான். ச‌ரி, வீட்டினுள் யாரெனும் தென்ப‌டுவார்க‌ள். மாமாவோ, அத்தையோ யாரேனும் தென்ப‌ட்டால் ந‌ல‌ம் விசாரித்த‌ப‌டி அறிமுக‌ம் செய்த‌வாறே பிர‌வேசிக்க‌லாம் என் எண்ணிய‌வாறே அவ‌ன் தோட்ட‌த்தைத் தாண்டி வீட்டினுள் பார்வையை செலுத்திய‌ போது அதைக் காண‌ நேர்ந்த‌து. அவ‌ள் த‌லை நிறைய‌ ம‌ல்லிப்பூவுட‌ன் ப‌ச்சை தாவ‌ணியில் சிரித்த‌ முக‌மாய் இருந்த‌ புகைப்ப‌ட‌த்தை சுற்றி மாலை அணிவிக்க‌ப்ப‌ட்டு எரிந்து கொண்டிருந்த‌ நிலையில் இர‌ண்டு ஊதுவ‌த்திக‌ள் கொளுத்த‌ப்ப‌ட்டு புகைப்படத்தைத் தாங்கியிருந்த சட்டத்தில் செருக‌ப்ப‌ட்டிருந்த‌ன‌.

அந்த‌ப் புகைப்ப‌ட‌த்தின் மீது அவ‌ன் பார்வை நிலை கொண்டிருக்க‌, அவ‌ன் மீண்டும் விநோத‌னாகியிருந்தான்.

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : June 1, 2010 @ 11:14 am