‘உடன்பிறப்புகள்’ ஜாக்கிரதை
தமிழக அரசு அண்மையில் உயர்த்திய பேருந்துக் கட்டணத்தை ரத்து செய்யக் கோரி சில வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கின்றனர்.
”கடைசியாக 2001-ம் ஆண்டு தான் தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு டீசல் விலை 137 சதவிகிதமும், உதிரி பாகங்களின் விலை 180 சதவிகிதமும் உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசு போக்குவரத்து கழகத்திற்கு 6,154 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது” என்று கருணாநிதி பாணி பதிலை தமிழக அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது.
பொதுவாகவே, தமிழக அரசு எந்த காரியம் செய்தாலும் உடனடியாக கோர்ட்டுக்குப் போவோம் என்கிற ரீதியிலான வழக்கம் இப்போது பரவத் தொடங்கியுள்ளது. நீதிமன்றத்தில் ஏற்கனவே தேங்கிக் கிடக்கும் மனுக்களுக்கு மத்தியில் இப்படிப்பட்ட மனுக்களை அனுமதிப்பது ஏன் என்பது புரியவில்லை. அடிப்படை உரிமை தான் என்றாலும், பரபரப்புக்காக சிலர் இப்படி கிளம்பி விடுகிறார்கள்.
என்றைக்காவது அரசு சம்பளத்தை உயர்த்தி வழங்கும் போது இவர்கள் அதெல்லாம் கொடுக்கக்கூடாது என்று கிளம்பியிருக்கிறார்களா?
ooOoo
படு கேவலமான செய்தி ஒன்றைப் போட்டுவிட்டு அதை விடக் கேவலமாக அட்டைப்படத்தையும் போட்டு விட்டு கலவரத்தை தூண்டி விட்டுள்ளது வாரமிருமுறை பத்திரிகை.

போதாக்குறைக்கு திடீரென அந்த பத்திரிகை அலுவலகத்தில் மின்சாரம், குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார்களாம் பத்திரிகை அலுவலகத்தில். ’தூக்குத் தண்டனை கைதிக்குக்கூட, கடைசி நேரம் வரை குடிநீர் வழங்கவேண்டும் என்றும் அனைத்து மக்களுக்கும் பொதுவான அரசாங்கம், இப்படி பாரபட்சம் காட்டக்கூடாது’ என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ’குடிநீரில் கழிவுநீர் கலந்ததால், அதனை சரிசெய்வதற்காக இணைப்பைத் துண்டித்தோம்’ என்று அரசுத் தரப்புத் தெரிவித்தது. ’இத்தனை நாளாக அதனை சரிசெய்யாமல் தூங்கிக்கொண்டிருந்தீர்களா?’ என்று கேட்ட நீதிபதி, ’சாயப்பட்டறைக் கழிவு கலக்கும் இடங்களிளெல்லாம் அதனை சரிசெய்துவிட்டீர்களா?’ என்றும் கேட்டுள்ளார்.
உண்மையிலேயே மின்சாரம், குடிநீர் இணைப்புகளைத் துண்டித்தது கண்டிக்கத்தக்கது தான். அதைக் கண்டித்த நீதிபதிகள் கூடவே சாயப்பட்டறைக் கழிவுகளைப் பற்றி தேவையில்லாமல் இழுத்திருக்கலாமா? இந்த வழக்கை உடனடியாக விசாரித்து கேள்வி கேட்கிறீர்களே. இதற்கு முன்னால் ஆண்டாண்டு காலமாக தேங்கிக் கிடக்கும் வழக்குகளுக்கெல்லாம் தீர்ப்பு சொல்லி விட்டீர்களா என்ன? என்று நீதிமன்றத்தை யாரும் கேள்வி கேட்க முடியாது.
ooOoo
தமிழக அரசின் புதிய காப்பீட்டுத் திட்டம் செயல்பாட்டுக்கு வருகிறது. ஒரு குடும்பத்திற்கு வருடத்திற்கு ரூ.1 லட்சம் வீதம் 4 வருடங்களுக்கு ரூ.4 லட்சம் வரை வழங்க இந்த திட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. திட்டம் குறித்து கட்டணமில்லாத 24 மணி நேர தொலைபேசி சேவை 18004253993 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய நாள் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திருப்பி அனுப்பப்படும் நாளில் இருந்து 5 நாட்களுக்கு செய்யப்படும் பரிசோதனைகளுக்கான கட்டணம் மற்றும் இதர செலவீனங்களுக்கான தொகையும் இத்திட்டத்தில் அடங்கும். ஒரு குடும்பத்திற்கு வருடத்திற்கு ரூ.1 லட்சம் வீதம் 4 வருடங்களுக்கு ரூ.4 லட்சம் வரை வழங்க இந்த திட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. சுமார் 1 கோடியே 34 லட்சம் மக்கள் பயன் பெறுவார்களாம்.
போன ஆட்சியில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ஸ்டார் ஹெல்த் நிறுவனம் பயன் அடைந்தது போல இந்தத் திட்டத்தில் யார் பயன் அடையப் போகிறார்கள் என்று தெரியவில்லை!
ooOoo
அவதூறு செய்தியை வெளியிட்ட பத்திரிகை அலுவலகம் மீது நான்கைந்து கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதற்கு கண்ணீர் வடித்திருக்கிறார் கருணாநிதி. ”பத்திரிகை சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இது” என்றும் புலம்பியிருக்கிறார்.
ஓ, வெறும் கற்களை வீசி கண்ணாடியை உடைத்தால் அப்படி தான் போல! உள்ளே புகுந்து கொளுத்தி விட்டு கூடவே மூன்று பேரையும் சாகடித்தால் தான் சும்மா இருப்பார் போல கருணாநிதி. இதற்கு அவரது கட்சி அல்லக்கைகள் வியாக்கியானம் பேசுவது தான் வேடிக்கை. மதுரை தினகரன் தாக்குதல் குடும்பப் பிரச்னையாம். யோவ், 3 பேரு செத்தாங்களே. அவர்களும் கருணாநிதி குடும்பத்தினர் தானா? ஆம் எனில், அல்லக்கைகள் எல்லாரும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உங்களையும் ‘உடன்பிறப்புகள்’ என்று கூறி குடும்பத்தினராக வாயால் மட்டும் சொல்லிக்கொண்டிருக்கிறார் கருணாநிதி. எனவே திரும்பி குடும்பப் பிரச்னை எதுவும் வந்தால் கொளுத்தி விடப் போகிறார்கள், ஜாக்கிரதை!
வேறென்ன சொல்ல?