விஸ்வநாதன் ராமமூர்த்தி

திருச்சிராப்பள்ளி கிருஷ்ணசாமி ராமமூர்த்தி இசை பாரம்பரியமுள்ள குடும்பத்தில் பிறந்தவர். குடும்பத்தில் உள்ள அனைவருமே வில்லிசையில் (அதாங்க வயலின்) சிறந்தவர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இசை பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்ததினால், திரு. ராமமூர்த்தி அவர்கள், இளம் வயதிலேயே, வில்லிசையில் மிகவும் தேர்ச்சிப் பெற்றவராக விளங்கினார். தனது இசை திறமையை மேலும் வளர்த்துக் கொள்ளவதற்காக, பிரபல இசை தட்டு ஒலிப்பதிவு நிறுவனமான எச். எம். வி ரிகார்டிங் கம்பெனியில் தற்காலிக ஊழியராக சேர்ந்தது, தனது இசை உலக வாழ்க்கையில் மிக பெரிய திருப்புமுனையாக அமையும் என்று அன்றைக்கு அவர் எதிர்ப்பார்க்கவில்லை. அந்த காலக்கட்டத்தில், எச். எம். வி ரிகார்டிங் கம்பெனியில், துணை இசையமைப்பாளாராக பணியாற்றிக் கொண்டிருந்த பிரபல தெலுங்கு இசையமைப்பாளாரன திரு. சி. ஆர்சுப்புராமன் என்கிற சி.எஸ். ராமன் என்பவரிடம் வயலின் கலைஞராக பணியாற்றினார் திரு. ராமமூர்த்தி அவர்கள். (திரு. சி.எஸ். ராமன் என்பவர், நமது இன்னிசை வேந்தர்களான சங்கர்-கணேஷின் சங்கர் என்கிற சி.எஸ். சங்கரின் சகோதரர் என்பது கூடுதல் தகவல்).
 
திரு. ராமமூர்த்தி அவர்களின் அபார திறமையை கண்ட திரு. சுப்புராமன் அவர்கள், இவரை எச். எம். வி ரிகார்டிங் கம்பெனியில் நிரந்தர ஊழியராக மாற்றியதோடு மட்டுமில்லாமல், தன்னுடைய உதவியாளராகவும் ஆக்கிக் கொண்டார். இதே கம்பெனியில்தான், திரு எம்.எஸ். விஸ்வநாதன் அவர்களும், திரு.சுப்புராமன் இசை குழுவில், ஹார்மோனியம் இசைக்கும் கலைஞராக தன்னை இணைத்து கொண்டிந்திருந்தார். இருவரும் தங்களுக்கு இட்ட பணியை செவ்வனே செய்து கொண்டிருந்த போதுதான், இடி போன்ற அந்த செய்தி வந்தது. உடல்நல குறைவு காரணமாக, தன்னுடைய 30 வயதில் (1952) திரு. சி.ஆர். சுப்புராமன் அவர்கள் மறைந்தார். அவர் விட்டுச் சென்ற இசைப் பணியை முடிக்க, அவரின் உதவியாளர்களாக இருந்த திரு. ராமமூர்த்தி மற்றும் திரு. விஸ்வநாதன் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தேவதாஸ் (தமிழ் & தெலுங்கு) மற்றும் சண்டிராணி (தமிழ், தெலுங்கு & ஹிந்தி)படங்களின் இணை இசையமைப்பாளராக இவர்கள் இருவரும் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். இந்த படங்களின் வெற்றி, திரு. விஸ்வநாதன் அவர்களை, வேறு விதமாக யோசிக்க வைத்தது. அந்த கால கட்டத்தில், ஹிந்தி திரைப்பட உலகில், திரு. சங்கர் மற்றும் திரு. ஜெய்கிஷன் இருவரும் சங்கர்-ஜெய்கிஷன் என்ற பெயரில் இரட்டை இசையமைப்பாளராக பிரபலமாகியிருந்தனர். அதே போல், தென்னிந்தியாவில், நமது தமிழ் திரைப்பட உலகில், இரட்டை இசையமைப்பாளராக தனியாக நாம் இருவரும் சேர்ந்து பணியாற்றினால் என்ன என்ற தனது ஆசையை, திரு. ராமமூர்த்தியிடம் வெளியிட்டார், திரு. விஸ்வநாதன் அவர்கள். இப்போது வரும் வருமானமே தனக்கு போதும் என்று கூறி முதலில் இதற்கு மறுத்த. திரு. ராமமூர்த்தி அவர்கள், பிறகு திரு. விஸ்வநாதன் அவர்களின் வேண்டுகொளுக்கு இணங்கி, இரட்டை இசையமைப்பாளராக பணியாற்ற ஒத்துக் கொண்டார். 
 
திரு .ஏ.எல். சீனிவாசன் தயாரிப்பில், திரு. என்.எஸ். கிருஷ்ணன் இயக்கத்தில் உருவான "பணம்" என்ற திரைப்படமே, இவரகள் இருவரும் இணைந்து இசையமைப்பாளராக பணியாற்றிய முதல் தமிழ் திரைப்படம். இந்த "பணம்" திரைப்படம் தான், நடிகர் திலகம் திரு. சிவாஜி கணேசன் அவர்களின் இரண்டாவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில், இந்த இருவரில் யாருடைய பெயர் முதலில் இடம்பெற வேண்டும் என்ற சந்தேகம் எழுந்த போது, திரு. ராமமூர்த்தி அவர்கள் திரு. விஸ்வநாதனை விட வயதில் மூத்தவராக இருந்தாலும், விஸ்வநாதன்-ராமமூர்த்தி என்பதுதான், "ரைமிங்"காக இருக்கும் என்று சரியான"டைமிங்"கில் உணர்த்தி, இருவரின் சம்மதத்தை வாங்கிய பெருமை திரு. என்.எஸ். கிருஷ்ணன் அவர்களையே சாரும். இந்த படத்திலிருந்து தொடங்கிய இவர்களின் திரை இசைப் பணி, அனைவரும் அறிந்த வரலாறு. பல நூறு பாடல்களுக்கும் மேல் இசையமைத்த இவர்களின் பாடல்கள் இன்றும், என்றும் சாகாவரம் படைத்தவை என்று சொன்னால் அது மிகையாகாது. 1963ம் ஆண்டில் ஜூன் மாதம் 16-ஆம் தேதி, மதராஸ் ட்ரிப்ளிகேன் கல்சுரல் அகாடமி சார்பில், ஹிந்து நாளிதழ் உதவியுடன் இயக்குனர் திரு. ஸ்ரீதர் மற்றும் திரு. "சித்ராலயா"கோபு முன்னிலையில் நடைபெற்ற விழாவில், நடிகர் திலகம் திரு. சிவாஜி கணேசன் அவர்களால் "மெல்லிசை மன்னர்கள்" என்று பட்டம் வழங்கப்பட்டது. நடிகர் திலகம் திரு. சிவாஜி கணேசன் அவர்களின் இரண்டாவது படத்தில் ஆரம்பித்த இந்த இருவரின் இசை பயணம், 1965-ல் , மக்கள் திலகம் திரு. எம்.ஜி.ஆர். நடித்த "ஆயிரத்தில் ஒருவன்" படத்தோடு, தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. மீண்டும் 29 வருடங்கள் கழித்து, 1995-ல் திரு. சத்யராஜ் அவர்கள் நடித்த "எங்கிருந்தோ வந்தான்" என்ற திரைப்படத்தில் இருவரும் இணைந்து மெல்லிசை மன்னர்களாக இசையமைத்தார்கள். இந்த இடைப்பட்ட காலத்தில், திரு. ராமமூர்த்தி அவர்கள், 19 படங்களுக்கு இசையமைத்துள்ளார். அதில், "சாது மிரண்டால்",:தேன்மழை", "மெட்ராஸ் டு பாண்டிச்சேரி", "மற்க்க முடியுமா", "நான்", சோப்பு-சீப்பு-கண்ணாடி", "மூன்றேழத்து" தங்கசுரங்கம்", "நீலகிரி எக்ஸ்பிரஸ்" போன்ற படங்கள், இந்த "வில்லிசை மன்னரின்" பேர் சொல்லும் படங்களாகும். 2006-ம் ஆண்டில், சத்யபாமா பல்கலைக்கழகம், திரு. விஸ்வநாதன் மற்றும் திரு. ராமமூர்த்தி அவர்களுக்கு, "கௌரவ டாக்டர்" பட்டம் வழங்கி சிறப்பித்தது. இந்த மாபெரும் கலைஞர்கள் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்ற பெருமை ஒன்றே நமக்கு போதும். நம் மெல்லிசை மன்னர்களின் ஒருவரான "வில்லிசை மன்னர்" "90 வயது இளைஞர்" திரு. ராமமூர்த்தி அவர்களுக்கு, "ரசிகாஸ்" சார்பில் வரும் நவம்பர் 27ம் தேதியன்று, மெல்லிசை மன்னர் திரு. விஸ்வநாதன் அவர்கள் தலைமையில் மாபெரும் பாராட்டு விழா, சீனி மியுசிசியன் ஹாலில் (வடபழனி கமலா திரைஅரங்கம் அருகில்) நடைபெறுகிறது. திரையுலக பிரபலங்கள் முன்னிலையில் நடைபெரும் இந்த விழாவை காண கண் கோடி வேண்டும் என்பது உண்மை.

தொடர்புடைய படைப்புகள் :

One thought on “விஸ்வநாதன் ராமமூர்த்தி

  • December 3, 2011 at 1:04 am
    Permalink

    இந்த பாராட்டு விழாவில், திரை இசை குயில், திருமதி. பி. சுசிலா அவர்களும், திரு. பி.பி. ஸ்ரீனிவாஸ் அவர்களும் கலந்து கொண்டு, சிறப்பித்தனர். “வில்லிசை மன்னர்”க்கு, மெல்லிசை மன்னர் அவர்கள், பாராட்டு கவிதையும் பொன்முடிப்பும் வழங்கி கௌரவித்தார். தமிழ் திரை இசை உலகில் பொன்னெழுத்தில் பதிக்க வேண்டிய இந்த விழாவை ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்த பெருமை, திரு. “தென்காசி” கணேசன் (எல் & டி) அவர்களையே சாரும். “மெல்லிசை” மன்னர்களின் “இன்னியிசை”யில் அமைந்த பாடல்களை “தேனிசை” விருந்தாக அளித்த திரு. “ஸ்ரீதரின் நவராக்ஸ்” இசை குழுவினரின் இசை மழை, வான் மழையையும் கொஞ்சம் ஒய்வெடுக்க வைத்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : December 2, 2011 @ 9:09 am