தமிழோவியம்
சிறுகதை : தாத்தாச்சாரியார் கோட்
- என். சொக்கன்

Man Puzzleஆங்கிலத்தில் 'டாவின்சி கோட்' என்று ஒரு நாவல் வந்து, அதிபிரபலமாக விற்றுத் தீர்ந்துகொண்டிருக்கிறதாமே. அதைப்பற்றி ஒரு சிநேகிதன் சொல்லி, கையோடு அந்தப் புத்தகத்தையும் கொடுத்தான். (நம்ம ஓசி புத்தி தெரிஞ்சதுதானே !)

சொன்னால் நம்பமாட்டீர்கள், ஒரு குட்டித் தலையணை சைஸிலிருந்த அந்த நாவலை, அன்று இரவே தூங்காமல், கொள்ளாமல் (?) படித்துமுடித்துவிட்டேன். அப்படி ஒரு விறுவிறுப்பு.

இத்தனைக்கும், அது ஒரு சாதாரண துப்பறியும் கதைதான். ஆனாலும், ஒரு கேக் விளம்பரத்தில் சொல்வதுபோல, நாவலுக்கு நடுவில் புதிரா, அல்லது புதிருக்கு நடுவில் நாவலா என்று வித்தியாசம் தெரியாதபடி அட்டகாசமாக அமைந்திருந்தது அந்தப் புத்தகம்.

இதைப்பற்றி, எங்கள் தெருக்கோடியில் எப்போதும் உட்கார்ந்த நிலையில் தவம் கொண்டிருக்கும் திண்ணை தாத்தாச்சாரியரிடம் பாராட்டிப் பேசிக்கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில், என்னுடைய புளகாங்கிதம் எல்லை மீறியதும், 'அப்படி என்னடா புக்கு அது ?', என்று ஓரு அதட்டல் போட்டார் அவர், 'நம்ம ஊர்ல இல்லாததா ? இங்க்லீஷ்காரன் எழுதினாமட்டும் ஆஹா ஓஹோ-ங்கறீங்க', என்றார் உபரியாக.

உடனே, எனக்குக் கோபம் வந்துவிட்டது. எந்நேரமும் திண்ணையில் கிடக்கிற தாத்தாச்சாரியாருக்கே இப்படியென்றால், ஆங்கிலத்தில் புஸ்தகம் படிக்கிற எனக்கு (என்னதான் அது ஓசிப் புஸ்தகமானாலும்) எத்தனை கோபம் வரவேண்டும்.

ஆனால், வேலைக்குப் போகாமலேயே ரிடையராகிவிட்ட தாத்தாச்சாரியாருக்கு, ஏகப்பட்ட சொத்து இருப்பதாகவும், அந்த ஓட்டு வீட்டுக்குள் ஏராளமான தங்க, வைர நகைகளைப் ஒளித்துவைத்து, புதையலை பூதம் காக்கிறமாதிரி அவர் காவல் காத்துக்கொண்டிருப்பதாகவும், அதனால்தான் அவர் அந்தத் திண்ணையிலிருந்து வேறு எங்கேயும் நகர்வதில்லை என்றும் எங்கள் ஊரில் பலவிதமான வதந்திகள் உலவிக்கொண்டிருந்தன. ஆகவே, அநாவசியமாக நான் அவரைப் பகைத்துக்கொள்ள விரும்பவில்லை.

ஆகவே, 'டாவின்சி கோட்' நாவலின் நுட்பமான விவரங்களை அவருக்குத் தெளிவாக எடுத்துச் சொல்லி விளக்கினேன், 'நாவல்ல ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குப் போறதுன்னாலே, அட்டகாசமாப் பாட்டு எழுதிதான் க்ளூ கொடுக்கறான் தாத்தா', என்றேன் முத்தாய்ப்பாக.

'என்னடா பெரிசா ?', என்றார் அவர், 'டாவின்சி கோட்-க்குமேலே, நான் ஒரு தாத்தாச்சாரியார் கோட் காட்டறேன். நாளைக்கு வா !', என்றார் அவர்.

நிஜமாகதான் சொல்கிறாரா, அல்லது சும்மா விளையாடுகிறாரா என்று எனக்குப் புரியவில்லை. என்றாலும், எனக்கும் இப்போதைக்கு வேறு பிழைப்பு எதுவும் இல்லை
மதிப்பீடு

"நான் அப்படி என்ன குண்டாயிட்டேன். தொப்பை கூட அவ்வளவு பெருசா இல்லை" என்று சப்பைக்கட்டு கட்டாதீர்கள்.

எப்படிப் பிரச்சனையைப் பற்றிப் பெரிசாகக் கற்பனை பண்ணிக்கொண்டு திகிலடைய கூடாதோ அதேபோல குறைவாக மதிப்பிடவுக் கூடாது.

என்பதால், மறுநாள் அவர் சொன்ன நேரத்துக்கு அவருடைய திண்ணைக்குப் போனேன், 'இந்தா', என்று ஒரு துண்டுச் சீட்டைக் கையில் கொடுத்தார்.

'என்ன தாத்தா இது ?'

அவர் அதற்கு பதில் சொல்லாமல், 'பிரிச்சுப் படிடான்னா', என்று அதட்டினார்.

ஒன்றும் புரியாமல் அந்தச்  சீட்டைப் பிரித்தேன், அதனுள் பாட்டுபோல் ஏதோ இருந்தது, ஒருமுறை படித்துப் பார்த்துவிட்டு, திருதிருவென்று விழித்தேன்.

'இதுதாண்டா தாத்தாச்சாரியார் கோட்', என்று தெலுங்கு டப்பிங் பட டைட்டில்போல் சொன்னார் அவர், 'இந்த புதிரை வெச்சு, அது என்ன-ன்னு கண்டுபிடி பார்க்கலாம்'

இப்போது எனக்கு லேசாக சுவாரஸ்யம் தட்டியது. மீண்டும் அந்தச் சீட்டைப் பிரித்துப் பார்த்தேன்.

சீர்மிகுஸ்ரீ ராமனைச் சேவித்தே என்னாளும் தேர்போல் அவரைத்தான் தாங்கிச் சுமந்திருந்தேன் அந்தத் தவப்பலனாய் அண்ணல்அவன் தம்பிஎனை
வந்து சுமந்தான் தொழுது.

சத்தியமாக ஒன்றும் புரியவில்லை, 'என்னது இது ?', என்றேன் பரிதாபமாக.

'நீதான் புதிர்ப் புலியாச்சே, கண்டுபிடி !', என்றார் தாத்தாச்சாரியார், தொடர்ந்து, 'எவனாச்சும் இங்க்லீஷ்காரன் எழுதினாமட்டும் அலறிண்டு பின்னாலே ஓடறீங்க, தமிழ்ல எழுதினா கசக்குதோ ?', என்றார் கிண்டலாக.

அவருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் மீண்டும் அந்தப் பாட்டைப் படித்துப் பார்த்தேன் நான். இப்போது ஏதோ புரிகிறாற்போலிருந்தது. ராமனைச் சுமந்தது எது ? அவன் தம்பி எதைச் சுமந்தான் என்று யோசித்தபோது, சம்பூர்ண ராமாயணத்தில், தலையில் பாதுகையை வைத்துக்கொண்டு பரதன் சிவாஜி விறுவிறுவென்று நடப்பது நினைவுக்கு வந்தது, 'செருப்பு' என்றேன்.

'சபாஷ்', என்ற தாத்தாச்சாரியார், 'அதோ இருக்கு செருப்பு', என்று சுட்டிக் காண்பித்தார், 'அதுக்குக் கீழே அடுத்த க்ளூ இருக்கு', என்றார் தொடர்ந்து.

நான் கிட்டத்தட்ட ஓடி, திண்ணையோரத்தில் இருந்த அந்தச் செருப்பைத் தூக்கிப் பார்த்தேன். அதற்கு அடியில், இன்னொரு துண்டுச் சீட்டு, அதில் இன்னொரு க்ளூப் பாட்டு.

நன்றிக்குச் சான்றாக நானிலத்தார் எல்லோரும்
என்னைக் குறிப்பிடுவர் ஏன்என்று அறியேன்நான்
வீட்டிற்குக் காவலென வாழ்ந்திருக்கும் சேவகன்என்
நோட்டம் படர்திசையைக் காண் !

வீட்டிற்குக் காவல் என்று படித்ததுமே, நாயைதான் சொல்கிறார் என்று புரிந்துவிட்டது. ஆனால், தாத்தாச்சாரியார் வீட்டில் நாய் எதுவும் இல்லை. அவர்தான் அவ்வப்போது எதிர்ப்படுகிற எல்லோர்மீதும் வள்ளென்று விழுவார். அதைவைத்து, அவரை நாய் என்று சொல்வது நியாயமாகாது. அதுமட்டுமின்றி, 'நோட்டம் படர் திசை' என்பதும் எனக்குப் புரியவில்லை.

தாத்தாச்சாரியாருக்கு என்னுடைய குழப்பம் தெரிந்திருக்கவேண்டும், மெல்லத் தனக்குள் சிரித்துக்கொண்டார். நான் அவரை முறைக்கலாமா என்று யோசித்தபோது, அவருடைய தலைக்குப் பின்னால் ஜன்னல்வழியே ஒரு அலமாரி தெரிந்தது, அதில் ஒரு நாய் பொம்மை.

ஆஹா பைரவா, என்று உள்ளே அலமாரியின் அருகே ஓடினேன், நாயின் பார்வை செல்லும் திசையில் பார்த்தபோது, அங்கே இன்னொரு துண்டுச்சீட்டு தொங்கிக்கொண்டிருந்தது. சட்டென்று பறித்துப் படித்தேன்.

உலகைஓர் கம்பிக்குள் உட்கார்த்தி வைத்து
பலதேசம் யாவையும் பொத்தானுள் கோர்த்துச்
சிலையாக்கிச் செய்திட்ட சின்னப் பொடியன்
தொலைவுகளைத் தீர்ப்பான் தகர்த்து.

இந்தப் பாட்டைப் படித்ததும், உலகை ஒரு இடத்தில் உட்காரவைப்பது, பல தேசங்களைப் பொத்தானில் பார்ப்பது என்றால், சட்டென்று தொலைக்காட்சி ரிமோட்தான் நினைவுக்கு வந்தது.

ஆனால், தாத்தாச்சாரியார் வீட்டில் தொலைக்காட்சி இல்லை. எந்நேரமும் கரகரவென்று ஒரே நிகழ்ச்சியை மறுஒலிபரப்பிக்கொண்டிருக்கிற வால்வ் ரேடியோ ஒன்றுதான் உண்டு. ஆனால், அதில் பொத்தான்கள் எதுவும் இல்லை.

தொலைக்காட்சி இல்லையென்றால், ஒருவேளை தொலைபேசியாக இருக்குமோ என்று ஒரு யோசனை தோன்றியது. சட்டென்று, கூடத்தின் ஒரு மூலையில் முக்காலி ஸ்டூலின்மீதிருந்த தொலைபேசிக்கு அருகே சென்றேன். அங்கே இன்னொரு துண்டுச்சீட்டு சிரித்துக் கண்சிமிட்டி, என் கணிப்பு சரிதான் என்று சொன்னது.

'பலே பலே', என்று வெற்றிலை எச்சிலை ஓரமாகத் துப்பியபடி பாராட்டினார் தாத்தாச்சாரியார், 'அரைக் கிணறு தாண்டிட்டே போ', என்று பெரிதாகச் சிரித்து, 'இனிமேதான் ஜாக்கிரதையா இருக்கணும். இல்லைன்னா, கிணத்துக்குள்ளே விழுந்துடுவே', என்றார் வில்லச் சிரிப்புட்டன்.

நான் அவருடைய கிண்டல் பேச்சைப்பற்றி கவலைப்படாமல், அந்தத் தொலைபேசியின் அருகிலிருந்த துண்டுச் சீட்டுப் பாடலில் கவனத்தைச் செலுத்தினேன்.

காலை எழுந்தவுடன் கண்விழிப்பார் என்முகத்தில்
நாளை அவர்க்கென்று நல்லபடி சொல்வேன்
எனதுஆயுள் ஓராண்டே என்றாலும் மீண்டும்
ஜனவரியில் மீள்ஜென்மம் எனக்கு.

நானெல்லாம் காலை எழுந்ததும் டைம்ஸ் ஆ·ப் இந்தியாவில்தான் கண்விழிப்பது. ஆனால், இந்தப் பாட்டை எழுதிய தாத்தாச்சாரியாருக்கு இந்த ரகசியம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகவே, அவர் தினமும் எப்படிக் கண்விழிப்பார் என்று ஊகித்தபோது, உடனடியாக, 'சாமிப் படங்கள்' என்றுதான் பதில் தோன்றியது.

ஆனால், பாடலை மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்தபோது, 'ஓர் ஆண்டு', 'ஜனவரி' ஆகிய வார்த்தைகள் சாமிப் படத்தோடு பொருந்தாமல் உறுத்தியது. ஆகவே, அது வெறும் சாமிப் படமாக இருக்காது, சாமிப் படம்போட்ட தினசரி காலண்டராகதான் இருக்கவேண்டும் என்று தோன்றியது.

உடனே, தாத்தாச்சாரியார் வீட்டுக் கூடத்தின் சுவர்களில் பதட்டமாகத் தேடியபோது, சரஸ்வதி படம் மாட்டிய அந்த நாள்காட்டி தென்பட்டது. அதில் இன்றைய தேதியைக் கிழித்துப் பார்த்தால், பின்பக்கம் ஐந்தாவது புதிர்ப் பாட்டு காத்திருந்தது.

மெழுகுபோல் நானும் மெதுவாய்க் கரைந்து
பழுதின்றி என்றும் பயன்தந்து தீர்வேன்,
அறிவியலின் சாதனைநான், அட்டகாசத் தூய்மை
பறித்துத் தருவேன் உமக்கு.

இந்தப் பாடலை இரண்டுமுறை படித்துப் பார்த்தும், எதுவும் புரியவில்லை. மெழுகுபோல் கரைவது என்றால், ஏதேனும் வேதிப்பொருளாகதான் இருக்கவேண்டும் என்று புரிந்தது. ஒருவேளை சென்ட் பாட்டிலாக இருக்குமோ ? சென்ற நூற்றாண்டு மனிதரான தாத்தாச்சாரியாரிடம் எப்போதும் ஒரு கெட்ட புகையிலை வாசம்தான் திராபையாக வீசும், சென்ட் வாசனைக்கு வாய்ப்பே கிடையாதே !

இப்படி யோசித்தபடி, தாத்தாச்சாரியாரின் சமையலறையினுள் எட்டிப்பார்த்தேன், லேசாக மோர் வீச்சமடித்த அந்த அறையில், மெழுகுபோல் கரைகிற எந்தப் பொருளும் தென்படவில்லை.

ஏதோ ஒரு முட்டுச்சந்தில் இடித்து நின்றுவிட்டாற்போலிருந்தது எனக்கு. அடுத்து என்ன என்று புரியவில்லை. தாத்தாவிடம் தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயக்கமாக இருந்தது. என்ன செய்யலாம் என்று தெரியாமல், வாசலுக்கு நடக்க முயன்றபோதுதான், புழக்கடைக் கிணற்றின் அருகே, தோய்க்கிற கல்லின்மீது ஒரு சோப்புக்கட்டியைப் பார்த்தேன்.

'அட்டகாசத் தூய்மை', என்கிற விளம்பர பாணி வரிகளுக்கு அப்போதுதான் எனக்கு அர்த்தம் புரிந்தது. 'அட, சோப்புதான் அது', என்று நினைத்தபடி அவசரமாக அங்கே ஓடினேன். அதற்குக் கீழே இன்னொரு துண்டுச் சீட்டு படபடத்தது.

கோதுமைத் தூளெடுத்துக் கொஞ்சூண்டு வெந்நீரில்
தோதாகத் தான்பிசைந்து தக்காளி போல்உருட்டி
சேதாரம் ஏதுமின்றிச் சப்பட்டை செய்துகல்லின்
மீதிட்டுச் சுட்டுக் கொறி

இதென்ன ? சமையல்குறிப்புபோல் இருக்கிறதே என்று நான் திகைத்தபோது தாத்தாச்சாரியார் ஆடி அசைந்து உள்ளே வந்தார், 'எல்லாம் கண்டுபிடிச்சாச்சா ?', என்றார் அதே அதட்டல்தொனியில்.

நான் அவருக்கு பதில் சொல்லாமல், அந்தப் பாட்டை சத்தமாக ஒருமுறை வாசித்தேன், கோதுமையை வெந்நீரில் பிசைந்து, உருட்டி, சப்பட்டையாகச் செய்து கல்லில் இட்டால் என்ன வரும் ? சப்பாத்தியா ?

'அதேதான்', என்று சிரித்தார் தாத்தாச்சாரியார், 'உனக்குப் பிடிக்குமே-ன்னு செஞ்சேன், எடுத்துண்டு வா, சாப்பிடலாம்', என்றார் எதுவுமே நடக்காததுபோல்.
ஆனால், எனக்குப் புதையல் கிடைத்த சந்தோஷம் ! தாத்தச்சாரியார் ஒளித்துவைத்திருப்பதாக நம்பப்படும் அந்தத் தங்கமும், வைரமும் கிடைத்திருந்தால்கூட, நான் அந்த அளவு சந்தோஷப்பட்டிருக்கமாட்டேன் !

அன்றைய சப்பாத்தி, வழக்கத்தைவிடக் கூடுதலாக ருசித்தது. காரணம், என்னை வியர்க்க, விறுவிறுக்க ஓடவைத்த, தாத்தாச்சாரியார் கோட் !

Copyright © 2005 Tamiloviam.com - Authors