தீபாவளி மலர் 2005
 
கட்டுரைகள்
  தொடரும் கேள்விகள்
(அருணா ஸ்ரீனிவாசன்)
  கிஷோர் குமார்
(அப்துல் கலாம் ஆசாத்)
  மலேசியத் தமிழ்க் கட்டுரை இலக்கியம்
(ரெ. கார்த்திகேசு)
  மடியில் இரசாயன குண்டு
(குழலி)
  திருமணமும்,6-ம் வீடும்
(ஜோதிடரத்னா S. சந்திரசேகரன்)
  மைசூர் சௌடையா
('லலிதா')
 
சிறுகதைகள்
  கவிதைத் தொகுப்பு
(சேவியர்)
  தாத்தாச்சாரியார் கோட்
(என். சொக்கன்)
  'டிரீம்' தரிகிட
(ஜே.எஸ்.ராகவன்)
  திருப்பம்
(சித்ரன்)
  காரணம்
(விச்சு)
  ம்.ம்...ஹூஹூம்!
(ராமசந்திரன் உஷா)
  காதல் தூதுவன்
(சரசுராம்)
  குலம் தரும்
(ஷைலஜா)
  அவள், அவன், அவர்கள்
(மீனாக்ஸ்)
  தேவர்களும் கால்களும்
(குழலி)
  நிதானம்
(கிருஷ்ணா வெங்கட்ராமா)
 
கவிதைகள்
  நாட்குறிப்பு
(சேவியர்)
  காலக்கைத்துணை
(பிச்சினிக்காடு இளங்கோ)
 
பேட்டி
  எழுத்தாளர் பி.ஏ.கே வுடன் சந்திப்பு
(பாஸ்டன் பாலாஜி)
 
குறுநாவல்
  வேண்டியது வேறில்லை
(ஜெயந்தி சங்கர்)
<< முதல் பக்கம்
பேட்டி : எழுத்தாளர் பி.ஏ.கே வுடன் சந்திப்பு
- பாஸ்டன் பாலாஜி
| Printable version | URL |

பி. அனந்தகிருஷ்ணன் முதலில் ஆங்கிலத்தில் The Tigerclaw Tree என்ற நாவலை 1998ல் பென்குயின் வெளியீடாக எழுதினார்.  அவர் பிறகு அதே நாவலை மொழிபெயர்க்காமல் தமிழிலே திரும்பவும் 'புலி நகக்கொன்றை'யாக எழுதினார். தமிழ்நாட்டிலே வசித்த தென்கலை ஐயங்கார் குடும்பம் ஒன்றின் வாழ்க்கையை சொல்வதுதான் நாவல்.

புலி நகக் கொன்றையின் புத்தக விமர்சனமாக அ. முத்துலிங்கம் (http://www.thinnai.com/arts/ar0205048.html) எழுதியதில் இருந்து:

"ஒரு பெரிய நதி கரைகளையும், மலைகளையும், மரங்களையும் தொட்டுக்கொண்டு ஓடுவதுபோல இந்த நாவல் அரசியல், சமூக மாற்றங்கள், சினிமா, ஆன்மீகம் என்று எல்லாவற்றையும் தொட்டுக்கொண்டு நகர்கிறது. ஒரு நூறு வருட வரலாற்றை, நாலு தலை முறைக் கதையை 300 பக்கங்களில் சுவாரஸ்யம் குறையாமல் சொல்வது பிரயத்தனமானது. தொடக்கத்திலிருந்து முடிவு வரை உண்மையின் நாதம் ஒலிப்பது இந்த நாவலின் சிறப்பு. சுருக்கமாகச் சொன்னால் இது இரண்டு கொள்ளுப்பேரன்களின் கதை; நம்பி அசைக்கமுடியாத ஒரு கொள்கையில் வைத்த நம்பிக்கையில் உயிரை விடுகிறான்; கண்ணனோ நிரந்திரமான கொள்கைப்பிடிப்பு ஏதும் இல்லாமல், முடிவுகளை தள்ளிப் போடுபவனாக வாழ்க்கையை தயக்கத்துடன் எதிர்கொள்கிறான்.

அரச பயங்கரவாதத்தை தமிழில் முதலில் சொன்ன காவியம் சிலப்பதிகாரம் என்றால் இந்த நாவல் அதையே மிகையில்லாமல், சிறப்பாக கூர்மையாகச் சொல்கிறது. அரசியல், சமூக மாற்றங்கள், சினிமா, ஆன்மீகம் எல்லாம் அளவோடு பின்னிப் பிணைந்து வருகின்றன. காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட், பெரியார் சித்தாந்தங்களும், காந்திஜி, ராஜாஜி, திலகர், வ.வெ.சு ஐயர் நடவடிக்கைகளும், ஆஷ் கொலை வழக்கும் இன்னும் உலக சம்பவங்கள்கூட நாவலில் சரியான இடங்களில் தலை காட்டினாலும் எந்த சமயத்திலும் அவை அதன் ஓட்டத்தை இழுத்து நிறுத்தவில்லை.

முடிவை நெருங்கும்போது பதினெட்டாம் நாள் போரில் வீமனுடைய மனம் அடைந்த குழப்பத்துடன் என் மனம் கண்ணனை ஒப்பிட்டது. பதினெட்டு அத்தியாயங்கள், மிகவும் பொருத்தமானதே. பகவத்கீதைகூட 18 அத்தியாயங்கள்தான். இதை யோசித்தே ஆசிரியர் அதிகாரங்களை அமைத்திருப்பார் என்று எனக்கு படுகிறது."


பிஏ கிருஷ்ணனை சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். நேரில் சந்தித்து நாலு நண்பர்களுடன் கலந்துரையாடிய போது எழுந்த கேள்வி பதில்களின் தொகுப்பு இது. கோர்வையில்லாத கேள்விகளை மாற்றியமைத்து, சந்திப்பை வழிநடத்தி, பேட்டியை ஒழுங்குபடுத்தித் தந்த பிஏ கிருஷ்ணனுக்கு என்னுடைய நன்றி. அவருடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் என்னுடைய தேடலையும் புரிதலையும் மேம்படுத்தியது..

வாழ்க்கை

* தங்களுடைய வேலை, தொழில் மற்றும் குடும்பப் பின்னணி குறித்து பகிர்ந்து கொள்ள முடியுமா?

நான் சில மாதங்களுக்கு முன் வரை மத்திய அரசின் கீழ் இயங்கும் விஞ்ஞானக் கூடங்களுக்கு தலைமைக் கண்காணிப்பு அதிகாரியாக (Chief Vigilance Officer)  பணியாற்றி வந்தேன். இப்போது விடுப்பில் இருக்கிறேன். மறுபடியும் வேலைக்குப் போவது அலுப்பாக இருக்கிறது. முழுநேர எழுத்தாளராக எண்ணம். அந்த எண்ணம் நிறைவேறாமல் இருக்க தமிழ் வாசகர்களின் தலையெழுத்து சரியாக இருக்க வேண்டும். நான் பார்த்த வேலையின் அனுபவங்களைக் கொண்டே புத்தகங்கள் எழுதலாம். உங்களுக்கு அவை படிக்க சுவாரசியமாக இருந்தால் நான் என் வாழ்நாளில் எஞ்சியுள்ள நாட்களில் பெரும்பாலவற்றை சிறையில் கழிக்க வாய்ப்பு நிறைய உள்ளது.

என்னுடைய மனைவி உயர்நிலை வகுப்பு மாணவர்களுக்கு உயிரியல் பாடங்கள் நடத்தும் விரிவுரையாளராக தில்லித் தமிழ்ப் பள்ளி ஒன்றில் பணியாற்றுகிறார். என்னுடைய மகன் ஸான் ஓஸேயில் பணியாற்றுகிறார். அவர் படித்தது சென்னை பல்கலைக் கழகம் மற்றும் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில்.


* நீங்கள் இலக்கியத்துக்கு அறிமுகமானது எப்போது? எப்படி?

நான் இலக்கியத்துடன் பிறந்தேன். என்னுடைய தந்தை கம்பனைக் கரைத்துக் குடித்த மிகச் சில அறிஞர்களில் ஒருவர். அவருடன் வாழ்ந்ததே தமிழ் இலக்கியத்துடன் வாழ்ந்தது போலத்தான். எனக்கு இது தெரிந்தது மிகப் பின்னால்¢ என்பதே வருத்தத்திற்குரிய விஷயம்.

* உங்கள் இளம்பருவ வாழ்க்கை அனுபவம்... அதை எழுத்தாக்க முனைந்த முதல் அனுபவம்... இதைப் பற்றி
சொல்லுங்களேன்?

என் இளம் பருவ வாழ்க்கையைப் பற்றி ஒரு புத்தகம் எழுத நினைக்கிறேன். அது தீபாவளி இதழுக்குள் அடங்கும் என்று தோன்றவில்லை. ஆனால் என்னுடைய இளமை  பன்னீரெண்டு, பதிமூன்று வயது வரை (அதற்குமுன் குழந்தைப் பருவமோ?) மிக மகிழ்ச்சிகரமாக இருந்தது. மீசை முளைக்க ஆரம்பித்தபின் இரண்டுங்கெட்டான். நான் காதலித்த பெண்களின் பட்டியலை கொஞ்சம் நீட்டிப் படித்தால் கிட்டத்தட்ட லலிதாசகஸ்ரநாமத்தையும் லக்ஷ¢மி சகஸ்ரநாமத்தையும் சேர்ந்து படித்தால் போல இருக்கும். ஆச்சரியம் என்னவென்றால் யாரிடமும் அடிபட்டதில்லை.

* படைப்புலகினை நோக்கி வர உங்கள் சூழலும் மனத்தூண்டலும் என்ன?

யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்ற கூற்று மாதிரி நான் பலரக புத்தகங்களையும் படித்து பட்ட பாட்டை மற்றவர்களும் படட்டுமே என்ற நல்ல எண்ணம்தான்!

உண்மையில் எழுத வேண்டும் என்ற எண்ணம் என்னிடம் நெடுநாளாகவே இருந்து வந்தது. துணிவு வந்து சேரத்தான் இவ்வளவு நாட்கள் ஆகி விட்டன. தில்லிக்கும் இலக்கியத்திற்கும் இடையே உள்ள தூரம் ஜார்ஜ் புஷ்ஷுக்கும் ஷேக்ஸ்பியருக்கும் உள்ள தூரத்தை விட சிறிது அதிகம். இங்கே இலக்கியவாதிகளை விட இலக்கிய மேலாண்மையாளர்களே முன்னிலையில் நிற்பார்கள்¢. நண்பர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் பதவி உயர்வு, பங்குச் சந்தை, வீட்டு மனை வாங்குவது, பஞ்சாபிப் பெண்கள் போன்ற பளுவுள்ள சமாசாரங்களைப் பற்றித் பேசுபவர்கள். அவர்கள் மத்தியில் இருந்து கொண்டு தீவிர இலக்கியத்தைப் பற்றி யோசித்து எழுதுவது என்பது வாழ்க்கையில் ஒரு சமன்பாடு பெற்ற பிறகுதான் என்னால் முடிந்தது. முன்னாலேயே யோசித்திருக்க வேண்டும் என்று இப்போது தோன்றுகிறது.

* அதற்கு நாவல் வடிவத்தை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?

எனக்கு மிகவும் பிடித்த வடிவம் அது. நான் கூற முயன்றதையும் அந்த வடிவத்தில்தான் ஓரளவு முழுமையாகக் கூற முடியும்.

படைப்பு

* 'புலிநகக் கொன்றை' ஆங்கிலத்திலும் தமிழிலும் பரந்த கவனிப்பையும் வாசிப்பையும் பெற்ற முக்கியமான நாவல். தங்களுடைய படைப்பையே மொழி பெயர்த்ததில் எத்தகைய அனுபவங்கள் கிடைத்தது?
ஏற்கனவே எழுதியதை மீண்டும் இன்னொரு மொழியில் படைப்பாக்கும் போது அயர்ச்சி வரலாம்; ஓட்டம்
தடைபடலாம்; மேலும் விவரித்து எழுதத் தோன்றலாம்; செதுக்கி மேம்படுத்த நினைக்கலாம்; மூலத்துடன் விலகாது நடக்கலாம். தமிழுக்குக் கொண்டுவரும்போது எப்படி உணர்ந்தீர்கள்?

இதைப் பற்றி நான் அமெரிக்காவில் இருந்தபோது சற்று விரிவாகவே பேசியிருக்கிறேன். என் வாழ்நாட்களில் மிக நிறைவு தந்த நாட்கள் நான் என் படைப்பை தமிழில் திரும்பி எழுதிய நாட்கள். எனக்கு இந்தப் பணி அயர்ச்சியைத் தரவில்லை.  ஆங்கில மொழி, இலக்கியத்தின் மீது மாளாக் காதல் கொண்டவன் நான். படிக்கப் படிக்க, படிக்க வேண்டியவை இன்னும் பல என்ற உணர்வைத் தரக் கூடியது அந்த மொழி. ஆங்கிலத்தில் சொற்களும் மிக மிக அதிகம். தமிழ் என்னுடைய அன்னை மொழி. என் நினைவின் மொழி. அதன் சொல் வளம் ஆங்கிலம் போல அவ்வளவு அதிகம் அல்ல. (ஆனால் இருப்பதை வைத்துக் கொண்டு இலக்கியச் சிகரங்களை நமது முன்னோர்கள் தொட்டிருக்கிறார்கள்.) அதனால் தமிழில் எழுதும் போது சொற்கள் திரும்பத் திரும்ப வராமல் இருக்க மிகுந்த முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. இது என்னுடைய குறையாகவும் இருக்கலாம். ஆனால் தமிழ் வசவுகள் (இவை இத்தனை ஆண்டுகள் தில்லியில் இருந்தும் மறந்து போகாதவை) தமிழ் இலக்கிய மேற்கோள்கள், வைணவச் சொல்லாடல்கள் போன்றவற்றை தமிழில் மிக எளிதாக எழுத முடிந்தது.

* உங்கள் எழுத்து யதார்த்தாமனது. இப்படி எழுதவேண்டும் என்ற தீர்மானம் செய்துகொண்டு எழுதுகிறீர்களா? மொழிக்கு அலங்காரம் வேண்டியதில்லையா?

எனக்கு இந்தப் பாகுபாடு அதிகம் புரியவில்லை.  எனக்குப் புரிந்ததெல்லாம் ஒரு நல்ல நாவலுக்கு ஒரு தொடக்கம் இருக்கும், ஒரு முடிவு இருக்கும் ஒரு நடுப்பாகம் இருக்கும்.  நன்றாக இல்லாத நாவல் எப்படி இருக்கும்? Larkin கூறுகிறார்: It will have a beginning, certainly an end and a muddle in between.

* புலிநகக் கொன்றையை படித்து முடித்தவுடன் தொக்கி நிற்கும் கேள்விகள் எழுகிறது. மேலும் பல சுவையான விவாதங்கள் அரைகுறையாக விடுபட்டு நிற்கிறது. காந்தீயம், கம்யூனிஸம், மத நம்பிக்கை, குரு விசுவாசம், சமூக சேவை, திராவிட இயக்கங்கள், வரலாற்று விமர்சனம் என்று பல தடங்களில் நுனிப்புல் மட்டுமே பார்த்தது போன்ற அனுபவம் கிடைக்கிறது. இத்தகைய ஓட்டங்கள் சிறுகதைக்கும் கவிதைக்கும் பொருத்தம் என்பது போல் நாவலுக்கும் பொருந்துமா? ஏன்?

முதலில் ஒரு சந்தேகத்தைத் தீர்த்து விடுகிறேன். நான் டால்ஸ்டாய் அல்ல.

சுவையான விவாதங்களே முடிவு அடைய முடியாத விவாதங்கள்தான். டாஸ்டாயவிஸ்கியின் Brothers Karamazov படித்துப் பாருங்கள் - முக்கியமாக Grand Inquisitor அத்தியாயம். படித்த பிறகு விவாதம் முடிவுறுகிறது என்று தோன்றுகிறதா? எனக்குத் தோன்றவில்லை. நாவல் என்பது ஒரு வழிகாட்டி மரம். அதுவும் வழிகள் என்ன என்பது பற்றி முடிவுக்கு வராதவர் நாட்டிய வழிகாட்டி மரம். அந்த மரமே பாதையாக மாறுவது இயலாத காரியம். பதினெட்டு பருவங்கள் எழுதிய வியாசரே பல விவாதங்களை முடிவு அடையாமல் நிறுத்தி விடுகிறார். அல்லது இறைவைன் குறுக்கிடுகிறார்.

நான் மிகச் சாதாரண எழுத்தாளன். அடிப்புல்லை மேயப் போய் கீழே இருக்கும் கற்களைக் கடித்து பற்கள் உடைந்து போகும் அபாயம் இருக்கிறது. என்னுடைய பற்கள் அவ்வளவு வலுவானது அல்ல. மேலும் ஒரு சிலர் என்னுடைய பாத்திரங்கள் 'அதிகப் பிரசங்கி'களாக இருக்கிறார்கள் என்று  அபிப்ராயம் தெரிவித்திருக்கிறார்கள்.

* 'புலிநகக் கொன்றை' அறிவின் ஆழத்தை விட உணர்வுகளின் ஆழத்தை நோக்கி நகர்வதாக கருதுகிறேன். உணர்வுரீதியான படப்பு என்னும் தளத்தில் பெரும் தாக்கத்தைக் கொடுக்கிறது. அறிவுரீதியாக சிந்திப்பதைக் கூட கதாபாத்திரங்களின் சொந்த சம்பவங்களைக் கொண்டு குறைவாகக் கொடுத்திருப்பது, வாசகனுக்கு எளிதாகப் பக்கங்களை விரட்ட வைத்தாலும், பிரச்சினைகளுக்குத் தீர்வான தெளிவான பார்வையை நாவல் தருகிறதா? அல்லது அது வாசகனின் வாசிப்பனுபவத்தையும் படிப்பறிவையும் சேர்ந்த நிகழ்வா?

பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பது நாவலின் வேலை அல்ல என்பது என்னுடைய தாழ்மையான எண்ணம். அப்படி நாவல் தீர்வு கண்டிருந்தால் நாம் இன்னும் புத்தகங்களைத் தேடி அலைந்து கொண்டிருக்க மாட்டோம். இது தான் தீர்வு என்று அறிவிப்பது அரசியல் புத்தகங்கள் அல்லது மதம் சார்ந்த புத்தகங்கள். அல்லது முட்டாள்கள் எழுதிய புத்தகங்கள். ஆசிரியன் அறிவுப் பூர்வமாக சொல்ல விரும்புவதை கதையின் பாத்திரங்கள் மூலம் சொல்ல முயல்வதே நல்லது என்பதும் என்னுடைய எண்ணம்.

புலிநகக் கொன்றையைப் பொருத்த அளவில் அது ஒரு உணர்வு சார்ந்த நாவல் என்பதை விட  அரசியல் சார்ந்த நாவல் என்றுதான் நான் நினைக்கிறேன். அதை மற்றொரு முறை படித்துப் பாருங்கள். ஒரு வேளை என்னுடைய கம்யூனிஸ்ட் உங்களுக்கு உணைச்சிகளை பிழியும ¢சிவாஜி கணேசனாகத் தென்படலாம். அப்படித்தான் ஒரு அமெரிக்க நண்பருக்குத் தென்பட்டது என்று எனக்குத் தோன்றியது.  அது என்னுடைய படைப்புத்திறனின் குறையாக இருக்கலாம்.

* உங்களுடைய படைப்பு வாழ்வில் தாக்கங்களை உருவாக்கியவர்கள் யார்?

நான் படித்த பல எழுத்தாளாகள். ஆங்கிலத்தில் Shakespeare, Betrand Russell, Evelyn Waugh அனைத்து பத்தொன்பதாம் நூற்றாண்டு ரஷ்ய எழுத்தாளர்களும். தமிழில் சங்க இலக்கியங்கள், ஆழ்வார்கள், கம்பன், பாரதி, புதுமைப் பித்தன், சுந்தர ராமசாமி, அசோக மித்திரன்.  Do I sound pompous and superior?  இவர்களைப் படித்து வியந்திருக்கிறேன். அவர்கள் தாக்கம் என்னிடம் வெளிப்பட்டிருக்கிறதா என்பது எனக்குச் சரியாகத் தெரியவில்லை.

* உங்கள் நாவலை உங்கள் வீட்டிலிருந்தவர்கள் படித்தார்களா? என்ன மாதிரியான வரவேற்பிருந்தது?

என் நாவல் ஆங்கிலத்தில் வெளியான போது என் தந்தை அதைப் படிக்கும் நிலையில் இல்லை. என்னுடைய அன்னையார் தமிழில் படித்து விட்டு  "படுக்குள் சமாச்சாரத்தையெல்லாம் எழுதியிருக்கையே, நீ அவா சயனக் கிருகத்தில ஒளிஞ்சுண்டு பாத்தயா. இது என்னடா கதை முடியப் போறத முதல்ல சொல்ற கதை, படிக்க கஷ்டமா இருக்கு" என்றார். என்னுடைய மனைவி அதன் ஆங்கிலப் பிரதியைப் படித்து விட்டு என்னிடம் சிறிது காலம் பேசாமலே இருந்தார். குமுதம், ஆனந்த விகடன் போன்ற தரமிக்கப் பத்திரிகைகளில் இந்த நாவல் வரும் தகுதி இல்லாமல் இருப்பது குறித்து எனது உறவினர் சிலருக்கு வருத்தம். ஆனால் என்றாவது ஒரு நாள் அவற்றில் வரத் தகுந்த நாவலை எழுதி விடுவேன் என்று அவர்களில் சிலர் நம்புகிறார்கள். "முதல் நாவல்தானே, சித்த முன்னப் பின்னதான் இருக்கும். அடுத்தது நிச்சயம் தொடர்கதையா வந்துடும்" என்றார் ஒருவர். கதையின் ஆங்கிலத் தலைப்பைப் படித்து விட்டு " நீ மரத்தைப் பத்தில்லாம் எழுதுவயா? நீ காலேஜில படிச்சது பிசிக்ஸ் இல்லையோ?" என்றார்  மற்றொருவர்.

சிலர் எனக்கு படிக்கக் கொடு படித்து விட்டு சொல்கிறேன் என்கிறார்கள். காலச்சுவடு பதிப்பகம் எனக்கு அதிகப் பிரதிகளைக் கொடுக்காத படியால் அவர்களது வரவேற்பைப் பற்றி அறிந்து கொள்ளும் அறிய வாழ்ப்பை நான் இழந்து விட்டேன்.

சமூகம்

* சமூக மாற்றம் வேண்டும்; அடிப்படைக் கல்வி தேவை; மகளிர் சுயசிந்தனை குரல்; என்று பல எழுச்சி சிந்தனைகள் கேட்டு வருகிறோம். ஆழமான தாக்கங்கள் ஏற்பட்டாலும் மாற்றங்கள் பெரிய அளவில் கண்முன்னே நிறைவேறவில்லை. இதற்கான முன்னெடுத்து செல்லும் படிகள் என்ன? வேகமும் ஈடுபாடும் தூண்டுதல்களும் இருந்தாலும் இது போன்ற முயற்சிகள் முழு வெற்றியை எப்படி அடையும்?

இத்தகைய மாற்றங்கள் ஒரு சமூகத்தில் ஏற்பட பல நூற்றாண்டுகளின் முயற்சி தேவைப் படும். அல்லது புரட்சி ஏற்பட வேண்டும். புரட்சி என்பது இன்று ஒரு நகைப்புக்குரிய சொல்லாக மாறி விட்டதற்கு நாமும், புரட்சியாளர்களும் காரணம்.  எனக்கென்னவோ நாம் சரியான பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறோம் என்று தோன்றுகிறது. பாதை மிக நீளமாக இருக்கும் போது வழி தவறுவதோ எது சரியான வழி என்று தெரியாமல் தடுமாறுவதோ நடக்கக் கூடிய ஒன்று.

* இலங்கைப் பிரச்சினை அல்லது ஆப்பிரிக்க இனச்சண்டைகள் போன்ற நேரடி அனுபவம் இல்லாத ஆனால் விரிந்த வாசிப்பு மட்டுமே உள்ள தளங்களில் படைப்பாளி புனைவை உருவாக்கலாமா? பிறரை சந்தித்தல், பயணங்கள் போன்றவற்றால் மட்டுமே எழுதுவது வாசகனுக்கு புதுமையான அனுபவத்தைத் தர வல்லது என்றாலும் விருப்பு, வெறுப்பற்ற அணுகுமுறை போராட்டத்தின் வீரியத்தை மாற்றியமைக்குமே?

அவ்வாறு உருவாக்குவது கடினம்.  போராட்டத்தின் வீரியத்தை எப்படி ஒரு படைப்பு மாற்றியமைக்க முடியும்? போர் செய்யாதவர்களின் பார்வையை வேண்டுமானால் மாற்றி அமைக்கலாம். அது பற்றி போர் செய்பவர்களுக்கு எந்தக் கவலையும் இருக்க முடியாது. நான் சொல்வது நடக்கும் போரட்டங்களைப் பற்றி, நடந்த போராட்டங்களைப் பற்றி அல்ல. நடந்த போராட்டங்களைப் பற்றி எழுதும் போது அதன் நிறைவுகளும் இழப்புகளும் ஒரு தேர்ந்த படைப்பாளிக்குத் தேவையான சமன்பாட்டைத் தந்து விடும்.

* தங்களின் அமெரிக்க பயணம் எவ்வாறு இருந்தது? அமெரிக்காவின் சமூக அமைப்பையும் அரசு முறையையும் இந்தியாவுடன் ஒப்பிட முடியுமா?

மிகவும் மகிழ்ச்சியையும் நிறைவையும் தந்த பயணம் அது. தில்லியில் என் நாவலைப் படித்தவர்களை விட அமெரிக்கவில் அதைப் படித்தவர்கள் அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும். அமெரிக்கச் சமூக அமைப்பையும் இந்திய சமூக அமைப்பையும் எந்த வகையிலும் ஒப்பிட முடியாது என்று எனக்குத் தோன்றுகிறது. அமெரிக்க மேல்தட்டு வர்க்கத்தின் சுயநலத்தில் கீழே இருப்பவர் மேலே வரக்கூடிய ஒரு சில சாத்தியக் கூறுகள் அமைந்திருக்கின்றன. இந்திய மேல்தட்டு வர்க்கம் மனச்சாட்சியோ வெட்கமோ இல்லாத ஒன்று. அதன் சுயநலம் கீழே இருப்பவர்களை மேலும் கீழே தள்ளும் என்றுதான் நான் நினைக்கிறேன். நான் நினைத்து தவறு என்று நான் வரும் நாட்களில் நினைக்க முடிந்தால் அதை விட எனக்கு மகிழ்ச்சி அளிப்பது வேறு எதுவும் இருக்க முடியாது.  Outlook பத்திரிகை தன் பத்தாண்டு நிறைவையொட்டி ஒரு இதழ் வெளியிட்டிருக்கிறது. அதில் P. Sainath என்பவர் எழுதியிருப்பதைப் படித்துப் பாருங்கள்.

அரசு முறையைப் பொருத்தவரையில் மேலெழுந்தவாரியான சில ஒற்றுமைகள் இருந்தாலும். அரசு இயந்திரங்களை நசுக்கும் இயந்திரங்களாக பார்ப்பவர்கள் -சதவீதப்படிப் பார்த்தாலும் - அமெரிக்காவை விட இந்தியாவில் மிகவும் அதிகம்.

* அமெரிக்கா இந்தியாவிடமிருந்து என்ன கற்றுக் கொள்ளலாம்? இந்திய முறையில் எவ்வித அமெரிக்க முறைகளைக் கொண்டு வந்தால் நன்மை பயக்கும்?

அமெரிக்கா இந்தியாவிடமிருந்து கற்று கொள்ள வேண்டியதையெல்லாம் இந்தியா அமெரிக்காவிற்கு அனுப்பிய இந்தியர்களிடமிருந்து கற்றுக் கொண்டிருக்கிறது அமெரிக்காவில் எனக்குப் பிடித்த அம்சம் அது பல அறிவூட்டும் சாதனங்களை மக்களுக்கு எளிதாகவும், பெரும்பாலும் இலவசமாகவும் அளித்துக் கொண்டிருப்பதுதான். மிகச்சிறு நகரங்களில் இருக்கும் அமெரிக்க நூல் நிலையங்கள் கூட பிரமிப்பு ஊட்டுபவை. மற்றொரு அம்சம் அதன் சாலைகளில் வாகனங்கள் அதிகம் இருந்தாலும், மூளை பிசகிய ஓட்டுனர்கள் அதிகம் இல்லாதது.  இன்னொரு அம்சம் இந்திய தேசீய வாசனையான மூத்திர வாசனையை பொது இடங்களில் நுகர முடியாதது. ஒரே ஒரு இடத்தில் - பாஸ்டனில் ஒரு பழைய புத்தகக் கடையின் அருகே -  அதை நுகர்ந்த போது தாய்நாட்டிற்கே திரும்பி விட்டது போல இருந்தது. அமெரிக்கா அதன் குழந்தைகளை அணைத்துக் கொள்வது பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும். அமெரிக்கக் குழந்தைகளில் பெரும்பாலானவர் தாங்கள் முக்கியமானவர்கள் என்று கருதிக் கொள்ள வாய்ப்பு நிறைய இருக்கிறது. இந்தியக் குழந்தைகளின் பெரும்பாலானவர் ஒடுக்கப்பட்டவர்களில் முதன்மையானவர். அடிப்படைக் கல்வி முறையும் ஆசிரியர் தேர்வும் இந்தியாவில் சீராகாத வரை இதில் எந்த மாற்றமும் இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை.

அரசியல்

* மார்க்சிஸம் இப்போது எவ்வாறு இருக்கிறது? முதலாளித்துவத்தில் இறந்து விட்டது என்கிறார்கள் சிலர். அது வேறு, இது வேறு என்கிறார்கள் சிலர். இந்தியாவுக்கு மார்க்சிஸமும் கம்யூனிஸமும் எவ்வளவு பொருத்தம்? க்யூபா, சைனாவில் இன்னும் கம்யூனிஸம் உயிரோடு இருக்கிறதா?

இந்தக் கேள்விக்குப் பதிலை நான் இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன். கிடைத்தால் உங்களிடம் பகிர்ந்து கொள்வேன். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். மனித குலம் என்றும் முன்னேற்றத்தின் பாதையில்தான் சென்று கொண்டிருக்கும். அதற்குத் தடையாக இருக்கும்  சக்திகளுக்கு எதிரான போரட்டங்களில் மனித குலத்திற்கு பின்னடைவு ஏற்படலாம். ஆனால் என்றுமே தோல்வி ஏற்படாது.

* மார்க்சிஸம் மற்றும் கம்யூனிஸம் குறித்து எளிய முறையில் அறிமுகம் செய்யும் புத்தகங்கள் எது? தமிழில் தற்கால சூழலுக்கு ஏற்ற மாதிரி புத்தகங்கள் இருக்கிறதா?

மூலவர்களைப் படியுங்கள். எனக்கு இப்போது நினைவிற்கு வருபவை இவை: Communist Manifesto படிப்பதற்கு விறுவிறுப்பான புத்தகம். ஏங்கெல்ஸின The origins of private property and State லெனினின் The State and Revolution மற்றும் What is to be done. ஸ்டாலினின் The problems of Leninism மற்றும் History of the CPSU (B). மாவோவின் On Practice. இந்தப் புத்தகங்களை ஐரோப்பிய, சீன வரலாறுகளைப் பற்றி ஓரளவு அறிந்து கொண்டு படித்தால் நல்லது.  நான் வெகுநாட்களுக்கு முன்னால் படித்த Maurice Cornforth எழுதிய Dialectic Materialism புத்தகம் எனக்கு மார்க்சீயக் கொள்கையைப் பற்றிய ஒரு அறிதலை கொடுத்தது என்று நினைக்கிறேன்.

தமிழில் நான் மார்க்சீயம் பற்றி அதிகம் படித்தது இல்லை.

என்னை மார்க்சீயத்தில் மெத்தப் படித்த மேதாவி என்று எண்ணி விட வேண்டாம். புலிநகக் கொன்றை நாயகர்களைப் போலவே நானும் நுனிப் புற்களில்தான் அதிகம் கவனம் செலுத்தியிருக்கிறேன்.

* ஜெயமோகனின் 'பின் தொடரும் நிழல்கள்' வாசித்திருக்கிறீர்களா? அதில் கம்யூனிஸ்ட் இயக்கம், கொள்கை தொடர்பான விமர்சனங்கள் குறித்த தங்கள் பார்வை என்ன?

ஜெயமோகன் தமிழகத்தின் சொத்து என்று கருதுகிறவன் நான். அவர் எழுதியவற்றில் எனக்குப் பிடிக்காத மிகச்சில படைப்புகளில் இந்த நாவலும் ஒன்று. எனக்கும் அவருக்கும் இந்த நாவலைப் பற்றி நடந்த (http://www.thinnai.com/arts/ar0317031.html) கடிதப் பரிமாற்றம் திண்ணயில் இடம் பெற்றிருக்கிறது என்று நினைக்கிறேன்.

* ஜனநாயக இந்தியாவில் கம்யூனிஸ்ட் சித்தாந்தத்துக்கும் இடம் கிடைக்கிறது. தமிழ் தேசியத்துக்கும் இடம் இருக்கிறது. மொழி, இனம் தொடர்புடைய கட்சிகளும் தழைக்கிறது. இது பலமா? இத்தகைய அமைப்புக்கு மாற்றம் தேவையா?

இது பலம். எந்த மாற்றமும் தேவையில்லை.

* ஈழ விடுதலையை விரும்புபவர்கள், பிரிவினைவாதிகள் என்ற விமர்சனம் எழுந்து வருகிறது. இன்னொரு பக்கம் அப்படி எழுதுகிறவர்கள் மேல்தட்டு மக்கள் என்னும் வட்டத்துக்குள் அடைக்கப்படுகிறார்கள். தங்களின் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?

நான் ஈழ விடுதலைப் போரைப் பற்றிப் பேச விரும்பவில்லை. பொதுவான இன்று உலகில் பல இடங்களில் நடக்கும் விடுதலைப் போர்களைப் பற்றிய என்னுடைய கருத்தைக் கூற விரும்புகிறேன்.

இன்றையச் சூழலில் தேசீய விடுதலைப் போராட்டம் என்பது மக்களுக்கு, குறிப்பாக உழைக்கும் மக்களுக்கு, தாங்கொண்ணா துயரத்தையே தருகிறது. இன்று அரசிடம் இருக்கும் ஒடுக்குமுறைச் சாதனங்கள் கணக்கிட முடியாதவை. இந்த சாதனங்களையே போராடுபவர்கள் தாங்கள் எதிர்க்கும் மக்கள் மீது உபயோகிக்கும் போது நடப்பது ஒடுக்குமுறையின் மற்றொரு பக்கம்தான். மனித குலம் ஒன்று என்று கூறிக் கொண்டு நம் மீது நேரடியாகத் தாக்குதல் நடத்தாத மக்களை அழித்தொழிப்பது எந்த வகையிலும் நியாயம் ஆகாது. உலக மக்களின் நியாய உணர்வு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பதாக நான் எண்ணுகிறேன். தொலைக் காட்சியும, இணையமும் ஆட்சி புரியும் இந்த நாட்களில் காந்திய வழி போராட்டங்களை நாம் மறு பரிசீலனை செய்ய வேண்டும். இத்தகைய போராட்டங்கள் உடனே தீர்வைக் கொடுக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் உலக மக்களை போராளிகள் பக்கம் நிச்சயமாக இழுக்கும் என்று நான் நம்புகிறேன். உலக மக்கள் ஆதரவே விடுதலையின் திறவுகோலாக அமையலாம் - விடுதலை கோருதலில் நியாயம் இருந்தால்.

இலக்கியம்

* தமிழில் இலக்கிய எழுத்துக்கள் குறித்த தங்கள் கருத்துக்களை அறிய முடியுமா? தமிழில் நாவல்களிலும் சிறுகதைகளிலும் அனைத்து தரப்பு அனுபவங்களைத் தரும் ஆக்கங்கள் கிடைக்கிறதா?

தமிழ்ச் சிறுகதைகளில் பல உலகத்து சிறந்த சிறுகதைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தக்கவை. அசோக மித்திரனின் 'புலிக்கலைஞன்' சு.ராவின் 'விகாசம்'  'மேற்பார்வை' ஜெயமோகனின் 'மாடன் மோட்சம்' போன்ற கதைகளைப் படித்து விட்டு நான் அடைந்த பரவசம் வார்த்தைகளால் விவரிக்க இயலாதது.தமிழ் நாவல் முயற்சி இன்னும் முழுமை பெறவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது. தமிழில் வந்த சிறந்த ஒரு நாவலின் மொழிபெயர்ப்பிற்கு நான் மதிப்புரை எழுதிய போது அது Raphaelன் Cartoonகளை ஒத்திருக்கின்றது என்று குறிப்பிட்டேன். லண்டன் விக்டோரியா ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் இருக்கும் இந்தப் படைப்புகள் மகத்தான படைப்புகள். ஆனால் முழுமை பெறாத படைப்புகள்.

* இன்றைய தமிழ் கவிதைப் போக்குகள் குறித்த உங்கள் பார்வை

இன்றையத் தமிழ்க் கவிதைகள் எனக்கு மகிழ்ச்சியளிப்பதாக இல்லை. மிகச்சிலரைத் தவிர அனேகமாக எல்லாக் கவிஞர்களும் தங்களது கெட்டிக்காரத்தனத்தை (சில சமயம் சோம்பேறித் தனத்தை) வெளிப்படுத்தும் சாதனமாகத்தான் கவிதையைப் பயன் படுத்துகிறார்கள்.

* தங்களுக்கு நம்பிக்கையளிக்கும் படைப்புகளை தமிழில் எழுதுபவர்களில் சிலரைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?

மூவரைப் பற்றி முன்பே குறிப்பிட்டு விட்டேன். எனக்கு இளைய தலைமுறை எழுத்தாளர்களில் , நான் படித்த அளவில், மகிழ்ச்சி அளிப்பவர்கள் கண்மணி குணசேகரன், யூமா வாசுகி, சல்மா, மனுஷ்ய புத்திரன், J. P. சாணக்கியா போன்றவர்கள்.

* பெண் எழுத்தாளர், தலித் எழுத்தாளர் என்ற அடையாளங்கள் எவ்வாறு தேவையாகிறது? தலித் எழுத்தை தலித்துகள் படிக்கிறார்களா? முற்போக்கு பெண் எழுத்தாளர்களுக்கு பரந்து பட்ட வாசிப்பு கிடைக்கிறதா? அடையாளங்கள் தடையாக இருக்குமா?

இந்த அடையாளங்கள் ஓரளவிற்குத் தேவைதான் என்றாலும் அடையாளங்களே ஒருவரைச் சிறந்த படைப்பாளி ஆக்கி விட முடியாது. முன்னால் சொன்ன மாதிரி படைப்பிற்கு இரண்டே அடையாளங்கள் - நல்ல படைப்பு, நன்றாக இல்லாத படைப்பு. தலித் எழுத்தை தலித்துகள் படிக்கிறார்களா இல்லையா என்பதை தலித்துகளிடம்தான் கேட்க வேண்டும். பரந்து பட்ட வாசிப்பு ஒரு சிறந்த படைப்பாளிக்கு தேவை என்று நான் கருதவில்லை. அது இருந்தால் ஒரு bonus. அவ்வளவுதான்.

* வட்டார வழக்குகள் சார்ந்த எழுத்துக்கள், தொடர்பு கொள்வதில் தடை ஏற்படுத்துகிறதே?

வட்டார வழக்குகள் ஓரளவுதான் வாசகனோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்று நான் எண்ணுகிறேன். நன்னாரி சர்ப்பத்தை தண்ணீர் கலக்காமல் அப்படியே குடிக்க முடியுமா?

* தமிழில் இலக்கியம் வளர்த்தால் சோறு போடாது; வெறும் அரட்டைக்குத்தான் சரி  என்று முந்தைய தலைமுறையில் இருந்தே சொல்லப்பட்டு வருகிறது. இன்றைய சூழ்நிலை எப்படி இருக்கிறது?

இப்போதும் பலருக்குச் சோறு போடாது. ஊறுகாய் வாங்க உதவலாம்.

* தமிழில் எழுதப்படுகிற பின்நவீனத்துவக் கதைகள் பற்றி...?

இத்தகைய சோதனைகள் ஒரு மொழியை வளமடைய வைக்கின்றன என்ற அளவில் பின் நவீனத்துவக் கதைகள் வரவேற்கத் தக்கவை. கதைகள் காலத்தைக் கடந்து நிற்காமல் போகலாம். ஆனால் அவை பயன்படுத்திய வடிவங்கள் சொற்கள் வாக்கிய அமைப்புகள் போன்றவை மொழியில் நின்று விடும்

* இணையத்தில் எழுதுபவர்களைப் படிக்கிறீர்களா? வலைப்பதிவுகளுக்கு அறிமுகம் உண்டா? வலையில் தமிழ் எப்படி இருக்கிறது? என்ன மாதிரியான இலக்கியச் சூழலுடன் இணையத்து இலக்கியத்தை ஒப்பிடலாம்?

இணையம் பெருக்கெடுத்து ஓடும் ஆறு போன்றது. உயிர் கொடுக்கும் தண்ணீரும் பன்றி விட்டையும் சேர்ந்து செல்வது . இணையத்தில் எழுதுபவர்களில் பெரும்பாலனவர்களைப் படிக்கிறேன். வலையில் தமிழ் ஓரளவு நன்றாகவே இருக்கிறது. சிலர் சிலம்பம் விளையாடுகிறார்கள். ஒதுங்கி இருந்தால் அடிபடமால் தப்பிக்கலாம். இப்போது உள்ள சூழல் தனித்தன்மை வாய்ந்தது.  எழுதுபவர்களுக்கு எல்லாம் it gives an exggerated sense of one's own importance.

இன்ன பிற

* தங்களின் அடுத்த முயற்சிகள் என்ன? தங்களுடைய அடுத்த படைப்பை குறித்து எங்களுக்காகக் கொஞ்சம் ஸ்னீக் ப்ரிவ்யூ கொடுக்க முடியுமா?

என்னுடைய அடுத்த நாவல் அஸ்ஸாம் பற்றியது. கடந்த ஐந்து ஆண்டுகளாக எழுதிக் கொண்டு வருகிறேன் என்று எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்கிறேன். பிஷப் கால்ட்வெல் அவர்களைப் பற்றி ஒரு புத்தகம் எழுத உத்தேசம். சங்கரர் ராமனுஜர் தத்துவங்களை எளிமையாக அறிமுகப் படுத்த  ஒரு புத்தகம் எழுதலாம். மேற்கத்திய ஓவியக் கலையைப் பற்றிய ஒரு வரலாறு தமிழில் எழுதலாம் என்றும் எண்ணிக் கொண்டிருக்கிறேன். எண்ணங்களுக்கும் செயற்பாடுகளுக்கும் எப்போதுமே இடைவெளி அதிகம். என்னைப் பொருத்தவரை சராசரியை விட அதிகம். அதுவே ஐம்பது வயதிற்கு மேல் எழுத வந்ததற்கு ஒரு முக்கியமான காரணம்.

மிக்க நன்றிகள்.

உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |