அமெரிக்கா மறுபடியும் உயர முடியுமா ?

 

நாட்டையோ, மக்களையோ, அவர்களின் முன்னேறும் தீர்மானத்தையோ பொறுத்தமட்டில் அமெரிக்கா மறுபடியும் உயரும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.  ஆனால் அவ்வண்ணம் அது உயர அதன் அரசு சில உண்மைகளை உணர்ந்து தன் சிக்கலின் உண்மையான காரணங்களை நீக்க முயலுமா என்பதே கேள்வி.  இல்லாவிடில் அதன் தாழ்வு நீண்ட காலம் நிலைத்து நிற்கும். அமெரிக்காவின் முன்னேற்றம் என்பது அமெரிக்காவோடு நின்றுவிடாது. அமெரிக்காவை நம்பி இருக்கும் பல நட்பு நாடுகளையும் அது முன்னேறும். சரி அப்படி முன்னேற அமெரிக்கா குறைந்த பட்சம் செய்ய வேண்டியது என்ன ?
 
1. லஞ்ச ஊழல்களை குறைக்க வேண்டும். நேரடியாக லஞ்சம் என்று வாங்கவில்லை என்றாலும் தேர்தல் அன்பளிப்பு, பிரச்சார செலவு இப்படிபட்டவைகளும் லஞ்சம்தான். 
 
2. அரசியல்வாதிகளுக்கு மற்ற சராசரி மனிதருக்கு உள்ள சலுகைகளுக்கும் மேல் எதுவும் தரக்க் கூடாது.  அப்பொழுது தான் சராசரி மனிதரின் தேவைகளும் கஷ்டங்களும் அவர்களுக்குப் புரியும்.
 
3. வேண்டாத வழக்கு போட்டு அதன்மூலமாக அதிகமாக பணம் பண்ணலாம் என்பதை முடியாமல் செய்யவேண்டும். மருத்துவர்கள், கட்டுமான பணியாளர்கள் போன்றவர்கள் தற்போது தங்கள் வருமானத்தில் பெரும் பங்கை காப்பீட்டிற்கே(இன்ஷுரன்ஸ்) செல்வழித்து வருகிறார்கள்.  இந்நிலையை ஒழிக்க வேண்டும். எந்த தனிப்பட்ட மனிதருக்கும் ஒரு வாழ்க்கையின் முழு ஊதியத்திற்கு மேல் நஷ்ட ஈடு அளிக்க கூடாது.  
 
நஷ்ட ஈடு பெறும் வழக்குகளில் ஆஜராகும் வக்கீல்கள் ஜெயிக்கும் தொகையில் 30, 33 என்று சதவீதம் வழக்குக் கட்டணம் வாங்குவதற்கும் தடை போட வேண்டும்.  ஓரளுவுக்கு மேல் தண்டனையாக வசூலாவதை அரசு எடுத்து சமுதாய நலங்களுக்கு வேண்டிய செய்யட்டும். வழக்கு போடுவோர்க்கு அளவுடன் அளியுங்கள்.
 
4. மருத்துவ சிகிச்சைக்கான கட்டணங்கள் நியாயமானதாக இருக்கவேண்டும்.  உடல் நலப்பிரிவில் உள்ள பல மனிதர்களும் இயக்கங்களும் பணவெறி கொண்டு மற்றவரின் துன்ப நிலையை தங்கள் சுயநலத்திற்காக பயன்படுத்துவதன் காரணமாகத் தான் சிகிச்சை செலவுகள் அளவின்றி அதிகரிக்கின்றன.  மற்ற காரணம் கூறி அதை மறைக்க வேண்டாம்.
 
5. சேமிக்கும் பழக்கத்தை எல்லோரிடமும் உருவாக்க வேண்டும்.  நாட்டின் அனைத்துச் சட்டங்களும் அளவிலாமல் கடன் வாங்கி செலவாக்குவதற்கு எதிராகவும், தம் வருமானத்திற்கு ஏற்றபடி மக்களை வாழத் தூண்டுவனவாகவும் இருக்க வேண்டும்.
 
6. அரசும் அளவின்றிச் செலவிடாமல் இருக்க வேண்டும்.  உலகத்தை பலமுறை அழிக்கும் அளவிற்கு ஆயுதங்கள் கிடங்கில் இருக்கும்போது இன்னும் ஆயுதங்கள் தேவை தானா ?
 
7. அரசிற்கும் தனிப்பட்ட கம்பெனிகளுக்கும் நடுவே உள்ள சுற்றுக்கதவு (revolving door) மூடப்பட வேண்டும். 
 
8. அனாவசியமாக மற்ற நாடுகளுடன் சண்டைகளைத் துவக்கி பல உயிர்களை கொல்வது எவ்வித்திலும் முறையாகாது.  நாட்டின் மக்கள் செல்வத்தையும் பொருள் செல்வத்தையும் அழிக்காதீர்.
 
9. குற்றம் செய்யும் பெரிய மனிதர்களை கடுமையாக தண்டிப்பதுடன் குற்றத்தால் எவ்வழியிலும் சம்பாதிக்க முடியாமல் ஆக்க வேண்டும்.
 
10. இல்லார்க்கும் இருப்போர்க்கும் உள்ள பண வித்தியாசம் அதிகரித்துக்கொண்டே போவது நாட்டிற்கு நல்லதல்ல. 
 
11. நாட்டு மக்கள் “இது என் நாடு” என்று பெருமிதம் கொள்ளலாமே தவிர நாட்டை பெற்றிய வெறியோ, இன வெறியோ, நாங்கள் தான் உயர்ந்தவர்கள் என்ற கர்வமோ கொள்ள வேண்டாம். எந்த நாடுமே குற்றம் குறைகளை முற்றிலும் துறக்கவில்லை; துறக்கவும் முடியாது.
 
மேற்படியுள்ள பல எளிமையான தத்வங்களை உணராமல் போனதால் எத்தனையோ ராஜ்ஜியங்கள் அழிந்திருக்கின்றன. கஷ்டமான அந்த சரித்திரத்தை மறுபடியும் உருவாக்க வேண்டாம்.

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : August 11, 2011 @ 7:46 am