If God exists, it is His problem. கடவுள் இருக்கிறார் என்றால் அது அவருடைய பிரச்சினை! இப்படி ஒரு விஷயத்தை ஆங்கிலப் புத்தகமொன்றில் படித்திருக்கிறேன். இருத்தலியல் வாதத்துக்கு எதிரான அல்லது ஆதரவான கிண்டல்தொனிக் குரலாக. படித்தவுடன் ஒரு புன்னகையை அது வரவழைப்பது சர்வ நிச்சயம்.
"அலகிலாவிளையாட்டு" என்ற பா.ராகவனின் நாவலைப் படித்தவுடன் எனக்கு அதுதான் நினைவுக்கு உடனே வந்தது. நாவல் எடுத்துக்கொண்ட களம் அப்படி. தத்துவம். அதுவும் இந்தியா என்றால் அதுதான் என்று சொல்லுமளவுக்கு வேரூன்றி இருக்கின்ற, இந்தியச் சிந்தனையென்றால் அதுதான் என்று சொல்லக்கூடிய அளவுக்கு நம்மோடு ஆழமாகக் கலந்துவிட்ட தத்துவம். இறைவனையும் ஆன்மா போன்றவற்றையும் பற்றிய, காலம்காலமாகப் போற்றிப்பாதுகாத்து வைத்திருக்கின்ற இந்தியச் சிந்தனையின் சாரம். இப்படி ஒரு விஷயத்தை ஒரு நாவலுக்கு கருவாக, களமாக எடுத்துக்கொள்வதற்கு ஒரு அசாத்திய துணிச்சல் வேண்டும் முதலில்.
இமயமலைச் சாரலில் தொடங்குகிறது கதை. சரியாகச் சொன்னால் அதன் குளிரில். இமயமலை ஏரியாவை என்னைப் போன்றவர்கள் சினிமாவில்தான் பார்த்திருப்பார்கள். ஆனால் அங்கு நிலவும் குளிரை வார்த்தைகளிலேயே உணர விரும்புபவர்கள் இந்த நாவலைப் படிக்கலாம். அவ்வளவு அற்புதமான ஆரம்பம்.
"சுவர்கள், மேசை, நாற்காலி, கட்டில், துணிகள் யாவும் பனியால் செய்யப்பட்டவை போலாயின..."
ஒரு விஷயம் -- குளிர் -- அதனுடைய முழுவீச்சிலும் சொல்லப்படுகிறது. குளிரில் அவதிப்படும் கதாநாயகன் செய்தித்தாளில் செய்தி படிக்காமல் அன்றைய வெப்ப நிலையைப் பார்த்து, "முந்தைய இரவில் தான் அனுபவித்த குளிரின் வீரியத்தை அச்சில் கண்டு" வியக்கிறான்!
"குளிரின் சரியான எதிரிடை மிளகாய்ச் சட்னிதான். நாக்கில் உறைக்கிற காரம் குளிருக்குச் சவால் விடுகிறது" என்பதாக அவனுக்குத் தோன்றுகிறது!
"இயற்கையின் ஒரு குறிப்பிட்ட குணம் மொத்தமாகவும் சில்லறையாகவும் இந்த ஒரு இடத்தில் குவிந்துவிட்டதாக வந்த விநாடியிலிருந்து" அவன் புரிந்துகொள்கிறான்!
அவன் சொல்கிறான் : "என் புத்தியில் குளிர் நிறைந்துவிட்டது."
இதெல்லாம் குளிர் பற்றிய வெறும் வர்ணனையாக நின்றுவிடாமல் நாவலின் கருவுக்கு பலம் சேர்க்கும் விதத்தில் ஒரு தத்துவார்த்த பரிமாணத்தை ராகவனின் பேனா கொடுத்துவிடுகிறது :
"எனக்கு எதுவும் வசப்படவேண்டாம். எல்லாவற்றின் வசத்திலும் நான் என்னை அளித்துவிடப்போகிறேன். குளிர் என்னைச் சாப்பிடட்டும். ஜுரம் வந்து கொஞ்சம் சாப்பிடட்டும். ஏற்கனவே வயது பாதி தின்றுவிட்டது. மிச்சமிருப்பது அதிகமில்லை. நான் ரொட்டி சாப்பிடுகிறேன். ரொட்டி என்னைச் சாப்பிடட்டும். நான் குளிரைச் சாப்பிடுகிறேன். குளிர் என்னைச் சாப்பிடட்டும். சாப்பிடுவது முக்கியம். உடலுக்கும் மனத்துக்கும். மனம் எதைச் சாப்பிடும்? அனுபவங்களை அது சாப்பிடும். அனுபவத்தை இப்போது குளிர் சாப்பிட்டுவிட்டது. ஆகவே குளிரைத்தான் மனமும் சாப்பிடவேண்டும்."
"குளிரெனும் பூதம் கோலோச்சும் நேரம். தொலைவில் எங்கோ கைலாயம் இருக்கிறது. பரமசிவன் ஸ்வெட்டர் போட்டுக்கொண்டா படுத்திருப்பார்? வாய்ப்பே இல்லை. பரமசிவனுக்குக் குளிராது என்றால் எனக்குமல்லவா குளிரக்கூடாது? அவர் வேறு நான் வேறா என்ன? அப்புறம் அத்வைதம் என்னத்துக்கு?"
இந்த பின்னணியிலிருந்து கதாநாயகன் வாழ்வின் எத்தகைய கட்டங்களில் எத்தனைவிதமாக சூடுபட்டுக்கொண்டு அந்த குளிரைத்தேடி வந்தான் என்று விரிகிறது கதை. அவன் குருகுலத்தில் வேதம் படித்தது, குருவின் வாழ்வில் நிகழும் துயரங்களின் அடுக்குகளினால் கற்றுக்கொண்ட வேதங்களின்மீது விரக்தியும் சந்தேகமும் தோன்றுவது, போஸ்ட் மாஸ்ட்டராக வேலை பார்ப்பது, குருவின் மகள் பூரணியின்மீது ஆசைப்படுவது, அவள் மறுப்பது, அவன் குடும்பத்தைவிட்டு விலகுவது, ஒரு கல்லூரி நூலகத்தில் பணி புரிவது, புத்தமடத்தில் தங்குவது, கடைசியாக இமயமலைச் சாரலுக்கு வருவது, அங்கு மறுபடி பூரணியைச் சந்திப்பது, அவள் மூலமாக அவனுடைய தேடலுக்கு ஒரு விடையும் தெளிவும் கிடைப்பது என்று நகர்கிற கதையில் எங்குமே அலுப்புத் தட்டவேயில்லை. எழுத்து அப்படி. நகைச்சுவை ரொம்ப நுட்பமாக தன் பணியைச் செய்கிறது.
குளிரில் இரவில் தூங்கமுடியாமல் போகும்போது ஒருவர் ஒரு ஐடியா சொல்கிறார். அதாவது பகலில் தூங்கிவிட்டு, இரவில் விழிக்கலாம் என்று. அதைத்தொடர்ந்து நாயகனின் சிந்தனை இப்படிச் செல்கிறது :
"உறக்கத்தை ஒழித்தவனுக்கு உலகம் வசப்படும் என்று எல்லா தத்துவங்களும் சொல்லிக்கொடுக்கின்றன. உறக்கத்தைக் காலம் மாற்றி உபயோகித்தால் என்ன வசப்படும்? உறக்கம் மட்டுமே வசப்படக்கூடும். காலம் அப்படியேதான் இருக்கும். கால்மாட்டில் தலைவைத்துப் படுப்பதன்மூலம் அறையைப் புரட்டிப்போட்டதாக நினைத்துக்கொள்வது மாதிரி. நல்ல தமாஷ்தான்."
நகைச்சுவை வெறும் நகைச்சுவையாக நின்றுவிடாமல், நாயகனின் பாத்திரமே ஒரு தத்துவப்பூர்வமான சிந்தனை வயப்பட்டது என்பதை வலுப்படுத்தும் விதமாக ஒவ்வொரு கட்டத்திலும் அவனுடைய பேச்சும், சிந்தனையும், கிண்டலும் அமைவதாக இருப்பதே இந்த நாவலின் வெற்றியை உத்தரவாதப்படுத்திவிடுகிறது என்று சொல்லத்தோன்றுகிறது :
"நூலறுந்த காற்றாடிக்கு பூமியைவிட ஆகாசம்தான் இஷ்டம். ஆகாசம் கூட இல்லை. நிமிர்ந்து பார்க்காதவரை ஆகாசம் ஏது?" தத்துவமும் கவிதையும் இணைந்து இழையும் இதைப்போன்ற வாக்கியங்கள் நாவலை மென்மேலும் அழகுபடுத்துகின்றன.
"என் ஆன்மா! சட்டென்று எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. ஹிந்துதர்மம் ஒப்புக்கொண்டிருக்கிற ஒரே கம்யூனிசச் சிந்தனை அதுதான். ஒரு ஆன்மாதான். ஆனால் உன்னுடையது இல்லை அது. யாருடையதும் இல்லை. எல்லாருடையதும். அல்லது எல்லாருடையதும் இல்லை. எல்லாருக்கும் பொதுவான ஒரு புறம்போக்குச் சொத்து. கண்ணுக்குத் தென்படாத ஓர் அபூர்வ அப்பம். உனக்கு ஒரு கிள்ளு. அவனுக்கொரு கிள்ளு. எத்தனை கிள்ளினாலும் குறைப்படாத ஆன்ம அப்பம். இயேசுநாதர் கூட அந்த அப்பத்தைத்தான் கிள்ளிக்கொடுத்தாரோ என்னவோ."
ஆன்மா பற்றி நாயகன் சொல்லும் இந்த வார்த்தைகள் சர்ச்சையை ஏற்படுத்தும் அளவுக்கு புரட்சிகரமானவை எனலாம். ஆனால் அதில் உள்ள இலக்கிய உண்மையை இலக்கியம் அறிந்தவர் நிச்சயம் புரிந்துகொள்வர். எப்படி எல்லாவற்றையும் ஒன்றாக்கும் அல்லது இல்லாமலாக்கும் பெர்முடாச் சுழியாக உயர்ந்த இலக்கியம் உள்ளது என்பதற்கு இதுபோன்ற பகுதிகள் உதாரணம்.
"திகட்டத் திகட்ட சந்தோஷங்கள். திகட்டத்திகட்ட துக்கங்கள். இனிப்புக்குச் சமமாகக் கசப்பு. அன்புக்குச் சமமாக துரோகம். கனிவுக்குச் சமமாகக் குரூரம்."
இப்படிப்பட்ட வாக்கியங்களை எப்படி இவரால் கற்பனை செய்ய முடிகிறது? எனக்கு லாசரா ஞாபகம் வந்தது.
இந்த நாவல் அவ்வப்போது சில கேள்விகளை எழுப்புகிறது? அவ்வப்போது என்று சொல்வதைவிட, நாம் இதுகாறும் போற்றிப்பாதுகாத்து வைத்திருக்கின்ற மதிப்பீடுகளையெல்லாம் கேள்விக்கு உள்ளாக்குகிறது என்றே சொல்லலாம். அதன் அர்த்த தளங்களை மாற்ற வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது என்று சொல்லலாம். அவ்வப்போது உபகேள்விகளைப் போல சில வருகின்றன. ஆனால் அவைகளும் உப கேள்விகளல்ல :
"வேதம் உயர்ந்த படிப்பு என்றால் வக்கற்றவர்கள் மட்டுமே ஏன் படிக்க வருவானேன்?"
இந்தக்கேள்விதான் எவ்வளவு நேர்மையானது? எல்லா மதங்களிலுமே பிரச்சனை இப்படிப்பட்டதாகத்தான் உள்ளது. வேலூரிலும் தேவ்பந்திலும் மார்க்கம் பயிலச் செல்லும் முஸ்லிம் பிள்ளைகள் பெரும்பாலும் யாராக இருக்கிறார்கள்? வீட்டில் படிப்பு வராத பிள்ளைகள். வீட்டுக்கு அடங்காமல் `ரவுடி`த்தனம் கொண்ட பிள்ளைகள். உருப்படமாட்டான் என்று பெற்றோர்களின் மனங்களால் சான்றிதழ் வழங்கப்பட்டவர்கள். அவர்களைத்தானே இத்தகைய பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள்?! அங்கே படித்து பட்டம் பெற்று வரும் `ஆலிம்`கள் எனும் மார்க்க அறிஞர்கள் எத்தகையோர்களாக இருப்பார்கள்? இந்த சமுதாயத்தையே பெற்றோராக எண்ணி பழிதீர்த்துக் கொள்பவர்களாகத்தானே?! அதுதானே நடக்கிறது? நன்றாக படிக்கும் `அறிவான` பிள்ளைகளை டாக்டராகவும், வக்கீலாகவும் ஆக்க விரும்பும் சமுதாயம், உருப்படாதவர்கள் என்று கருதுபவர்களை மட்டும் `வேதம் பயில` அனுப்புவது ஏன்?
"எத்தனை நாளுக்கு முன்னேநடந்து ஒரு மனிதர் மேய்த்துக்கொண்டே போகமுடியும்? ஆடுகளுக்கு என்றைக்குத்தான் சுயமாகப் பாதை புரியும்?"
நாவலில் ஒரு இடத்தில் வரும் இந்தக்கேள்வி எந்த ஆடுகளுக்கு என்பதை அசைபோடுவது நல்லது.
குலாம் அலியின் ஒரு கஜலை ஒருமுறை வாக்மேனில் போட்டு என் அண்ணன் ஜஷபருல்லா நானாவிடம் கொடுத்தேன். அவருக்கு உர்து தெரியாது. (எனக்கும்தான்) ஆனால் பாட்டைக் கேட்டுக் கொண்டிருக்கும்போது ஒரு இடத்தில் அவர் கண்கள் பொலபொலவென (அரதப்பழசான படிமத்தை மன்னிக்கவும்) கொட்டிவிட்டது. சில இடங்களில் நாவலில் வரும் வாக்கியங்களைப் படிக்கும்போது அப்படிப்பட்ட அனுபவம்தான் எனக்கு. ஓடிச்சென்று ராகவனைக் கட்டிக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. "துக்கத்தின் மாற்றுப்பாதை மௌனம் என்றால் நான் மௌனத்தின் பூதாகார இருளில் என்னை தினந்தோறும் கரைத்துக் கொள்ளத் தொடங்கினேன்" என்பது அப்படிப்பட்ட ஒரு வாக்கியம்.
உரையாடல்கள் அதிகமில்லாமல், மூன்றாம் நிலையிலிருந்து சொல்லிச் செல்கின்ற உத்தியையே - narration - நாவல் அதிகம் பின்பற்றுகிறது. இந்த நடையில் தத்துவார்த்த தளத்தில் இயங்கும் ஒரு நாவலை தோல்விக்கு அழைத்துச் செல்லும் அபாயம் உண்டு. ஆனால் அதிலேயே ஒரு நாவல் வெற்றிகரமாக எழுதப்பட முடியும் என்பதற்கு "அலகிலா விளையாட்டு" ஒரு அருமையான உதாரணமாக அமைந்துவிட்டது. ராகவனுக்குத்தான் என்ன துணிச்சல், என்ன அழுத்தம்!
"இரண்டு விஷயங்கள் மனிதனை நெருங்கப் பார்க்கின்றன. ஒன்று, மேலானது. இன்னொன்று சுகமானது. உனக்கு மேலானது வேண்டுமா? சுகமானது வேண்டுமா? இதுதான் கேள்வி. இதுதான் சவால். இதுதான் வாழ்க்கை நம்முடன் விளையாடுகிற கபடியின் ஆதார இலக்கணம்."
இதுவும் நாவலில் இருந்து மேற்கோள்தான். "அலகிலா விளையாட்டு" ஒரே நேரத்தில் மேலானதாகவும் சுகமானதாகவும் இருக்கிறது! |