தீபாவளி மலர் 2005
 
கட்டுரைகள்
  தொடரும் கேள்விகள்
(அருணா ஸ்ரீனிவாசன்)
  கிஷோர் குமார்
(அப்துல் கலாம் ஆசாத்)
  மலேசியத் தமிழ்க் கட்டுரை இலக்கியம்
(ரெ. கார்த்திகேசு)
  மடியில் இரசாயன குண்டு
(குழலி)
  திருமணமும்,6-ம் வீடும்
(ஜோதிடரத்னா S. சந்திரசேகரன்)
  மைசூர் சௌடையா
('லலிதா')
 
சிறுகதைகள்
  கவிதைத் தொகுப்பு
(சேவியர்)
  தாத்தாச்சாரியார் கோட்
(என். சொக்கன்)
  'டிரீம்' தரிகிட
(ஜே.எஸ்.ராகவன்)
  திருப்பம்
(சித்ரன்)
  காரணம்
(விச்சு)
  ம்.ம்...ஹூஹூம்!
(ராமசந்திரன் உஷா)
  காதல் தூதுவன்
(சரசுராம்)
  குலம் தரும்
(ஷைலஜா)
  அவள், அவன், அவர்கள்
(மீனாக்ஸ்)
  தேவர்களும் கால்களும்
(குழலி)
  நிதானம்
(கிருஷ்ணா வெங்கட்ராமா)
 
கவிதைகள்
  நாட்குறிப்பு
(சேவியர்)
  காலக்கைத்துணை
(பிச்சினிக்காடு இளங்கோ)
 
பேட்டி
  எழுத்தாளர் பி.ஏ.கே வுடன் சந்திப்பு
(பாஸ்டன் பாலாஜி)
 
குறுநாவல்
  வேண்டியது வேறில்லை
(ஜெயந்தி சங்கர்)
<< முதல் பக்கம்
சிறுகதை : 'டிரீம்' தரிகிட
- ஜே.எஸ்.ராகவன் [jsraghavan@yahoo.com]
| Printable version | URL |

இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் மலேஷியா போன்ற கோபால் பல்பொடி தேய்க்கப்படும் நாடுகளில் இன்னும் சுற்றி வரும் தன் அமெரிக்க லக்கேஜைப் பற்றிய சுமையான கவலையுடன் பல்லாவர வீட்டில் பல் தேய்த்துக் கொண்டிருந்த நட்ராஜ் 'டக்-டக்-டக்' என்ற சத்தத்தைக் கேட்டு விழித்தான்.

"அம்மா! காலையிலே சம்மட்டியாலே அடிக்கிறமாதிரி இது என்ன சத்தம்? பக்கத்திலே ஒர்க்ஷாப் இருக்கா? ஆக்சிடென்ட்லே சப்பையான வண்டியை பென்டு எடுக்கிறாங்களா?"

"கார்களை பென்டு எடுக்கலேடா நட்டூ. காரிகைகளைத்தான் பென்டு எடுக்கிறாங்க."

"காரிகைகள்னா பெண்கள் இல்லே? சிறப்புத் தமிழ்லே படிச்சது. அவங்களை ஏன் பென்டு எடுக்கணும்? பெண்கள்னா பென்டுகள், வளைவுகள், நெளிவுகள் எல்லாம் இருந்தாதானே அழகு?"

"பென்டை எடுக்கிறது சுத்தியால தட்டற மெக்கானிக் இல்லே. ஜதி சொல்லிண்டு தட்டற நட்டுவனார்."

"அட! டான்ஸ் ஸ்கூலா? பக்கத்து வீட்டிலே பரதமா? அடுத்த வீட்டிலே அபிநயமா? அதிகாலையிலே அடவுகளா?"

"தினம் இந்தக் கூத்துதான். ராத்திரி பகல்னு கிடையாது. சென்னையிலே சுனாமி வந்த அன்னிக்குக் கூட இந்தப் பெண்கள் சாமி வந்த மாதிரி ஆடிண்டு இருந்தாங்க."

"'கவலையைத் தீர்ப்பது நாட்டியக் கலையே'ன்னு எம்.கே.டி பாடினார். அதனாலே ஆடினாங்களோ என்னவோ?"

"பக்கத்து வீட்டுக்குப் போய், 'இப்படித் தட்டிச் சத்தம் போட்டா எப்படி? தட்டிக் கேக்க ஆளில்லைன்னு நினைப்பா?'ன்னு உங்கப்பாவைக் கேட்டுட்டு வரச்சொன்னேன். அவர் ஆடி அசையவே இல்லை. அன்னிக்கு பனியன் போட்டுக்காம, வேட்டியை கொத்தனார் மாதிரி கீழ் பாச்சா கட்டிண்டு பக்கத்து வீட்டு தகஜூண-தம்முக்கு இடுப்பிலே கையை வெச்சுண்டு இடைத் தீர்மான ஸ்டெப் போட்டிண்டு இருந்தார். "

"அப்பா ஏகலைவனா? கட்டை விரல் ஃபீஸ் கூட குடுக்காம 'பரதநாட்டியம் ஃபர் டம்மீஸ்'ங்கிற புஸ்தகத்தைப் புரட்டி இங்கேயிருந்தே நாட்டியம் கத்துக்கறாரோ என்னவோ?"

"சிவான்னு வீட்டிலே இருக்கும்போதே தடுக்கி கீழே விழுவார். சிவ தாண்டவமா ஆடப் போறார்? கூத்துதான். சரி, நீ காப்பி குடிச்சுட்டு என்ன பண்றே..."

"மாடியிலே ஜூனியர் ஏகலைவனா அப்பாவோட ஜோடியா தத்தித் தளாங்கு தகஜூமி தான்னு நாட்டியப் பயிற்சி எடுத்துக்கச் சொல்றியா?"

"முட்டிக்கு முட்டி தட்டிடுவேன். 'சத்தம் போடாதீங்கன்னு அடுத்த வீட்டுக்க ஆடாம அசையாம போய் சத்தம் போட்டுவிட்டு. அதோ பாரு. தட்டுக் குச்சி சத்தத்தோட தொப்பு தொப்புன்னு மிருதங்கமும் சேந்தாச்சு."

 ( 2 )

அடுத்த வீட்டு வாசப்படி. டக்-டக்-டக், டக்-டக்-டக் தட்டுக் குச்சியின் சத்தம் வீட்டின் இதயத் துடிப்பாக காதைத் தாக்குகிறது. மிருதங்கம் ஸைலன்ட். வாசிப்பவர் ரவையைத் தேடியோ, ரவா உப்புமாவைத் தேடியோ போயிருக்கணும்.

"ஸார்?" நட்டு குரல் கொடுத்தான்.

"யாரு?" மின்னலும், பால் நிலாவும் இணைந்து பூமியில் இறங்கி, மயிலின் ஒயில், குயிலின் குரல், மானின் மினுமினுப்பை இழைத்துக் கொண்டு வழியில் நல்லியில் நுழைந்து, கருநீல சுரிதார், அரக்கு டாப் ஆணிந்து வந்தது போலத் தோன்றிய பெண்ணைப் பார்த்த கணமே நட்டுவின் இதயம் விலுக் விலுக் கென்று குத்தாட்டம் ஆடத் தொடங்கியது.

"நா...நா..நட்டூ..." நட்டு நாக்குழறினான்.

"நட்டுவா? நட்டுங்கிறது நட்டுவனாரின் சுருக்கமா? எந்தூர் பாணி? வழுஊரா? பந்தநல்லூரா?"

"மை காட்! அமெரிக்காவில் எம். எஸ் படிச்சுட்டு நாசாவிலே ராக்கெட் விடற நானா நட்டுவனார்? நான் வந்தது எச்சரிக்க. உங்க வீட்டிலேந்து வர சத்தத்தை தாங்க முடியலே. தூங்க முடியலே. லுக். மூணு நாளிலே டொக்-டொக்-டொக் சத்தம் நின்னுடணும். இல்லாட்டி.."

"இல்லாட்டி?"

"சாக்ஸஃபோன் தெரியுமா? டெனார் ஸாக்ஸ். அதை வாசிக்க ஆரம்பிச்சுடுவேன். ஓ.கே? காது சும்மா ங்கொய்யினு பிச்சுண்டு போயிடும். வர்ட்டா?"

ஆடிப்போய் நிற்கிறாள் வசந்தா.

( 3 )

மறு நாள் காலை. 'ஸ்ரீஷடன்வய ஸாம்பவாக்யா பூஜா மாலா' புஸ்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்த நாகேந்திரன் கோபத்துடன் 'வசந்தா' என்று கத்துகிறார்.

"இதோ வரேன்பா."

"என்னம்மா இது? என்னாலே யோகா பண்ண முடியலே. ஹிண்டு படிக்க முடியலே. டெலிஃபோன் பேச முடியலே. ஏன் வீடே ம்யூட்லே போட்டா மாதிரி ஸைலன்ட்டா இருக்கு? டான்ஸ் கிளாஸ் ஆரம்பிக்கலயா? எங்கே ஸ்டூடன்ட்ஸ்? எங்கே மிருதங்க மணி?"

"அப்பா, உங்களுக்கு தட்டுக் குச்சி, மிருதங்க சத்தம் இல்லேன்னா ஒண்ணும் ஓடாது. ஆனா பக்கத்து வீட்டுக்கு கலைக் காது இல்லேப்பா. அங்கேந்து சத்தத்தை நிறுத்தச் சொல்லி மிரட்டல் வந்தாச்சு."

"நிறுத்தலேன்னா?"

"ஆட்டோலே கூலிப்படை வராதாம். பதிலடியா சாக்ஸ் வாசிப்பாங்களாம்."

"என்னம்மா இது? சாக்ஸ்ஸைக் காலில் தானே போட்டுப்பாங்க. வாசிக்கிறதாவது? சில சாக்ஸெல்லாம் பயங்கரமா ஸ்மெல் அடிக்குமே."

"அப்பா! நீங்க வீணை, ஃபளூட்டை தாண்டிப போனதில்லை. சாக்ஸ்னா சாக்ஸஃபோன். குட்டி தும்பிக்கையிலே வரிசையா பித்தளை பட்டன்கள் தெச்சா மாதிரி இருக்கும். ஏக சத்தம் போடும்."

"விடு. இந்த மிரட்டலை எல்லாம் பூன்னு ஊதிடலாம். புவனேஸ்வரி ரட்சிப்பா. வசந்தா, ஒரு ஃபோன் கால் வந்ததும்மா. 'அமெரிக்காவிலேந்து உங்களுக்கு ஒரு பார்ஸல் கொண்டு வந்திருக்கேன். உங்க டெலிஃபோன் நம்பரை மட்டும் ஹ¨ஸ்டன்லே குடுத்தாங்க. அட்ரஸை சொன்னா அனுப்பறேன். ஓகே?'ன்னு ஒரு பையன் பேசினான். நான் அட்ரஸ் கொடுத்தேன்.

அதைக் கேட்டுட்டு, 'அட பக்கத்து வீடா'ன்னு குமரி முத்து பாணியிலே இடிஇடின்னு சிரிச்சான். 'பார்ஸல் வேணும்னா என்னோட எச்சரிக்கையை மதியுங்க. விவரங்களுக்கு உங்க வீட்டு அப்ஸரஸை அணுகுங்க'ன்னு சொல்லி ஃபோனை வெச்சுட்டான்."

"அப்ஸரஸ்னா சொன்னான்? அப்பா, அது பக்கத்து விட்டுப் பையன் நட்டுப்பா."

"அதென்னும்மா நட்டு, போல்ட்டுன்னு."

"நாசாலேந்து எலிப்டிகலா ராக்கெட்லே வந்திருக்கானாம். ஜெட் லாக் அரியர்ஸை தூங்கித் தீக்க நாம நாட்டிய சத்தத்தை நிறுத்தணுமாம்..."

"இல்லாட்டி சாக்ஸோ, ஷ¨வோ வசிப்பானாமா?"

"அப்படித்தான் சூடா அறிக்கை விட்டான்."

"ம்? பாக்கலாம். அம்பிகை வழி காட்டுவா. தாயே தாரகேஸ்வரீ..."

( 4 )

தாய் ஃபுட் ரெஸ்டாரன்டில் பாலாஜியை நட்டு சந்திக்கிறான்.

"மெனு தாய் மொழியில் இருந்தும் புரியலே! நீயே ஆர்டர் பண்ணு. நட்டு. கேள்விப் பட்டேன். கங்கிராட்ஸ்டா."

"தாங்க்ஸ் பாலா. சினிமாலே வர மாதிரி என் லைஃப்லே எவ்வளவு திருப்பங்க."

"நீ சினிமாலே நடிக்கப்போறியாமே? அதுவும் அமெரிக்காவிலே எடுக்கப்போற படத்திலே. கல்யாணம் வேற நிச்சயமாயிடுத்தாம். சொல்லவே இல்லையா?"

"சொல்றேன். மீனா மேனனைத் தெரியுமா? ஆர்ட் ஃபில்ம் புரொட்யூஸர். அவங்களை ஃபில்ம் சேம்பரிலே ஆக்ஸிடென்டலா பாத்தேன். 'இண்டியன் கர்ரி'னு ஹாலிவுட்லே எடுக்கப்போற படத்துக்கு அவங்க தேடிண்டு இருந்த ஹீரோவின் லட்சணங்கள் எங்கிட்டே அம்சமா இருக்காம். டயலாக் இங்கிலீஷ்லேதானே? பின்னிடுவேன். நடிப்பு? எனக்கு ஜோரா வரும். கதைப்படி ஹீரோ சாக்ஸ் பிளேயராம். எனக்கு நெஜமாவே வாசிக்கத் தெரியும். 'ஐஸ் நழுவி ஸ்காட்சில் விழுந்த மாதிரி மேனன் சந்தோஷப் பட்டாங்க."

"டான்ஸ் வேற கத்துண்டயாமே?"

"ஸகிரிப்டுபடி சாலஞ்சா நா பரத நாட்டியம் வேற ஆடணுமாம். 'அதுக்காக பரதத்திலே ஒரு கிராஷ் கோர்ஸ் எடுத்துண்டு வா. ஷ¨ட்டிங் செப்டம்பரிலே'ன்னு சொல்லிட்டு பறந்து போயிட்டாங்க."

"அப்படியா? டான்ஸ§க்கு எங்கே போனே?"

"டக்-டக்குனு பக்கத்து வீட்டுக்குத்தான். அவங்களோட பேச்சு வார்த்தை நடத்தினேன். அதன்படி, வசந்தா ஒரு மாசத்திலே எனக்கு பரத நாட்டியத்தின் கீ மூவ்மென்ட்ஸை சொல்லிக் குடுக்கணும். காணிக்கையா கட்டை விரல் என்ன? முழுசா என்னையே அந்த அழகுக் கிளிக்குத் தந்திடறேன்னேன். அடுத்த வீடு சரின்னு சொல்லிடுத்து,"

"செம லக்கிடா நீ."

"பக்கத்து விட்டு நாட்டிய சத்தம் அமெரிக்கா குடி பெயர்ந்துடுங்கிறதாலே எங்கம்மா பாட்டு கிளாஸை ஆரம்பிச்சு தூள் கிளப்புவா. வசந்தா ட்ரீம் பிராஜக்டான நாட்டியப் பள்ளியை ஹ¨ஸ்டனிலே நடத்தி டான்ஸர்கள் மூலமா டாலர்களை ஆடிக் குவிப்பா. அவளோட அப்பாவும் இந்திய குடும்பங்களில் விசேஷ பூஜை, புனஸ்காரம், பரிகாரம் செஞ்சு வைக்க பரமேஸ்வரி, பாகேஸ்வரின்னு சௌன்டு குடுத்திண்டு வெளியிலே கிளம்பி எங்களோட பூஜை வேளியிலே கரடியா இருக்க மாட்டார். பாலா, எங்க கனாக்களை 'டிரீம்தரிகிட'ங்கிற சொல்கட்டிலே அடக்கிடலாம் இல்லையா ?

உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |