நேற்று (20.08.2007) எனது 19-வது நூல் நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் (முதல் பதிப்பு ஜூலை 2007, 128 பக்கங்கள், விலை ரூ.60/-) வெளிவந்தது. கிழக்கின் பிரிவாக இருக்கும் வரம் வெளியீடு இது. நாகூரைப் பற்றியும் நாகூர் ஆண்டவர் என்ற புகழ்ப்பெயருடன் விளங்கும் மகான் நாகூர் நாயகம் அவர்களின் வாழ்க்கை பற்றியும், மத நல்லிணக்கத்து நல்ல எடுத்துக்காட்டாக எப்படி நாகூர் சில நூற்றாண்டுகளாக விளங்கி வருகிற்து என்பது பற்றியும் சொல்லும் இந்த நூல். அந்நூலுக்கு நான் எழுதிய முன்னுரை:
ஒவ்வொரு ஊருக்கும் ஒரு வரலாறு உண்டு. ஆனால் வரலாறு இருக்கின்ற எல்லா ஊர்களும் வரலாற்று முக்கியத்துவம் பெற்றுவிடுவதில்லை. அந்த வகையில் நாகூர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஊர் மட்டுமல்ல, வரலாறு படைத்துக் கொண்டிருக்கும் ஊருமாகும். நாகூர் தென்னிந்தியாவில் உள்ள முக்கியமான புண்ணிய ஸ்தலமாகும். மதத்தின் பெயரால் அப்பாவி மனித உயிர்கள் நாடெங்கிலும், ஏன் உலகெங்கிலும் பலி வாங்கப்பட்டுக் கொண்டிருக்கும் அவலத்தை நாமறிவோம். ஆனால் மதவெறியும், கொலை வெறியும் பிடித்த சமூக விரோத சக்திகளுக்கு பாடம் புகட்டும் வகையில் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக ஒரு ஊர், நானூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக திகழ்ந்து கொண்டு வருகிறது என்றால் அதுதான் நாகூர். ஏதாவது ஒரு வியாழக்கிழமை இரவு -- முஸ்லிம்களுக்கு அது வெள்ளிக்கிழமை இரவு --- நாகூர் சென்று பார்த்தால் இந்த உண்மை புரிந்து விடும். அலை மோதுகின்ற கூட்டத்தில் தெரியும் பத்து தலைகளில் ஒன்பது தலைகள் மாற்று மதத்தவருடையவையாகத்தான் இருக்கும். சந்தனம் பூசப்பட்ட மொட்டைத் தலைகளில் இருந்து பக்தியும் பரிபூரண நம்பிக்கையும் பளபளத்துக் கொண்டிருக்கும்.
ஆமாம். ஜாதி, மதம், நிறம் எதையுமே பாராமல் நாகூர் தர்காவில் துன்பங்கள் துடைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பிரச்சனைகள் தீர்ந்து கொண்டிருக்கின்றன. நோய்கள் குணமடைகின்றன. பேய்கள் விரட்டப் பட்டுக்கொண்டிருக்கின்றன. (பேய் என்பதெல்லாம் உண்மையா என்று கேட்கக் கூடாது. வேண்டுமானால் மனதின் சமநிலை பிறழ்ந்தவர்கள் சீரான மனநிலையுடன் திரும்பிச் செல்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்). செய்வினை, தீவினைகள் அகலுகின்றன. நல்வினை மட்டுமே ஏற்படுகிறது. நாகூர் தர்காவுக்குள் நுழைந்து கொஞ்ச நேரம் நடப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாலே, "நமனை விரட்ட மருந்தொன்று விற்குது, நாகூர் தர்காவிலே" என்று நாகூர் ஹனிபா பாடியது நினைவுக்கு வரும்.
நாகூர் ரூமி என்று நான் புனை பெயர் வைத்துக் கொண்டதில் எனக்கு லேசான பெருமிதம் உண்டு. காரணம், அதன் பின்னால் 'பெரிய எஜமான்' என்று நாங்கள் மரியாதையுடன் அழைக்கும் நாகூர் நாயகம் இருக்கிறார்கள். அந்த ஞான ஒளியின் அற்புதம் நிலையானது. தொடர்ந்து கொண்டே இருப்பது. அந்த ஆன்மிக வட்டத்தின் ஆரத்தில் இல்லாவிட்டாலும், ஒரு ஓரத்திலாவது நான் ஒட்டிக் கொண்டுவிட வேண்டுமென்ற ஆசையால்தான் நான் நாகூர் ரூமியானேன்.
"இங்கு காலையில் வீசுவது கடற்கரைக் காற்று, மாலையில் வீசுவது காரைக்கால் காற்று" என்று ஒருவர் நாகூரைப் பற்றிக் கவிதை எழுதினார். இதெல்லாம் கவிதையா என்று நீங்கள் கேட்கலாம். அவர் எழுதியது கவிதையா இல்லையா என்பது இங்கே முக்கியமான விஷயமல்ல. ஆனால் அந்த இரண்டு வரிகளில் ஒரு கிண்டல் இருக்கிறது. ஒரு விமர்சனம் ஒளிந்திருக்கிறது. அது நாகூர்க்காரர்களுக்கு அல்லது நாகூரைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு மட்டுமே புரியும். அப்படி என்ன கிண்டல் அல்லது விமர்சனம் என்கிறீர்களா? இதோ சொல்லிவிடுகிறேன்.
நாகூர் என்பது கடற்கரையோரமாக அமைந்த ஊர் என்பது மேலே கண்ட கவிதை வரிகளைப் படிப்பவர்களுக்கு எளிதாகப் புரிந்திருக்கும். காரைக்கால் என்பது பாண்டிச்சேரி யூனியன் டெரிடரியைச் சேர்ந்த ஒரு முக்கியமான ஊர் என்பதும் தெரிந்திருக்கும். ஆனால் கடற்கரைக் காற்றுக்கும் காரைக்கால் காற்றுக்கும் என்ன வித்தியாசம் என்பது புரிந்திருக்க நியாயமில்லை! ஆமாம். காரைக்கால் நாகூரிலிருந்து கிட்டத்தட்ட 13 கி.மீ. தூரத்திலேயே இருந்தாலும், நாகூர் தமிழ்நாட்டுக்கும் காரைக்கால் பாண்டிச்சேரிக்குள்ளும் போய்விடுகிறது. அதனால் என்ன என்கிறீர்களா? அதானால் ஒன்றுமில்லை. காரைக்காலும் கடற்கரை ஊர்தான். ஆனால் மாலையில் அங்கிருந்து வீசும் காற்றில் ஒரு வித்தியாசம் இருக்கிறது. அந்த வித்தியாசம் இரண்டு ஊர்களுக்கும் அடிக்கடி விஜயம் செய்யும் 'குடிமகன்'களுக்கு மட்டுமே வெளிச்சம் அல்லது வாசம்!
ஆமாம். தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமுலில் இருந்தாலும் பாண்டிச்சேரி யூனியனில் மதுவிலக்குக்கு எப்போதுமே விலக்குதான். நாகூர் பழைய பஸ்டாண்டிலிருந்து பொடி நடையாக காரைக்காலை நோக்கி நடந்து போனால் ஒரு கால்மணி நேரத்தில் ஒரு சின்ன ஊர் வரும். அந்த ஊர் பெயர் வாஞ்சூர். அது நாகூர் நாயகம் தவம் செய்த சின்ன ஊரும்கூட. அவர்கள் தவம் செய்த இடம் என்பதைவிட, பல வாலிப வயோதிக அன்பர்கள் அனுதினமும் தவம் கிடக்கும் இடம் வாஞ்சூர் என்று சொன்னால் அது மிகையே இல்லாத உண்மை. வாஞ்சூரிலேயே பாண்டிச்சேரி யூனியன் பிரதேசம் தொடங்கிவிடுவதால், 'பார் மகனே பார்' என்று 'பார்'களும் சாராயக் கடைகளும் அங்கே எந்நேரமும் திறந்திருக்கும். இதுதான் மேலே யாரோ சொன்ன கவிதையின் விஷேஷம்!
தமிழ் நாட்டில் குடிக்க முடியாத மகன்களெல்லாம் காலார நடந்து வீறுநடை போட்டு வாஞ்சூர் சென்று 'அடி'த்துவிட்டு தள்ளாடிய நடையுடன் நாகூருக்குத் திரும்புவார்கள் மாலை வேளைகளில். 'காரைக்கால் காற்று' அவர்கள் வாயிலிருந்து வரும் 'வாசம்'தான்!
நாகூரைப் பற்றிய நிஜங்களில் ஒன்றே ஒன்றுதான் இது. ஆனால் நாகூரில் அவ்வப்போது வீசும் காரைக்கால் காற்றை மீறி எப்போதுமே வீசிக்கொண்டிருப்பது ஆன்மிக, இலக்கிய, மதநல்லிணக்கத் தென்றல்கள். எல்லோரும் ஓர் குலம், எல்லோர்க்கும் ஓரிறைவன் என்ற தத்துவம் தழைத்துக் கொண்டிருக்கிறது நாகூரிலும் நாகூர் தர்காவிலும். 2005 டிசம்பரில் வந்த சுனாமியால் சாகடிக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட உடல்கள், ஜாதி மத வேறுபாடின்றி நாகூர் தர்காவுக்குள் இருக்கும் அடக்கஸ்தலத்திலேயே உரிய மரியாதைகளுடன் அடக்கம் செய்யப்பட்டன என்பது கண்கூடான வரலாறு.
இத்தகைய சிறப்புக்கள் மிகுந்த நாகூரைப் பற்றியும் நாகூர் நாயகம் அவர்களைப் பற்றியும் எழுதுகின்ற பாக்கியத்தை எனக்குக் கொடுத்த இறைவனுக்கும், வரம் பதிப்பகத்தாருக்கும் என் நன்றிகள்.
நாகூர் நாயகத்தை அடிப்படையாக வைத்து நாகூரிலும் நாகூர் தர்காவிலும் கிடைக்கும் நல்லிணக்க நறுமணத்தை, மனித நேய மகத்துவத்தைக் கொஞ்சமாவது உங்களுக்கு எடுத்துக் காட்டுவதுதான் இந்த சின்ன நூலின் நோக்கம். நாகூரின், நாகூர் தர்காவின் ஸ்தல வரலாற்றை அறிந்து கொள்வதும் மனிதநேய வள வரலாற்றை அறிந்து கொள்வதும் ஒன்றுதான்.
இந்த நூலை நான் எழுத சரியான திசைகாட்டிய கவிஞர் நாகூர் இஜட். ஜபருல்லா நானா, நாகூர் தர்கா ஆஸ்தான சங்கீத வித்வான் எஸ்.எம்.ஏ. காதர் அவர்கள், மிகப்பழைய ஆதாரப்பூர்வமான அரபுத்தமிழ் நூல்களைக் கொடுத்து உதவிய என் ஆசிரியர் நாகூர் கலி•பா சார், 'கன்ஜுல் கராமாத்' என்ற 1939-ல் குலாம் காதிர் நாவலர் அவர்களால் எழுதப்பட்ட மூல வரலாற்று நூலை எனக்காக மலேசியாவிலிருந்து தருவித்துக் கொடுத்த நாகூர் மெய்சாபு நானா, நாகூர் நாயகத்தின் வாரிசான சின்ன எஜமான் யூசு•ப் தாதாவின் பரம்பரையில் பத்தாவது தலைமுறையில் வரும் இப்போதைய நாகூர் தர்கா கலீ•பாவும் ட்ரஸ்டியுமான கே. முஹம்மது கலீ•பா சாஹிப், வரம் வாசுதேவ் ஆகியோருக்கு என் நன்றிகள்.
நாகூர் ரூமி
ஜூன் 21, 2007
சென்னை.