Goodbye – 2011

 

கடந்த ஆண்டு பல ஆச்சரியங்களையும், பல அதிர்ச்சிகளையும், பல பிரமிப்புகளையும், பல தடைகளையும், பல போராட்டங்களையும், பல திகைப்புகளையும், பல திருப்திகளையும், பல கவலைகளையும், பல ஆதங்கங்களையும் உருவாக்கிச் சென்றுள்ளது.
 
தமிழகத்தைப் பொறுத்த வரையில் அரசியல் மாற்றம் நிகழ்ந்தேறியது. ‘எங்களை எதுவும் செய்ய முடியாது’ என்ற இருமாப்புடன் இருந்த ஆட்சியாளர்களை துச்சமென மதித்து தூர எறிந்து விட்டார்கள் மக்கள். காசு கொடுத்தால் எதையும் வாங்கலாம் என்ற எண்ணத்தை தவிடு பொடியாக்கிவிட்டார்கள். 
 
பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் அமர்ந்த ஜெ.விற்கு முதல் நாளே அமைச்சர் மரியம் பிச்சையின் சாலை விபத்து பலி ஒரு திருஷ்டி பரிகாரமாக அமைந்து விட்டது. வருந்தத்தக்க நிகழ்வு. 
 
சமச்சீர் கல்வி,  தலைமைச் செயலக மாற்றம் உள்ளிட்ட சில பல நிர்வாக நடவடிக்கைகள் கடும் விமரிசனத்திற்கு உள்ளாகியிருக்கின்றன. நீதிமன்றமும் அரசு நடவடிக்கைகளுக்கு தடை விதித்துள்ளது. நில அபகரிப்பு வழக்குகளின் மூலம் பல ‘முன்னாள்’களின் முகத்திரை கிழிக்கப்பட்டிருக்கிறது. அரசின் இந்த நடவடிக்கைக்கு பெரும்பான்மையோனோர் வரவேற்பு அளித்துள்ளனர். 
 
சின்னத் திரையுலகம், பெரிய திரையுலகம், குட்டித் திரையுலகம் போன்ற எந்த ஒரு திரையுலக சம்பந்தப்பட்ட விழாவுமே முதல்வர் தலைமையில் நடத்தப் பெறாமல் இந்த எட்டு மாதங்கள் ஓடியிருப்பது கின்னஸ் அதிசயம். ஒருவேளை திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தால் வாரத்துக்கு குறைந்தபட்சம் ஒன்று என்ற கணக்கில் 24 குத்தாட்டங்களாவது காணக்கிட்டியிருக்கும்.
 
உடன்பிறவா சகோதரி வெளியேற்றம் அரசியல் அரங்கின் அதிர்ச்சிச் செய்தி. 
 
மத்திய அரசின் போக்கில் வழக்கமான அலட்சியப் போக்கு தான் இந்த ஆண்டு முழுவதுமே தென்பட்டது. போதாக்குறைக்கு முல்லை பெரியாறு பிரச்னை வேறு!
 
தேசிய கட்சிகள் என்று மார் தட்டிக் கொள்ளும் காங்கிரஸ், பாரதிய ஜனதா போன்ற கட்சிகள் இது போன்ற முக்கியப் பிரச்னைகளில் தங்கள் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவாக எடுத்துக் கூற வேண்டும். கேரளாவில் முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்று குதிக்கும் கட்சிகள் இங்கே நம்மூரில் வந்து அதெல்லாம் உடைக்கக்கூடாது என்று முரணாகப் பேசுவது அயோக்கியத் தனத்தின் உச்சகட்டம்.
 
அப்படி பொதுவான கருத்து கட்சிக்குள்ளேயே இருக்க முடியாதென்றால், ஆட்சியை வைத்துக் கொண்டு என்ன கிழிக்க போகிறார்கள்?
 
உடலின் மேல் பாகமான இதயம், கண் எல்லாம் தான் முக்கியம், கீழ் பாகமான கால் முக்கியமே அல்ல என்று கண்டு கொள்ளாமல் விட்டால் சீரழிந்து நடமாட முடியாமலேயே போய் விட நேரிடும்.அதே கதி தான் நாட்டிலும்! ‘தெற்கு தேய்கிறது’ என்ற வாசகத்துக்கு பதில் ‘தமிழகம் தேய்கிறது’ என்று மாற்ற நேரிடும் போலிருக்கிறது.
 
திரைத்துறையைப் பொறுத்த வரையும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நலம் சரியில்லாமல் சிங்கப்பூர் வரை சென்று உயிர் பிழைத்து வந்தது குறிப்பிடத் தக்கது. ‘கொலைவெறி’ பாடல் மூலம் உலகம் முழுதும் ஓவர் நைட்டில் பிரபலம் ஆன தனுஷ், இந்த பிரபல வெற்றியை தக்க வைத்துக் கொள்வாரா என்று பார்க்க வேண்டும். ’தேசிய விருது’ கிடைத்த உடன் வெகுஜன ரசனையை மறந்து விட்டு யாருக்குமே புரியாதது போல அறிவு ஜீவித் தனமான சினிமா, பாடல் என்றெல்லாம் போகாமல் இன்னமும் கூட தரையிலேயே கால் வைத்து நடக்கும் தனுஷுக்கு பாராட்டுகள். அவரைப் பார்த்து அறிவு ஜீவி நாயகன்கள் பாடம் கற்க வேண்டும்.
 
தமிழுக்கு சாகித்திய அகாதமி விருது கிடைத்திருக்கிறது மதுரை வெங்கடேஷ் மூலமாக. அவருக்கு வாழ்த்துகள்!
 
முன்பு எப்போதையும் விட இந்த ஆண்டு தான் இணைய உலகம் பத்திரிகைகளின் பார்வையில் பட்டிருக்கிறது என்று கூறலாம். ட்வீட்டுகள், வலைப்பூக்கள், ஃபேஸ்புக் என அனைத்து இணைய சார் இடங்களும் பத்திரிகைகளால் ஆக்கரமிக்கப்பட்டுள்ளன, அல்லது கவனிக்கப்படுகின்றன.
 
நமது தமிழோவியமும் பத்தாம் ஆண்டை முடித்து, பதினொன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
 
வாழ்த்துவோம்!

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : December 30, 2011 @ 10:43 pm