தமிழோவியம்
கவிதை : காலக்கைத்துணை
- பிச்சினிக்காடு இளங்கோ

எனக்கும் உனக்கும்
இதயம் துடிக்கிறது
என்பது மட்டுமே ஒற்றுமை

மற்றபடி
என்னைப்போல் நீ
சொற்களால் ஆவியாவதில்லை

என்னைப்போல் நீ
முகம்மாற்றி வாழ்வதில்லை

என்னைப்போல் நீ
வார்த்தைகளுக்கு
வண்ணம் சேர்ப்பதில்லை

என்னைப்போல் நீ
இரவுபகலுக்கு ஏற்றார்போல்
ஆடை அணிவதில்லை

உன்
மெளனத்தின் சத்தம்
எங்கள்
எந்தச் சத்தத்திலுமில்லை

நீ
எங்கள் கையில்
காலத்தை வழங்குகிறாய்
நாங்கள் எதையும்
காலத்தில் வழங்குவதில்லை

எல்லா நேரத்திலும்
நீ
நீயாக இருக்கிறாய்

நீ
எப்படி இருந்தாலும்
எங்கே இருந்தாலும்
நேரமாய் இருக்கிறாய்

காலத்தைச் சொல்லவும்
காலத்தைவெல்லவும்
காலத்தோடுவாழவும்
எங்கள்
கைபிடித்து வருகிறாய்

எங்களால்
காலத்தை வெல்லவும்
காலத்தோடு வாழவும்
முடிகிறதோ இல்லையோ
எங்களால்
காலமாக முடியும்

காலப் படிமம் நீ
கால வாகனம் நீ
கால விளம்பரம் நீ
காலத்தூதுவன் நீ
காலக்கைத்துணையே
கணமும் உன்னைக்
கையெடுத்துப் பார்ப்போம்
உருதி.

Copyright © 2005 Tamiloviam.com - Authors