விளையாட்டாய் எழுதலாம் வெண்பா

 

பள்ளியில் யாப்பிலக்கணம் சொல்லிக் கொடுத்தது மகாதேவன் சாரா, கிருஷ்ணப்பாவா என்று சரியாக நினைவில்லை. ஆனால் எனது அண்ணனுக்கு வகுப்பெடுத்த டிவிஆர் சார் ஈற்றடியெல்லாம் கொடுத்து வெண்பா எழுதி வாருங்கள் என்று மாணவர்களுக்கு ஹோம் வொர்க் கொடுப்பார். பசங்களும் மாய்ந்து மாய்ந்து வெண்பா எழுதிக் கொண்டு போவார்கள். அண்ணனுக்கு உதவுகிறேன் பேர்வழி என்று நானும் கொஞ்சம் தேமா, புளிமா எல்லாம் கடித்து சுவைத்தேன். பிறகு இணையத்தில் வந்துதான் எதுகை மோனை, செப்பலோசை, அகவலோசை எல்லாம் அறிந்து கொண்டது.  

பா புனைவதை பாடமாக படிப்பதை விட இப்படி விளையாட்டாக செய்யும்போது விருப்பம் அதிகம் உண்டாகிறது.  இந்த இலக்கணத்திற்கெல்லாம் அடிப்படை ஓசை நயமும், சந்தமும் என்று புரிந்து கொண்டால் சுவாரசியம் இன்னமும் கூடுகிறது. வெண்பா புனையும் வித்தையை வெகு எளிமையாக 7 ரூல்களில் எளிமையாக சொல்லித் தருகிறது ஈஸியா எழுதலாம் வெண்பா' புத்தகம்.

 

 

தலைப்பு – ஈஸியா ஏழுதலாம் வெண்பா

ஆசிரியர் – இலவசக்கொத்தனார்

பக்கங்கள் – 80

விலை – ரூ 30/-

பதிப்பகம் – கிழக்கு பதிப்பகம் (மினிமேக்ஸ்)

மெயில் முகவரி – support@nhm.in; elavasam@gmail.com

 

புத்தக ஆசிரியர் 'இலவசக் கொத்தனார்' பிரபலமான தமிழ்பதிவர். இணையத்தில் தமிழில் எழுதுவதெல்லாம் சாத்தியமா என்று மலைப்பாக இருந்த காலத்திலேயே இவர் பிரபலமான ப்ளாகர். ப்ளாகில் அதிகமான வாசகர்களை எப்படிப் பெறுவது என்று நோட்ஸ் எல்லாம் போட்டு கலக்கிக் கொண்டிருந்தவர். தற்சமயம் ட்விட்டரில் மட்டும் அதிகம் காணப்படுகிறார். சில வருடங்களுக்கு முன்னர் இவருடைய வலைப்பதிவுக்கு அப்ரைஸல் செய்திருக்கிறேன். அதற்கு பிரதிபலனாக இப்பொழுது இவருடைய முதல் புத்தகத்தின் கையெழுத்திட்ட பிரதியை அனுப்பி வைத்திருந்தார். நன்றிகள்.

பா யாத்தலை படிப்படியாக விளக்குகிறது இந்தப் புத்தகம்.  டாஸ்மாக், ஐடி கம்பெனி மொட்டை மாடி என்று வித்தியாசமான பின்னணியில் வெண்பா பற்றி அறிமுகம் செய்யும் ஆசிரியர் அடுத்த சில சாப்டர்களில் எளிய எடுத்து காட்டுகளோடு விறுவிறுப்பாக பாடம் எடுக்கிறார்.  புத்தகத்தை முடிக்கும்போது நாம் உறுதியாக நான்கைந்து வெண்பா எழுதியிருப்போம். 

எனக்கு வகுப்பெடுத்த கணித ஆசிரியர் முத்துசாமி அவர்கள் LCM, GCD போன்ற கணித பதங்களுக்கு அவர் காலத்தில் படிக்கும்போது எப்படி நினைவில் வைத்திருந்தோம் என்று ஒரு உத்தி சொல்வார். "உப்புமா பொட்டலத்தை மடி" (உத்தம பொது மடங்கு), "அவுத்த பொட்டலத்தை மடி" (அதம பொது மடங்கு). ஆங்கில வழியில் கணிதம் படித்த எனக்கு இந்த தமிழ்ப் பதங்கள் இன்னமும் நினைவில் இருப்பதற்கு இப்படியான எளிய நினைவூட்டல் உத்திகள்தான். 

அது போல இந்தப் புத்தகத்திலும் சினிமா நாயக நாயகியர் மூலமாக சில ஃபார்முலாக்கள் இருக்கிறது. ஸ்டார் குரூப், ஹீரோயின் குரூப், வில்லன் குரூப் என்று செட் பிரித்து, ஸ்டார்களுக்கு பின்னால் நிரை அசையும், ஹீரோயின்களுக்கு பின்னால் நேர் அசையும் வரும் என்று ஒரு ரூல். அதிவேகமாக பா புனையும் விருப்பம் உள்ளவர்களுக்கு இந்த உத்திகள் நல்ல உதவியாக இருக்கும்.

சாப்டர் பிரிப்பதிலும், தலைப்புகள் சேர்ப்பதிலும் நுணுக்கமாக கவனம் செலுத்தியிருக்கிறார். அன்றாட வாழ்க்கையில் எதிர்ப்படும் பாத்திரங்களைக் கொண்டே பாந்தமான உரையாடலில் பாடம் எடுத்து முடிக்கிறார். ஆங்காங்கே எளிமையான எடுத்துகாட்டுகளும், படிப்படியாக எப்படி நல்ல பாக்களை வடித்தெடுப்பது என்று செய்முறை விளக்கமும் பிரமாதம். 

எடுத்துகாட்டுகளில் எளிமையாகத் தொடங்கி,

 

'கொம்பா இவளுக்கு என்றேநீ கேட்காதே 

ரம்பா தொடையே சிறப்பு'

 

இறுதி அத்தியாயத்தில்

 

'பாட்டாய்த் தமிழில் பாடவும் பாடுவேன்,

காட்டவா இங்கே கணப்பொழுதில் – கூட்டியே 

கோர்த்து எழுதிக் குறளும் படைக்கலாம்

வார்த்தைகள் எடுத்துநீ வா'

 

என்று அமர்க்களமாக ஒரு வெண்பாவோடு முடிக்கிறார். 

இந்த புத்தகத்தில் ஒரே ஒரு விமர்சனம் என்னவென்றால் ஜனரஞ்சகமாக எழுத வேண்டும் என்றால் சினிமாவைப் பற்றி வலிய திணித்தும், ஆங்கிலச் சொற்களை வாரியிறைத்தும்தான் எழுத வேண்டும் என்பதில்லையே. அதுவும் மெட்ராஸ் தமிழில் ஆரம்ப அத்தியாயம் எதற்கு என்று புரியவில்லை. மெட்ராஸ் மக்கள் மட்டும் புத்தகம் படித்தால் போதும் என்று நினைத்துவிட்டாரோ என்னவோ.

எளிமையாக, விளையாட்டுப் போல, அங்கத சுவையுடன் எழுதும் இலவசக் கொத்தனாரின் பாணிக்கே நல்ல வரவேற்பு இருக்கும். பொதுவாக இலவசக் கொத்தனார் புதிர்கள், குறுக்கெழுத்து போட்டிகள், விளையாட்டுகள் என்று அதிக ஆர்வம் உள்ளவர். இவருடைய குறுக்கெழுத்து போட்டிகள் மிகக் கச்சிதமாக இருக்கும். 'எண் நடிகை எட்டாம் இடத்திலிருந்து ஒரு படி மேலே (5)' போன்ற திராபை குறிப்புகள் இல்லாது அர்த்தபூர்வ குறுக்கெழுத்து புதிர்களை வடிவமைப்பதில் சமர்த்தர். 

"நான் வாசிச்ச கடம் உருண்டா போச்சு? (4)" போன்ற எளிமையான குறிப்பாகட்டும், "முடிவில்லா கிஸ்தியை தீயிலிட்டு மகிழ் (5)" என்று வார்த்தையை உடைத்துப் போட்டு குறிப்பு சொல்வதாகட்டும் ஒரு சொல் கூட மிகாமல் கச்சிதமான புதிர்களால் கட்டங்களை கட்டமைத்துவிடுவார். இதோ ஒரு முரண்நகை குறிப்பு. "நாத்திகம் முடிய பரம்பொருள் தொடங்க ஆடையின்றி அலைவோம் (6)"

இலக்கண நோட்ஸ், யாப்பு இலக்கணம் என்று தமிழ் வாத்தியார் அவதாரம் முடித்து இன்னமும் பல புதிய முயற்சிகளையும் முன்னெடுக்க இலவசக் கொத்தனாருக்கு வாழ்த்துகள்!

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : July 21, 2011 @ 6:48 pm