அமெரிக்க சட்டதிட்டங்களும் நான் விரும்பும் நடைமுறைகளும்

இந்த புதிய பகுதியில், அமெரிக்க வாழ் தமிழர்கள் தங்களுக்கு அமெரிக்காவில் பிடித்தவைகளை இங்கே பகிர்ந்துகொள்வார்கள். முடிந்தவரை வேறு எந்த நாட்டோடும் ஒப்பிடாமல் அமெரிக்காவின் சிறப்புகளை மட்டுமே எடுத்துக்காட்டும் ஒரு முயற்சி இது.

வாசகர்கள் இந்த பகுதியில் எழுத விரும்பினால், உங்கள் படைப்பை feedback @tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

இந்த வாரம் : பத்மா அர்விந்த்

– ஆர்


மனிதர்களுக்கு அடையாளம் இருப்பதுபோல ஊர்களுக்கும் நாடுகளுக்கும் உண்டு.சொந்த அடையாளத்தை மனிதர்கள் இழப்பதுபோலவே நாடுகளும் தன் அடையாளம் தொலைத்து ஊடகங்கள் திணிக்கும் அடையாளத்தை ஏற்றுக்கொள்கின்றன. அமெரிக்காவின் அடையாளம் அதன் வற்றாத தாகம் பொதுவாக இன்னும் மேலே இன்னும் மேலே என்ற தாகம் அடங்காத நாடு, இன்னும் எளிதாக வாழ, இன்னும் அதிகமாக பொருள் தேட இன்னும் மேலே பதவி உயர்வு பெற, இன்னும் முன்னேற இன்னும் புதிய மாற்ரங்கள் கொண்டுவர என்று ஓடிக்கொண்டே இருக்கும் நாடு.ஆனாலும் மனிதநேயத்தையும் சமூகத்தின் மேல் இருக்கும் பற்றினையோ இன்னும் பெரும்பாலானவர்கள் தொலைக்காத நாடு.அதற்கேற்றார் போல மக்களின் அடிப்படை வாழ்க்கை எந்த சிக்கலும் இன்றி எளிதாக இருக்க எல்லாவற்றையும் நடைமுறைப்படுத்த செய்த சட்ட திருத்தங்கள். இங்கே பிடித்த சில விஷயங்கள்:

1. இப்போதுதான் இந்த நாட்டிற்கு வேலை நிமித்தம் குழந்தைகளோடு வந்திருக்கிறீர்களா? பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற கவல எல்லாம் தேவையில்லை.வாடகை வீட்டு ஒப்பந்தம் இல்லாவிட்டால் தொலைகாட்சி அல்லது மின்சார கட்டண படிவம் இருந்தால் போதும். உங்கள் வீட்டுக்கருகே இருக்கிற அரசாங்க பொதுப்பள்ளிகளில் கட்டாயம் சேர்த்துக்கொள்வார்கள். புத்தகம் முதல் பள்ளிப்பேருந்து வரை எல்லாமே இலவசம் (மக்கள் வரிப்பணத்தில்). குழந்தைக்கு டிஸ்லெக்ஸியா (dislexia) இருந்தாலோ அல்லது படிப்பதில் கவனம் தேவை என்றாலோ பள்ளியிலேயே அதற்கான தேர்வு செய்து சரியான முறையை கடைப்பிடிப்பார்கள். மூன்று வித படிக்கட்டுகளாக பிரித்து அதற்கு ஏற்றார்போல பள்ளியில் படிக்கவும் தேர்வு எழுதவும் இயலும். இதனால் புத்திசாலிக்குழந்தைகள் பள்ளியிலேயே advanced placement மூலம் கல்லூரிப் பாடங்களை படிக்க இயலும்.மனநலம் குன்றிய குழந்தைகள் தனி சிறப்புப் பயிற்சியும் உண்டு. சில சமயம் அந்தக் குழந்தையின் (தேவையைப் பொறுத்து) வீட்டிற்கே வாரம் மூன்று முறை ஆசிரியைகள் குறிப்பிட்ட நேரம் போய் பாடம் சொல்லித்தருவதும் உண்டு. இந்த பள்ளி முறையிலோ அல்லது கலாச்சார பாதிப்போ என் குழந்தை அடைய தேவையில்லை என்று நினைத்து வீட்டிலேயே சொல்லிக்கொடுக்க நீங்கள் தயாரானால் அதற்கான பாடத்திட்டங்கள் வரைமுறைகள், பெற்றோருக்கு அதற்கான பயிற்சி அனைத்தும் தரப்படும். ஏழைக்குழந்தைகளுக்கு காலை மாலை இ ல வ ச உணவு,பெற்றோர்கள் போதை மருந்துக்கு அடிமையானவர்களாக இருந்தால் குழந்தைகளுக்கு அதற்கான கவுன்சிலிங் எல்லாமே இலவசம்.

2. பிறக்கும் போதே மனநலம் குன்றியவர்களோகவோ அல்லது ஆட்டிசம் கொண்டவர்களோ இருந்தால், பெற்றோருக்கு எந்த வித விசா இருந்தாலும், தங்கள் குடிமகன்களை அமெரிக்கா கவனித்துக்கொள்கிறது. தனியாக குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் பெற்றோருக்கு தங்களுக்கான நேரம் எடுத்துக்கொள்ள வாரம் மூன்று நாட்கள் தினமும் இரண்டு  மணி நேரம் அந்தக்குழந்தைகளை கவனித்துக்கொள்ள சமூகப் பணியாளாரை அனுப்பவது, பேச்சு எழுத்துக்கான சிறப்பு பயிற்சி இலவசமாக அளிப்பது என எல்லாம் இதில் அடங்கும். காதுகேளாவதர் ஒருவர் பதிவு செய்துகொண்டால், தொலைபேசியோ, புகை கண்டுபிடிப்பு சாதனம் எழுப்பும் ஒலியோ கேட்காமல் போகக்கூடும் என்பதற்கால வீட்டில் தீ விபத்து வர க்கூடிய சாத்தியம் இருந்தால் பளீரென்று எரியும் சுழலும் விளக்குகள், கதவைத்தட்டி எழுப்பும் காவலர் என்று எல்லா வசதிகளும் செய்துதரப்படுகிறது. எல்லாமே நாம் கட்டும் வரிப்பணத்தில்தான்(இதற்காக சிறப்பான வரி எல்லாம் இல்லை) என்றாலும் இதைச் செய்துகொள்ள யாருக்கும் லஞ்சம் தரவேண்டியதும் இல்லை, கால்கடுக்க அலுவக வாசலில் காத்திருக்கவும் தேவையில்லை. பதிவு செய்துகொண்டால் போதும். 

3. சாக்கடையைச் சுத்தம் செய்பவரானாலும் தீயணைப்பு வீரரானாலும் அதற்கான முழு பாதுகாப்பு, ஊழியர்கள் உடல் நலனுக்கான பரிசோதனைகள், தேவையான protective gear எல்லாமே பரிசோதனைக்குட்பட்டு தரப்படுவது அரசின் பொறுப்பு. எந்த உயிருமே சாதாரணம் இல்லை. அதேபோல எந்த வேலையுமே தாழ்ச்சி இல்லை. வாழ்க்கையில் இன்று வெற்றிகரமாக இருக்கும் ஒருவர் கூட தான் தினக்கூலிக்காக செய்த வேலைகளை சொல்லிக்கொள்வதில் வருந்துவதோ அல்லது தயங்குவதோ இல்லை.

4. குடும்பத்தில் இருக்கும் அனைவரும் ஒரு வேளையாவது சேர்ந்து உணவு உண்ண வேண்டும் என்பதும் கட்டாயமாகச் சேர்ந்து விடுமுறை நாட்களை செலவிடுவதும் எழுதாத விதிமுறை. கிறிஸ்துமஸ் கணவனின் வீட்டோடு என்றால், நன்றி நவிலல் மனைவியின் குடும்பத்தாரோடு. நம் ஊரில் தீபாவளிக்கு உறவினர் சேர்ந்து முன்பெல்லாம் இனிப்பு வகைகள் செய்வது போல இங்கே குழந்தைகளோடு சேர்ந்து cookies செய்வது, அதை பரிமாறிக்கொள்வது எல்லாம் உண்டு. வருடத்தில் ஒருநாள் தங்கள் குடும்ப உறவினர்கள் எல்லாருடனும் சேர்ந்து family reunion செய்து கொண்டாடி உறவுமுறை அறுந்து போகாமல் பேணுகிறார்கள். Family reunion வழக்கம் இல்லாமல் போனால் ஆண்டுக்கொருமுறை குடும்ப newsletter அனுப்பிக்கொள்ளும் பழக்கமும் இருக்கிறது.நம் ஊடகங்கள் சொன்னதுபோல உடனேயே விவாகரத்தெல்லாம் நடப்பதில்லை. 50 வருடங்களாக சேர்ந்து வாழும் தம்பதியினரும், பேரன் பேத்தி, பிள்ளைகள் மறுமணம் செய்துகொண்டிருந்தாலும் கூட அந்த பேரன் பேத்திகளோடும் உறவைத்தொடரும் தாத்தா பாட்டி  என்றெல்லாம் மிக பெரிய குடும்ப உறவுகளும் அதைப்பேணுவதும் உண்டு. அதேபோல பெற்றோரையும் அன்புடன் கவனிப்பதும், adult day care அல்லது முதியோர் இல்லத்தில், சீனியர் ஹவுசிங் இல் இருந்தாலும் மருத்துவ காரணங்களுக்காக போய் பார்த்தும் செலவை பங்கிட்டும் கவனித்துக்கொள்பவர்கள் அதிகம். குழந்தைகளின் படிப்புச் செலவு, திருமண செலவில் முடிந்த வரை உதவும் பெற்றோர்களும் உண்டு. இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற சமூக கட்டாயம் இன்றி முடிந்தவரை அன்பும் அனுசரணையுமாக இருப்பது எனக்கு பிடித்திருக்கிறது.நம் ஊர் ஊடகங்கள் சொல்வது போல, அநாதையாக விட்டுவிடுவதெல்லாம் இல்லை. 

5. முதியோர்களுக்காக நிறைய சலுகைகள், அரசாங்க பூங்காக்களில் இலவச அனுமதி, gold passport இருந்தால் கட்டிடம் அருகே கார் நிறுத்துமிடம். வயதான ஒரே காரணத்தால் இறப்பை எதிர்நோக்கி வாழ்க்கையை கழிக்காமல், பொறுப்புகள் தாண்டிய  நிலையில் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ நினைக்கும் முதியவர்கள் மனோபாவம்.

6. 2 வயதுக்குழந்தை முதல் படிக்கும் ஆர்வத்தை தூண்டும் வண்ணம் நிறைய நிகழ்ச்சிகள் நடத்துவது, ஆங்கில தெரியாதவர்களுக்காக ஆங்கிலம் பாடம் நடத்துவது அந்த அந்த community ஏற்ற மாதிரி திரைப்படங்கள், பாடல் CD என சகலமும் கிடைக்கும் அருமையான நூலகங்கள்.

7. மனநலம் இல்லாமல் போவதை ஒரு stigma ஆக நினைப்பது இல்லை. சில நாடுகளில் மிகப்பெரிய எழுத்தாளர்களே சர்வ சகஜமாக அது ஒரு  பையித்தியம் என்று தரக்குறைவான தொனியில் பேசும்போது வருத்தமாக இருக்கும். இங்கே அப்படி இல்லை, கணவன் மனைவி இடையே நிறைய பிரச்சினை இருந்தால் அதற்காக கவுன்சிலர் உதவியை நாடுகிறார்கள். அதே போல குழந்தைகள் மன நல மருத்துவர்கள், விவாகரத்தானாலும் குழந்தைகளை மனநல மருத்துவர்களிடன் அழைத்து அந்த மாற்றத்தை உணர்கிற வழியில் சொல்வது என அதையும் உடல்நலக் குறைபாடாகவே பேணுவது மட்டும் இன்றி அதற்காக ஆலோசனைகளும் பெறுகிறார்கள்.

8. உடல் ஊனமுற்றவர்கள் சக்கர நாற்காலி, மற்றும் குழந்தைகளின் ஸ்ட்ரோலர்கள் எளிதாக செல்லும் வண்ணம் சாலையில் இருக்கும் ramp வசதி, புகைவண்டி, பேருந்து எல்லாவற்றிலும் சக்கர நாற்காலியுடனே ஏறிக்கொள்ளுமாறு திட்டமிட்டு  கட்டாயமாக்கப்பட்ட படிகள், பொழுதுபோக்கு பூங்காக்களில் கூட உடல் ஊனமுற்றோர் சங்கடம் இன்றி செல்ல ramp வசதி, சிறப்பு சலுகைகள் என நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் சில அமைப்புகளில் கூட கவனம் செலுத்தும் அரசாங்கம்.

9. தங்களது சமூகத்திற்கு எந்த வகையிலாவது உதவ வேண்டும் என்ற எண்ணம் அதிகம். தன்னார்வலர்களாக தங்கள் ஊரில் ஏதேனும் உதவிகள் செய்ய தங்கள் நேரத்தை தருகிறார்கள். அது சூப் கிச்சனாகவோ அல்லது மருத்துவமனை, பள்ளி கூடங்கள் அல்லது கல்வி திட்டங்கள் விடுமுறை தினங்களில் சில மணிநேரங்களாவது சமூகத்திற்கு தர விருப்பம் அதிகம்.பள்ளி நாட்களில் இருந்தே இந்த சமூக தன்னார்வல ஆர்வம் வந்துவிடுகிறது. அதுவும் இப்போதெல்லாம் கல்லூரிகள் குறைந்தது 200 மணி நேரமாவது தன்னார்வலராக உழைத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதால், பழகி விடுகிறார்கள். தீயணைப்பு நிலையங்கள் பலவற்றில் பாதிக்கு மேல் தீயணைப்பு வீரர்கள் தன்னார்வலர்களே.

10. அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்கு வரிவிலக்கு அளித்து, அவை எல்லா காலங்களிலும் எல்லாராலும் வாங்கக்கூடியதாக இருக்க வழிவகை செய்த விதம். வருமான கோட்டிற்கு கீழே இருப்பவர்களும், food stamp வாழ்க்கை நடத்துபர்கள் கூட வாங்கி உண்ண முடிகிற அத்தியாவசைய உணவுப்பொருட்கள் என எனக்குப் பிடித்த நடைமுறைகள் அதிகம்.

11. இன்னொரு முக்கியமான நடைமுறை: உங்கள் குழந்தை படிக்கும் பள்ளியின் கல்விமுறை தயாரிப்பு அல்லது நிதி பங்கீடு குறித்து கேள்வி இருக்கிறதா, நிதிப் பங்கீடு சரியான முறையில் நடக்கவில்லை என்ற சந்தேகமா? அல்லது உங்கள் நகர நிதி பங்கீடு கூட்டத்தில் கலந்து கொண்டு எந்த பூங்கா எப்படி சீரமைக்க வேண்டும் என்று சொல்ல விரும்புகிறீர்களா அல்லது உங்கள் அருகாமையில் இருக்கும் மரத்தை வெட்டுவதை தடுக்க விரும்புகிறீர்களா? ஒரு குறிப்பிட்ட நபருக்கே காண்ட்ராக்ட் தருகிறார்களா என்று பார்க்க அல்லது கேள்வி கேட்க வேண்டுமா? தயங்க வேண்டியதில்லை. நீங்களும் முக்கியமான இந்த board meeting, அல்லது Council/Freeholder பங்கேற்கலாம்.கல்வி திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டுமா? செய்யலாம் உங்களுக்கு மாதம் ஒரு மணி நேரம் தன்னார்வலராக செயல் பட விருப்பம் இருந்தால் நீங்களும் இக்குழுக்களில் பங்கேற்கலாம். வருட ஆரம்பத்திலேயே எந்த நாட்களில் இந்த கூட்டம் எத்தனை மணிக்கு நடக்கும் என்ற விவரம் நகரசபை கட்டிடங்களில் கிடைக்கும். எல்லோரும் கலந்து கொள்ள வசதியாக இரவு 7 மணிக்கு மேல்தான் கூட்டங்கள் நடக்கும்.அதேபோல செனேட்டர், காங்கிரஸ் உறுப்பினர் ஆகியோரிடம் பேசவோ, இல்லை முக்கிய பாலிஸி அல்லது கொள்கைகளில் விருப்பம் இல்லையா நீங்களும் தன்னார்வலராக advocacy குழுவில் சேர்ந்து நேராகச் சந்தித்தோ அல்லது இமெயில் அல்லது தொலைபேசி மூலமோ உரையாடலாம். நாம் ஒரு கூட்டம் தலைமையேற்று நடத்தும் போது பங்கேற்பவர் பொது/உடல் நல  கமிஷனரே ஆனாலும் தலைமைப்பொறுப்பு எனக்கென்றால் அவர்கள் மரியாதையுடன் நாம் சொல்வது படி அல்லது பேசி முடிந்த பின் நம்மிடம் விடைபெற்றுக்கொண்டே செல்வார்கள். அவர்கள் விருப்பத்திற்கு நாம் அவர்களை பேச வைக்க நேரத்தட்டுப்பாடு காரணமாக முடியாது என்றால் அதைச் சொல்ல பயப்படத் தேவையில்லை.

தொடர்புடைய படைப்புகள் :

2 thoughts on “அமெரிக்க சட்டதிட்டங்களும் நான் விரும்பும் நடைமுறைகளும்

 • February 21, 2011 at 8:00 am
  Permalink

  விரிவான, தெளிவான கட்டுரை.

  Reply
 • February 20, 2011 at 7:01 pm
  Permalink

  எந்த உயிருமே சாதாரணம் இல்லை. அதேபோல எந்த வேலையுமே தாழ்ச்சி இல்லைExcellent.. According to me this is what I love abt here.

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : February 16, 2011 @ 10:00 pm