ஒபாமா – ராம்னி – ஆக்‌ஷன் 500

முதல் டிபேட்டில் ஒபாமாவின் சோப்ளாங்கி பர்ஃபாமென்ஸ், VP Debateல் பைடனால் டிங்கர் பார்த்து பெயிண்ட் அடித்து ஓரளவு சரி செய்யப்பட்டிருந்த ஒபாமாவின் நசுங்கல்கள், இதெல்லாம் ஏற்கனவே பார்த்தோம்.

 
ஒபாமா – ராம்னியின் நேற்றைய டிபேட் 2 கண்மூடித்தனமான காட்டா குஸ்தி ரேஞ்சுக்குப் போய்விட்டது என்பதே இதன் ஹைலைட். 
 
பிஜிஎம்மில் ‘டாய், மவனே, த்தா, ம்மா, வெட்ரா, கீசுடா’ என்ற பஞ்ச் சவுண்டுகள் வந்ததை நானே என் அதிநவீன ஸ்பீக்கர் சிஸ்டத்தில் கேட்டு பயந்து போனேன்.
 
யார் கோட்டு முதலில் பிய்யப்போகிறது என்ற ‘பெட்’டில் எனக்கும் என் மனைவிக்கும் சிண்டுபிடி சண்டையே வந்து விட்டது. 
 
வெளியுறவுக்கொள்கை, வேலையில்லாத் திண்டாட்டம், ஹெல்த்கேர், இமிக்ரேஷன், அதி பயங்கர பெட்ரோல் விலை- இவை எல்லாவற்றிலும் திரும்பத் திரும்ப அரைத்த மாவையே அரைத்து சொன்ன பொய்யையே இருவரும் திரும்பத் திரும்ப சொல்லப் போகிறார்கள் என்பதெல்லாம் நமக்குத் தெரியாததா?
 
இருந்தாலும் பாசமலர் கணேசனை விஞ்சும் ரேஞ்சுக்கு ராம்னியின் நடிப்பு சுடர் விட்டதை சொல்லியே ஆகவேண்டும். ”உன் பேர் என்னப்பா கண்ணா, ஜெரிமியா, படிச்சு முடிச்சப்புறம் வேலை கிடைக்காதுன்னுதான கவலைப்படற? எனக்கும் அதே கவலைதான் தம்பி, அதுல பாரு நாலு வருஷமாவே நம்ம சோக்ரா பிரசிடெண்ட் ஆட்சியில ஒரு பயலுக்கும் படிப்பும் வரல, பாத்ரூமும் போகல, போனாலும் பேப்பர் இல்ல, எவனுக்கும் வேலையும் இல்ல” என்றதில் ஆரம்பித்து இடையிடையே குறுக்கு சால் ஓட்டி ஒபாமா ஆட்சி படுத்த படுக்கையாகக் கிடந்த 4 வருட பேரழகையும், முதல் வருடம் கால் நீட்டிக் கிடந்த ‘கோமா’ஞ்சலியையும் அவர் விலாவாரியாக விவரிக்கத் தவறவில்லை.
 
அதிபர் பொய்யர் நிக்ஸன் காலத்திலிருந்து சைனாவை இந்த அளவுக்கு வளர்த்துவிட்டு அந்த கொள்ளை லாபத்தில் குளிர்காய்வதே ரிபப்ளிகன்ஸ்தான். இருந்தாலும் “சைனாவை விடேன், அவர்களை என்ன செய்கிறேன் பாருங்கள்” என்று ராம்னி அழுகுணி உதார் விடத்தவறவில்லை.
 
பதிலுக்கு “நானும் சைனாவை அவர்கள் காலில் விழுந்தாவது கண்டிப்பேன்” என்று ஒபாமா சூளுரைத்ததைக் கேட்ட சீனர்கள் நூடுல்ஸ் சாப்பிடும்போது பொரை ஏறச் சிரித்திருப்பார்கள்.
 
 “சைனாவுக்குப் போய்விட்ட ஆயிரக்கணக்கான சிறுவேலைகள் இனி அமெரிக்காவுக்குத் திரும்புமா என்பது சந்தேகமே. நான் அதிக சம்பளம் தரும் ஹைடெக்னாலஜி வேலைகளை கண்டிப்பாக திரும்ப அமெரிக்காவுக்கு அழைத்து வருவேன். அவுட்சோர்சிங்குக்காக அமெரிக்க கம்பெனிகளுக்கு வழங்கப்படும் வரிவிலக்குகளை சுத்தமாக எடுத்து விடுவேன்” என்கிற ஒபாமாவின் பதிலில் அட்லீஸ்ட் கொஞ்சம் உண்மையாவது இருந்தது.
 
“யோவ், வூட்டுல புலி, வெளியில எலியாத் திரியுறியே, வெட்கமாயில்ல” என்று பயங்கரமாக மனைவி மிஷெலால் திட்டப்பட்ட ரோஷக் கோபத்தில் இருந்த ஒபாமா, அவ்வப்போது திக்கினாலும் திணறினாலும், முக்கினாலும் முனகினாலும், ராம்னியை ஒரே போடாகப் போடாவிட்டால் வீட்டில் ஆறின சோறும் அவிஞ்ச வெங்காயமும் கூடக் கிடைக்காது என்று தெரிந்த கோபத்தினால் ராம்னியை அடித்து சாத்த அஞ்சவில்லை.
 
“எதற்காகவடா அவர்களே கேட்காதபோது மிலிட்டரிக்கு இன்னும் 2 ட்ரில்லியன் டாலர்கள் தர நினைக்கிறாய், பாதகா? எப்படியடா ஏற்கனவே 5 ட்ரில்லியன் டாலர்கள் சைஸில் காசித்துண்டில் ஓட்டை விழுவதை சமாளிப்பாய்? யானைக்குக் கோவணம் கட்ட நினைப்பவன் ஒரு முழத்துணியும் ஒரு துருப்பிடித்த கஜக்கோலும் மட்டும் வைத்திருந்தால் போதுமா? எங்கே இருந்து அளவெடுப்பாய்? எட்டி உதைத்தால் தாங்குவாயா? ஏணி உண்டா? எப்படி அதைத் தைப்பாய்? எட்டி எட்டிக் குதிப்பாயா? எம்பிப் பார்ப்பாயா? அதற்குக் குஞ்சலம் உண்டா? பார்டர் கிடையாதா? லைனிங்குக்கு என்ன செய்வாய்? ‘டர்ர்ர்’ரென்று கிழியும்போது எப்படியடா ஒட்டுப் போடுவாய்?” – ப்ரீஸ்கூலில் கணக்கு பாடத்தை ‘ஆப்ஷ’னில் விட்டுவிட்டதால் ராம்னியிடம் இதற்கெல்லாம் பதில் இல்லை.
 
இமிக்ரேஷன் விஷயத்தில் ”எல்லாரையும் கழுத்தைப் பிடித்து உடனே வெளியே தள்ளாமல், கிரிமினல்கள் தவிர, அட் லீஸ்ட் ஸ்கூல் பசங்கள், சிறுவேலை செய்பவர்கள் இவர்களிடம் கொஞ்சம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்வேன்” என்கிற ஒபாமாவின் ஸ்டேட்மெண்ட் அவருக்கு எக்ஸ்ட்ரா வோட்டுகளை அள்ள வாய்ப்பு அதிகம்.
 
இன்ஷூரன்ஸ் விஷயத்தில் “என்னிய பெத்த எங்க கருப்பு அப்பத்தாவும் கருப்பு அப்பத்தாச்சியும்” என்று ஒபாமா மறுபடியும் ஆரம்பித்தபோது நான் ஐஸ்கோல்ட் பியர் தேடி ஓடிவிட்டேன்.
 
“உன்னுது பெரிசா, என்னுது பெரிசா?” சத்தம் கேட்டு திரும்ப வந்தேன். 
 
ரிடையர்மெண்ட் பேக்கேஜ் சைசில் “என்னுது சின்னதுதான்” என்று ஒபாமா ஒத்துக்கொண்ட பவ்யத்தையும், ஆடியன்சில் இருந்த அத்தனைபேரையும் விட ராம்னி மிகக் குறைந்த வருமான வரியையே செலுத்துவதையும் சுட்டிக்காட்டிய புத்திசாலித்தனத்தை பாராட்டலாம்.
 
தப்பித்தவறி ராம்னி கெலித்தால், நாசகார புஷ்ஷின் சதிகார வழிகளை ராம்னி இன்னும் படு பயங்கரமாகவே தீவிரமாகவே பின்பற்றுவார் என்பது பலரையும் பயமுறுத்திய விஷயம். ஆடியன்ஸை பயத்தில் உறையவைத்த நல்ல விபரம். எட்டு வருட புஷ்ஷவலத்தை ஒரே வருடத்தில் ராம்னி செய்து காட்டிவிடக்கூடிய redneck என்பது நாட்டுக்கே புரிந்தது.
 
லிபியாவில் அமெரிக்க தூதரகம் மீது நடந்த தாக்குதல் ‘terrorist attack' தான் என்று ஒபாமா ஏற்கனவே சொல்லி இருந்ததையும், அவர் அப்படி சொல்லவே இல்லை என்று ராம்னி அழுகுணியாக சாதித்ததையும் டிபேட்டின் அடிமட்டம் என்று கூறலாம். 
 
ஒபாமா வைத்தியம் பாட்டி வைத்தியம் தான். மிஞ்சிப்போனால் சுக்கு மிளகு திப்பில் சேதமாகும். ராம்னி வைத்தியம் அதிரடி ஆப்பரேஷன். அநேகமாக பேஷண்ட் அவுட்டாகி விடலாம். ஆனால் ’ஆப்பரேஷன் சக்ஸஸ்’ என்று அவர் கூரை மீதேறிக் கூவுவார். இதுதான் யதார்த்தம்.
 
கடோசிகடைசியாக ‘அந்த 47 பாயிண்ட்கள்’ பிரம்மாஸ்திரத்தை ஒபாமா வீசியது அவரிடம் இன்னும் கொஞ்சம் புத்திசாலித்தனம் இருப்பதை நிரூபித்தது. “When Romeny is talking about the 47%, who do you think he is referring to?" என்று ஆடியன்ஸைக் கேட்ட கேள்வி மரண அடி.
 
அடுத்த டிபேட் 3 க்கு ஆடியன்ஸ் கவச குண்டல ரத கஜ துரக பதாதிகளுடன் வருவது நல்லது. 
 
எது எப்படியோ, நவம்பர் எலெக்‌ஷனில் ரத்தம் தெறிக்கப் போகிறது என்பது மட்டும் நிச்சயம்!
 

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : October 17, 2012 @ 4:12 pm