ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

சீசன் கச்சேரியை சிம்பிளாக் கேட்கலாம்

மார்கழிதான் ஓடிப் போச்சு போகியாச்சு – இப்படி ஆரம்பிக்கும் பிரபல திரைப்படப் பாடல் ஒன்று. ஆனால் மார்கழி ஆரம்பித்த உடனே ஒருத்தர் ரெண்டு பேர் என்று இல்லாமல் பெரும் குழாம் ஒன்று வேறு எங்கும் இல்லாத ஓட்டம் ஒன்றைத் தொடங்கும். அது டிசம்பர் சீசன் கச்சேரிகளைக் கேட்க என்றே சென்னையை நோக்கிப் படை எடுக்கும் ரசிகர் கூட்டம். சுமார் ஆறு வார காலம். அதில் ஆயிரக்கணக்கில் கச்சேரிகள். கூடவே நாட்டியங்கள்,  செய்முறை விளக்கங்கள் என வேறு பல நிகழ்ச்சிகள். பல வாரங்களுக்கு முன்பிருந்தே ஒவ்வொரு சபாவில் என்று எந்த நேரத்தில் யாருடைய கச்சேரி என நிகழ்ச்சி நிரலை பார்த்து தமக்கென ஒரு அட்டவணையை தயார் செய்து கொண்டு காலை, மதியம், மாலை, இரவு என நாள் முழுதும் கலை சேவை செய்ய தயாராகும் ரசிகர்கள். இந்த ஆர்ப்பரிப்பில் கலந்து கொள்ளவென்றே இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து மட்டுமில்லாமல் உலகெங்கிலும் இருந்து சென்னையை நோக்கிப் படையெடுப்பர் பல ஆயிரம் பேர். 
 
செல்ல முடிந்தவர்கள் பல ஆயிரம் என்றால், குழந்தைகளின் பள்ளி, விடுப்பு எடுக்க முடியாத நிலமை, வெகு தூரத்தில் இருந்து சென்று வரும் செலவு என்று பல காரணங்களினால் சென்னைக்கு செல்ல முடியாமல் இருக்கும் ரசிகர்கள், அவர்களில் பல மடங்கு. புத்தகங்களிலும் வலைத்தளங்களிலும் வரும் விமர்சனங்கள், பாடப்பட்ட பாட்டுகளின் அட்டவணைகள், சமயத்தில் கிடைக்கும் ஒலிப்பதிவுகள், எப்பொழுதாவது கிட்டும் நகர்பட துணுக்குகள் என்று கிடைத்ததை வைத்து திருப்திப்பட்டுக்குக் கொள்ளும் நிலைமைதான் இவர்கள் நிலைமை. ஜெயா டிவியில் வரும் மார்கழி மகோத்ஸ்வம் நிகழ்ச்சிதான் ஒரு கச்சேரியை முழுமையாக பார்க்கவும் கேட்கவும் கிடைத்த சந்தர்ப்பமாக அமைந்தது. ஆனால் இதைத் தவிர தொலைவில் இருந்து பங்கு பெற வழி இல்லையா? அதற்குத் தொழில்நுட்பம் இல்லையா என்பது இந்த ரசிகர் குழாமின் தொடர்ந்த கேள்வியாக இருந்தது. 
 
இன்றைய தொலைதொடர்பு தொழில்நுட்பத்தைக் கொஞ்சம் பார்க்கலாம். இந்தியாவில் இருக்கும் தாத்தா பாட்டிகள் தங்கள் பேரன் பேத்திகளைக் கொஞ்சுவதே பெரும்பாலும் ஸ்கைப் போன்ற மென்பொருட்களைக் கொண்டுதான்.  வாரயிறுதி ஆனால் குழந்தைகள் தங்கள் பள்ளிகளில் நடந்த நிகழ்ச்சிகள், மற்ற வெளி வகுப்புகளில் கற்றுக் கொண்டது என்றும் பெரியவர்கள் இல்லத்தில் நடந்த நிகழ்ச்சிகள், ஊர்வம்பு என்று இருப்பிட தூரங்கள் குன்றிப் போய் உடனிருப்பது போல இருக்க உதவுவது இந்த மென்பொருட்கள்தான். இதே தொழில்நுட்பத்தைக் கொண்டு தொலைதூரத்தில் இருக்கும் ஆசிரியர்கள் பல விதமான பாடங்களையும் தம் மாணவர்களுக்குச் சொல்லித் தருவதும் இன்று நடைமுறை நிகழ்ச்சியாகிவிட்டது. அலுவலகத்தை எடுத்துக் கொண்டால் விடியோ கான்ப்ரென்ஸிங் என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. இதே போல் விளையாட்டு நிகழ்ச்சிகள் பலவற்றையும் நம்மால் இணையத்தில் நேரலையாகப் பார்க்க முடிகிறது. இப்படித் தூரம் என்பது ஒரு பொருட்டாகவே இல்லை என்று ஆகிவிட்ட உலகில் சங்கீத சீசன் மட்டும் தப்ப முடியுமா? 
 
கடந்த சில வருடங்களாகவே அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில கச்சேரிகள் இணையத்தின் மூலம் ஒளிபரப்பப்பட்டன. ஆனால் இணைய வேகம் காரணமாகவும் வேறு சில தொழில்நுட்பப் பிரச்சினைகளாலும் இது போன்ற முயற்சிகள் அரிதாகவே நடந்தன. அது மட்டுமில்லாமல் நேரடி ஒளிபரப்பு என்றானதால் மற்ற நாடுகளில் வசிப்பவர்களுக்கு அது உகந்த நேரத்தில் வருவதில்லை. பதிவு செய்யப்பட்டு பின் காணக்கூடிய வகையில் கிடைத்த கச்சேரிகளின் எண்ணிக்கையை விரலை விட்டு எண்ணி விடலாம். சார்சுர் போன்ற நிறுவனங்கள் சில கச்சேரிகளை சிடிகளாக கொண்டு வரும் பொழுது அந்த கச்சேரிகளை அவர்களின் இணைய தளத்தில் இருந்து தரவிறக்கிக் கொள்ளவும் வழி செய்து இருக்கின்றனர். இந்த வருடம் ஸ்வானுபவா என்ற அமைப்பு, அவர்கள் நடத்திய பல செய்முறை விளக்கக் கூட்டங்களையும் கச்சேரிகளையும் நேரடி ஒளிபரப்பாகவும் அதற்குப் பின் சில நாட்களுக்கு எப்பொழுது வேண்டுமானாலும் பார்க்கும்படியாகவும் வசதி செய்து தந்திருந்தார்கள். ஆனால் இது சீசன் சமய நிகழ்வு இல்லை.
 
கடந்த சில நாட்களாக சென்னையில் டாக்டர் சுந்தர் அவர்கள் தலைமையில் நடக்கும் ம்யூசிக் ஃபாரம் என்ற அமைப்பு ஸ்ருதி இதழுடன் சேர்ந்து நடத்திய செய்முறை விளக்கக் கூட்டங்களை இணையத்தில் பார்க்கும்படி செய்திருந்தார்கள். ஓஎஸ் தியாகராஜன், சித்ரவீணை ரவிக்கிரண், பேராசிரியர் எஸ் ஆர் ஜானகிராமன், காரைக்குடி மணி என்று கலைஞர்கள் பல விதமான தலைப்புகளில் பேசி இருக்கின்றார்கள். இன்றும் இந்த நிகழ்ச்சிகள் காணக் கிடைக்கின்றன. இவற்றைப் பார்ப்பதிற்கான சுட்டி  – http://www.hooghli.com/musicforum/ 
 
இதை எல்லாம் தாண்டி இந்த முறை மேலும் ஒரு சிறப்பான ஏற்பாடு ஒன்று செய்யப்பட்டு இருக்கிறது. பிரபல பாடகர் டி.எம்.கிருஷ்ணா அவர்களின் கச்சேரிகள் மூன்றினை இணையத்தின் மூலம் காண்பதற்கான வசதி செய்யப்பட்டிருக்கிறது. இவை உயர்தரத்தில் ஒளிபரப்பப்பட இருக்கின்றன. நடக்கும் பொழுது பார்க்க இயலாதவர்களுக்காக அடுத்த 24 மணி நேரத்திற்கு இந்நிகழ்ச்சிகள் காணக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இது பற்றிய விபரங்கள் இந்தத் தளத்தில் இருக்கின்றன – http://tmkrishna.com/webcast/streaming.php
 
டிசம்பர் சீசனில் பிரபல பாடகர் ஒருவரின் கச்சேரி இது போல் நேரலையாகக் காணக் கிடைப்பது இதுவே முதல்முறை. வரும் வருடங்களில் இது போல பல கச்சேரிகள் வந்தால் சென்னைக்குச் செல்ல முடியாதவர்கள் சீசனில் கலந்து கொள்வது என்பது நடக்கக்கூடியதாகவே ஆகிவிடும். இதெல்லாம் சரி, ஆனால் நாங்கள் சபா கேண்டீன் சமாச்சாரத்திற்கு என்ன செய்ய என்று கேட்பவர்களுக்கு சென்னைக்கு டிக்கெட் போடுவதைத் தவிர வேறு விமோசனமே கிடையாது! 
 
Photo Courtesy : Mr. Hariharan Sankaran

Photo 3 – Dr.Sunder and Dr. Padma Subrahmanyam at the Lec Dem Festival

தொடர்புடைய படைப்புகள் :

மனசுல பட்டதை சொல்லுங்க

கடைசியாக : December 13, 2011 @ 11:10 am