களந்தை பீர்முகம்மது கதைகள்
களந்தை பீர்முகம்மது எனக்கு வியப்பை அளித்துக்கொண்டே இருக்கிறார். இதுவரை மூன்று சிறுகதைத் தொகுதிகள் வந்து விட்டன. சில்க் சுமிதாவும் சுலைமான் ஹாஜியாரும், சுழல், களந்தை பீர் முகம்மது கதைகள் என்று. ஒரு கதைகூட சோடை போகவில்லை. என்ன யதார்த்தம், என்ன நுட்பமான நகைச்சுவை, என்ன ஒரு ஆற்றோட்டம் போன்ற நடை. அவரை நீங்கள் நேரில் பார்த்தால் நம்பவே மாட்டீர்கள். தோற்றத்தில் அப்படி ஒரு ஏமாற்றும் எளிமை. இந்த மாத படித்துறையில் மோகினி என்று ஒரு கதை எழுதியிருக்கிறார். பிசாசுகளைப் பார்த்ததாக மனிதர்கள் கதைவிடுதலைப் பற்றிய அருமையான கதை. விரைவிலேயே கிழக்கு பதிப்பகம் சார்பாக அவரது சிறுகதைகள் ஒரு நூலாக வர இருக்கிறது. அந்த நாளை நானும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
மோகினி கதையிலிருந்து ஒரு பாரா :
மச்சி, கொஞ்சம் வெள்ளை தாங்களேன் என்றார். மோகினிகளுக்கு ராத்திரி நேரம் சுண்ணாம்பு நேரம். இராத்திரி நம்மிடம் சுண்ணாம்பு என்று யாராவது உச்சரித்து கை நீட்டினால், சாட்சாத் அது மோகினியேதான். சுண்ணாம்பு கொடுக்கிறவன் க்ளோஸாகிவிடப் போகிறான். முன்னெச்சரிக்கையாகத்தான் வெள்ளை என்றார் சின்னாப்பா
சப்தங்கள் நிறைந்த இலக்கிய உலகில், மௌனமாக ஒரு சாதனையை நிகழ்த்த்திக் கொண்டிருக்கிறார் களந்தை பீர் முகம்மது. சென்னை வைட்ஸ் ரோடில் உள்ள ப்ரொ·பஷனல் கூரியர் செர்விஸ் அலுவலகத்தில் பணியாற்றுகிறார். எனது நண்பர் என்று சொல்லிக்கொள்வதில் நான் பெருமையடைகிறேன்.