ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

விநாயகருடன் கருணாநிதி சந்திப்பு

May 13, 2011 by · 2 Comments 

   

 

(2002ல் எழுதிய நெத்தியடி.. வாசகர்களுக்காக மீள்பதிவு)

கருணாநிதிக்கு 'போரடித்தால்' விநாயகரைப் பிடித்துக் கொள்வார். அவரை ஏன் அறுக்கிறீர்கள், ஆடுகிறீர்கள் என்று ஆயிரக்கணக்கில் கேள்விகள் கேட்பார். இதெல்லாம் போதாது என்று 'அவர் வடநாட்டை சேர்ந்த கடவுள், தமிழ் தெரியாதவர்' என்றெல்லாம் நக்கல் அடிப்பார். விநாயகர் பொறுத்துப் பார்த்தார்.. 'இந்த ஆளை கேள்வி கேட்காமல் விட மாட்டேன்!' என்று பூலோகத்திற்கே வந்து விட்டார். (கற்பனை இருக்க கவலையேன்..?!?!). இனி விநாயகருக்கும் கருணாநிதிக்கும் ஆன கற்பனை பேட்டியை நெத்தியடியில் பார்ப்போம்.

(விநாயகர் மூஞ்சூர் வாகனத்தில் இருந்து இறங்குகிறார். கருணாநிதி விநாயகரைப் பார்த்ததும், ஒன்றும் விளங்காமல் ….தன்னையும் அறியாமல் 'வணக்கம்' கூறுகிறார்).

 

 

விநாயகர் : காலை வணக்கங்கள்..!

கருணாநிதி : வணக்கம்..என்ன இவ்வளவு தூரம்…?

 

விநாயகர் : எனக்கு தமிழ் தெரியாதென்று சொன்னீராமே…அப்படியே தங்களிடம் தமிழ் கற்றுக் கொள்ளலாமென்று வந்தேன்.

கருணாநிதி : அட..அதுக்கெல்லாம் கோச்சுக்கலாமா? ராமதாசுக்கு ஒரு ரஜினி, ஜெயலலிதாவுக்கு ஒரு சோனியா..எனக்கு நீங்க, அவ்வளவு தான். நான் மனுஷங்களோட பிரச்சினை வெச்சுக்கறதே இல்லை..ஏன்னா, எங்களுக்கு எப்போ சோனியா தயவும், ராமதாஸ் தயவும் தேவைப்படும்னு தெரியாது. எல்லோருக்கும் கஷ்டம் வந்தா, உங்ககிட்டே முறையிடுவாங்க. ஆனா…எனக்கு அரசியல் நடத்த கஷ்டம் வந்தா, உங்களைப் பற்றியே முறையிடுவேன்.

 

விநாயகர் : அது என்ன..எப்ப பார்த்தாலும் என்னை மட்டும் நக்கல் வேண்டிக் கிடக்குது? முருகன், கிருஷ்ணரை எல்லாம் விட்டுடறீங்க?

கருணாநிதி: எனது பிள்ளையை யார் என்று கேட்கும் ஆட்சி நடப்பதினால் தான்…பிள்ளையாரை மட்டும் நக்கலடிக்கிறேன். எனது பக்கத்தில் இருப்பது துரைமுருகன், நான் இருப்பதோ கோபாலபுரம்… அந்தப் பாசமும் கொஞ்சம் எனது அரசியலில் தொனிக்குமே?

 

விநாயகர் : என்னிடம் உமது தமிழையெல்லாம் போட்டு காட்டாதீர். உமக்கு அப்பனெல்லாம் பார்த்து வந்தவன் நான். எனது சதுர்த்தி பூஜையை கிண்டலடிக்கும் எண்ணம் எதனால் வந்தது..?

கருணாநிதி : ஐந்தாண்டு காலம் எதையும் கிண்டலடிக்காமல், அமைதியாய் இருந்த எனக்கு ஆட்சி போனதே? அந்த கடுப்பு தான்..இப்போது அறிக்கையாய் வெடிக்கிறது!

 

விநாயகர் : கல்யாணத்துக்குப் போனோமா…மணமக்களை வாழ்த்தினோமா.. என்பதை விட்டு, எதுக்கு அங்கெல்லாம் வேண்டாத வியாக்யானம் பாடுகிறீர் ?

கருணாநிதி : என்னைப் பொறுத்தவரை …நிருபர்களின் பேட்டியில் நோ கமெண்ட்ஸ் அடிப்பேன். கல்யாண வீட்டில் வெட்டி கமெண்ட்ஸ் அடிப்பேன். நான் வித்தியாசமானவன்.

 

விநாயகர் : உமது பிள்ளைகள் அடித்துக் கொள்கிறார்கள்..காவிரிப் பிரச்சினை கை மீறிப் போய் கொண்டிருக்கிறது…எல்லாவற்றையும் விட்டு விட்டு, என்னை எதற்கு நோண்ட வேண்டும்?

கருணாநிதி : உங்கள் குடும்பத்தில் ஞானப் பழத்தில் பிரச்சினை வரவில்லையா? அது போலதான், அழகிரிக்கும், ஸ்டாலினுக்கும் ஆயிரம் பிரச்சினை இருக்கும். அட…இப்போது காவிரி கையை மீறிப்போனாலும் நல்லதே…கட்டுப்பாடுகளை உடைத்து வந்தாலும் நலமே! என்னைப் பொறுத்தவரை, நான் எதையாவது சூடாக கிளப்ப வேண்டும் என்று தோன்றியது. இது நாள் வரை, நான் கிளப்பும்  கோமாளித்தனமான பகுத்தறிவுக்கெல்லாம், வாயை மூடிக் கிடப்பது இந்து மதமும், அதை கடை பிடிப்பவர்களும் தான். சொல்லப்போனால்..அதையெல்லாம் மீறி, என்னை வக்காலத்து வாங்கும் லாயக்கற்றவர்கள் நிறைய பேர் இருப்பதும் இந்த மதத்தில் தான்.

 

விநாயகர் : நீர் இதையெல்லாம் யோசித்து தான் சொல்கிறீரா?

கருணாநிதி : இது போன்ற விஷயங்களை பேசுவதற்கு நான் யோசிக்கவும் வேண்டுமா…? இது எமக்கு கை வந்த கலை. பழனிவேல் ராஜன் பெரிசாய் குங்குமப் பொட்டு வைத்து வருவார், ஆனால்..நான் குங்குமப் பொட்டை கிண்டலடிப்பேன். பத்திரிக்கைக்கு குங்குமம் என்று பெயர் வைப்பேன். அதே சமயத்தில், பழனிக்கும் சபாநாயகர் பதவி கொடுப்பேன். சமஸ்கிருதம் கூடாதென்பேன். சித்தி என்றால் வெற்றி என்று சமஸ்கிருதத்தில் சொல்வார்கள் என்று மேடைகளில் பேசுவேன். இவ்வளவு ஏன்.. எமது தலைமைக் கழகத்தின் பெயர் அறிவாலயம் தானே?! யாராவது ஆலயத்திற்கு அர்த்தம் கேட்டால், சுத்தமானவர்கள் கூடும் இடம் என்பேனே ஒழிய, கடவுள் சம்பந்தப்பட்ட சமாச்சாரம் என்று ஒத்துக் கொள்ளமாட்டேன். இதெல்லாம், நமது கழகக் கடைகளில் எப்போது பரப்பினாலும் வியாபாரம் ஆகும் சரக்கு அய்யா!

 

விநாயகர் : இது போன்ற உமது உளறல்களால் தான், உமது கடையை அவ்வப்போது மூட வேண்டி வருகிறது என்பது புரியவில்லையா..? இதற்கெல்லாம் காரணம் 'சனிப்பெயர்ச்சியோ' என்று எனக்கு தோன்றுகிறது.

கருணாநிதி : என்ன…சனிப்பெயற்சியில் எனக்கு பிரச்சினையா? இப்போதே எனது மனைவிகளிடம் சொல்லி, கோயில் குளங்களை சுற்ற சொல்ல வேண்டும். ஸ்டாலினை மேல்மருவத்தூர் போக சொல்ல வேண்டும். என்னால் போக  முடியாதென்றாலும், எனது குடும்பத்தினருக்கு எல்லா சலுகைகளும் உண்டாயிற்றே ?!

 

விநாயகர் : இங்கே பாரும் கருணாநிதி..உமது தமிழ் அருமை. உமது புலமை நன்று. ஆனால், அதற்காக உமது பிதற்றலையெல்லாம் சரியென்று கேட்டுக் கொள்ளும் இளைஞர் அணி உறுப்பினன் அல்ல நான். கிருபானந்தவாரியார் வளர்க்காத தமிழா..? ஊர் ஊராய் சென்று, கோவில்களில் நல்ல விஷயங்களை அனைவருக்கும் செந்தமிழில் வளர்த்தவர். இவ்வளவு ஏன், உமது பட்டறையிலிருந்து கிளம்பிய கண்ணதாசன் கடைசி காலத்தில் எழுதியது 'அர்த்தமுள்ள இந்துமதம்' தான். அவரிடம் விளையாடாத தமிழா..? நீர் இப்படி என்னையும், இந்துக்களையும் சீண்டிக் கொண்டே இருப்பது நல்லதல்ல!

கருணாநிதி : (கோபமாக) சிறைகளுக்கு பயப்படுவன் அல்ல நான். புற நானூற்றுப் போருக்கு தயாராகி விட்டான் தமிழன். பாளையங் கோட்டையில் பாம்புகளுக்கும், பல்லிகளுக்கும் நடுவில் படுத்து உருண்டவன் நான். என்னையே எச்சரிக்கிறீரா..?

 

விநாயகர் : பாளையங்கோட்டையில் பாம்போடு உறங்கிய தைரியசாலி..எதற்கய்யா 'அய்யோ' என்று அலறியபடி சிறைக்கு போக வேண்டும். முகத்தில் குத்த வந்த போலிஸ்காரரிடம் சீறி இருக்க வேண்டியது தானே..?

கருணாநிதி : வாய்ப்பு கிடைத்தது என்று வரம்பு மீறிப் பேசுகிறீர். இது மட்டும் எனது தமிழ் மக்களுக்கு தெரிந்தால்…என் மேல் பரிதாபப்படுவார்கள். 'ஏன் இப்படியெல்லாம் பேசுகிறார்' என்று உன்னையே திட்டுவார்கள்?

 

விநாயகர் : என்னை யாரும் உம்மை விட திட்டி விட முடியாது. அது போக, கொஞ்சம் மக்களுக்கும் விழிப்புணர்வு வந்து கொண்டு தான் இருக்கிறது. கடவுளான என்னை வரம்பு மீறிப் பேசும் உம்மையே கடவுளாக சிலர் நினைத்துக் கொள்ளும்  போது, நான் பேசுவதெல்லாம் தவறே இல்லை. அதனால் தான் இந்த முறை, சங்கராச்சாரியாரில் ஆரம்பித்து அர்ச்சகர் சங்கம் வரை உம்மை கிழித்திருக்கிறார்கள். கடவுள் மறுப்பவர்கள் எதுவும் பேசலாம்…ஆனால், கடவுளை ஆதரிப்பவர்கள் மட்டும் மௌனமாக இருக்க வேண்டும் என்று கருதுவது தவறு என்பது மக்களுக்கும் புரிந்து தான் வருகிறது.

கருணாநிதி : இத்தனை பேசுகிறீரே…உமது பக்தனுக்கெல்லாம் காட்சி அளிக்காத நீர்… எனக்கு காட்சி அளித்திருக்கிறீர்?

விநாயகர் : என்னை பார்த்ததை நீர் வெளியே சொன்னால், உமது நாத்திகம் நாறி விடும். அப்படியே சொன்னாலும், நமது உரையாடல்களை எப்படியாவது மக்களுக்கு தெரிய வைத்து விடுவேன். ஆகவே உஷாராய் இருக்கவும். (சிறிது இடைவேளை விட்டு, நமுட்டு சிரிப்புடன்) பகுத்தறிவோடு நடந்து கொள்ளவும். 

 

Last but not least, if possible go to GOA permanently and write something useful. Yup..I know english too! Byeeeeee..!

(ஜெயலலிதா தனக்கு 'ஆங்கிலம் தெரியாது' என்று திட்டியதை தான், விநாயகர் குத்திக் காட்டுகிறாரோ…என்று யோசித்தபடி நிற்கிறார் கருணாநிதி)

தொடர்புடைய படைப்புகள் :

Comments

2 Responses to “விநாயகருடன் கருணாநிதி சந்திப்பு”
  1. சுப. இராமனாதன் says:

    ஒருவரின் தெய்வ நம்பிக்கையை ஏளனம் செய்வது எவ்வாறு தவறோ, அதேதான் ஒருவரின் தெய்வ நம்பிக்கையின்மையை ஏளனம் செய்வதும்.

    கருணாநிதியின் குடும்பம் பக்திமாயமாய் உள்ளதை நக்கல் அடிக்கும் ஆசிரியர், கருணாநிதி இவ்வாறு இருந்தும், அவரின் நம்பிக்கையை குடும்பத்தார் மீது திணித்து, கட்டாயப்படுத்தி, அவர்களின் கோயில், குளம் செல்லும் சுதந்திரத்தை கருணாநிதி தடுத்திருந்தால், அப்போது அவரைப் போற்றியிருப்பாரோ?

மனசுல பட்டதை சொல்லுங்க

கடைசியாக : May 13, 2011 @ 11:44 am