பறவையின் தடங்கள் -- நாகூர் ரூமி
All writings like poems, stories and articles in Tamil and English

முகப்பு

யூனிகோடில் தேட
 
முற்றாத புள்ளி, சொற்களின் சீனப்பெருஞ்சுவர்
அலைகள்
என்று தணியும்?
காவியப் பயணம்
நல்லிணக்க நாகூர்
ஆல்ஃபா தியானம்
இலியட்
உடல் மண்ணுக்கு
விநோத உலகம்
முகமூடி கிழித்துக்கொண்ட வெங்கட் சாமிநாதன்
மெய் காட்டும் பொய்கள்
பெரியார் பன்னிரண்டு
இறைவா கவிதைகள்
ஞானத்தை நோக்கிய பயணம்
HIV - கொல்லப் பிறந்த கொடுங்கோலன்

Links
தமிழோவியம்
தமிழ்ஈபுக்
பா.ராகவன்
அப்துல் கையூம்
கீற்று
மதுரைத் திட்டம்
நாகூர் படைப்பாளிகள்
நாகூர் ரூமி (ஆபிதீன் பக்கங்கள்)
யுகபாரதி
தாஜ்
¬À¢¾£ý
எண்ணங்கள்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
தொடர்புகொள்ள
நாகூர் ரூமி
  நாள் : 9/17/2007 8:22:58 AM, முனைவர் பேரா.பர்வீன் சுல்தானா
 
  காவியப் பயணம்

காவியப் பயணம்

(ஹோமரின் இலியட், தமிழில் நாகூர் ரூமி. கிழக்கு பதிப்பகம், முதல் பதிப்பு ஜனவரி 2007, 816 பக்கங்கள், விலை ரூ 350/-)

இலக்கியங்களை நேசிக்கத் தெரிந்தவர்கள் வாசிக்க விரும்பும் இலக்கியங்களில் உலகப் புகழ் பெற்ற ஹோமரின் இலியட் என்ற காவியத்திற்கு முக்கிய இடமுண்டு. இலக்கிய உலகில் எம்மொழி ஆசிரியராக இருந்தாலும் ஹோமரைக் குறிப்பிடாமல் காவிய பாடம் நடத்த முடியாது. உலகச் செம்மொழிகளுள் கிரேக்கமும் ஒன்று. கிரேக்கத்தில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட பிறகு இலியட் காவியத்தின் புகழ் உலகில் பரவியது.

ஒரு மொழி மட்டும் அறிந்தவரைவிடக் கூடுதலான வாழ்வியல் அனுபவிப்புகளை பன்மொழி அறிவு தருகிறது. மொழியறிவின்மை உலகில் பலவற்றை அனுபவிக்க முடியாமல் போகச்செய்கிறது. மேற்கூறிய மொழி சார்ந்த விஷயங்களை உள் வாங்கியதால் உருவானது மொழிபெயர்ப்புத் துறை. அவ்வகையில் மொழிபெயர்ப்புத் துறை தமிழுக்கு மற்றொரு கொடையைத் தந்திருக்கிறது.

காவிய ஓட்டத்தின் தரமோ வேகமோ தடை படாமல் தமிழில் எழுதத் தெரிந்திருக்கிறது நாகூர் ரூமிக்கு. அக்கிலிஸ் என்பவனின் கோபத்தை மையப்புள்ளியாக வைத்து, காதல் வீரம் என்ற இருமுனைகள் கொண்ட இந்த கதை துவங்கி, நடந்து முடிவது போர்க்களத்தில். போர்ப்பரிசாக தனக்குக் கிடைத்த பெண்ணை கிரேக்க போர்ப்படைத்தலைவன் அகமென்னன் அதிகாரத்தால் பறித்துக்கொள்வதால் வரும் கோபம், உயிர் நண்பன் பெட்ரோக்குலஸை ட்ராய் வீரன் ஹெக்டர் கொன்றதால் வரும் கோபம் என காவியம் முழுவதும் கோபக்கனல் வீசுகிறது. இதன் ஊடாக நிகழும் போர்க்களக் காட்சிகள் நம்மை நேரடியாக அந்நிகழ்வுகளோடு வாழ வைக்கின்றன.

காவியம் முழுவதும் விரவிக் கிடக்கும் கிரேக்க பண்பாட்டுப் புரிதல்கள் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் தருகின்றன. அவர்களின் ஒழுக்கம் சார்ந்த மதிப்பீடுகள் மாறுபட்டவை. கிரேக்க வீரன் மெனிலயஸின் மனைவி பேரழகி ஹெலனை ட்ராய் நகரின் இளவரசன் பாரிஸ் கடத்திக் கொண்டு போவதால் மூளுகிறது நெடும்போர். ஜீயூஸ் எனும் தலைமைக் கடவுளின் ஆணைப்படியும் விருப்பப்படியும் மற்ற கடவுளர்களின் ஆதரவோடு போர் நடப்பதாகக் கூறுகிறது காவியம். ஜீயூஸின் மனைவி ஹீரா ஜீயூஸின் உடன் பிறந்த சகோதரி என்பது தமிழ் வாசிப்புச் சூழலில் கலாச்சார அதிர்ச்சி தரும் செய்தியாகும்.

 

 

 

நாகூர் ரூமி ஓர் இலக்கிய ஆசிரியர் என்பதால் மொழியாக்கத்தில் கவனத்தையும் லாவகத்தையும் கையாண்டிருக்கிறார். Apple of discard, Achilles’s heel, Even Homer nods போன்ற ஆங்கில மரபுத்தொடர்களின் அடிப்படையை அவர் விளக்கும் பாங்கு தகவலை அறியவும், ரூமியைப் பாராட்டவும் வைக்கிறது.

நூலடக்கம், முன்னுரை, ஹோமர் ஓர் அறிமுகம், கதைக்கு முந்திய கதை, இலியட் கதைச் சுருக்கம், முக்கிய பாத்திரங்கள், கடவுளர்கள் என்கிற பகுதிகளைக் கடந்தால்தான் காவியத்திற்குள் நுழைய முடியும். இப்பகுதிகள் மொழியாக்க ஆசிரியரின் கண்ணியத்தையும், வாசகர்கள்மீது அவர் கொண்ட அக்கறையையும் காட்டுகிறது.

‘மரணம்’ என்ற சொல் போர் தொடர்பான சொற்களில் மிக முக்கியமான கூறாகத் திகழ்கிறது. இச்சொல்லுக்கு, கறுப்பு மரணம், வெறுக்கத்தக்க இருள், மனமுருக்கும் மரணம், பழுப்பு நிற மரணம், அவனைச் சுற்றி அவனது வெண்கலக் கவச உடை கடகடவென ஒலியெழுப்பியது -- போன்ற பல்வேறு பிரயோகங்களைப்  பயன்படுத்தியிருப்பது போர்க்கள வாசிப்புக்குத் துணையாகிறது. ஒவ்வொரு முறையும் கிரேக்கச் சூழலையும், காவிய காலத்தையும் (சுமார் 2700 ஆண்டுகளுக்கு முன்), அவர்தம் பண்பாட்டையும் மனதில் கொண்டு இந்நூலை வாசிக்கத் தூண்டுகிறார் ரூமி. 816 பக்கங்கள் கொண்ட இந்நூலை வாசிக்க வாசிப்புப் பயிற்சி துணையாகிறது.

இலியட் காவியத்தை வாசிக்கிறோம் என்பது அவ்வப்போது ஓர் மெல்லிய கர்வத்தைத் தருவதை வாசிப்பின்போது தவிர்க்க முடியவில்லை. ஒரு பழம்பெரும் எழுத்தாளனின் எண்ண அலைகளோடு பன்னெடுங் காலத்துக்கு முற்பட்ட காலத்தில் பயணம் செய்த பெருமிதமும், களைப்பும் ஒருசேரக் கிடைக்கும்போது இலக்கியத்தின் இறுதி அத்தியாயம் வாசிக்கப்பட்டுவிட்டதாகப் பொருள்கொள்ள முடியும். காவியத்தின் வாசிப்பும் முடிவும் இவ்வாறுதான் இருக்கும் போலும்.

தொடர் அமைப்பிலும், தமிழாக்க முறையிலும் வித்தகம் காட்டி இருக்கிறார் ரூமி. நூல் முழுவதுமாக ஹோமரோடு கைகள் பிணைய அந்த போர்க்களத்தில் நடந்திருக்கிறார்.

முதன்மைப் பாத்திரங்கள், முரண் பாத்திரங்கள் என்ற வரையறையின்றி இவ்விரு தன்மைகளும் எல்லா பாத்திரங்களுக்குள்ளும் ஊடாடுகின்ற இந்த நிலைப்பாடு காவியத் தன்மைக்கான முக்கிய தகுதிப்பாடாகும்.

 

 

 


போரில் கொல்லப்பட்டவர்களின் உயிருக்குப் பகரமாக பணமும், உலோகங்களும் தருவதாகக் கூறும் போக்கும், கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் பகரமாக இரத்தப் பணம் பெறும் முறையும் கிரேக்க வாழ்வியல் போக்கை நமக்குக் கூறி நிற்கின்றன.

போர்க்களத்தில் அம்புகள் மண்ணீரல், சிறுநீரகம், இதயம், சுவாசப்பை, நுரையீரல், முதுகுத்தண்டு, இடுப்பெலும்பு, கன்னத்து எலும்பு, முழங்கால் எலும்பு, மூளை ஆகிய உறுப்புகளை எவ்வாறு துளைத்தன என்ற குறிப்பு நூல் முழுவதும் விரவிக் கிடக்கிறது. சுமார் 2700 ஆண்டுகளுக்கு முன்பு அறிவியல் வசதிகள் இல்லாத காலம் என நாம் நினைப்பதற்கு பதில் கூறும் விதமாக அம்பு பாயும் உடலியல் கூறுகளை விளக்கும் பான்மை நம்மை வியக்க வைக்கிறது.

கதையோட்டம் அந்நிய மண்ணிற்கு உரியதாக இருந்தாலும், அந்நியக் கலாச்சாரத்தில் பின்னப்பட்டிருந்தாலும், மானுட சமூகத்திற்கான பொதுவான உணர்வுகளும் அறமும் ஒரு புள்ளியில் சந்திக்கும் மகிழ்ச்சியை வாசிப்பின்போது உணர முடிகிறது. உதாரணமாக அக்கிலிஸை சமாதானப்படுத்த முயலும் கிரேக்க வீரர்களுக்கு, “ஒவ்வொரு நாகரீகமான நேரிய பார்வை கொண்ட ஆண்மகனும் தன் மனைவியை நேசிப்பான். தன் மனதில் வைத்துப் பூசிப்பான். ஒரு போர்க்கைதிதான் என்றபோதும் அந்தப் பெண்ணை நான் மனதார நேசித்ததுபோல” என்று அவன் சொல்லும் பதிலைக் குறிப்பிடலாம். இவ்வாறு உணர்வுகளோடு நெருக்கமாகும் பல இடங்கள் இக்காவியத்தில் உண்டு.

முன் அட்டை ஓவியம், பின் அட்டைச் செய்தி, நேர்த்தியான வடிவமைப்பு, தரமான தொகுப்பு ஆகியவற்றுக்காக கிழக்கு பதிப்பகத்தார் பாராட்டுக்கு உரியவர்கள்.

‘ஹோமர் ஒரு அறிமுகம்’ என்ற பகுதியில் மொழிபெயர்ப்பாளரான நாகூர் ரூமி இவ்வாறு எழுதுகிறார்: “யானைகளெல்லாம் தங்களைப் பூனைகளென்று கருதிக் கொண்டது காவிய காலம். பூனைகளெல்லாம் தங்களை யானைகளாக எண்ணிக் கொள்வது கலிகாலம். போகட்டும். ஹோமர் என்ற யானைக்கு அடி சறுக்கியதா? பார்க்கலாம்”.

ஹோமருக்கு அடி சறுக்கியதோ இல்லையோ நாகூர் ரூமிக்கு அடி சறுக்கவே இல்லை.


--- முனைவர் இ.சா.பர்வீன் சுல்தானா.

நன்றி:  தீராநதி, செப்டம்பர், 2007

 

 


   | Refer to friend  | மதிப்பு : 2.5  | மதிப்பீடு செய்ய :  | Print this article
 
 
மறுமொழி
karuppan
10/23/2007 , 10:41:54 AM
Nice.
   
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)

Powered by : Tamiloviam - Tamilpathivu
Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.