இயக்குனர் விஜயகாந்தையும் கூப்பிட்டிருக்கலாம்.
வழக்கம்போல் இந்தமுறையும் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகளில் சினிமா விவாதம் தவறாமல் நடந்தது. எதிர்பார்த்தது போலவே சுஹாசினி, மிஷ்கின்,பிரபுசாலமன்,சீனு ராமசாமியெல்லாம் பீடத்தில் ஏறி உட்கார்ந்துகொண்டு அருள்வாக்கு சொன்னார்கள். கூட வந்த உதவி இயக்குநர்கள் ஆடியன்ஸ் கேலரியில் உட்கார்ந்து உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர்விட்டார்கள். இயக்குநர் சங்கத்திற்கு புதிய வரவான விஜயகாந்த்தையும் கூப்பிட்டிருக்கலாம்.
விஜய் டிவியின் சினிமா விவாதம் முக்கியமானது. எது வெகுஜன சினிமா, எது நல்ல சினிமா என்னும் ஆராய்ச்சி நடந்தது. உலக சினிமா பார்த்துவிட்டு உருகுபவர்களின் பெருமதிப்பை பெற்றிருக்கும் சீரியஸ் இயக்குநர்களின் பேச்சு வேடிக்கையாக இருந்தது. என்ன பேசுவது என்று தெரியாமல் மைக்கை பிடித்தபடி முணுமுணுப்பதற்கு வராமலே இருந்திருக்கலாம். நாயகனுக்கு முன்னால் வந்த நல்ல சினிமா உதிரிப்பூக்கள் என்றார் ஒரு இளம் இயக்குநர். ஒவ்வொரு படியாக ஏறாமல் நாலு நாலு படியாக ஏறுபவர் போலிருக்கிறது. நிலா அது வானத்து மேல பாட்டுகூட கமர்ஷியல் ஐட்டம்தான் என்று இன்னொருவர் சொன்னபோது வஸந்த் அவசரமாக மறுத்தது காமெடி.
எல்லா நிகழ்ச்சிகளிலும் பரஸ்பர முதுகு சொரிதல் நிறைய இருந்தது. ஒரு இயக்குநர் பக்கத்தில் உட்கார்ந்திருந்த இன்னொரு இயக்குநரின் படம்தான் பெஸ்ட் என்றார். பதிலுக்கு மரியாதை செய்தாகவேண்டும். கிராமத்து ரவுடி கதையாக வந்து கொண்டிருந்த நேரம். இப்படியே இருந்தால் ஏதாவது ஒரு படத்தை மக்கள் குப்பையில் தூக்கிபோட்டு டிரண்டை உடைப்பார்கள் என்பது தெரியும். அந்தப்படம் என்னுடைய படமாக இருந்துவிடக்கூடாதே என்று பயந்து பயந்துதான் தான் படத்தை எடுத்துமுடித்தேன் என்று இயல்பாக பேசினார் களவாணி களஞ்சியம். இன்னொரு விவாதத்தில் உதவி இயக்குநர்களை கூட்டிவந்து கேள்விகேட்டார்கள். இன்னொரு பிரபு சாலமன் ஆவதுதான் வாழ்க்கை லட்சியம் என்றார் ஒருவர். அவரது உதவியாளராக இருக்கலாம். செத்துப்போவதற்குள் ஒரு நல்ல சினிமாவை எடுத்துடணும். ஓடுமோ, ஓடாதோ. எதைப்பற்றியும் கவலையில்லை என்றார் ஒருவர் படுசீரியஸாக. ஜாக்கிரதையாக இருககவேண்டியது கருணாநிதி குடும்பம்தான்.
ஸ்டாரில் ஏதோ ஒரு இந்திப்படம். ஷாரூக்கானும், மனிஷா கொய்ராலாவும் பாராசூட்டில் பறந்தபடியே பாட்டு பாடுகிறார்கள். அதுவும் மெலெடி மெட்டு. எண்பதுகளில் ஸ்ரீதேவியை டாவடிக்க குரு கமலஹாசன் பாடும் பாடலே தேவலை. ஷாரூக்கின் பாட்டுச் சத்தம் கேட்டு,எதிர்பாட்டு பாட வில்லன் கோஷ்டியும் வந்துவிடுகிறது. பாட்டு முடியும் வரை காத்திருந்து, பாராசூட்டை மோதவிட்டு சிரிக்கவைக்கிறார்கள். ஷாரூக்கும், மனிஷாவும் 300 அடி உயரத்தில் இருந்து பத்திரமாக கீழ விழுந்து, எழுந்து தப்பிக்கிறார்கள். இதென்ன பிரமாதம்? விக்ரம் படத்து கிளைமாக்ஸில் கமல், சத்யராஜீடன் அந்தரத்தில் சண்டையே போடுவார். ஷாரூக்கை பார்க்கவே முடியவில்லையே என்று யாரோ ஒருவர் கேள்விகேட்க, கலர் டிவி காம்பியர் சீரியஸாக சொன்னார். படம் ரீலிஸாகும்போது பிரமோஷனுக்கு வருவார்!
எலெக்ஷன் வந்தே விட்டது. அய்யாவழி தரிசனத்தில் அம்மா. பிளைட் ஏறி நாகர்கோயில் வரை வந்து ஜெயலலிதா கிறிஸ்துமஸ் கொண்டாடியபோது இருந்த அதே சொற்ப கூட்டம்தான் இப்போதும். உள்ளூர்மக்கள் ஜெயலலிதாவை ஏனோ அசுவராசியமாக பார்க்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. புரட்சி வந்தபின்னர் புரிந்துகொள்வார்கள். ஜெயா டிவியின் பில்டப்புக்கு குறைச்சலில்லை. முன்னால் கருகரு யூனிபார்மில் துப்பாக்கி ஏந்தியபடி பூனைகள், பின்னால் வெளிர் நீலநிற சபாரி சூட்டில் பில்டப் ஆசாமிகள். ஒரு கையில் வாக்கி டாக்கியோடு காரை உரசியபடியே ஓடி வருகிறார்கள். மக்கள் ஒழுங்காய் நின்று கை ஆட்டினாலும தள்ளிவிட்டு தள்ளுமுள்ளுவை உண்டுபண்ணுகிறார்கள். சிவனே என்று வேடிக்கை பார்த்த காக்கி சட்டைக்காரரும் தள்ளுமுள்ளுவுக்கு தப்பவில்லை. ஆமை வேகத்தில் மெதுவாக ஊர்ந்துபோகும் காரில் எதையோ பிடிக்கப்போவதுபோல் அவசரத்துடன் புட்போர்டில் தொங்கிக்கொள்கிறார்கள். இதையெல்லாம் பார்க்க எஸ்டிஎஸ் உயிரோடு இல்லையே!