மங்காத்தா
”சார்! படத்துல 5 பேரு, அதுல நாலு பேரு கெட்டவங்க, ஒருத்தர் மட்டும் ரொம்ப கெட்டவர்” இப்படித்தான் Oneline சொல்லி அஜித்திடம் ஒப்புதல் வாங்கினாராம் வெங்கட்பிரபு. ஆனால் படத்திலோ வேறு மாதிரி, அனைவருமே கெட்டவர்கள்.
தனக்கென தண்ணியாக ஒரு பாணியும் வைத்திருப்பார், நான் அன்றாட வாழ்க்கையில் வழமையாக பேசும் வரிகள்தான் படத்திலும் இருக்கும். அழகியலோ, கவிதைத்துவமோ கூட பெரிதாக கண்ணில் படாது. ஆனால் படம் வெற்றி பெரும். காரணம் சின்னச் சின்ன காட்சியமைப்புகளிலும், கதை சொல்லும் விதத்திலும் வெற்றி பெறுவார் வெங்கட் பிரபு. இந்தப் படத்திலும் அதைப் போலத்தான். Gully கிரிக்கெட் தலைவன் போல தனக்கென்று ஒரு அணி வைத்து விளையாடும் விளையாட்டில் அஜித், அர்ஜுனைப் பொறுத்திய விதத்தில்தான் மாறுபடுகிறார் இயக்குனர்.
கெட்டவர்களாக, அஜித், வைபவ், மஹத், JP, அர்விந்த் ஆகாஷ், பிரேம், லட்சுமிராய், அஷ்வின் .ஆமாம் படத்தில் அனைவருமே கெட்டவர்கள், மூன்று ஜோடிகளைத்தவிர. திரிசா, அஞ்சலி, ஆண்ட்ரியா. வெங்கட், பாவம் பாடல்களுக்கு மட்டுமே வரும் இவர்களை எப்படி கெட்டவர்களாக மாற்றுவது எனத்தெரியாமல் விட்டுவிட்டார் போல.
நாயக சினிமா உலகத்தில் 50 வது படத்தில் இந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் அஜித்தின் தைரியத்தையும் பாராட்ட வேண்டும். ”ஆமாங்க, எனக்கு நாப்பது வயது, வில்லந்தான். குடிச்சு குடிச்சு தொப்பை வந்துருச்சு, முடியெல்லாம் நரைச்சுப் போயிருச்சு, அதுக்காக பணமும் பொண்ணும் வேண்டாமா?” இதுதான் அஜித்தின் கதாபாத்திரம்.
கதைக்கான களம் கிரிக்கெட்.. ஆமாம் மீண்டும் கிரிக்கெட். இணையத்தில் கிசுகிசுக்கப்பட்டது போல இது Ocean11/12/13 எல்லாம் இல்லை. கொஞ்சமே Italian Job, Dhoom சாயல் தெரிகிறது. IPLல் கிரிக்கெட் சூதாட்டம் நடைபெறுகிறது, (எப்படி விட்டார்கள் தணிக்கையில்?) அதற்கான பணத்தை ஒரு அணி கொள்ளையடிக்கிறது, அந்த அணியிடமிருந்தும் கொள்ளையடிக்கிறார்கள் இன்னொரு ’அணி’. இதற்கு நடுவில் காவல்துறையும் பணத்தையும் கொள்ளையர்களை தேடுகிறார்கள், யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை பல திருப்பங்களோடு ஆடுவதுதான் மங்காத்தா.
கதாப்பாத்திரங்களை அட்சரச் சுத்தமாக விளக்கவே தேவைப் படுகிறது முதல் பாதி. இரண்டாம் பாதியோ, ஒவ்வொரு காட்சியிலும் திருப்பம்.ஒவ்வொருத்தரும் தன் பாணியில் சொல்லி ”முடிக்கை”யில் முடிந்து போகிறது படம்.
”எவந்தாண்டா நல்லவன்?” என்று ரசிகர்கள் உச்சதாபியில் கத்தும் போது ”எவனுமே இல்லைடா” என்று சொல்லி முடித்திருக்கிறார் இயக்குனர்.
முதல் பாதி அஜித்தின் அதகளம், இரண்டாம் பாதியை தூக்கி நிறுத்திருப்பவர் வைபவ். வைபவ்வை நம்பி வைத்திருக்கிறார்கள் இரண்டாம் பாதியில் முதல் பாதி. ஒரு டூயட்டும் உண்டு. குடும்பப்பாங்கான அஞ்சலி இந்தப் படத்தில் too Sexy. வைபவ், பீமா விக்ரமை காப்பியடித்திருக்காரோ என்று தோன்றும்.
மஹத், நடிக்க மிகவும் சிரமப்பட்டிருக்கார். ஆனால் ஆட்டம் பாட்டத்தில் balance செய்து விடுகிறார். உண்மையைச் சொல்லப் போனால், பாடல்களில் மஹத்தும், வைபவும்தான் தெரிகிறார்கள். மஹத்திற்கு ஏன் இத்தனை ரசிகைகள்? திரையரங்கில் அவருக்கென தனி ஜொள் ஆறே ஓடியது. அரவிந்த் ஆகாசுக்கு பெரிய கதாபாத்திரம். ஜெயப்பிரகாஷ், வழக்கம் போல sixer அடிக்கிறார் (ரகுவரன் இல்லையென்ற குறை தீர்ந்தது). திரிசா, வருகிறார், ஆடுகிறார், கொஞ்சுகிறா, அழுகிறார். அவ்வளவுதான். ஆண்டிரியாவுக்கோ அதிலும் பாதிதான். லட்சுமிராய் ஆரம்பம் முதல் கடைசி வரை மிகவும் குறைந்த ஆடையோடு. சொல்லிக்கொள்ளும்படியான வேடம்தான். வழக்கம்போல பிரேம்ஜி நகைச்சுவைக்கு உத்தரவாதம். பல படங்களில் பார்த்து பார்த்து சலிச்சுப் போன கதாபாத்திரம். வசனங்களில் (அடுத்தவர்களுடையது) பேசியே தப்பித்து விடுகிறார்.
குறைகள், மொக்கையாக ஒரு காவல்துறை அதிகாரி இறந்து போவது போல அமைத்திருப்பது, பம்பாயில் 99% தமிழ் பேசுவது, ஒரே தெருவில் இருந்தாலும் காவல்துறை மெனக்கெட்டுத் தேடுவது, அஜித் என்பதால், காவல்துறை அதிகாரி என்றாலும் மொத்தமாக எல்லாரும் நம்புவது, பிரேம்ஜியின் Clicheகள்.
யுவனின் உழைப்பு நிறையவே தெரிகிறது, புரிகிறது. Live Orchestra மூலம் ஒரு படத்தினை தூக்கி நிறுத்துகிறார். காரணம், Chasing மற்றும் வசனங்கள் அதிகம். அதற்கு இசையை நிரப்பியே ஆகவேண்டும். பாடல்களில் விட்ட தொய்வை பிண்ணனி இசையில் சரி செய்துவிட்டார். இல்லாவிட்டால படம் பப்படம்தான்.
சக்தி சரவணன் 30% சதவீதத்துக்கான வெற்றி தனியாக இவருக்கு ஒதுக்கி வைத்துக்கொள்ளலாம். நிறைய காட்சிகள், CGக்களுக்கு ஏற்ப கோணங்கள், நிறைய மெனக்கெட்டிருக்க வேண்டும்.
அர்ஜூன், கிடைத்த இடத்தில் எல்லாம் அப்ளாஸ் அள்ளுகிறார். அதுவும் இறுதிக்காட்சியில். Welcome Back Action King.
அர்ஜுன் அஜித்தை “தல” என அழைப்பதும், அஜித் அர்ஜூனை ஆக்சன் கிங் என அழைப்பதும் ரசிக்க வைக்கிறது. விஜய் படம் கூட வருகிறது. சந்தானம், ரஜினி, கமல், சாம் ஆண்டர்சன் என எல்லாவிடத்திலேயும் சொல்லியடித்திருக்கிறார்கள். “சரக்கடிச்சா இளையராஜா பாட்டு கேட்கத்தோணுதுடா” காலையில் “இனிமே சரக்கே அடிக்கக்கூடாதுடா” இப்படி பல பஞ்ச்கள். கைத்தட்டல் அள்ளுகிறது. அஜித் திட்டமிடும் போது வீடு முழுக்க அஜித்களும், ”நீ நான்” பாடலில் வரும் Computer Graphicsம் அட போட வைக்கிறது.
அஜித்திற்கு தேவைப்பட்டது ஒரு ஹிட், 50 வது படம் நல்ல படமா இருக்க வேண்டும். ரெண்டுக்கும் ஒரே டிக் மங்காத்தா.