தீபாவளி மலர் 2005
 
கட்டுரைகள்
  தொடரும் கேள்விகள்
(அருணா ஸ்ரீனிவாசன்)
  கிஷோர் குமார்
(அப்துல் கலாம் ஆசாத்)
  மலேசியத் தமிழ்க் கட்டுரை இலக்கியம்
(ரெ. கார்த்திகேசு)
  மடியில் இரசாயன குண்டு
(குழலி)
  திருமணமும்,6-ம் வீடும்
(ஜோதிடரத்னா S. சந்திரசேகரன்)
  மைசூர் சௌடையா
('லலிதா')
 
சிறுகதைகள்
  கவிதைத் தொகுப்பு
(சேவியர்)
  தாத்தாச்சாரியார் கோட்
(என். சொக்கன்)
  'டிரீம்' தரிகிட
(ஜே.எஸ்.ராகவன்)
  திருப்பம்
(சித்ரன்)
  காரணம்
(விச்சு)
  ம்.ம்...ஹூஹூம்!
(ராமசந்திரன் உஷா)
  காதல் தூதுவன்
(சரசுராம்)
  குலம் தரும்
(ஷைலஜா)
  அவள், அவன், அவர்கள்
(மீனாக்ஸ்)
  தேவர்களும் கால்களும்
(குழலி)
  நிதானம்
(கிருஷ்ணா வெங்கட்ராமா)
 
கவிதைகள்
  நாட்குறிப்பு
(சேவியர்)
  காலக்கைத்துணை
(பிச்சினிக்காடு இளங்கோ)
 
பேட்டி
  எழுத்தாளர் பி.ஏ.கே வுடன் சந்திப்பு
(பாஸ்டன் பாலாஜி)
 
குறுநாவல்
  வேண்டியது வேறில்லை
(ஜெயந்தி சங்கர்)
<< முதல் பக்கம்
சிறுகதை : திருப்பம்
- சித்ரன்
| Printable version | URL |

குல்மொஹர் மரத்தில் போஸ்ட் பாக்ஸ் கட்டியிருந்த தெரு முக்கில் திரும்பும்போது செல்வாவின் கால்கள் தயங்கி நின்றன. அங்கிருந்து நாலாவது காம்பெளண்டின் பச்சை கேட்டில் ஜேவியம்மா நிற்கிறாளா என்று பார்த்தான். வாசல் மரத்தில் ஒரு காகத்தைத் தவிர மற்றபடி ஒருவரின் நடமாட்டத்தையும் காணோம். "அப்பாடா" என்று அவன் வாய் முணுமுணுத்தது. கூட வந்துகொண்டிருந்த வாசுவும் நின்று 'என்னடா' என்றான் புரியாதமாதிரி.

"அந்தம்மா இருக்குதான்னு பாத்தேன். நல்ல வேளை ஆளக் காணோம். மத்தியானம் பாபு வீட்டுக்குப் போலாம்னு வந்தப்ப கூட நின்னுட்டிருந்தா. அப்படியே திரும்பிப் போயிட்டேன்" என்றான். வாசு பச்சை கேட்டின் திசைநோக்கி ஒரு அலட்சியப் பார்வையை வீசிவிட்டு அதை அப்படியே செல்வாவிடம் திருப்பினான். "ஏண்டா இப்படி அந்தம்மாவுக்கு பயந்து சாவறீங்க!" என்றான் சலிப்பாக.

வாசு அப்படிக் கேட்டது கொஞ்சம் அவமானமாகத்தான் இருந்தது. செல்வா அவனுக்கு பதில் சொல்லாமல் நடந்தான். ஜேவியம்மா காம்பெளண்டை நெருங்கும்போது வழக்கம்போல ஒரு பதட்டச் சுழல் நெஞ்சில் மையம் கொண்டது. அதை முகத்தில் காட்டினால் போச்சு! வாசு அவன் அட்வைஸ் கட்டை அவிழ்க்க ஆரம்பித்து விடுவான். அத்தனை நேரம் கலகலப்பாகப் பேசிக்கொண்டு வந்தது இந்தத் தெரு முனை திரும்பியதும் திடீரென்று நின்று போய்விட்டது.

செல்வாவின் பிரச்சனைகள் எல்லாவற்றிற்கும் காரணம் ஜேவி சார் என்று சுருக்கமாக அழைக்கப்படுகிற ஜே. விஸ்வநாதன். அவரைச் சொல்லிக் குற்றமில்லை. அவர் பண்ணின முதல் தப்பு செல்வா படிக்கிற கல்லூரியில் அவனுக்கு லெக்ட்சரராக வந்து வாய்த்தது. மேலும் ஹெட் ஆ·ப் த டிபார்ட்மெண்ட்டாக வேறு இருந்து தொலைத்தார். இரண்டாவது தப்பு செல்வாவின் நண்பன் பாபுவின் வீட்டுக்கு அருகிலேயே நான்கு மாதத்துக்கு முன் குடிவந்து தொலைத்தது. மூன்றாவது தப்பு ஜேவியம்மா என்கிற இந்த பிசாசைக் கல்யாணம் செய்திருப்பது. (அதாவது அவள் ஜேவி சாரின் மனைவியாக இருக்கிறபடியால் ஜேவியம்மா என்று காலனியில் எல்லோராலும் அழைக்கப்பட்டாள் என்று குறிப்பிட வேண்டியதில்லை). நாலாவது மிக முக்கியமான தப்பு ஜேவி சார் தன் மனைவிக்கு அடங்கின புருஷனாய் எப்போதும் வளையவருவது.

ஜேவியம்மா என்கிற இந்த அம்மணிக்கு வேறு வேலையே இல்லை என்பதுபோல எப்போதும் வாசல் கேட்டிலேயே கையை ஊன்றிக்கொண்டு தெருவை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பாள். பாபுவின் வீட்டுக்கு அடிக்கடி வந்து போகிற செல்வா தன் கணவனின் மாணவன் என்பதை அவள் எப்படித்தான் தெரிந்து கொண்டாளோ! செல்வாவுக்கு அன்றைக்கு ஆரம்பித்தது பிரச்சனை. ஒரு நாள் சாயங்காலம் செல்வா ஜேவி சாரின் வீட்டைத்தாண்டும்போது "ஏய்.. இங்க வா!" என்று கேட்டுக்குள்ளிருந்து அதிகாரம் தோய்ந்த குரல் வந்தது.

திடுக்கிட்டுத் திரும்பினபோது ஜேவியம்மா முகத்தில் ஒரு வில்லித்தனமான புன்னகையுடன் நின்றிருந்தாள். சுற்றிக்கட்டிய புடவைக்குள் இரட்டை நாடி உருவம். உருளும் கண்கள். பக்கத்தில் அவள் பெண். அவளுக்கு ஒரு பதினாறு பதினேழு வயசிருக்கும். அவளை பஸ் ஸ்டாப்பில் ஓரிரு முறை மார்பில் புத்தகங்களோடு பார்த்த ஞாபகம் வந்தது. வாசுவைக் கேட்டால் எங்கே படிக்கிறாள் என்று தெரிந்துவிடும். ஜேவியம்மா 'க்கும்' என்று கணைத்துவிட்டு, "செல்வாதான ஒம்பேரு" என்றாள்.

தன் பெயர் அவளுக்கெப்படி தெரிந்தது என்று அவன் குழப்பமாய் யோசித்தான். ஆமாம் என்று தலையாட்டினான்.

"ஸ்டுடன்ட்டா லட்சணமா இல்லாம ரவுடி மாதிரி லுங்கிய எதுக்கு மடிச்சுக் கட்டியிருக்க? எறக்கி விடு. மாடியிலேர்ந்து ஜேவி சார் பாக்கறாரு பாரு"

செல்வா சரேலென்று லுங்கியை இறக்கிவிட்டான். பயத்துடன் நிமிர்ந்து மாடியைப் பார்த்தபோது அங்கே ஒரு ஜீவனையும் காணோம். ஜேவியம்மாவின் பெண் களுக் என்று வாயில் கைவைத்துச் சிரித்தாள். செல்வாவுக்கு அந்த நிமிஷம் அவளை ஓங்கி அறையவேண்டும் போல் இருந்தது.

"இந்தவாட்டி எக்ஸாம் ஒழுங்கா எழுதினியா?"

"ம்ம்?" என்றான் எரிச்சல் மாறாமல்.

"எக்ஸாம் பேப்பர் கட்டு எங்க வீட்டுக்குத்தான் வந்திருக்கு. உனக்கு நான் பாத்து மார்க் போட்டாதான் உண்டு. அவன் யாரு உங்கூட எப்பவும் லுங்கிய தொடை தெரிய தூக்கிக் கட்டிக்கிட்டே திரியறான். பேரென்ன?"

செல்வா துணுக்குற்று "யாரைக் கேக்கறீங்க?" என்றான் தெரியாத மாதிரி.

"ஹ! அதான் ஒசரமா.. தாடி வுட்டுட்டு... நடேசய்யர் பையன்தான? அவன் பேரென்ன?"

"வாசு"

"ம். அவன்தான். உங்க ப்ரண்ட்ஸ் செட்டுல எல்லார் ஜாதகமும் தெரியும். முக்குத் திட்டுல உக்காந்து அரட்டையடிக்கிறது. போற வர்ர பொட்டப் புள்ளைங்களைப் பாக்கறது.. ஒண்ணும் தெரியாதுன்னு நெனச்சுக்காத. ஒழுங்கான ஸ்டூடண்ட்டா நடந்துக்க!.. இல்லைன்னா எக்ஸாம் பேப்பர்ல கை வெக்கவேண்டியிருக்கும். நான் நெனச்சா உன்ன காலேஜிலேர்ந்தே தூக்கிருவேன் தெரியுமிலல? உங்கப்பா ஈ.பி-ல என்ஜினியர்தான? அவர் பேரக் கெடுத்துராத. இன்டெர்னல் மார்க் கூட என் கையிலதான் இருக்கு. நீ நல்ல பையனாதான் தெரியற. அந்த வாசுதான் செரியில்ல."

செல்வா பொத்துக்கொண்டு வந்த கோபத்தை அடக்கிக்கொண்டான். இத்தனை விவரங்களை எங்கிருந்து சேகரித்தாள் என்று ஆச்சரியமும் வந்தது. ஆனாலும் இப்படியொரு ப்ளாக்மெயிலை அவன் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. ஒரு வேளை அந்தம்மா சொல்வது உண்மையாகக்கூட இருக்கக்கூடும். அவனை பெயிலாக்கி விடக்கூடிய சகல அதிகாரமும் அவளுக்கு இருக்கிறதோ என்னவோ! என்ன சொல்வது, செய்வதென்று தெரியாமல் திருதிருவென்று முழித்துக்கொண்டு நின்றான்.

ஜேவியம்மா அவன் குழப்பத்தை பொருட்படுத்தாமல் சட்டென்று குரலைத் தணித்துக்கொண்டு "சரி எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா செல்வா" என்றாள்.

அவனது பதிலுக்குக் காத்திராமல் முந்தானை முடிச்சிலிருந்து ஒரு நூறு ரூபாய்த் தாளைப் பிரித்து அவனிடம் கொடுத்து, நைட் டிபனுக்கு பூரி மாவு தீர்ந்து போய்விட்டதாகவும், கிச்சான் கடைக்குப் போய் ஒரு அரைக்கிலோ வாங்கிக் கொண்டு வருகிறாயா என்றும் பவ்யமாய்க் கேட்டாள்.

முக்குத்திட்டில் உட்கார்ந்து பொறுமலோடு மீதிக் கதையைச் சொன்னபோது வாசு கபகபவெனச் சிரித்தான். "நல்ல வேளை நானும் பாபுவும் வேற காலேஜ். தப்பிச்சோம். பாவம்டா நீ" என்றான். "அந்தம்மாவப் பத்தி காலனியே பேசுது.. இது பரவாயில்ல. பாபுவோட அப்பாகிட்ட வத்தி வெச்சுருக்குது. உங்க பையன சிகரெட்டும் கையுமா பாத்தேன்னு. எப்டி? அவனுக்கு வீட்ல சரியான மாத்து. பக்கத்து வீட்டு குடும்பப் பிரச்சனைக்குள்ளயெல்லாம் மூக்க நுழைக்குதாம். அந்தம்மாவை பாரதி மகளிர் மன்றத்துல தெரியாம மெம்பராக்கிட்டோம்னு கனகா மாமி புலம்புது. ஒரே டாமினேஷன். காலைல காய்கறிக்காரனப் புடிச்சு மெரட்டிட்டிருந்துச்சாம். இஸ்திரி மாணிக்கம் சொல்றான். அந்தம்மா புருஷன் வேற ஒரு வாயில்லாப் பூச்சி. அந்தாளுக்கு கூட டெய்லியும் அடி உழுதோ என்னமோ வூட்டுல. அவரு பொண்ணு சுதா கொஞ்சம் அம்சமா இருக்குது. என்ன அவங்கம்மா மாதிரி கொஞ்சம் லொள்ளு.."

என்னைவிட அதிகம் பாதிக்கப்பட்டவனைப் போல அன்று வாசு நிறுத்தாமல் பேசிக்கொண்டிருந்தான்.

ஜே.வி சார் ஏன் அப்படியிருக்கிறார் என்று யோசித்தபோது எரிச்சல் மண்டியது. இப்படியுமா ஒருத்தர் பெண்டாட்டியிடம் பயந்த பேடியாக இருப்பார்? பெண்டாட்டியிடம்தான் இப்படியென்றால் வகுப்பில் கூடவா? பாடம் எடுக்கும்போது குரலே வெளிவராது. சளசளவென்று வகுப்பில் எல்லாரும் பேசிக்கொண்டிருக்கிற சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருக்கும். அவர் முதுகு காட்டிப் பாடம் நடத்துகிறபோது கடைசி டெஸ்க் நாகராஜ்கூட அடிக்கடி ரகசியமாய் வெளியே போய்விட்டு திரும்ப வந்து உட்காருவான். வகுப்பில் யாருக்கும் அவரிடம் பயம் என்பதே கிடையாது. இவரெல்லாம் எப்படி ஹெச்.ஓ.டி ஆனார் என்பதே பெரிய புதிர். சின்னதாய் ஒரு முணுமுணுப்புக் கேட்டால்கூட சரேலென்று திரும்பி புருவம் உயர்த்தி என்ன என்று முறைப்பாய் கேட்கிற லெட்சரர் மணிவாசகத்தின் தோரணை ஏன் இவரிடம் இல்லாமல் போய்விட்டது? கோபம் வந்தால் நோட்டுப் புத்தகங்களை கதவுக்கு வெளியே விசிறியடிக்கிற புரபசர் ராமலிங்கத்தின் கம்பீரம் இவருக்கு ஏன் வாய்க்கவில்லை என்றெல்லாம் செல்வா நிறைய யோசித்திருக்கிறான். ஜேவியம்மா மாதிரி ஒரு நாள்கூட அவரைக் காம்பெளண்ட் கேட்டருகில் வைத்துப் பார்த்ததில்லை. மனிதர் வந்தால் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பார் போல. ஒரு சில சமயம் ஜேவி சாரின் வீட்டைத் தாண்டும்போது அவரிடம் ஏதோ சண்டையிடுவதைப்போல ஜேவியம்மாவின் குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும். மறுகுரலாய் ஒரு போதும் அவரின் குரல் கேட்டதில்லை.

காலனிக்குள் பார்க்கிற ஆட்களெல்லாம் ஜேவியம்மாவைப்பற்றி மாய்ந்து மாய்ந்து எதையாவது சொல்லிவிட்டுத்தான் போனார்கள். அவளுடன் பேசுவதற்கே பயந்து காலனி மாமிகளும், ஆண்ட்டிகளும் விலகிப்போனார்கள். ஜேவியம்மாவுக்கும் பாபுவின் அம்மாவுக்கும்கூட ஒருநாள் குடுமிப்பிடி சண்டையாகிவிட்டது. கனகா மாமி இடைப்புகுந்து தடுக்காமலிருந்திருந்தால் ரணகளமாயிருக்குமாம். ச்சே... என்ன பொம்பளை என்று தோன்றியது செல்வாவுக்கு. இப்படியுமா ஒரு பஜாரி?!.

முந்தா நேத்து கிச்சான் கடை தட்டி மறைப்பில் நின்று செல்வா திருட்டு தம் அடித்துக்கொண்டிருக்கும் போது ஜேவியம்மா பார்த்துத் தொலைத்துவிட்டாள். "உங்கப்பாவை மார்க்கெட்ல பாத்தப்போ சொல்லலாம்னு நெனச்சேன்" என்று சின்னதாய் மிரட்டி அவனிடம் எலக்ட்ரிசிட்டி பில் கட்டிவிட்டு வரச்சொன்னாள்.

ooOoo

இன்றைக்கும் தெருமுனையில் தயங்கித் திரும்பியதுகூட அவளுக்கு பயந்துதான். பச்சை கேட்டைக் கடக்கும்போது பயந்த மாதிரியே திடீரென்று எங்கிருந்தோ காம்பெளண்டுக்குள் தோன்றினாள் ஜேவியம்மா. பின்னாலேயே வாலைப் பிடித்துக்கொண்டு அவள் பெண் சுதா. ஜேவியம்மா செல்வாவைப் பார்த்து "ஓய்..." என்றாள். செல்வா வலுக்கட்டாயமாக வரவழைத்துக்கொண்ட புன்னகையோடு அவளை ஏறிட்டான். வாசு மடித்துக்கட்டியிருந்த லுங்கியை அவிழ்த்து வேண்டுமென்றே தொடை தெரிய தூக்கிக் கட்டிக்கொண்டான். தொண்டை நீரை க்ர்ர் என்று பண்ணிவிட்டு கேட்டருகேயிருந்த விளக்குக் கம்பத்தினடியில் பான் பராக்கைத் துப்பினான். அவன் தினம் துப்பித் துப்பியே அந்தக் கம்பம் நாறிப்போய்விட்டது. அவனுக்கென்ன! ஜேவியம்மாவைப் பார்த்து பயப்படுவதற்கான காரணம் எதுவும் அவனுக்கில்லை. அவன் ஜேவி சாரின் மாணவன் அல்ல. இந்த மாதிரி ஆயிரம் பண்ணுவான். செல்வாவுக்கு அப்படியெதுவும் செய்துவிடக்கூடிய துணிச்சலோ, சுதந்திரமோ எதுவும் இந்த வீதிக்குள் பறிபோய் ரொம்ப நாளாகிவிட்டது.

வாசு கொஞ்சம் தள்ளிப் போய் நின்றுகொண்டு ஜேவியம்மாவின் பெண்ணை லேசாய் ஓரக்கண்ணால் பார்க்க ஆரம்பிக்க இன்றைக்கு என்ன வம்போ என்று யோசித்தபடி செல்வா கேட்டருகில் போனான். சொல்லப்போனால் இதெல்லாம் செல்வாவுக்குப் பழகியும் விட்டது. ஜேவியம்மா எதையோ சொல்ல வாயெடுத்தாள். அதற்குள் தெருவில் ஏதோ அரவம் கேட்க நான்கு பேரும் திரும்பினார்கள். திபுதிபுவென்று யாரோ யாரையோ துரத்திக்கொண்டு ஓடிவந்தார்கள். என்னவென்று புரியாமல் வயிற்றில் உருண்ட கலவரத்துடன் பார்த்தபோது, முதலில் ஓடிவந்தவன் சடாரென்று கனகா மாமியின் வீட்டுக்குள் புகுந்துவிட்டான். துரத்திக்கொண்டு வந்தவனை அடையாளம் தெரிந்தது. கறிக்கடை முருகேசு! வந்த வேகத்தில் அவனும் மாமியின் வீட்டுக்குள் பாய்ந்தான். அடுத்ததாக கனகாமாமியின் கூக்குரலுடன் வீட்டு அடுக்களையிலிருந்து பாத்திரங்கள் உருள்கிற சப்தம் கேட்டது. செல்வாவும் வாசுவும் என்னவென்று புரியாமல் நிற்கும்போதே கூட்டம் சேர்ந்துவிட்டது. இப்போது முருகேசு அந்த ஆளை தரதரவென்று வெளியே இழுத்துக்கொண்டு வந்து தெருப் புழுதியில் போட்டு மிதிக்க ஆரம்பித்தான். சகாதேவன் வந்து அவனை விலக்கி என்னவென்று விசாரித்தார்.

"பட்டபகல்ல சுப்ரமணிய கவுண்டர் வூட்ல புகுந்து திருடப்பார்த்தான். நான் பாத்தாங்காட்டி ஆச்சு. அவ்ளோ லேசுல வுட்ருவமா? தொரத்திப் புடிச்சமில்ல... தே..... மவன" என்று சொல்லிவிட்டு அவனை மறுபடி உதைத்தான். விஷயம் கேள்விப்பட்டவுடன் கூடியவர்கள் ஆளுக்கொரு மிதி மிதித்தார்கள். வாசுவும் கூட்டத்தில் புகுந்து அருகில் சென்று பொளேர் என்று அறைந்தான். "எத்தன பேருடா கெளம்பியிருக்கீங்க..." என்று இடது கையால் அவனது குரல் வளையைப் பிடித்துக் கேட்டான். ஒரு முறை திரும்பி ஜேவியம்மாவின் பெண்ணை ஸ்டைலாகப் பார்த்தான். செல்வா கனகா மாமியின் காம்பெளண்டு ஓரமாய் ஒதுங்கி நின்றிருந்தான்.

எல்லோரும் செத்த பாம்பை அடிக்கிறார்கள். பேசக்கூட திராணியற்ற நிலைக்குத்தான் முருகேசு முதலிலேயே அந்த ஆளை அடித்துத் துவைத்திருந்தான். மேலும் அந்த ஆளிடமிருந்து வீசின விஸ்கி வாசனை அவன் குடித்திருந்தான் என்பதைச் சொல்லியது. அவன் ஒரு பிச்சைக்காரனைப் போலிருந்தான். அவன் கட்டியிருந்த லுங்கி முருகேசு மிதித்த மிதியில் கிழிந்து தொங்கியது. அவன் இப்போது எதையோ முனகியபடி தரையில் கிடந்தான்.

ஜேவியம்மா திடீரென காட்சிக்குள் வந்தாள். "கொஞ்சம் நகருங்க... நான் விசாரிக்கிறேன்" என்று கூட்டத்தை விலக்கி அந்த ஆளைப் பார்த்தாள். கூடவே அவள் பெண்ணும் எட்டிப்பார்த்தது. அடிவாங்கி அவ்வளவு நேரம் தொய்ந்து போய்க்கிடந்தவனுக்கு எங்கிருந்துதான் தெம்பு வந்ததோ...தெரியவில்லை. சட்டென்று எழுந்தான். "தாய்க்குலமே.... அடிக்கிறாங்க தாய்க்குலமே.." என்றான் போதைக் குழறலாய். ஏற்கெனவே பாதி தளர்ந்திருந்த அவன் லுங்கி முழுவதுமாய் அவிழ்ந்து விழுந்ததை அவன் பொருட்படுத்தாமல் தள்ளாடியபடி ஜேவியம்மாவின் திசையை நோக்கி வேகமாய் நெருங்கினான். ஜேவியம்மாவும் அவள் பெண்ணும் பின்வாங்கினார்கள்.

"ஏய்... போங்கடீ வீட்டுக்கு.. இங்க என்ன வேல உங்களுக்கு..." திடீரென ஒரு குரல் கூட்டத்தைப் பிளந்து வந்தது. எல்லோரும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தபோது ஜே.வி சார் நின்றிருந்தார். 'இருங்க... இந்தாளை..." என்று ஆரம்பித்த ஜேவியம்மாப் பார்த்து மறுபடி அவர் இரைந்தார்.

"இன்னும் ஒரு நிமிஷம் இங்க நின்னீன்னா அறை விழும். போடீ..."

ஜேவியம்மா போகாமல் அவரை முறைத்துப் பார்த்தாள். "உங்களுக்கென்ன தெரியும்? காலனிக்குள்ள இவ்ளோ பெரிய ப்ரச்சனை நடக்குது..." என்று மறுபடி ஆரம்பித்தவளின் கன்னத்தில் ஆக்ரோஷமாய் "சப்ப்" என்று ஜேவி சாரின் கை இறங்க.. கூட்டம் ஸ்தம்பித்து நின்றது.

"போடீன்னா..."

பொறி கலங்க விழுந்த அறையில் சட்டென்று கண்களில் மல்கிய நீருடன் ஜேவியம்மா கேட்டைத் திறந்துகொண்டு விருட் என்று வீட்டுக்குள் போனாள். மகளும் பின்னாலேயே. "ஸ்டுப்பிட் ·பெல்லோஸ்.." என்று கோபமாய் முணுமுணுத்துவிட்டு ஜேவி சாரும் வீட்டுக்குள் போய் கதவை அறைந்து சாத்தினார். செல்வா திகைப்புடன் வாசுவைப் பார்த்தபோது அவன் பேயறைந்த மாதிரி நின்றிருந்தான். என்ன நடந்ததென்று இருவருக்கும் ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை. காலனியில் யாரும் எதிர்பார்க்காத அதிர்ச்சித் திருப்பம் அது. செல்வாவுக்கு ஏனோ கொஞ்சம் குதூகலமாயிருந்தது. இனி ஜேவியம்மாவுக்கு பயந்து நடக்க வேண்டியதிருக்காது என்றுதான் உடனே அவன் மனதில் தோன்றியது. வீட்டில் அவர்தான் ஆம்பிளை என்று ஜேவி சார் கூட்டத்திற்கு முன் நிரூபித்துவிட்டுப் போய்விட்டார்.

அடுத்தநாள் ஜேவி சாரின் பச்சை கேட்டைக் கடக்கும்போது அந்தக் காம்பெளண்டு வெறிச்சோடிக் கிடந்தது. வாசு லேசாய்த் தயங்கி உள்ளே எட்டிப் பார்த்துவிட்டுச் சொன்னான்.

"என்ன இருந்தாலும் அப்படி பப்ளிக் முன்னால ஜேவி சார் அப்படி நடந்திருக்கக் கூடாதுடா. ரொம்ப பாவமா இருந்துச்சு அந்தம்மாவப் பாக்கறதுக்கு.. எனக்கே கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சுன்னா பாத்துக்கோயேன். நீ என்ன நினைக்கிற இதைப்பத்தி" என்றான் வாசு. இத்தோடு பதிமூன்றாவது தடவையாக அதைச் சொன்னான்.

அந்த கேட்டை நெருங்கியபோது வாசு மடித்துக்கட்டியிருந்த லுங்கியை அநிச்சையாய் தளர்த்திவிட்டுக் கொண்டதையும், இன்று அவன் விளக்குக் கம்பத்தினருகில் எச்சில் துப்பவில்லை என்பதையும் கவனித்தான் செல்வா.

"சரிதான்" என்றான்.

உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |