காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியும் இந்தியாவும்
உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் விளையாட்டுப் போட்டிகள் அடுத்த மாதம் அக்டோபரில் தொடங்க இருக்கிறது. இந்த விளையாட்டுப் போட்டிகளை இந்த முறை நடத்துபவர்கள் நாம்தான். அதுவும் நமது தலைநகர் டெல்லியில். ஏசியாட் 82 – வை நாம் சிறப்புடன் நடத்தி முடித்தோம். அதே எதிபார்ப்புத்தான் எல்லோருக்கும் இருந்தது. ஆனால் எதிபார்ப்புக்கள் பொய்த்துவிடும் போல் இருக்கிறது. இன்னும் விளையாட்டுத் திடல்கள், வீரர்கள் தங்கும் கேம்ஸ் வில்லேஜ் ஆகியவைகள் முழுமை பெறவில்லை. முழுமையாக மின் வசதி, தண்ணீர் வசதிகள் ஆகியவை செய்து தரப்படவில்லை. அடுத்த வாரம் முதல் வீரர்கள் வர ஆரம்பித்து விடுவார்கள். வேலையெல்லாம் சீக்கிரம் முடித்து எல்லா இடங்களையும் பாதுகாப்புக் காவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் வேலைகள் எதிர்பார்த்த வேகத்தில் நடக்கவில்லை. மைதானங்களில் தண்ணீர் தங்குகிறது. போதாத குறைக்கு மழை வேறு விடாமல் பெய்து கொண்டு இருக்கிறது. யுமுனையின் வெள்ளப் பெருக்கு வேறு. கேம்ஸ் வில்லேஜ்ஜைச் சுற்றி தண்ணீர் தேங்கி இருக்கிறது. இதன் காரணமாக கொசு உற்பத்தி, டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஆகியவை இருக்கின்றன. ஏற்கனவே டெல்லியை டெங்கு காய்ச்சல் படாத பாடு படுத்திக் கொண்டு இருக்கிறது. தண்ணீரில் ஏராளமான பாம்புகள் வேறு. இந்தத் தொந்தரவுகள் நமது திறமைக்கு சவால் விடுவதாகவே இருக்கிறது.
முதலில் சுமார் 8000 பேர்கள் (4500 தடகள வீரர்கள், மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள்) வருவதாக இருந்தது. ஆனால் தற்போது அவர்களில் சுமார் 1000 பேர்கள் விலச்கிக் கொண்டு விட்டதாகத் தெரிகிறது. காரணம் பூர்வாங்க வேலைகள் எதுவும் முடியாததுதான்.
இது மிகவும் வேதனயும் வெட்கமும் பட வேண்டிய விஷயம். விளையாட்டுக்கள் ஆரம்பமாக இன்னும் சுமார் 20 நாட்களே உள்ள நிலயில் பூர்வாங்க வேலைகள் முடியவில்லை என்பது நமது திறமையின்மையையே காட்டுகிறது. ஏற்கனவே ஊழல் புகாரில் சிக்கியிருக்கும் கமிட்டி எதையும் முறையாக முடிக்கவிலை என்பது வெள்ளிடை மலை. இந்தப் போட்டிகளை நவம்பரில் நடத்தி இருக்க வேண்டும் என்று போட்டி அமைப்பாளர் ஒருவர் கூறியிருக்கிறார். இவை எல்லாம் காலங்கடந்த யோஜனைகள் காமன்வெல்த் போட்டிகள் நம்மை தலை நிமிரச்செய்யுமா அல்லது தலை குனியச் செய்யப் போகிறதா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்.