குஜராத்தையும், தமிழகத்தையும் மத்திய அரசு வஞ்சிக்கிறது
’குஜராத்தையும், தமிழகத்தையும் மத்திய அரசு வஞ்சிக்கிறது’ என்று சென்னை துக்ளக் விழாவில் வந்து கர்ஜித்து விட்டுச் சென்றிருக்கிறார் மோடி.
மாற்றாந்தாய் மனப்பான்மை என்பது மத்திய அரசுகளுக்கு ஆரம்பம் காலம் தொட்டே இருந்து வருகிறது. வேறு வழியில்லாமல் அவர்களுடைய அரசமைக்க அவர்களுடைய சிண்டு நம்மாட்களின் கையில் மாட்டும் போது தான் நாம் சொல்வதற்கெல்லாம் ‘பூம் பூம்’ மாடு போல தலையாட்டுகிறார்களே தவிர, ஏனைய சமயங்களில் அவர்களுக்கு நம்மவர்கள் என்றால் இளக்காரம் தான்!
நாமும் அப்படி வாய்க்கும் பொன்னான சமயங்களில் குடும்ப நலனை மட்டுமே கருத்தில் கொண்டு தங்களுக்குத் தேவையான துறைகளை மட்டும் அதுவும் தங்களது குடும்ப உறுப்பினர்கள் அல்லது அவர்தம் அடிப்பொடியினருக்கும் மட்டுமே பெறுவதில் கவனம் செலுத்தி மாநிலத்தின் நிலை எக்கேடு கெட்டுப் போனால் என்ன என்ற எண்ணத்தில் செயல்பட்ட, செயல்பட்டு வரும் சுயநலவாதிகளின் பிடியில் இருக்கும் வரை எத்தனை காலம் ஆனாலும் நமது மாநிலம் மாற்றாந்தாய் பெற்றெடுத்த பிள்ளையாகத் தான் இருக்கும்.
அப்படி கண்டு கொள்ளாமல் விட்ட போதே, குஜராத் மாநிலம் இப்படி பெரு வளர்ச்சி அடைந்திருக்கிறது என்றால் நரேந்திர மோடியின் அர்ப்பணிப்பு உணர்வு தான் காரணம்.
மஞ்சள் காமாலைக் கண்ணர்கள் அதே கண்ணோடு அவர்களை நோக்குவதையெல்லாம் கண்டு கொள்ளக்கூடாது. இந்த கும்பல் என்றைக்கு நல்லவர்களை வாழ்த்தியிருக்கிறது. இவர்கள் யாரையாவது புகழ்ந்தால் தான் டேஞ்சர். இந்த மஞ்சள் (பச்சை?) காமாலைக் கண்ணர்கள் கண்டபடி திட்டுபவர்களை கண்ணை மூடிக் கொண்டு நல்லவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கலாம். உலகம் முழுதும் இதே நிலை தான்!
ooOoo
‘இயற்கையைத் தவிர என்னை யாராலும் அழிக்க முடியாது’ என்று திருவாய் அருளியுள்ளார் மு.கருணாநிதி. எந்த அர்த்தத்தில் இந்த ‘அழிப்பு’ என்ற வார்த்தையை வகைப்படுத்திக் கொள்வது என்று தெரியவில்லை. அவரை அழிக்க வேண்டும் என்று அரசியல் எதிரிகள் சொன்னால் அதற்கு அர்த்தம் ‘அரசியலை விட்டு ஓரங்கட்ட வேண்டும்’ என்பது தான். அது தான் நடந்தேறி விட்டது. வேறு அர்த்தத்தில் சொல்வாரேயானால் , ஆமாம்.. எல்லாரையுமே இயற்கையைத் தவிர வேறு யாராலும் அழிக்க முடியாது தான். கடவுள் என்பதை இயற்கை என்று டிக்ஷனரியில் மாற்றி 40 ஆண்டு காலம் ஆகிறதாம்!
என்னை எவனும் தீர்த்துக் கட்ட முடியாது என்று கைப்புள்ள ரேஞ்சில் உதார் விடுவது பெரிய விஷயமேயல்ல. ஆனால் பேஸ்மெண்ட் வீக்காகி கட்டடமே ஆடிக் கொண்டிருக்கும் போது இப்படி டயலாக் விட்டால் மக்கள் காமெடிக்கு கைப்புள்ள எதற்கு, அதான் இவரு இருக்காரே என்று முடிவெடுத்தது தொடர்ந்து கொண்டே இருக்கும்.
இத்தனை வயதாகி விட்டது. இன்னமும் வஞ்சம், குரோதம், குறிப்பிட்ட இனத்தின் மீது காழ்ப்புணர்ச்சி என்று எத்தனை காலம் தான் ஓட்டப் போகிறார் கருணாநிதி?
தனது அனுபவத்தை அவர் அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று சிலர் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
ஐயையோ, போதுமப்பா. அந்த அரசியல் ‘பண்பாடு’ அடுத்த தலைமுறைக்கும் தொடர வேண்டாம் ப்ளீஸ்!
ooOoo
''சில நேரங்களில் பொய் ஜெயித்து விடுகிறதே… அப்படியான சமயங்களில் தங்களின் மனநிலை எப்படி இருக்கும்?''
''தங்களுடைய கேள்வியிலேயே இதற்கான விடை இருக்கிறதே! பொய் 'சில நேரங்களில்’ மட்டும்தான் ஜெயிக்க முடியும் என்று நீங்களே சொல்கிறபோது, பல சமயங்களில் பொய் தோற்றுவிடும் என்றுதானே அர்த்தம். அந்தச் சில தருணப் பொய்மையின் வெற்றியும் ஆழமானது அல்ல. நிரந்தரமானதும் அல்ல. உண்மை வெற்றி பெறுகின்றபோது, அது ஓங்கி உயர்ந்த வெற்றியாகவும் நீடித்து நிலைத்து நிற்கும் வெற்றியாகவும் இருக்கும் என்பதே எனது மனநிலை!''
– ஆனந்த விகடன் வாசகர் மேடையில் மதுரை ஆட்சியர் சகாயம் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வியும், அதற்கான பதிலும் தான் இது!
இப்படிப்பட்ட நேர்மையான அதிகாரிகள் இருப்பதினால் தான் ஜனநாயகம், அரசாங்கம், அரசியல் என அனைத்து விஷயங்களிலும் ஒரு பிடிப்பு நமக்கு ஏற்படுகிறது.
வாழ்த்துகள்!