‘ஈமு’த் தாய்
தேர்தல் சமயத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக (?!) குரல் கொடுத்து ‘ஈழத் தாய்’ என்ற பட்டம் பெற்ற தமிழக முதல்வர் இப்போது அநாதையாக விடப்பட்டுள்ள ஆதரவற்ற ஈமுக் கோழிகளைக் காப்பாற்றுவதற்காக ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி அளித்துள்ளார். இனிமேல் ‘ஈமுத் தாய்’ என்று அவரை தாராளமாக போற்றி மகிழலாம்.
ஈமுக் கோழி ஃப்ராடுகள் ‘உள்ளே’ தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஏற்கனவே வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஃபைனான்ஸ் கம்பெனிகள் லிஸ்ட்டில் ஈமுவையும் சேர்த்து விட வேண்டியது தான். ஃபைனான்ஸ் கம்பெனி நாமதாரர்களுக்கு சென்னையில் ஒரு பனகல் பார்க் கிடைத்தது போல, ஈமு இளிச்சவாயர்களுக்கு நாமக்கல் பக்கத்தில் அரசாங்கமே பார்த்து ஒரு பூங்காவை தயார் செய்து கொடுத்தால் ஒரு சில மாதங்களுக்கு அவர்கள் கூடி நின்று ஒப்பாரி வைத்து கலைந்து செல்ல வசதியாக இருக்கும்!
ooOoo

ooOoo
இனிமேற்கொண்டு ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு உருளை தான் மானிய விலையில் வழங்கப்படும் என்ற மாபெரும் சமுதாய சீர்திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர இருக்கிறது. அதற்கு மேல் ஆகும் சிலிண்டர்களுக்கு இரட்டிப்பு விலையை கொடுத்தாக வேண்டுமாம். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு என்று எல்லாவற்றையும் விலை உயர்த்திக் கொண்டே செல்லட்டும். நம்ம நாட்டு மக்கள் எந்த மேட்டராக இருந்தாலும் ஓரிரு நாட்களுக்கு மட்டும் புலம்பித் தீர்த்து விட்டு அடுத்த மேட்டருக்கு அப்படியே தாவி விடுவார்கள் என்பது ஆள்பவர்களுக்கு தெரியாதா என்ன?
ooOoo
‘மத்திய மந்திரி சபையில் மாற்றம் கொண்டு வந்தால், திமுக சார்பில் புதிய அமைச்சர்கள் யாரும் இடம் பெற மாட்டார்கள்’ என்று கருணாநிதி முடிவெடுத்துள்ளதாக
செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அப்படியெல்லாம் அவசரப்பட்டு நஷ்டத்தைச் சந்திக்கும் ஆள் இல்லை கருணாநிதி. ஆ. ராசா மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் பதவி விலகிய இடங்கள் அப்படியே இருக்கின்றன. அழகிரி மட்டும் அப்பா சொல்வதை எல்லாம் கொஞ்சம் காது கொடுத்து கேட்டால், ’நாட்டின் நன்மை கருதி’ தயாநிதி அழகிரிக்கு(ம்) மத்திய அமைச்சர் பதவியைத் தர திமுகவின் பொதுக்குழு, செயற்குழு, ஒன்றியக் குழு என்ற அத்தனை குழுக்களும் ஜனநாயக முறைப்படி முடிவெடுக்காதா என்ன?

ooOoo
இந்திய ராணுவ ரகசியங்களை(?!) சி.டி.யில் பதிந்து இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட திருச்சியைச் சேர்ந்த தமீம் என்பவன் கைது செய்யப்பட்டுள்ளான். அடப்பாவிகளா.. டெக்னாலஜி வளர்ந்துள்ள இந்த காலகட்டத்தில் இன்னமும் சிடியிலே இருக்கீங்களேப்பா!