தீபாவளி மலர் 2005
 
கட்டுரைகள்
  தொடரும் கேள்விகள்
(அருணா ஸ்ரீனிவாசன்)
  கிஷோர் குமார்
(அப்துல் கலாம் ஆசாத்)
  மலேசியத் தமிழ்க் கட்டுரை இலக்கியம்
(ரெ. கார்த்திகேசு)
  மடியில் இரசாயன குண்டு
(குழலி)
  திருமணமும்,6-ம் வீடும்
(ஜோதிடரத்னா S. சந்திரசேகரன்)
  மைசூர் சௌடையா
('லலிதா')
 
சிறுகதைகள்
  கவிதைத் தொகுப்பு
(சேவியர்)
  தாத்தாச்சாரியார் கோட்
(என். சொக்கன்)
  'டிரீம்' தரிகிட
(ஜே.எஸ்.ராகவன்)
  திருப்பம்
(சித்ரன்)
  காரணம்
(விச்சு)
  ம்.ம்...ஹூஹூம்!
(ராமசந்திரன் உஷா)
  காதல் தூதுவன்
(சரசுராம்)
  குலம் தரும்
(ஷைலஜா)
  அவள், அவன், அவர்கள்
(மீனாக்ஸ்)
  தேவர்களும் கால்களும்
(குழலி)
  நிதானம்
(கிருஷ்ணா வெங்கட்ராமா)
 
கவிதைகள்
  நாட்குறிப்பு
(சேவியர்)
  காலக்கைத்துணை
(பிச்சினிக்காடு இளங்கோ)
 
பேட்டி
  எழுத்தாளர் பி.ஏ.கே வுடன் சந்திப்பு
(பாஸ்டன் பாலாஜி)
 
குறுநாவல்
  வேண்டியது வேறில்லை
(ஜெயந்தி சங்கர்)
<< முதல் பக்கம்
சிறுகதை : அவள், அவன், அவர்கள்
- மீனாக்ஸ்
| Printable version | URL |

ஒரு கனவிலிருந்து கண்விழித்தது போலிருந்தது எனக்கு. கடலின் நடுவே மிதந்து கொண்டிருந்தேன் நான். கடலின் நீரெல்லாம் சிவப்பாகவும் மஞ்சளாகவும் பச்சையாகவும் மாறி மாறித் தோற்றமளித்துக் கொண்டிருந்தது. என்னைச் சுற்றிப் பல படகுகள். அவை ஒவ்வொன்றும் என்னை விட்டு விலகிச் சென்று கொண்டிருந்தன. தூரத்தில் ஒரு தீவு தெரிந்தது. அழகான தீவு.

வெண்ணிற மணல் நிறைந்த கடற்கரையெங்கும் பெங்குயின் பறவைகள் என்னை வரவேற்கக் காத்திருந்தன. அதை நோக்கி நான் நீந்திக் கொண்டிருந்தது திடீரென நினைவுக்கு வந்தது. பாதி வழியில் எனக்கு நீச்சல் மறந்து போனதும் நினைவுக்கு வந்தது. கடல் நீரில் மூழ்கத் துவங்கிய போது விழித்துக் கொண்டேன்.

கண்விழித்த போது, அழுத்தாத மென்மையான மெத்தையொன்றில் டைகள் நெகிழ்ந்து படுத்துக்கிடப்பதை உணர்ந்தேன். குளிரூட்டப்பட்டிருந்த அறையின் குளிர்ச்சியை மீறி உடல் சூடாக இருந்தது. காரணம், என் அங்கங்கள் முழுவதும் தொட்டுப் படர்ந்திருக்கும் அவனது உடல். கழுத்தைச் சுற்றியிருந்த அவனது வலது கரத்தின் உள்ளங்கையில் என் கன்னத்தைத் தேய்த்துக் கொண்ட போது இன்னும் ரம்மியமாக இருந்தது. ஒரு முறை மூச்சை நன்றாக உள்ளிழுத்து விட்டேன். அறையெங்கும் பரவிக் கிடந்த காதலின் மணம் அடிநாசி வரை தாக்கியது.

அவன் கைகளை விலக்கி விட்டு, டைகளைச் சரி செய்தபடி எழுந்து அமர்ந்தேன். கட்டிலிலிருந்து இறங்கி, ஜன்னலை மூடியிருந்த திரையை விலக்கினேன். கடலும், சூரிய உதயமும் கோவாவிலும் அழகாய்த்தான் இருக்கின்றன. எல்லா ஊர்களிலும் அம்மாக்கள் அன்பு நிறைந்தவர்களாய் இருப்பதைப் போல்.

காஸா ப்ளாங்கா கடற்கரை ரிஸார்ட்டின் தேன்நிலவு காட்டேஜில் மூன்று அறைகள் இருந்தன. உள்ளே நுழைந்ததும் வரவேற்பறை. அதை ஒட்டி சிறிய சமையலறை. கடைசியாக கடலைப் பார்த்தவாறு படுக்கையறை. (அவனைக் கேட்டிருந்தால் இவற்றையே வேறு மாதிரி விளக்கியிருப்பான்: உள்ளே நுழைந்ததும் வன்முறையாய்க் கட்டியணைத்து முத்தமிடும் அறை. அதை ஒட்டி கா·பி மேக்கரில் நான் கா·பி போட்டுக் கொண்டிருக்கும் போது பின்னாலிருந்து கட்டிப்பிடிக்கும் அறை. கடைசியாய் கடலலைகளின் இரைச்சலை எங்கள் இரைச்சல் மூழ்கடிக்கும் அறை.)

பின்னால் திரும்பி குப்புறப்படுத்து உறங்கும் அவனைப் பார்த்தேன். இன்றோடு கணக்கிட்டால், என்ன ஒரு அறுபத்து இரண்டு நாட்களாய் எனக்கு அவனைத் தெரியுமா?? ஐந்து நாட்கள், என்னைப் பெண் பார்க்க வரப் போகும் வரனாய், ஒரு புகைப்படமாய். ஐம்பத்து மூன்று நாட்கள், எனக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையாய், ஒரு அழகான, எதிர்பார்ப்புமிக்க கனவாய். கடந்த நான்கு நாட்கள், எனக்கே எனக்கேயான கணவனாய், என்னைத் தன்னுடன், தன்னை என்னுடன் பகிர்ந்து கொண்ட நிஜமாய்.

பிடித்துத் தானிருக்கிறது எனக்கு அவனை. இந்த அறுபத்து இரண்டு நாட்களில் பல கணங்களில் அவன் ஒரு குறும்புக்கார சுட்டிப் பையனாக இருந்திருக்கிறான். கண்ணியமான நண்பனாக இருந்திருக்கிறான். தரவான தோழனாய் இருந்திருக்கிறான். மென்மையான காதலனாய் இருந்திருக்கிறான். பிடித்தமான ஆணாய் என் மனசை நெருங்கியிருக்கிறான்.

அவன் அருகாமையை மீண்டும் என மனமும் உடலும் விரும்பின. அவனை எழுப்பி விடாமல் அவன் பக்கத்தில் படுத்துக் கொண்டேன். அவன் கையை எடுத்து என் மேல் படர விட்டேன்.

அவன் விரல்களைப் பிடித்து என் விரல்களோடு கோர்த்துக் கொண்டேன். அவன் விரலின் நகங்களைப் பார்த்த போது மணமேடையில் தாலி கட்டும் முன்பாக பிறர் யாருக்கும் கேட்காத குரலில் அவன் என்னைக் கேட்ட கேள்வி நினைவுக்கு வந்தது.

"ஹேய்! ராத்திரி எல்லாம் நல்லாத் தூங்கினியா?"

"ம்! ஏன்?"

"நான் சரியாவே தூங்கலை. ஒரே டென்ஷனா இருந்தது. நகத்தைக் கடிச்சிக்கிட்டு உட்கார்ந்திருந்தேன்."

"எதுக்கு டென்ஷன்?"

"என்னமோ, டென்ஷனா இருந்தது. ஆனா, இப்போ யோசிக்கும் போது அதுவும் நல்லதுக்குத் தான்னு தோணுது."

"ஏன் நல்லது?"

"இன்னிக்கு ராத்திரி உன் மேல கீறல் எதுவும் விழாதே, அதான்."

"ச்சீ! மணமேடையில பேசற பேச்சா இது? உன்னை... பேச்சைக் குறைச்சுட்டு தாலியைக் கட்டுற வேலையைப் பாரேன்."

அவன் ஒரு குறும்புப் பார்வையோடு திரும்பிக் கொண்டான். சுற்றி நின்றிருந்த என் கல்லூரித் தோழிகள் என்னையே குறுகுறுப்பாகப் பார்த்து, எனக்கு மட்டும் புரியும் சில சைகைகளைச்

செய்து காட்டினர். எனக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. மனித சரித்திரத்திலேயே மிக அதிக வெட்கத்தோடு தாலி கட்டிக் கொண்ட பெண்ணாக நான் இருந்திருக்கக் கூடும்.

என்னையறியாமல் சிரித்துக் கொண்டேன் நான். பேச்சுத் தான் பெரிசாய். அன்று இரவு அவன் என் மேல் கீறல் செய்த இடங்களை இரு கைகளின் விரல்களால் எண்ணி முடிக்க முடியாது.

அவன் எழுந்து கொள்ளும் வழியாய்க் காணோம். எனக்கு மேனியில் சில இடங்கள் வலித்தன. குளித்து முடிக்கலாமென்று முடிவு செய்து அவன் அணைப்பிலிருந்து விலகி கட்டிலிருந்து

இறங்கினேன். காலை எழுந்ததும் என்ன அவசரமென்றாலும் குளித்து விடுவதென்பது எனக்கு ஒரு பழக்கம். அம்மா அதை நல்ல பழக்கமென்பாள். இவன் என்ன சொல்லப் போகிறான்

தெரியவில்லை.

என் பயணப் பையைத் திறந்து பற்பசையும் பல்துலக்கியும் மாற்று டைகளும் எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தேன். இளஞ்சிவப்பு வண்ணத்தில் மடித்து வைக்கப்பட்டிருந்த

இரண்டு துண்டுகளை எனக்குப் பிடித்திருந்தது. வெள்ளை நிறத்தில் மட்டுமே மற்ற விடுதிகளில் துண்டுகளைப் பார்த்து அலுத்திருந்த எனக்கு, அந்தக் காதலின் நிறம் பிடித்திருந்தது.

குளியலறையின் கதவைச் சாத்திக் கொண்டேன்.

ooOoo

குளித்து முடித்து வெளியேறிய போது அவன் எழுந்திருந்தான். படுக்கையில் 'ட' போல் அமர்ந்திருந்தான். இரவு டையின் சட்டையில் பட்டன்கள் அனைத்தும் கழன்றிருந்தன. லேசான

தொப்பை தெரிந்தது. நீள்சதுரக் கண்ணாடி அணிந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தான். ஈ.எஸ்.பி.என்னில் ஒரு டென்னிஸ் போட்டி நடந்து கொண்டிருந்தது. அவனது

தலைமுறையினின்று மிக வித்தியாசமாய் அவன் கிரிக்கெட்டை விடுத்து டென்னிஸில் ர்வம் கொண்டிருந்தான். கல்லூரிக் காலத்தில் விளையாடியதாகவும் சொல்லியிருந்தான். அவனிடம்

எனக்குப் பிடித்த விஷயங்களில் அந்த அழகான கண்ணாடியும் ஒன்று. அணிந்தால் ரொம்ப கம்பீரமாய் இருக்கும்.

என்னைப் பார்த்ததும் திரும்பி, "குட் மார்னிங் மை டியர் மனைவி." என்றான்.

"குட் மார்னிங். எப்போ எழுந்தே?"

"நீ எழுந்து ஜன்னல் பக்கம் போய் நின்னு திரும்பி வந்து பக்கத்துல படுத்து உன் கையையும் என் கையையும் கோர்த்துக்கிட்டியே, அப்ப." என்றான்.

போக்கிரி..!!

"அப்படியா? வழக்கமா காலையில எழுந்ததும் சும்மா இருக்க மாட்டியே. இன்னிக்கு என்ன புதுசா?"

"நான் என்ன மேனியாக்னு நெனச்சுட்டியா? நீ பண்றதை ரசிச்சுக்கிட்டிருந்தேன். இந்த மாதிரி உன் கணவனுக்கு பல ஷேட்ஸ் இருக்கு கண்ணு. போகப் போகத் தெரிஞ்சுப்பே."

"அது சரி, காலையில் எழுந்ததும் தெனமும் வாக்கிங் போவேன்னு பெரிசா சொல்லிக்கிட்டிருந்தியே. கல்யாணத்தன்னிக்குக் கூட மண்டபத்திலிருந்து போயிட்டு வந்தியே. இன்னிக்கு என்ன

ச்சு? போற உத்தேசம் இல்லையா?"

"அதுவா? நேத்து ராத்திரி நீ என்னை சரியா தூங்கவே விடலையே, அதான் களைப்பா இருக்கு."

"என்னது?" என்று முறைப்புக் காட்டினேன்.

"சரி சரி. நேத்து ராத்திரி நான் உன்னை சரியா தூங்கவே விடலையே, அதான் களைப்பா இருக்கு." என்றவன் கண்களை உருட்டி, "பெரிய வித்தியாசம்!!" என்றான்.

"சார் எப்போ குளிச்சு ரெடியாகப் போறீங்க?"

"இந்த மேட்ச் முடியட்டும், போறேன். இப்ப தான் ஆரம்பிச்சது. மரியா ஷரபோவா, மை ட்ரீம் கேர்ள் டறா. பார்க்கலைன்னா நாளைக்குக் கனவில வந்து கோச்சுப்பா."

"ஓஹோ! இது தான் நீ விளையாட்டை ரசிக்கிற லட்சணமா? இப்ப தான் புரியுது, நீ கிரிக்கெட்டை விட்டுட்டு டென்னிஸ் பின்னால அலையற கதை."

"நான் என்ன பண்றது? பெண்கள் கிரிக்கெட்ல எல்லோரும் பேண்ட் போட்டுக்கிட்டில்ல விளையாடறாங்க."

"தூ! புதுசாக் கல்யாணம் பண்ணிக்கிட்ட மனைவி கிட்ட பேசற பேச்சா இது?"

"ஜஸ்ட் கிட்டிங் டார்லிங். இதுக்கு ஏன் கோச்சுக்கறே?"

"சரி! நீ ரெடியாக நேரமாகும் இல்லையா? எனக்கும் இன்னும் பசிக்கலை. நான் இண்டெர்நெட் செண்டருக்குப் போய் ஈ-மெயில் பார்த்துக்கிட்டு இருக்கேன். நீ குளிச்சு முடிச்சுட்டு என்

மொபைல்ல கூப்பிடறியா?"

"உத்தரவு மகாராணி."

நான் தலைமுடியின் கடைசி ஈரங்களைத் துவட்டி துண்டைக் கட்டிலுக்குப் பக்கத்தில் தரையில் போட்டுவிட்டு, என் மொபைலை எடுத்துக் கொண்டு கதவருகே போனேன்.

"நெறைய மெயில் இருக்கும். ஒரு வாரமாப் பார்க்கவே இல்லை. நீ பொறுமையாவே ரெடியாகு. சரியா?" என்றேன்.

"சரி. அதிருக்கட்டும், வெளிய போகும் போது கணவனுக்கு ஒரு முத்தம் கொடுத்துட்டுப் போகணும்ங்கிற நல்ல பழக்கத்தையெல்லாம் உங்க அம்மா சொல்லிக் குடுத்து வளர்க்கலையா உன்னை? வாட் எ வேஸ்ட்..!!"

நான் புன்னகையுடன் திரும்பி, "அதுக்கென்ன? இப்ப நீ சொல்லிக் குடுத்துட்டே இல்லையா? பண்ணிடறேன். கன்னத்துலயா, உதட்டுலயா?" என்றேன்.

"எனக்கு எங்கேன்னாலும் ஓக்கே தான்."

"எனக்கும் எங்கேன்னாலும் ஓக்கே தான். இங்கிருந்தே பறக்கும் முத்தம் தானே குடுக்கப் போறேன். வர்ட்டா?" என்று ஒரு முத்ததை அவன் பக்கமாய் ஊதி விட்டு வெளியேறினேன்.

"எனக்கு அப்பவே தெரியும். உனக்குப் பதிலா நான் மரியாவைக் கல்யாணம் பண்ணியிருக்கணும்." என்று என்னைப் பின் தொடர்ந்து வந்தது அவனது குரல்.

ooOoo

யாஹ¥ மின்னஞ்சல் சேவையைத் திறந்த போது படிக்கப்படாதவை 316 மின்னஞ்சல்கள் என்று பயமுறுத்தியது. அன்ஸப்ஸ்க்ரைப் செய்ய நேரமில்லாமல், தினமும் மின்னஞ்சல் அனுப்பிக் கொண்டிருக்கும் உபயோகமில்லாத சேவைகளிடமிருந்து வந்த வெட்டி மின்னஞ்சல்களை அழித்த பின் படிக்க வேண்டியவை 52 தேறின. பெரும்பாலும் திருமணத்திற்கு வர முடியாமல் வாழ்த்துச் சொல்லியிருந்த கல்லூரித் தோழிகள், அலுவலக நண்பர்கள். அனைவருக்கும் நன்றி சொல்லி ஒரு வரியாவது எழுத வேண்டும். சென்னைக்குப் போய் எழுதிக் கொள்ளலாம்.

நடுவில் அவனிடமிருந்தும் ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. திருமணமான நாளன்று மதிய நேரத்தில் வந்திருந்தது. திறந்து படித்தேன்.

'Sweet Heart,

Feeling very happy about beginning this beautiful journey of life with you.

Hope you find me as a trusted and beloved husband as much as you expect. And more. Forever.

That is my promise to you.

Your,
Chubby Hubby.'

நான் உதடுகளைக் கடித்துக் கொண்டேன். கல்யாணத்தன்று நேரம் எடுத்துக் கொண்டு இப்படி எழுத்தில் வாக்குறுதி அளிக்கும் கணவன். ஒரு பக்கம் சிரிப்பாக இருந்தது. இன்னொரு பக்கம்

கண்களை முட்டிக் கொண்டு திரண்ட நீருக்கு என்ன பெயர் வைப்பதென்று தெரியாமல் இருந்தது. அவன் முதன்முதலாக அனுப்பிய மின்னஞ்சலின் நினைவு வந்தது. அதைத் தேடி எடுத்துப்

படித்தேன்.

'Sweet Heart,

Today was fun. I enjoyed being with you.

We should do it again. When?

Yours truly.

P.S. Did I get the pass mark today?'

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகு அவன் முதன் முதலாய் என்னை என் அலுவலகத்தில் வந்து பார்த்து விட்டுப் போன பிறகு அனுப்பிய முதல் மின்னஞ்சல். எனக்கு நன்றாக ஞாபகம்

இருந்தது அந்த நாளை. மதிய உணவு நேரத்தை ஒட்டி.

டைடல் பார்க்கில் என் அலுவலகத்தில் என் க்யூபிக்கிளில் அமர்ந்து Bug Report-ஐப் பார்த்துக் கொண்டிருந்த போது மொபைலில் அவன் பெயர் கூப்பிட்டது.

"ஹாய்! நான் தான். டிஸ்டர்ப் பண்ணலையே?" என்றான்.

"இல்லை. சொல்லுங்க."

"இப்ப டைடல் பார்க்-ல தான் இருக்கேன். இங்க ·புட் கோர்ட்ல உன் கூட லஞ்ச் சாப்பிடலாம்னு நெனச்சேன். யூ ஒக்கே?" என்றான்.

"அ.. ஷ்யூர். வந்து.. னா, ஒரு பதினஞ்சு நிமிஷம் கும். ஸாரி. ஒரு வேலைக்கு நடுவில இருக்கேன். ப்ளீஸ்."

"நோ ப்ராப்ளம். இங்க ஒரு ஹிக்கின்பாதம்ஸ் இருக்கே. நான் அதில ஏதாவது பார்த்துக்கிட்டு இருக்கேன். நீ வேலை முடிஞ்சதும் கூப்பிடு. தேங்க்ஸ்."

என் முகத்தில் தெரிந்த வெட்கத்தை பக்கத்து க்யூபிக்கிள் ராதிகா பார்த்திருக்க வேண்டும்.

"ஏய்! யாருடி ·போனில?"

"அவர்."

"ஊ! என்னவாம்?"

"இப்ப, இங்க தான் இருக்காராம். லஞ்ச் சாப்பிடலாம்னு கூப்பிட்டார்."

"உடனே போக வேண்டியது தானே? எதுக்கு வேலைக்கு நடுவில இருக்கேன்னு ஒரு பில்டப்பு?"

"ஏன்! கொஞ்சம் வெயிட் பண்ணட்டுமே. கூப்பிடவுடனே போயிடணுமா என்ன?"

"அடிப்பாவி! சரி. நீ போகும் போது எங்களையும் கூப்பிடு. நாங்க வந்து பக்கத்து டேபிள்ல உட்கார்ந்து பார்க்கிறோம். பசங்களுக்கு மார்க் போட்டு ரொம்ப நாளாச்சு. பார்க்கிறது மட்டும் தான்மா, ஒட்டுக் கேட்க மாட்டோம். கவலைப்படாதே."

பதினைந்து நிமிடங்கள் கழித்து கீழே வந்து அவனை அழைத்த போது, தோளில் தொங்கும் லேப்-டாப் பையுடன் வந்தான். தூரத்திலிருந்தே கை காட்டி சிரித்தான். இரண்டு சௌத் இண்டியன் தாலி மீல்ஸ் வாங்கிக் கொண்டு ("என் ஆபீஸ¤க்கு நீங்க வந்திருக்கீங்க. நான் தான் வாங்குவேன்" என்று நான் சொல்லிப் பணம் கொடுத்த போது ஒப்புக் கொண்டான். "சாப்பிட்டு முடிச்சுட்டு நான் ஐஸ் க்ரீம் வாங்கறேன்." என்றான்) ஒரு மூலை டேபிளுக்குப் போய் அமர்ந்து கொண்டே. பின்னால், பக்கத்து டேபிளில் ராதிகா, சிம்ரன், அபர்ணா கியோர் அமர்வது தெரிந்தது.

சாப்பிடும் முன்னால் தன் பையிலிருந்து சின்னதாய் ஒரு பரிசுப் பொருளை எடுத்து நீட்டினான்.

"ஹிக்கின்பாதம்ஸ்ல பார்த்தேன். அழகா இருந்துச்சு. உனக்காக வாங்கினேன். டேக் இட்."

"எதுக்கு இதெல்லாம்.." என்று தயங்கியபடி வாங்கினேன்.

"பிரிச்சுப் பாரு."

நான் அதைப் பிரித்தேன். நடுவிரலின் அளவில் சின்னதாய் நீல வண்ன க்ரிஸ்டலில் ஒரு பிள்ளையார் ஒய்யாரமாய் அமர்ந்திருந்தார்.

"ஸோ க்யூட். தேங்க்ஸ்." என்றேன்.

"எனக்கு இந்த மாதிரி சின்ன பிள்ளையார் சிலை எல்லாம் சேகரிக்கற பழக்கம் இருக்கு. கல்யாணத்துக்கு அப்புறம் இதை நம்ம வீட்டுக்கு எடுத்துட்டு வந்துடு, சரியா?"

"சரி." என்று சிரிப்புடன் சொன்னேன் நான். "நீங்க இதெல்லாம் தரணும்னு நான் எதிர்பார்க்கலை." என்றேன்.

"பரவாயில்லை. முதல் தடவை உன்னைப் பார்க்க வர்றேன். எதுவும் தரலைன்னா எனக்கே மனசு கஷ்டமா இருக்கும். அதான். அப்புறம், நீங்க-ன்னு எல்லாம் என்னைக் கூப்பிடாதே. நீ-ன்னு சொல்லு. அட்லீஸ்ட் நமக்குள்ளே. ப்ளீஸ்."

"சரி. என்ன விஷயம்? இந்தப் பக்கம் வந்திருக்கே?"

"தட்ஸ் பெட்டர். என் கூட இஞ்சினியரிங் படிச்ச பொண்ணு இப்ப சத்யபாமா காலேஜ்ல லெக்சரரா இருக்கா. அவ ஸ்டூடன்த்ஸ்க்கு மேற்படிப்பு வாய்ப்புகள் பத்தி ஒரு லெக்சர் குடுக்க என்னைக் கூப்பிட்டிருந்தா. போய்ட்டு வர்ற வழியில டைடல் பார்க்கைப் பார்த்தேன். அதான் உன்னைப் பார்த்துட்டு, அப்படியே சாப்பிட்டுட்டுப் போகலாம்னு வந்தேன். உனக்கொண்ணும் டிஸ்டெர்பன்ஸ் இல்லையே?"

"அதெல்லாம் இல்லை. நத்திங்."

"சாப்பிடலாம். இங்க சாப்பாடு எப்படி இருக்கும்? நீ இங்க தான் தினமும் சாப்பிடுவியா?"

"மா. பரவாயில்லைன்னு சொல்லலாம். நான் சமைக்கிறதை விட நல்லாவே இருக்கும்."

அவன் முகத்தில் போலி அதிர்ச்சி காட்டி சிரித்தான்.

"பரவாயில்லை, கவலைப்படாதே. ரெண்டு பேரும் சேர்ந்து கத்துக்கலாம், ஒண்ணொன்னா."

"உனக்கு சமைக்கத் தெரியுமா?"

"சுமாரா. ரெண்டு வருஷம் பெங்களூர்ல தனியா இருந்தப்போ கத்துக்கிட்டேன்."

"பெங்களூர் தவிர வேற எங்கேயெல்லாம் வேலை பண்ணியிருக்கே?"

"இஞ்சினியரிங் முடிச்சுட்டு ரெண்டு வருஷம் பெங்களூர்ல. அப்புறம் எக்ஸ்.எல்.ர்.ஐ-ல  எம்.பி.ஏ. முடிச்சுட்டு பாம்பே-ல ஒரு வருஷம். நோய்டா-ல ஒரு வருஷம். இப்ப சென்னையில ஒரு வருஷம். தட்ஸ் ல். நிறைய ட்ராவல் பண்ணனும். ஹெச்.ர்.-ல இருந்தா அப்படித்தான். கல்லூரிகளுக்குப் போய் புள்ளை பிடிக்கிற வேலை."

பேசியபடியே சாப்பிட்டோம். முடித்ததும், "உனக்கு ஐஸ்கிரீம் பிடிக்கும் தானே? நான் வாங்கிட்டு வர்றேன். உனக்கு என்ன வேணும்?" என்றான்.

"பிடிக்கும். ஐ'ல் ஹாவ் எ ஸ்ட்ராபெர்ரி கோன்"

"சரி." என்று சொல்லிவிட்டு எழுந்து நடந்தான்.

நான் பக்கத்து டேபிளைப் பார்த்தேன். ராதிகா அவன் முதுகைப் பார்த்து திருஷ்டி கழித்தாள். சிம்ரன் தன் இடது கையால் தம்ஸ்-அப் காட்டினாள். அபர்ணா 'க்யூட்!' என்று வாயசைத்தாள்.

நான் அவர்களை அமைதியாய் இருக்கும்படியும் போய்விடும்படியும் காட்டிய சைகைகள் அவர்களால் நிராகரிக்கப்பட்டன.

வாங்கி வந்த ஐஸ்கிரீமை சுவைத்துக் கொண்டிருந்தபோது அவன் ரகசியம் பேசும் பாவனையில் மேஜையருகே குனிந்து, "அந்த பக்கத்து டேபிள்ல இருக்கிற மூணு பொண்ணுங்க உன்

கொல்லீக்ஸா? என்னையே, ஐ மீன், நம்மளையே பார்த்துக்கிட்டிருக்காங்க." என்றான்.

நான் அதிர்ச்சியுடன் பார்த்தேன். "இல்லை.. வந்து.."

"எனக்கு மார்க் போடறாங்களா? நைஸ்! போனதும் நான் எத்தனை மார்க் எடுத்தேன்னு ·போன் பண்ணி சொல்லு, சரியா?"

நான் பதில் சொல்லவில்லை. ஐச்கிரீம் சாப்பிடும் சாக்கில் அமைதியாய் இருந்து விட்டேன்.

கொஞ்ச நேரத்தில் அவன் எழுந்து கொண்டு, "சரி, நான் கிளம்பறேன். ஐ ஹாட் எ குட் டைம். வரட்டா.?"

"சரி."

"·போன் பண்ணு. பேசணும்னு தோணினா." என்று சொல்லி விட்டு திரும்பி நடந்தான்.

'பத்துக்கு நூறு மார்க் போடலாம் உனக்கு' என்று எனக்கே சொல்லிக் கொண்டேன்.

இப்பவும் நூற்றுக்குக் குறையாமல் தான் மார்க் வாங்கிக் கொண்டிருக்கிறான். எல்லாவற்றிலும். எப்போதும்.

என் மொபைல் கூப்பிட்டது. அவன் தான். ரெடியாகி விட்டதாகவும் டை அணிந்து கொண்டிருப்பதாகவும் சொன்னான். நான் எழுந்து காட்டேஜுக்கு நடந்தேன். கதவைத் திறந்து நுழைந்தேன்.

வரவேற்பறையில் அமர்ந்து ஷ¥ அணிந்து கொண்டிருந்தான். முடித்து எழுந்து என் பக்கத்தில் வந்ததும், நான் அவனிடம்,

"கல்யாணத்தன்னிக்கு நீ அனுப்பின மெயில் படிச்சேன், Chubby Hubby" என்றேன்.

அவன் முகத்தில் புரிதலின் தீபம் விநாடி நேரம் எரிந்து மறைந்தது.

"யா! அதுவா? என்னமோ, தாலி கட்டி, உன் கையைப் பிடிச்சுக்கிட்டு அக்னியை வலம் வந்தப்போ தோணிச்சு, உனக்கு அனுப்பணும்னு. அதான்."

"தேங்க்ஸ்." என்ற நான், அவனது சட்டையின் பட்டன்களைக் கழற்றி, "என்னை மறுபடி குளிக்க வைக்கிறியா?" என்றேன்.

அவன் சிரித்தான். "ஷ்யூர்! ஐ லவ் யூ!" என்றான்.

-o0o-

கோவாவில் அது சீஸனல்லாத சமயம் என்பதால் வாடகைக்கு கார்கள் கிடைப்பதில் சிக்கல் இருக்கவில்லை. ட்ரைவர் கிடையாது. நாமே ஓட்டிக் கொள்ளலாம். ரிஸார்ட்டின் வரவேற்புப்

பிரிவிலிருந்து ஏற்பாடு செய்து தந்தார்கள். ட்ரைவிங் லைசென்ஸை மட்டும் வைத்துக் கொண்டார்கள்.

"வழியில ட்ரா·பிக் போலீஸ் நிறுத்தி லைசென்ஸ் கேட்டா நான் என்ன பண்றது?" என்று அவன் சண்டைக்குப் போனான்.

"இங்கே அதெல்லாம் கேட்க மாட்டாங்க சார்." என்றாள், சிரிப்பு மாறாத வரவேற்புப் பணிப்பெண்.

"வாட்டெவர்!!"

அவனோடு காரில் பயணம் செய்வது மிகச் சுகமான அனுபவம். சென்னையில் திருமணத்துக்கு முன்னால் நாங்கள் தனிக்குடித்தனம் போக வீட்டைத் தேர்ந்தெடுப்பதற்காக அவனோடு

போயிருக்கிறேன். வேளச்சேரியில் இரண்டு வீடுகளும், திருவான்மியூரில் இரண்டு வீடுகளும் பார்த்தோம். 'உனக்கு எது பிடிக்குதோ, அதுவே எனக்கும் பிடிக்கும். செலக்ட் பண்ணு, நான்

அட்வான்ஸ் கொடுத்துடறேன். எனக்கு புத்தகம் வைக்கிறதுக்கு ஒரு இடம் வேணும். மத்தபடி உனக்கு என்னவெல்லாம் வாங்கணுமோ, அதுக்கு ஏத்த மாதிரி பாரு.' என்று சொல்லி விட்டான்.

எனக்கு இரண்டு இடங்களும் அலுவலகம் செல்ல வசதியானவை. அவனுக்குத் தான் நுங்கம்பாக்கம் போக வேண்டும்.

காரில் ஏறி  உட்கார்ந்து விட்டால் வேறொரு மனிதனாகி விடுகிறான். கார் அவன் சொன்னதையெல்லாம் கேட்கிறது. நிறைய பேசுவான். கேட்டுக் கொண்டேயிருக்கலாமென்று தோன்றும்.

கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒரு நாள் இவனோடு ஒரு நீளமான கார்ப் பயணம் போக வேண்டும். போய் கொண்டே இருக்க வேண்டும். எங்கேயும் நிற்கக் கூடாது.

அவன் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். போன தடவை அவன் அலுவலகத்தினரோடு கோவா வந்தது பற்றி. எனக்கு இப்போது எதையும் கேட்கும் 'மூட்' இல்லை. அவன் தோள் மேல்

சாய்ந்து கொண்டு கண்களை மூடிக் கொண்டேன்.

ooOoo

கலாங்கூட் கடற்கரையில் இருவரும் கரம் கோர்த்து அலைகளின் ஓரத்தில் நடந்து கொண்டிருந்தோம். அவ்வப்போது அலைகள் வந்து கால்களைத் தழுவிச் சென்றன. அவன் ஒரு அனிச்சைச்

செயலாய் அப்போதெல்லாம் என் கையை இன்னும் கொஞ்சம் அழுத்தியது எனக்குப் பிடித்திருந்தது.

"உன்னோட கனவுகள் எல்லாம் என்னன்னு சொல்லேன்." என்றான்.

"ஏன்?"

"ஒண்ணொன்னா நிறைவேத்தனும் இல்லையா? அதுக்குத் தான்."

"சரி, மொதல்ல சின்னதா ரம்பிக்கலாம். நம்ம வீட்டுக்குக் குடி போனதும் ஒரு மீன் தொட்டி வாங்கி அதில மீனெல்லாம் வளர்க்கணும்."

"ம்ம்! அப்புறம்?"

"ஞாயித்துக் கிழமையெல்லாம் சமையலறைக்கு லீவ் விடணும். உலகத்து சமையல் ஸ்டைல் எல்லாம் டேஸ்ட் பண்ணிப் பார்க்கணும் ஒவ்வொரு வாரமும்."

"இண்டெரெஸ்டிங்! குழந்தைங்க விஷயம்?"

"ரெண்டு பேர். முதல்ல பொண்ணு, அப்புறம் பையன். ரெண்டு பேருக்கும் நான் பேர் கூட யோசிச்சு வச்சிருக்கேன்."

"என்ன? சொல்லு."

"முதல்ல று ஓடுற எடத்துக்கு வந்து சேருவோம். அப்புறமா அணையைக் கடக்கலாம்."

"சரி, வேற?"

"இன்னொரு கனவைச் சொன்னா நீ டென்ஷனாகிடுவே."

"அப்படி என்ன கனவு? வேற ஏதாவது ரூமுக்கு ஒவ்வொரு வாரமும் ஒரு நாள் லீவா?"

"ச்சீ! அதில்லை. கலருக்கு ஒண்ணு வீதம் அம்பதாயிரம் பட்டுப் புடவை வாங்கணும்."

அவன் அழகாகச் சிரித்தான். என் கையை விடுவித்து, இடுப்பைச் சுற்றி இழுத்து அணைத்து,
"நான் தயார். எதுவானாலும். எனக்கு வாழ்க்கையில ஒரே ஒரு சை தான். உனக்கு இருக்கிற எல்லா சைகளையும் நிஜமாக்கித் தர்றது. ஐ லவ் யூ." என்றான்.

ஓர் அலை, திரும்பிப் போகையில் சில நீர்த்துளிகளை உயரத்துக்கு அனுப்பி, எங்களை சீர்வதித்துச் சென்றது.

ooOoo

தலைநகர் பனாஜிக்குப் போய் ஷாப்பிங் முடித்து விட்டு ரிஸார்ட்டிற்குத் திரும்பி வர மணி ஒன்பதாகி இருந்தது. ரூம் சர்வீஸ் மூலம் உணவு வரவழைத்து சாப்பிட்டோம். இரவு டைகளுக்குள்

இருவரும் நுழைந்த பிறகு, அவன் படுக்கையறையில் சி.என்.பி.சி.யில் வர்த்தகச் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். நான் வரவேற்பறை மேஜையில் இருந்த பென்சிலையும்

காகிதங்களையும் எடுத்துக் கொண்டு அவன் பக்கத்தில் வந்தமர்ந்து,
"உனக்கு சம்பளம் கரெக்டா எவ்ளோ? கையில எத்தனை கிடைக்கும்?" என்றேன்.

அவன் சந்தேகத்துடன் பார்த்து,
"என்ன? பட்டுப் புடவை வளர்ச்சி நிதி ரம்பிக்கப் போறியா?" என்றான்.

நான் அவனை முறைத்து, பென்சிலால் கன்னத்தில் ஒரு அடி அடித்தேன்.

"சொல்லு. நம்மோட மாச செலவுக்கு பட்ஜெட் போடப் போறேன். பொறுப்பா ஏதாவது செய்ய வேண்டாமா?"

அவன் தொலைக்காட்சியை நிறுத்தி விட்டு,
"தேன்நிலவுக்கு வந்துட்டு பொறுப்பா செய்றதுக்கு இன்னொண்ணு இருக்கே? யூ நோ வாட் ஐ மீன்?" என்றான்.

"உதை வாங்குவே. சரி. ஒரு மணி நேரம் நான் சொல்றபடி கேளு. அடுத்த ஒரு மணி நேரம் நீ சொல்றபடியெல்லாம் நான் கேட்கிறேன். டீல்?"

அவன் புருவங்கள் உயர்ந்தன. "ரைட். டீல்!  ஷூட்."

"டேக் ஹோம் எவ்ளோ உனக்கு?"

சொன்னான். "னா அதில 25% இன்வெஸ்ட்மெண்ட்டுக்குப் போயிடும். லை·ப் இன்ஷ்யூரன்ஸ், ம்யூச்சுவல் ·பண்ட், அதுக்கெல்லாம்."

"ஓக்கே. வேற சம்பாத்தியம்?"

"ஸ்டாக் மார்க்கெட்டில வருஷத்துக்கு வரியெல்லாம் போக கொஞ்சம் வரும்." என்று அந்தத் தொகையையும் சொன்னான்.

"வாவ்! நல்ல புத்திசாலி ள் தான் நீ."

"பாதி புத்திசாலித்தனம். மீதி அதிர்ஷ்டம். அப்புறம் வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுத்தது போக பேங்க் பேலன்ஸ் கொஞ்சம் இருக்கு." என்று அதையும் சொன்னான்.

""கலக்குறியே கண்ணா!"

"ரொம்ப சந்தோஷப்படாதே. என் தங்கச்சி கல்யாணத்துக்கு செலவு இருக்கு."

"அ·ப் கோர்ஸ். சம்பளத்துல மாசா மாசம் அதுக்கு சேர்க்கிறதுக்கு கொஞ்சம் ஒதுக்கி வைக்கணும், ரெண்டு பேருமே. நம்ம வீட்டு செலவு என்னென்ன?"

அவனும் நானுமாக ஞாபகம் வந்ததையெல்லாம்  சொல்லி அவற்றின் பக்கத்தில் உத்தேசத் தொகைகளை எழுதினேன். சில வீண் செலவினங்களை நிராகரித்தேன். னாலும் இவன் மாதத்துக்கு

இத்தனை புத்தகங்கள் வாங்கக் கூடாது.

"புத்தகம் படிக்கிறது ரொம்ப நல்லதும்மா."

"சரி, கல்யாணமான புதுசுல தனியா உட்கார்ந்து புத்தகம் படிக்கணும்னு சைப்படறியா அல்லது..?" என்று அவன் ரூட்டிலேயே போய் மடக்கினேன். அவன் மறுத்துப் பேசவில்லை.

கடைசியில் "எவ்ளோ ஆச்சு? எவ்ளோ மிஞ்சும்?" என்றான்.

நான் காட்டினேன்.

"பரவாயில்லேயே. என் கம்பெனியில ஹெச்.ர். பட்ஜெட்டுக்குப் போராடும் போது உன்னைக் கூட்டிக்கிட்டுப் போகலாம் போலிருக்கே. நீட் ஜாப்."

"தேங்க்ஸ், தேங்க்ஸ்"

"சரி. இப்போ நான் சொல்றதையெல்லாம் கேட்க நீ ரெடியா?"

"உனக்குத் தூக்கம் வரலையா?"

"ஹேய்! பேச்சு மாறக் கூடாது. கம் ஆன்."

ooOoo

ஒரு கனவிலிருந்து கண்விழித்தது போலிருந்தது எனக்கு. கடலின் நடுவே மிதந்து கொண்டிருந்தேன் நான். கடலின் நீரெல்லாம் சிநீல நிறமாக இருந்தது. என் அருகில் ஒரே ஒரு படகு.

என்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. தூரத்தில் ஒரு தீவு தெரிந்தது. அழகான தீவு. வெண்ணிற மணல் நிறைந்த கடற்கரையெங்கும் பெங்குயின் பறவைகள் என்னை வரவேற்கக் காத்திருந்தன. அதை நோக்கி நான் நீந்திக் கொண்டிருந்தது திடீரென நினைவுக்கு வந்தது. பாதி வழியில் எனக்கு நீச்சல் மறந்து போனதும் நினைவுக்கு வந்தது. படகிலிருந்து ஒரு கரம் என்னை நோக்கி நீண்டது. நான் பிடித்துக் கொண்டு மேலே பார்த்தேன். அவன் முகம். என்னைப் படகினுள் இழுத்து நெற்றியில் அவன் முத்தமிட்ட போது விழித்துக் கொண்டேன்.

கண் விழித்த போது பனாஜியிலிருந்து சென்னைக்குப் பறந்து கொண்டிருந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் அவன் பக்கத்தில் ஸீட் பெல்ட்டால் கட்டுப்படுத்தப்பட்டு அமர்ந்திருந்தேன்.

"சென்னையில் இறங்க இன்னும் எவ்ளோ நேரம்?" என்றேன்.

"இருபது நிமிஷம். நல்லாத் தூங்கினியா?"

"ம்." அதிகாலையில் எழுந்து காட்டேஜைக் காலி செய்து விட்டு விமான நிலையத்துக்குப் பயணம் செய்த களைப்பும் தூக்கமின்மையும்.

சின்னதாயிருந்த கண்ணாடி மூலம் வெளியே பார்த்தேன்.. இறக்கைக்கு முன்னாலேயே நாங்கள் அமர்ந்திருந்ததால் நன்றாகப் பார்க்க முடிந்தது. தூரத்தில் கடல் தெரிந்தது. என் கனவு ஞாபகம் வந்தது.

அவன் பக்கம் திரும்பி, அவன் கன்னத்தில் முத்தமிட்டு, "I guess I'm ready too for the beautiful journey of life with you."

"ஒண்ணு சொல்வாங்க தெரியுமா? Well begun is half done. I hope I have begun well."

நான் அவன் கையைப் பிடித்துக் கொண்டு, "Don't worry, you've done well." என்றேன்.

அவன் தோளின் மேல் சாய்ந்து கொண்டேன்.

உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |