இரண்டு புத்தகங்கள்
நாகூர் ரூமி
இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் என்ற எனது நூலின் இரண்டாம் பதிப்பு வெளிவந்துள்ளது. கடந்த மே மாதம் வந்த முதல் பதிப்பின் பிரதிகள் யாவும் தீர்ந்துபோய், இந்த ஆண்டு முடிவிற்குள் அடுத்த பதிப்பு! புதிய அட்டையுடன் இன்னும் நேர்த்தியாகவும் அழகாகவும்!
கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலமாக என் நெஞ்சுக்குள்ளும் தலைக்குள்ளும் போட்டு வைத்திருந்த விஷயங்கள் நூல் வடிவம் பெற்றது மட்டுமின்றி, அது பலதுறைகளைச் சேர்ந்தவர்களின் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றிருக்கிறது. எனக்குக் கிடைத்த இந்த அங்கீகாரத்துக்காக நான் இறைவனுக்கு நன்றி செலுத்திக்கொள்கிறேன்.
இந்த இரண்டாம் பதிப்பைக் கொண்டுவருவதில் கிழக்கு பதிப்பகம் எடுத்த கவனமும் முயற்சியும், உழைப்பும் வேகமும் அசாதாரணமானது. முழு நூலையும் மறுபடி பத்ரி படித்துப் பார்த்து தமிழ் இலக்கணப் பிழைகளையும், அச்சுப் பிழைகளையும் திருத்தினார். பின்பு, நூலில் கொடுக்கப்பட்ட தகவல்களின் ஆதாரங்களை உறுதிப்படுத்திக் கொண்டார். இதற்காக அவர் எடுத்துக்கொண்ட முயற்சி என்னை வியக்க வைத்தது. சில பகுதிக¨ளை நீக்கி விடலாம் என்று அவர் கருதியவற்றை என்னிடம் காட்டி, அதை அவர் எடுத்துச் சொன்ன விதமும் நாகரீகமும் என்னை நெகிழவைத்தவை. நூலை விமர்சனம் செய்கிறேன் என்ற போர்வையில் அவிழ்த்துவிடப்பட்ட, இன்றுவரை அவிழ்த்து விடப்படும் அவதூறுகளுக்கும் அநாகரீகங்களுக்கும் பாடம் கற்பிக்க வல்லவை.
அடுத்து, பா.ராகவன் மறுபடி ஒருமு¨றை நூல் முழுவதையும் படித்து விட்டு தனது கருத்துக்களை என்னிடம் சொல்லி, நீக்க வேண்டியதையும் சேர்க்க வேண்டியதையும் சொன்னார்.
அதன் பிறகு, நான் ஏற்கனவே பார்த்து வைத்திருந்த திருத்தங்களும் சேர்த்துக்கொள்ளபட்டன.
கடைசியாக நான், மறுபடி நூல் முழுவதையும் படித்துவிட்டு, அவ்வப்போது நண்பர்களும் அறிஞர்களும் கூறிய கருத்துக்களை குறித்துவைத்திருந்தேன். குறிப்பாக ஆர்.வெங்கடேஷ், திருப்பூர் கிருஷ்ணன், யுகபாரதி, சிங்கை முஸ்த·பா மாமா, ஹாஜி எம்.ஏ.ஹாஜா போன்றோர் எடுத்துக் காட்டியிருந்த குறைகள் களையப்பட்டன.
விட்டுப்போயிருந்த சில முக்கியமான பகுதிகள் சேர்க்கப்பட்டன. உதாரணமாக கலீ·பா உஸ்மான் (ரலீ) அவர்களைப் பற்றி முதல் பதிப்பில் சொல்லாமல் விட்டுப்போயுள்ளது. அதை இதில் சேர்த்துக்கொண்டேன்.
முக்கியமாக, இத்தனை பக்கங்களுள்ள ஒரு நூலுக்கு பொருளடக்கம் இல்லை என்ற குறை நிவர்த்தி செய்யப்பட்டது. பிற்சேர்க்கைகள் ஒழுங்குபடுத்தப்பட்டன.
தீராநதி, துக்ளக், தினமணி, சிந்தனைச் சரம், படித்துறை, சமநிலைச்சமுதாயம் ஆகிய பத்திரிக்கைகள் இந்த நூலை பாராட்டியிருந்தன. அந்த மனமார்ந்த பாராட்டுதல்களின் சுருக்கம் பின் அட்டையை அலங்கரிக்கிறது. சில சாம்பிள்கள்:
இஸ்லாத்தை ஆழமாக எளிய தமிழில் அறிமுகம் செய்யும் கருத்துக் செறிவான ஒரு கருவூலம் இது. இஸ்லாத்தின் நிஜ முகத்தை முஸ்லிம்களுக்கும், தேடல் உள்ள பிற சமய சகோதரர்களுக்கும் எடுத்துக் காட்டும் ஒரு கண்ணாடி. எனக்குத் தெரிந்தவரையில், இஸ்லாம் பற்றி எழும் சில நிகழ்காலக் கேள்விகளுக்குத் தற்காலச் சான்றுகள் காட்டி, விளக்கம் அளிக்கும் முதல் தமிழ் நூல் இதுவாகத்தான் இருக்கும். மிகப்பேணுதலுடன் கடுமையாக உழைத்ததன் விளைவே இந்நூல். (தோப்பில் முகமது மீரான், தீராநதி, செப் 2004)
பூடகமானவற்றும் பொறுப்பான பதிலைச் சொல்லியிருக்கிறார் ரூமி. உலகம் முழுவதிலும் பரவியிருக்கும் இஸ்லாத்தின் தற்போதைய நிலையை, காலத்தின் சவால்களோடு அணுகியிருப்பது சிறப்பு. நூலின் எந்த இடத்திலும் இஸ்லாத்தைத் தவிர வேறு எந்த மதங்களும் கேள்விக்கு உட்படுத்தப்படவில்லை.(யுகபாரதி, படித்துறை, ஜூலை 2004)
இஸ்லாம் பற்றிய பல கருத்துக்களை -- குறிப்பாக பலரின் தவறான புரிதல்களை மிக எளிமையாக இந்நூலில் ரூமி அலசியுள்ளார். அனைத்துத் தரப்பு மக்களும் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் எடுத்துரைத்துள்ளார். (துக்ளக், 21-07-2004)
இஸ்லாத்தின் பெயரால் உலகெங்கும் பயங்கரவாதம் பெருகியிருக்கிற சமயத்தில், அன்பைத்தவிர அந்த மதத்தில் வேறெதுவுமில்லை என்பதை ஆதாரத்துடன் சிறப்பான முறையில் எடுத்துக் கூறும் நூல். (தினமணி)
நாகூர் ரூமியின் நூல், முஸ்லிம்களுக்கும் மாற்றுச் சமய அன்பர்களுக்கும் இஸ்லாம் என்றால் என்ன என்பதை விளக்கமாகத் தந்திருக்கிறது...இந்நூலை விமர்சனம் செய்வது அவ்வளவு இலகுவான காரியமல்ல. அப்படி ஒவ்வொரு பகுதியையும் விமர்சித்தால் ஒரு நீண்ட நூலாய்வாக அது மாறிவிடும்...தமிழ் கூறும் நல்லுலகிற்கு இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் என்ற சிறந்த நூலை வழங்கிய நாகூர் ரூமி அவர்களும், அதனை வெளியிட்ட கிழக்கு பதிப்பக உரிமையாளர்களும் அனைவராலும் பாராட்டப்பட வேண்டியவர்களாவர் (சமநிலைச் சமுதாயம், டிச. 2004)
என் அனுபவங்களையும் பயிற்சிகளையும் அடிப்படையாக வைத்து நான் எழுதிய அடுத்த விநாடி என்ற சுயமுன்னேற்ற நூலின் பதிப்பும் கிழக்கு பதிப்பகம் சார்பாக வெளிவந்துள்ளது. முதலில் அது சபரி வெளியீடாக வந்தது.
என்னுடைய முயற்சிகளை விமர்சனம் செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு இஸ்லாத்தையும், அதன் 1425 ஆண்டுகால கட்டுக்கோப்பையும், அது மனிதனுக்கு வழங்கியுள்ள அந்தஸ்த்தையும் பொறுத்துக்கொள்ள முடியாதவர்களால் செய்யப்படும் அவதூறுகளும்கூட என்னையும் என் எழுத்தையும் பரப்புவதில் பங்காற்றியுள்ளன. அந்த பங்களிப்பு இனியும் தொடரும் என்றே நம்புகிறேன்.
எனது எழுத்தின்மீது நம்பிக்கை வைத்து எனக்கு தொடர்ந்து வாய்ப்புக் கொடுத்துக் கொண்டிருக்கும் நண்பர்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
அன்புடன்
நாகூர் ரூமி