கால்வினோ கதைகள். இடாலோ கால்வினோ. தமிழில் பிரம்மராஜன். யுனைடட் ரைட்டர்ஸ் வெளியீடு. முதல் பதிப்பு டிசம்பர் 2003. பக்கங்கள் 224. விலை ரூ. 80/-
இத்தாலிய எழுத்தாளரான கால்வினோவின் 18 சிறுகதைகளும் ஒரு கட்டுரையும் அடங்கிய தொகுப்பு. கால்வினோவின் வாழ்க்கை, அவரது இலக்கியக் கோட்பாடுகள், அவரது நாவல்கள் பற்றிய குறிப்பு, அவரது எழுத்தை எப்படியெல்லாம் வகைப்படுத்தலாம் போன்ற விஷயங்களை விளக்கி 27 பக்க முன்னுரையும், நூல் இறுதியில் ஒரு குறிப்பும் பிரம்மராஜன் கொடுத்துள்ளார்.
ஒரு தம் கட்டி ஒரே மூச்சில் கஷ்டப்பட்டு நூலைப் படித்து முடித்துவிட்டேன். வாசிப்பு அனுபவத்தின் விளைவாக சில கேள்விகள் மட்டுமே எஞ்சி நிற்கின்றன. அவைகள் கதைகள் சார்ந்த கேள்விகள் அல்ல. மொழிபெயர்ப்பாளரின் இடைவிடாத, தொடர்ந்த, பிரமிப்பூட்டுகின்ற உழைப்பின், முயற்சிகளின் விளைவு பற்றிய கேள்விகள்.
முதலில் பிரம்மராஜனின் முன்னுரையிலிருந்து தொடங்கலாம்.
"இடாலோ கால்வினோவும் நவீன புனைகதையும்" என்று தலைப்பிடப்பட்ட அந்த முன்னுரை இப்படித் தொடங்குகிறது :
"ஜியோவனி வெர்கா(Giovanni Verga), எலியோ விட்டோரினி (Elio Vottoroni), மற்றும் சேசரே பவேஸே (Cesare Pavase) ஆகிய மூன்று இதாலிய புனைகதை ஆசிரியர்கள் இணையும் சங்கமத்திலிருந்தே போருக்குப் பிற்பட்ட நவீன இதாலிய இலக்கியம் உருவாகிறதென குறிப்பிட்டார் இடாலோ கால்வினோ" (பக்கம் V).
இதுதான் நூலின் தொடக்க வாக்கியம்! கால்வினோ என்ற இத்தாலிய பிரகஸ்பதி பற்றி ஒன்றுமே அறியாத எனக்கு, என் போன்றவர்களுக்கு, இந்த முதல் வாக்கியம் என்ன சொல்கிறது?
கால்வினோ பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், நவீன இத்தாலிய இலக்கியம் பற்றியும், கால்வினோ குறிப்பிடும் வாயில் நுழையாத பெயர்களைக் கொண்ட அந்த மூன்று நபர்களைப் பற்றியும், அவர்கள் எங்கே, எப்படி இணைகிறார்கள் என்பது பற்றியும், அந்த சங்கமத்திற்குப் பிறகு உருவாகும் போருக்குப் பிற்பட்ட -- அது என்ன எழவு போர்? முதல் உலகப்போரா? இரண்டாம் உலகப்போரா? அல்லது இத்தாலிய லோகல் சண்டையா? -- நவீன இத்தாலிய இலக்கியம் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும் என்ற குறிப்புடன் என்னை பயமுறுத்துகிறது! கால்வினோ பற்றி தெரிந்து கொள்ளப் புகுமுன் நான் இவ்வளவு முன் தயாரிப்புகளைச் செய்து கொள்ள வேண்டும்!
இந்த பயமுறுத்தலை உதாசீனப்படுத்திவிட்டு உள்ளே சென்றால் கால்வினோ பற்றி மொழிபெயர்ப்பாளர் தரும் சில தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. பத்திரிக்கைத்துறை, பதிப்புத்துறை ஆகியவற்றில் கால்வினோ இருந்தார் என்றும், யாதார்த்தக் கதைகளில் ஆரம்பித்து, நாட்டுப்புறக்கதைகள், விஞ்ஞானப் புனைகதைகள், தொல் கதைகள் -- இது என்ன வகைக் கதைகள் என்று விளங்கவில்லை -- நாவல்கள் என்று பயணித்து கடைசியில் பின் நவீனத்துவத்தில் போய் முடிந்தார் என்றும், பிரைமோ லெவி என்ற இன்னொரு சமகால இத்தாலிய எழுத்தாளரோடு இணைத்துப் பார்க்கப்படக்கூடியவர் என்றும், வலுக்கட்டாயமாக இளம் ·பாசிஸ்டுகள் இயக்கத்திலும், பின் கம்யூனிசத்திலும், பின் போர் எதிர்ப்பாளராகவும் இருந்துள்ளார் என்றும் தெரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால் கால்வினோவுடன் சம்மந்தப்படாத பல தகவல்கள் முன்னுரைக் கட்டுரையில் உள்ளன. உதாரணமாக ஒரு பாரா :
"லூயி கரோலுக்குப் பிறகுதான் இலக்கியத்திற்கும் தத்துவத்திற்குமிடையே ஒரு புதிய உறவு உண்டாயிற்று...ரேமண்ட் க்வேனூ, ஜோர்ஜ் லூயி போர்ஹே, ஆர்னோ ஷ்மிட், ஆகிய மூவரும் வெவ்வேறு தத்துவங்களில் வேறுபட்ட உறவுகள் கொண்டு இவற்றைத் தமது பன்மையும் வேறுபாடும் மிகுந்த மொழியியல் உலகங்களுக்கு ஊட்டமளிப்பதற்குப் பயன்படுத்திக் கொண்டார்கள். இந்தக் குடும்பத்தின் எல்லையோரத்தில் நவீனத்துவ ஐரிஷ் நாவலாசிரியரான சாமுவேல் பெக்கட் மற்றும் இத்தாலிய நவீனத்துவ புனைகதையாளர் Carlo Emlio Gadda ஆகிய இருவரையும் பார்க்க முடிகிறது. எமிலியோ கட்டா இத்தாலியின் ஜேம்ஸ் ஜாய்ஸ் என்று கருதப்படுபவர்"(பக்கம் VIII).
பல இடங்களில் சொல்லப்படும் கருத்து கால்வினோவுடையதா அல்லது மொழிபெயர்ப்பாளருடையதா என்று புரிந்து கொள்ள முடியவில்லை. உதாரணமாக, "இத்துடன் நூலகம் குறித்து வேறு ஒரு முக்கிய கருத்தை கால்வினோ முன்வைக்கிறார். சர்ழ்ற்ட்ழ்ர்ல் எழ்ஹ்ங் -- என்ன எழவு இது ? இதையும் ஆங்கிலத்திலேயே போட்டுத் தொலைத்திருக்கக் கூடாதா? -- என்ற அமெரிக்க விமர்சகர் Anatomy of Criticism என்ற நூலின் "என்சைக்குளோபீடிய வடிவங்கள்" என்ற அத்தியாயத்தில் பைபிளை ஒரு நூல் என்று கூறுவதற்கு பதிலாக 'நூலகம்' என்று குறிப்பிடுகிறார்" (பக்கம் VIII).
இப்படியாக கால்வினோ பற்றிச் சொல்லிச் செல்லும் முன்னுரைக் கட்டுரையானது, "திடீரென கால்வினோ மூளையில் ஏற்பட்ட ஸ்ட்ரோக் காரணமாக காலமானார்" என்ற நல்ல செய்தியையும் தருகிறது (பக்கம் XXIV).
இனி கதைகள்
தொகுப்பின் முதல் கதை "நிலவின் தொலைவு". இதுவரை எதிலும் வராததாம். Cosmocomics என்ற வகையைச் சேர்ந்ததாம். ஏணி போட்டு நிலவில் ஏறி, அதில் மீனின் செதில் போன்ற பகுதியிலிருந்து பால் கறக்கும் மனிதர்களைப் பற்றிய கதை. ஒருவரியில் சொல்லும்போது, அட இப்படி ஒரு கதையா என்று ஏற்படும் சுவாரஸ்யம், கதையின் 20 பக்கங்களையும் படிக்கும்போது அழிந்துவிடுகிறது.
"பெட்ரோல் நிலையம்" என்றொரு கதை. தன் காரின் எரிபொருள் தீர்ந்து போன ஒருவன் ஒரு பெட்ரோல் நிலையத்துக்கு வருகிறான். அவன் பெட்ரோல் போடுகிறானா, எவ்வளவு போடுகிறான், எப்படி, என்பதெல்லாம் புரிந்துகொள்ள முடியாதபடி உள்ளது தமிழாக்கம். ஒரு பெண் காரில் வருகிறாள். அவளுக்காக அவன் பெட்ரோல் போடுகிறான். அவளை மோகிக்கிறான். ஏதேதோ கற்பனை செய்கிறான். கதை முடிகிறது.
"மனித இனம் தன்னுடையதென சொந்தம் கொண்டாடிக்கொள்ளக் கூடிய வெப்பத்தின் கடைசி வெடித்தலில் அவளை நான் இணைக்க விரும்புகிறேன்" என்று அவன் கூறுகிறான்.
வார்த்தைகளைப் பிடித்துக்கொண்டு தொங்குவது, வார்த்தைகளில் வாழ்வது, வார்த்தைகளின் போதையில் மயங்கிக் கிடப்பது என்பது இதுதானோ! இந்த மயக்கம் இத்தொகுதி முழுவதும் காணக் கிடைக்கிறது. இது கால்வினோவின் மயக்கமா அல்லது மொழிபெயர்ப்பாளரதா என்று தெரியவில்லை.
இத்தொகுதியில், மொழிபெயர்ப்பின் பயங்கரத்தையும் மீறி, ஓரிரு கதைகள் நல்ல எண்ணத்தை ஏற்படுத்தவல்லதாக உள்ளன. "வாத்துக்களின் பறத்தலைப் போல" என்று ஒரு கதை. தலையில் அடிபட்ட ஒரு கைதியின் உடல் உபாதைகளை, அவனுடைய மன நிலையை நன்றாகவே சொல்லுகிறது கதை.
"செய்ய வைத்தல்" என்று ஒரு ஒன்றரை பக்க குட்டிக் கதை. தள்ளு பூளை என்ற விளையாட்டைத் தவிர எல்லாமே தடை செய்யப்பட்ட ஒரு நகரத்தில், மறுபடியும் எல்லா சுதந்திரமும் கொடுக்கப்பட்ட போதும் மக்கள் அந்த விளையாட்டை மட்டுமே விளையாடுகின்றனர். மனித மனம் சார்ந்த ஒரு நல்ல விமர்சனமாக இந்த கதை படுகிறது. அதோடு, கால்வினோவுக்கு கொஞ்சம் நகைச்சுவை உணர்வும் இருந்திருக்கிறது என்றும் புரிந்துகொள்ள முடிகிறது.
"மனசாட்சி" என்று ஒரு குட்டிக் கதை. குறிப்பிட்ட ஒரு விரோதியைக் கொல்வதற்காக போரில் ஈடுபடுகிறான் ஒருவன். போர் முடியும் வரை அந்த விரோதி அகப்படுவதில்லை. போர் முடிந்து அமைதிக் காலத்தில் அகப்படும் அவனைக் கொல்கிறான். தனிப்பட்ட விரோதம்தான் எல்லா சண்டைகளுக்கும் காரணம் என்ற உட்குறிப்பான விமர்சனமாக கதை அமைந்துள்ளது.
கதைகள் முடிந்ததும், ஏன் கிளாசிக்குகளைப் படிக்க வேண்டும் என்ற கால்வினோவின் கட்டுரை ஒன்று வருகிறது. கட்டுரையின் கேள்விக்கு கால்வினோ நீண்ட பதில் சொல்கிறார். கதைகளைவிட இந்த கட்டுரை பரவாயில்லை. இதன் பின், கட்டுரையில் குறிப்பிடப்படும் எழுத்தாளர்களைப் பற்றிய விபரமான குறிப்பு தரப்படுகிறது. கடைசியாக மொழிபெயர்ப்பாளர் குறிப்பு.
பிரம்மராஜனின் தமிழாக்கம்
தமிழில் இன்றுள்ள முக்கியமான கவிஞர்களில் பிரம்மராஜன் ஒருவர். மொழியின் சாத்தியக்கூறுகளையும் எல்லைகளையும் விரிவு படுத்தும் வகையில் தொடர்ந்து தமிழில் பரிசோதனைக் கவிதைகள் எழுதி வருபவர். அவருடைய கவிதைகளுக்குள் நுழைவதற்கான சாவிகளை வைக்காமலே எழுதுபவர் என்ற ஒரு பொதுவான குற்றச்சாட்டு இருக்கிறது. ஆனால் சாவிகள் இல்லாமலே எப்படி அவர் கவிதைகளுக்குள் போகமுடியும், அதாவது கவிதைகளே எப்படி சாவிகளாக மாறுகின்றன என்று காட்டும் வகையில் நான் இதுவரை மூன்று கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். பிரம்மராஜனின் கவிதைகளில் நம்பிக்கையும் மதிப்பும் வைத்திருக்கிறேன்.
ஊடுறவ முடியாத ஒரு கடினத் தன்மை போன்ற தோற்றம் கவிதையின் மொழியில் நியாயப்படுத்தக் கூடியதே. ஆனால் இந்த 'கவிதா நியாயம்' உரை நடைக்கு இல்லை என்றே நினைக்கிறேன். எளிதில் புரிந்து கொள்ள முடியாத கவிதைகளை எழுதிய சிறந்த கவிஞர்களான டி.எஸ்.எலியட், வாலஸ் ஸ்டீவன்ஸ், ஜி.எம்.ஹாப்கின்ஸ் போன்றவர்கள் நல்ல உதாரணங்களாக இருக்கவே செய்கிறார்கள். டி.எஸ்.எலியட்டின் கட்டுரைகள் அவர் கவிதைகள் போல் இருக்காது. மிகவும் தெளிவாகவும் யாரும் புரிந்து கொள்ளக் கூடிய வகையிலும் இருக்கும்.
ஆனால் பிரம்மராஜன் இந்த விஷயத்தில் தொடர்ந்து படுத்திவருகிறார். அவருடைய கட்டுரைகள், மற்றும் தமிழாக்கங்கள் ஆகியவற்றில் உள்ள பிரதான பிரச்சனையாக அவரது மொழியும், நடையும் உள்ளன. வாசகனை பயமுறுத்தும் விதமாக, உள்ளே செல்லாதே என்று தடுக்கும் விதமாக இருக்கிறது.
மூலத்துக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என்ற விஷயத்தை அடிப்படையில் தவறாக அவர் புரிந்து வைத்துள்ளாரோ என்று எனக்கு சந்தேகம் வருகிறது. இதை அவர்தான் தெளிவு படுத்த வேண்டும். சில உதாரணங்கள் மூலம் இதை நான் புரிந்து கொள்ள முயல்கிறேன்.
There you are என்ற வாக்கியத்தை நான் "அப்படிப் போடு" என்றோ, "அங்கதான் நம்மாளு நிக்கறான்" என்றோ தமிழ்ப்படுத்துவேன். ஆனால் பிரம்மராஜன், "அங்கே நீ இருக்கிறாய்" என்று சொல்வார்.
"Shit", he said என்பதை, "ச்சே, என்ன எழவு இது" என்றோ, "ச்சே சனியன்" என்றோ நான் எழுதுவேன். ஆனால் பிரம்மராஜன், "மலம்", "அவன் சொன்னான்" -- என்று எழுதுவார்.
இதுதான் பிரச்சனை. இந்த கால்வினோ கதைகளும் அப்படித்தான் வந்துள்ளன. 'ஒரு திருடனின் சாகசம்' என்ற கதையில் வரும் மனைவி தன் கணவன் லிலின் என்பவனைப் பார்த்து, "போ, லிலின் தேனே, போ" என்று கூறுகிறாள்(பக்கம் 43). இன்னொரு இடத்திலும் இந்த 'தேனே' வருகிறது.
ஆங்கிலத்தில், "Go, Lilin honey, go" என்றிருந்திருக்கும் என்று நினைக்கிறேன். வாக்கியம் இதேவிதமாக இருந்திருக்காவிட்டாலும், தேனே என்பது நிச்சயமாக honey-தான். "போ, கண்ணா, போ" என்று போட்டிருக்கலாம். தொகுப்பு முழுக்க இப்படித் துன்பத் தேன் வந்து பாயுது காதினிலே, என்ன செய்வது?
அடுத்த பிரச்சனை வாக்கிய அமைப்பு. தமிழின் வாக்கிய அமைப்பும் ஆங்கில வாக்கிய அமைப்பும் கிட்டத்தட்ட எதிர் எதிரானது. அல்லது பல சமயங்களில் அப்படி இருக்கும். வினைச்சொல் இறுதியில் வருவது தமிழ் மரபு. செய்பொருளுக்கு அடுத்ததாக வருவது ஆங்கில மரபு. He came to see me என்றால், 'அவன் என்னப் பார்க்க வந்தான்' என்று அர்த்தம். இங்கே 'came' எனும் 'வந்தான்' கடைசியில் வருவதுதான் தமிழின் அழகு. அதேபோல, ஆங்கில வாக்கியங்களில், ஒரு விஷயத்தை சுருக்கமாக சொன்ன பிறகு, அதைப் பற்றிய கூடுதல் தகவல்களை ஒரு கமா போட்டு சொல்ல முடியும். He saw me, with a frown in his face என்றால், 'அவன் என்ன முறைத்துப் பார்த்தான்' என்று அர்த்தம். ஆனால் "அவன் பார்த்தான் என்னை, அவன் முகத்தில் ஒரு முறைப்புடன்" என்று தமிழாக்கினால் இது translation அல்ல, ஒருவிதமான தமிழ் transliteration ! ஆனால் துரதிருஷ்ட வசமாக என்னவிட சீனியர் ஆங்கிலப் பேராசிரியரான பிரம்மராஜனின் தமிழாக்கம் இப்படித்தான் உள்ளது.
உதாரணங்கள் :
"மேலும் அதில் சார்ஜண்ட் மாத்திரம் மௌனமாய் ஒரு மூலையில் இருந்தான், மஞ்சள் நாளங்கள் அடர்ந்திருந்த முகத்துடன்" (வாத்துக்களின் பறத்தலைப் போல, பக்கம் 32).
"வேகமாகப் பாய்ந்தான் அவன் தனது துரிதமிகுந்த தாவல்களில்" (ஒரு திருடனின் சாகசம், பக்கம் 40).
"நிஜத்தில்" நான் கூறினேன், "என் சாவி என்னிடம் உள்ளது" (தெரஸா என்று கத்திய மனிதன், பக்கம் 156).
"நான் நின்றேன், விழித்தேன், திருதிருவென்று. எனக்கு எதுவும் புரியவில்லை. ஒன்றுமே. எதைப் பற்றியும். எதுவுமே. ...மேலும் நான் சிரிக்கத் தொடங்கினேன்" (தெறிப்பு, பக்கம் 160).
மூன்றாவது பிரச்சனை, எந்த விதத்திலுமே தமிழில் அர்த்தம் புரிந்துகொள்ள முடியாதபடி அமையும் சொற் கூட்டங்கள். ஒரு உதாரணம் :
"மேலும் வார்த்தைகள் வேறு எந்த பழைய எப்படியைப் போல வந்தன உணர்ச்சி வேகத்தில்" (தெறிப்பு, பக்கம் 161). இதற்கு என்ன அர்த்தம் தெரியவில்லை பராபரமே!
"சுருங்கச் சொல்லும் தெளிந்த மொழியைத் தேர்ந்து கொண்ட விஷயத்தில் பிரைமோ லெவிக்கும் கால்வினோவுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது" (பக்கம் XXVI) என்று சொல்லும் மொழிபெயர்ப்பாளரும் அந்த 'தெளிந்த மொழி'யைப் பயன்படுத்தியிருக்கலாம்.
மூலத்துக்கு உண்மையாக இருப்பதென்பது வடிவத்துக்கு உண்மையாக இருப்பதுதானா? சாப்பிடுவது, தூங்குவது, கல்லூரியில் பணி புரிவது ஒழித்த மற்ற நேரத்தை எல்லாம், இப்படி வெளி நாட்டு இலக்கியங்ளை தமிழில் கொண்டுவருவதற்கான முயற்சிகளிலேயே செலவிடும் பிரம்மராஜன் போன்ற dedicated அறிஞர்கள் இதுபற்றி தீவிரமாக சிந்திப்பது நல்லது. யாருக்காக எழுதுகிறோம் என்ற பிரக்ஞையற்ற, வாசகனை கருத்தில் கொள்ளாத எழுத்து எதற்காக?
இந்த நூலின் குறிப்பிடத்தகுந்த அம்சங்கள் மூன்று. 1. நூலின் அட்டைப் படத்தில் பயன்படுத்தப் பட்டிருக்கும் சால்வடார் டாலியின் அருமையான ஓவியம். 2. வழவழவென வழுக்கும் பேப்பர். 3. நல்ல எழுத்துரு.
"நீ ஒரு படிச்ச முட்டாள்" என்று என் பாட்டி என்னை அடிக்கடி திட்டும். பிரம்ம ராஜனின் மொழிபெயர்ப்பில் இடாலோ கால்வினோ கதைகளைப் படித்த பிறகு இப்போது நான் அப்படித்தான் உணர்கிறேன்.
தனது எழுது முறையை பிரம்மராஜன் மறுபரிசீலனை செய்வது தமிழுக்கு நல்லது.