ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

காமெடி பீஸ் சீமான்

November 30, 2011 by · 10 Comments 

   

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாண்புமிகு இளவரசியாருக்கு ஒருவழியாக ஆறு மாத சிறைவாசத்திற்குப் பிறகு ஜாமீன் கிடைத்து விடுதலை ஆகிவிட்டார்.
 
புளகாங்கிதம் அடைந்து இருக்கிறார்கள் கழகத்தின் கண்மணிகளில் ஒரு தரப்பினர்!
 
ஏற்கனவே எமர்ஜென்சியின் போது கொஞ்ச நாட்களே சிறை சென்ற செம்மல் மு.க.ஸ்டாலினுக்கு ‘மிசா’ பட்டம் கொடுக்கப்பட்டது போல, கனிமொழிக்கு இனிமேல் ‘2ஜி கனிமொழிஜி’ என்ற பட்டம் வழங்கப்படுமா என்று தெரியவில்லை! அப்படிக் கொடுக்காமல் விட்டார்களேயானால், அதை விட பெரிய ஆணாதிக்க வெறி வேறு எதுவும் இருக்க முடியாது. அவரைப் போல கொஞ்ச நாட்கள் மட்டுமா உள்ளே இருந்தார் இவர்? அவர் அங்கே எந்த கொடுமையையும் அனுபவித்தது போல தெரியவில்லை. முரண்டு பிடித்த போது விழுந்த அடிகளை தாங்கிக் கொள்ள சிட்டிபாபு போன்றவர்கள் இருந்தார்கள். ஆனால் இங்கே அப்படியா? கொசுக்கடியிலிருந்து, டெல்லியின் கடும் குளிர் வரை இவர் மட்டுமே தாங்கிக் கொள்ள நேர்ந்திருக்கிறது. எனவே கனிமொழி சென்னையில் வந்து இறங்கியவுடன் பெரும் விழா எடுத்து ‘2ஜி கனிமொழிஜி’ என்ற பட்டத்தை வழங்குவது தான் உத்தமம்.
 
ooOoo
 
பெங்களூர் கோர்ட்டில் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் வெற்றிகரமாக பதில் அளித்து விட்டார் ஜெ.
 
பதில் அளித்து களைத்த காரணத்தினால் ஓய்வெடுக்க கொடநாடு செல்லப் போவதாக அறிவுப்புகள் வெளிவந்தன. இந்நிலையில் கடைசி நேரத்தில் கொடநாடு பயணம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
 
கனிமொழி ஜாமீன் வாங்கி வீடு திரும்புவதற்கும் ஜெ.வின் கொடநாடு சுற்றுலாப் பயணம் ஒத்தி வைப்பிற்கும் சம்பந்தமிருக்காது என்று நம்புவோமாக!
 
ooOoo
 
”ராசா ஜாமீனில் வெளியில் வர விரும்பினால் என்னைத் தொடர்பு கொண்டு பேசட்டும். அதன் பிறகு அதற்கான வழிமுறைகள் செய்யப்படும்” என்று கூறியிருக்கிறார் மு.கருணாநிதி.
 
இது என்ன கணக்கு என்று புரியவில்லை. அப்படியெனில் ‘கனிமொழி ஜாமீன் கோரமாட்டார்’ என்று முன்னர் கூறியதற்கும், அதன் பிறகு “ஐயா ஜாமீன் தாங்க, அம்மா ஜாமீன் தாங்க” என்று படையெடுத்ததற்கும் காரணம் “எனக்கு ஜாமீன் கேளுங்க” என்று கனிமொழி இவரிடம் தொடர்பு கொண்டு பேசியததால் தான் இருக்குமோ?!
 
அது சரி, இவ்வளவு நடந்தும் ராசா ஏன் இதுவரை ஜாமீன் கோரவேயில்லை?! வெளியில் இருப்பதை விட உள்ளே இருப்பதே உசிதம் என்று நினைத்திருப்பாரோ?!
 
கனிமொழி குற்றமற்றவர். அவருக்கு எதுவுமே தெரியாது என்றே வைத்துக் கொள்வோம். நீரா ராடியாவுடன் நடந்த தொலைபேசி உரையாடல்கள் என்னவாயிற்று? அதெல்லாம் கூட பேசியது கனிமொழி இல்லையாமா?
 
எது எப்படியோ, ஜாமீனில் கனிமொழி வெளியில் வந்திருப்பதில் வாரமிருமுறை புலனாய்வு (?!) இதழ்களுக்கு படு கொண்டாட்டமாக இருக்கும். திஹார் ஜெயிலில் என்னென்ன மாதிரியான கொடுமைகள் இருக்கின்றன என இன்னும் ஒரு சில வாரங்களுக்கு தமிழக மக்கள் படித்து மிரளலாம்!
 
ooOoo
 
இத்தனை நாட்கள் ‘ஈழத்தாய்’ ஜெ.விற்கு காது கிழியும் அளவிற்கு ஜிங்ஜாக் அடித்துக் கொண்டிருந்த செந்தமிழன் சீமான் இப்போது ஒரேடியாக தாக்கிப் பேச ஆரம்பித்திருக்கிறார். போகட்டும். ஆனால் தனது ஒன்றரையணா கட்சியில் உறுப்பினர் இல்லாதவரெல்லாம் நல்ல தாய் தந்தைக்கு பிறந்தவர்கள் அல்ல என்று அவர் சொன்னதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அவர் அப்படி பேசியிருந்திருக்க மாட்டார் என்று நம்புவோமாக. 
 
அப்படிப் பேசியிருந்தால் அதை கடுமையாக கண்டித்து சீமானையெல்லாம் பெரிய ஆள் ஆக்க வேண்டாம். ஏற்கனவே தமிழக அரசியலில் எக்கச்சக்க காமெடி பீஸ்கள்! பத்தோடு பதினொன்று, அத்தோடு இது ஒன்று என்று சீமானையும் வைத்துக் கொள்ள வேண்டியது தான்.
 
என்ன கொடுமை என்றால், ஆதித்தனாரின் ‘நாம் தமிழர்’ இயக்கத்தின் பெயரை வைத்து அந்த பெயரையே கேலிக்கூத்தாக்கிக் கொண்டிருக்கிறாரே இவர் என்பது தான்!

தொடர்புடைய படைப்புகள் :

Comments

10 Responses to “காமெடி பீஸ் சீமான்”
  1. விலை ஏற்றம் விசம் போல் ஏறுகிறது அதை கட்டுக்குள் கொன்டுவர நடவடிக்கை எடுப்பார்களா A.RAMESH SUBATHRA

  2. sofia says:

    சீமானை இகழ எந்த நாய்களுக்கும் உரிமையில்லை. ராஜபட்சே க்கு கருத்துக்களின் மூலம் துதிபாடும் போலி தமிழர்தான் சீமானை வசைபாடுவோர்.

மனசுல பட்டதை சொல்லுங்க

கடைசியாக : November 30, 2011 @ 8:54 am