| பறவையின் தடங்கள் -- நாகூர் ரூமி |
தமிழோவியம் - தமிழ்ப்பதிவு
http://www.tamiloviam.com |
||
|
நாள் : 10/27/2004 3:19:28 PM, நாகூர் ரூமி |
|||
|
வெள்ளிக்கிழமை
“பாகவீ, எந்திரி, எந்திரிடா கண்ணூ...'ஹொத்துவா' நாள்லெ தூங்கிகிட்டே இரிக்காதே. எட்டு வய்சுப் புள்ளெ இப்புடித் தூங்கலாமா?” ம்மா மூன்றாவது முறையாக சொல்லிவிட்டுப் போய்விட்டது. முத்தமிழ், முக்கனி மாதிரி ம்மாவின் பொறுமையின் அளவுகோலும் மூன்றுதான். மூன்றாவது முறை சொல்லப்படும் எதுவும் கடைசி எச்சரிக்கையாகும். அதற்குமேல் வாய்ப்பேச்சே கிடையாது. சில வினாடிகளில் பளாரென்று குளிர்ந்த நீர் முகத்தில் அறையும். அதற்கப்புறம் விரும்பினாலும் தூங்கமுடியாது. குளிர்ந்த நீரை முகத்தில் அடித்தால் தூக்கம் கலைந்துவிடும் என்று ம்மாவுக்கு யார் சொல்லிக்கொடுத்தது? ம்மாவும் என்னைப்போல தனது ம்மாவிடம் ‘ஹொத்துவா’ நாளில் தூங்கிக்கொண்டிருந்ததற்காக குளிர்ச்சியான நீரின் கருணையற்ற அறையை வாங்கியிருக்குமா? ரத்தத்தின் ரத்தமான என்னிடமே பழி தீர்த்துக்கொள்கிறதா? புத்தர் படுத்திருப்பதுபோல சிலைகளைப் பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம்கூட எனக்கு ம்மாவின் ஞாபகம்தான் வரும். புத்தரும் ம்மாவைப்போல ஒருக்கலித்துத்தான் படுத்திருந்தார். விஷ்ணுகூட ஆதிசேஷன்மீது இப்படித்தான் படுத்திருக்கிறார். இதையெல்லாம் பார்த்தபோது கூடவே ஒரு கேள்வியும் முளைத்தது. குப்புறப்படுத்துக்கொண்டே ஞானம் பெற்றவர்கள் ஒருவர்கூட கிடையாதா? எனக்குத் தெரிந்து யாரைப்பற்றியும் வரலாற்றில் அப்படி ஒரு குறிப்பு இல்லை. நான் ஒருவன்தான் விடாது முயன்று கொண்டிருந்தேன். ஆனால் ஞானம் பெறக்கூடிய சமயத்தில் யாராவது எழுப்பி கெடுத்துவிடுகிறார்கள். மனிதர்கள் ரொம்பத்தான் பொறாமை பிடித்தவர்களாக இருக்கிறார்கள். ம்மாவின் கடைசி எச்சரிக்கைக்கும் குளிர்ந்த நீரின் தூக்கக்கலைப்புக்கும் மத்தியில் உள்ள சில வினாடிகளில் தூங்கிக்கொள்வதிலும் ஒரு தனி சுகம் இருந்தது. மனிதர்கள் தூங்குவதையே விரும்புகிறார்கள். நானும் மனிதன்தானே? ஆனால் இந்த 'ஹொத்துவா' நாட்களில் மட்டும் இந்த ம்மாக்கள்கூட நம் எதிரிகளாகிவிடுகிறார்கள். தூங்கியதற்காக குளிர்ந்த நீர் ஒரு தண்டனை என்றால் விழித்தவுடன் சுடுதண்ணீரில் இன்னொரு தண்டனை காத்திருக்கும். என்னைக் குளிப்பாட்ட ம்மா எடுத்துக்கொள்ளும் பிரயத்தனங்கள் ஒவ்வொன்றும் என் எதிரிகள்தான். முதலில் சுடுதண்ணீர். பின் சோப்பும் சீயக்காய்த்தூளும். நான் கதறக் கதற கொஞ்சம்கூட இரக்கமின்றி என் தலையில் அவை தேய்க்கப்பட்டு, நான் ஒவ்வொரு முறையும் பயப்படுவதுபோலவே அவை என் கண்ணில் இறங்கி, கண்சிவந்து, குளித்து முடித்த பிறகும் ரொம்ப நேரம் பயங்கரமாக எரிந்துகொண்டிருக்கும். அந்த எரிச்சல் போகும்வரை ம்மாவைப் பார்க்கவே வெறுப்பாக இருக்கும். சாதாரண தலையில் இந்த சறுக்கு விளையாட்டெல்லாம் விளையாட முடியாது. சீப்பால் தலைவாருவதே ஒரு பெரிய வேதனையாக இருக்கும். விடாக்கண்டன் கொடாக் கண்டன் மாதிரி என் வணங்காமுடி காந்தாராவாகவும், அதை சீப்பில் சிறைப்பிடித்து சிக்கெடுக்க முயலும் ம்மாவின் வலது கை என்.டி. ராமாராவாகவும் மாறியிருக்கும். யுத்தத்தில் எப்போதும் ம்மாதான் ஜெயிக்கும். என்றாலும் அந்த வலியும் வேதனையும் தர்காவுக்கு வரும் மொட்டைத் தலையர்களைப் பார்க்கும் போதெல்லாம் என்னை ஏக்கப் பெருமூச்சு விடவைக்கும். ஆனால் இந்த அற்ப சுகங்களைவிட வெள்ளிக்கிழமை தரும் கஷ்டங்கள்தான் அதிகம். அதிலும் ‘ஜும்ஆ’வுக்கு பெரிய 'ஹொத்துவா' பள்ளி அல்லது சின்ன 'ஹொத்துவா' பள்ளிக்குப் போவது எனக்கு அறவே பிடிக்காது. ம்மாவுக்குத் தெரியாமல் பள்ளிவாசலுகுப் போவது மாதிரி யானைக்கொட்டகை சந்தில் போய் நின்றுவிடுவேன். யாராவது யானைக்கு பூவன் வாழைப்பழம் கொடுத்துக்கொண்டிருப்பார்கள். நீண்ட கறுப்பு தும்பிக்கையால் அதை யானை பிடுங்கிக்கொள்ளும். பாவம் ரொம்ப பசிபோல. அதன் தும்பிக்கையின் முனையின் உட்புறம் வெளுப்பாக அல்லது செக்கச்செவேல் என்று ஏதோ நோய் பிடித்த மாதிரி இருக்கும். இந்த யானையோடு சேர்ந்து ஒரு நாள் ஜும்ஆ தொழுதால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்வேன். ரொம்ப அற்புதமாக இருக்கும். யானை எப்படி தொழும் என்று கற்பனை செய்வதே ரொம்ப வேடிக்கையாக இருந்தது. ஆனால் இதெல்லாம் ம்மாவுக்குத் தெரியாது. ம்மாக்களை ஏமாற்றுவது சுலபம். அதற்காகவே அவர்கள் பிறந்திருப்பவர்கள். ஆனால் யானைக்கொட்டகை பக்கமும் வாப்பாவின் 'ஆத்ம' நண்பர்கள் யாராவது ஒரு ஷைத்தான் வந்துவிடும். "என்னாங்கனி, கானாமூனா, ஹொத்துவாக்குப் போவாமெ, யானெயெ நின்டு வேடிக்கையா பாக்குறியும்?" என்று கேள்வி கேட்கும். தொப்பி போட்டு தாடிவைத்த ஷைத்தான். காட்டிக் கொடுக்கும் ஷைத்தான். 'சாடிஸ்ட்' ஷைத்தான். எனக்கு வரும் கோபத்தில் அந்த யானை சாப்பிடும் உருண்டை சோற்றுக் கட்டிக்குப் பதிலாக அவன் தலையைக் கொடுத்தால் என்ன என்று யோசிப்பேன். நினைப்பதையெல்லாமா அல்லாஹ் நிறைவேற்றிவிடுகிறான்? அடடா, அல்லாஹ் சில தொண்டைகளுக்குத்தான் எவ்வளவு அழகான இனிமையான குரலைக் கொடுத்துவிடுகிறான்! (தொழுகைக்கான அழைப்பான) பாங்கின் சப்தம் என்னை காந்தம் மாதிரி இழுக்கும். 'பானா'சாபு 'பாங்கு' சொன்னாலும் சரி, 'பைத்' ஓதினாலும் சரி, அல்லது எது ஓதினாலும் சரி, அது எப்போதுமே என்னை வசியப் படுத்தியது. வாவா என்று அழைத்தது. என்னை அறியாமல் என் கால்கள் அந்த குரல்வரும் திசையை நோக்கி நடக்கும். பொதுவாக அது பள்ளியாகத்தான் இருக்கும். இந்த அதிசயம் கிட்டத்தட்ட ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடந்தது. ஹொத்துவாவின் முடிவில் "அல்லாஹ¤ம்ம அஜ்ரினா மினன்னார்" என்று மூன்று முறை சொல்வார்கள். அப்பாடா என்றிருக்கும். அது சொல்லும்போது அலாரம் அலறிய மாதிரி தூங்கிக்கொண்டிருக்கும் எல்லோரும் முழித்துக்கொள்வார்கள். உடனே எழுந்துவிடுவார்கள். தொழுகை ஆரம்பித்துவிடும். இந்த 'அல்லாஹ¤ம்ம அஜ்ரினா மினன்னார்' எப்படி எல்லா¨ரையும் எழுப்பிவிடுகிறது என்பது எனக்குப் புரியவே இல்லை. நான்கூட ம்மாவிடம் இதைச் சொல்லி, "இனிமே என்னை எழுப்புவதற்கு நீ ஜில் தண்ணியை முகத்தில் அடிக்காதே. அல்லாஹ¤ம்ம அஜ்ரினா மினன்னார் அப்புடீன்னு மூனு தடவெ சொல்லு, நா எந்திரிச்சுடுவேன்" என்று சொன்னபோது ம்மா விழுந்து விழுந்து சிரித்தது ஏன் என்று எனக்கு விளங்கவில்லை. தொழுகையில் குனிந்து அனைவரும் தங்கள் நெற்றிகளை தரையில் வைத்துக் கொஞ்ச நேரம் இருப்பார்கள். எனக்கு அப்போது என்ன செய்வது என்று தெரியாது. தலை தூக்கிப் பார்ப்பேன். என்னைப்போன்ற வாண்டுகளும் தலை தூக்கிப்பார்த்துக் கொண்டிருப்பார்கள். நாங்கள் ஒருவருக்கொருவர் புன்னகையை சகோதர பாசத்தோடு பரிமாறிக்கொள்வோம். அப்படி நாங்கள் செய்ததற்காக யாரும் எங்களைத் திட்டவோ அடிக்கவோ முடியாது. அவர்கள் தலையை உயர்த்துவதற்குள் மறுபடியும் நாங்கள் குனிந்து அவர்களைப் போலவே எங்கள் நெற்றிகளைத் தரையில் வைத்துக்கொள்வோம். எல்லோரையும் ஏமாற்றி விட்டோம் என்று ரொம்ப பெருமையாக இருக்கும். தொழுகை முடிந்து ஒரு புரட்சி வீரனாக நான் வெளியில் வருவேன். "ம்ஹ¤ம். தொலுவலேண்டா வாப்பா வெளுத்துடுவஹா" என்றான். என்னப் போலவே அவனும் இருந்தது எனக்கு வியப்பும் சந்தோஷமும் அளித்தது. ஆனால் இந்த ஜும்ஆ விளையாட்டு எனக்கு நாளடைவில் 'போர்' அடித்துப்போனது. எப்படி வாரந்தவறாமல் வருஷக்கணக்கில் அலுக்காமல் சலிக்காமல் அல்லது சலித்துக்கொண்டே எல்லோரும் செய்துகொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் வெள்ளிக்கிழமை பகல்களில் ம்மா ஆக்கும் மட்டன் பிரியாணி மட்டும் எனக்கு சலித்ததேயில்லை. "என்ன பாகவி சாஹிப், ஜும்ஆவுக்கு நேரமாச்சு. உங்க சொற்பொழிவுக்காக கூட்டம் காத்திருக்கும். போலாமா?" என் நினைவுப் பட்டத்தை பூமிக்கு இழுத்த குரல் வந்த திசையில் நிமிர்ந்து பார்த்தேன். பெரிய பள்ளியில் பாங்கு சொல்லும் ஹனீ·பா நின்றுகொண்டிருந்தார். தொழுவதும், முன்னின்று தொழவைப்பதும் வாழ்வாகிப்போன என்னோடு இருபதாண்டுகளாக கூட இருப்பவர். கேஸட்டைப் போட்ட மாதிரி, ஒவ்வொரு நாளும் அதே ஏற்ற இறக்கத்தோடு அவரால் எப்படித்தான் பாங்கு சொல்ல முடிகிறதோ! என் அடர்ந்த தாடியை அனிச்சையாக கோதிக்கொண்டே எழுந்த எனக்கு மறுபடி 'பானா' சாபுவின் ஞாபகம் வந்தது. அவர் குரல் மட்டுமல்ல. செயலும் ரொம்ப அழகானது. படுத்த படுக்கையாய் பாயில் கிடந்தபோதுகூட அவர் தொழுது நான் பார்த்திருக்கிறேன். "சாபு, ஏன் இப்புடி கஸ்டப்பட்டு தொலுவுறிங்க? நரஹத்துப் போயிடுவோம்னு பயப்புடுறீங்களா சாபு?" என்று கேட்டேன். நான் அப்படிச் சொன்னபோது பக்கத்தில் இருந்தவர்கள், "ஓய், அப்டியெல்லாம் பேசக்கூடாது" என்று என்னை அடக்கினார்கள். ஆனால் சாபு சொன்னார், "அவனெ ஒன்னும் சொல்லாதீங்க. நல்ல அறிவான புள்ளெ. அல்லாஹ் அவனுக்கு நீடிச்ச 'ஹயாத்'தெ போட்டு வைக்கணும். இங்கெ வா" என்று என்னை அழைத்தார். அவர் முகத்தில் கோபமில்லை. ஒரு புன்னகை மட்டுமே இருந்தது. "அல்லாஹ்வோட பேசியிருக்கியா?" "ம்ஹ¤ம். பேச முடியுமா?" என்றேன். "ம், பேசலாம். அதுதான் தொலுவெ. நா பாயில படுத்துக் கெடந்தாலும் அல்லாஹ்வோட பேசிக்கிட்டே இருக்கணும்னு ஆசப்படுறேன். அதுனாலெதான் தொலுவுறேன். நீயும் பேசிப்பாரு" என்றார். குப்புறப் போடப்பட்ட காஷ்மீர் கம்பளத்தை நிமிர்த்தி நேராகப் போட்டமாதிரி என்னையும் என் வாழ்க்கையையும் புரட்டிப் போட்டது, அவர் அப்போது சொன்ன பதில். இறைவனோடு பேசுகின்ற வாய்ப்பையல்லவா ஒவ்வொரு ஜும்ஆவிலும் கெடுத்து வந்திருக்கிறேன்! சொர்க்கத்தின் திறவுகோலை கையில் வைத்துக்கொண்டு நரகத்தின் கதவுகளை திறக்க முயற்சி செய்து பார்த்திருக்கிறேன்! என் கண்ணைத் திறந்துவிட்டு சாபு கண்ணை மூடிவிட்டார். அன்றிலிருந்து பள்ளிவாசலில் அமர்ந்து விடுகின்ற ஒவ்வொரு மூச்சுக்கும் பல ஆயிரம் நன்மைகளை வழங்குகின்ற கருணையாளனோடு பேச நானும் ஆசைப்பட்டேன். அதன்பின் என் வாழ்வே அவனுடனான பேச்சாகிப் போனது. சின்ன வயதில் இறைவனோடு ஜும்ஆ விளையாட்டு விளையாட முடிந்தது. இப்போது? விளையாட்டு வினையாகிப் போனது என்பார்களே, அது இதுதானோ? ஹொத்துவா -- 'குத்பா' என்ற சொல்லின் பேச்சு வழக்கு மரூஉ. பிரசங்கம் என்று பொருள். நன்றி தீபாவளி மலர் ஆனந்த விகடன் 2004 |
|||