கடவுள்களின் கார்னிவெல்

பொதுவாக இந்தியர்கள் தாங்கள் அமெரிக்க மண்ணை மிதித்ததற்கு சாட்சியமாக டிஸ்னிலேண்ட், நயாகரா, நியுயார்க் டைம் ஸ்கொயர், லாஸ் வேகாஸ் காஸினோக்கள் என்று பிகாஸா ஆல்பம்களில் நிரப்பி வைத்தாலும் மனதிற்குள் ரகசியமாக ’இங்க எங்கிட்டுய்யா நைட் கிளப், நியூட் பார்லாம் இருக்கு? ஒருதடவ போயிட்டு வந்திரனும்’ என்று வந்த புதிதில் நேர்ந்து கொள்வார்கள். ஆரம்ப பரபரப்புகள் எல்லாம் அணைந்துபோய் டிவியும், கள்ள டிவிடியில் திரைப்படமுமாக வாழ்க்கை சுவாரசியமில்லாது போகும்போது சமூக சந்திப்பு கூடமாக முதலில் தெரிவது கோவில்கள். கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்களுக்கு அவ்வளவாக கவலையில்லை. சீக்கியர்கள், ஜைனர்கள், இந்துக்கள் போன்ற சிறுபான்மையினர் ஒன்றுகூடி தங்களுக்கான ஆலயம் அமைத்திடும்போது அதனுடைய காஸ்மோபொலிடன் தன்மை மிகவும் சுவாரசியமானது.

சிகாகோ நகரத்திற்கு அருகே எல்க் க்ரோவ் (Elk Grove) என்னும் சிறு ஊரில் தங்கியிருந்த போதுதான் ஒரு தெலுங்கு நண்பர் அரோராவில் இருக்கும் வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலைப் பற்றி சொன்னார். தெலுங்கு அன்பர்களுக்கு பாலாஜி இருக்குமிடமெல்லாம் திருப்பதிதான். வாரயிறுதியில் உன்னையும் கூட்டிக் கொண்டு போகிறேன் என்று வாக்குறுதி தந்தவர், அவர் வீட்டிலிருந்து நான் தங்கியிருக்கும் இடத்துக்குண்டான தூரம், பெட்ரோல் செலவு என்று சில டாலர் கணக்குகளைப் போட்டுவிட்டு சட்டென பின்வாங்கிக் கொண்டார். இவர் இல்லாவிட்டால் நம்மால் போக முடியாதா என்ன என்று வீராவேசமாகத் தீர்மானித்து வாடகைக்கு ஒரு காரையும், வழி சொல்ல ஒரு நண்பரையும் சம்பாதித்துக் கொண்டு கிளம்பிவிட்டேன். ஆட்டோ-ட்ரான்ஸ்மிஷன் கார் ஓட்டிப் பழக்கமில்லாததால் கொஞ்சம் மேனுவல் எல்லாம் பார்த்து புரிந்துகொண்டு ஒரு வழியாக கோவிலைச் சென்றடைந்தோம். மிக பிரம்மாணட்மான கோவில்… இல்லை… இடம். அவ்வளவு பெரிய இடத்தில் நடுவில் கோவில் சிறியதாக தெரிந்ததாலும் உண்மையில் அது பெரிய கோவில்தான்.

அமெரிக்க கோவில்களுக்கு என்று சிறப்பு ஆகமங்கள் உண்டு. பெருமாள் சந்நிதி பிரதானமாக இருந்தாலும் அக்கம் பக்கத்தில் சிவன், நவக்கிரகங்கள், சத்ய நாராயணர், சுப்ரமணியர், விநாயகர் சந்நிதிகள் என்று பொதுவுடமை தத்துவத்தை பின்பற்றி எல்லா அன்பர்களையும் வரவேற்கும் அடிப்படையில் பெரும்பாலான கோவில்கள் கட்டப்பட்டிருக்கும். சந்நிதிகளின் முன்னால் காம்கார்டரை கட்டித் தொங்கவிட்டு பக்கவாட்டு டிவியில் ஒளி/ஒலி பரப்பும் வசதி கட்டாயம் உண்டு. அடுத்து நடக்கப் போகும் அபிஷேகம், ஆராதனை பற்றிய பட்டியல் நேரக் குறிப்போடு தெளிவாக காணப்படும். விபூதி, குங்குமம், துளசி தீர்த்தம், சடாரி சார்த்துவது தவிர பிரசாதமாக பாதாம் பருப்பு, உலர்ந்த திராட்சை, ஆப்பிள்கள் என்று கொடுக்கிறார்கள். அதற்கேற்றப்படி உண்டியல் கலெக்‌ஷனும் பிரமாதமாக இருக்கிறது என்றே அறிகிறேன்.

அரோரா கோவிலில் மேற்குறிப்பிட்டிருந்த அமெரிக்க ஆகம முறைப்படி எல்லா சந்நிதிகளுக்கும் இடமளிக்கப்பட்டு ஒரு கடவுள்களின் கார்னிவெல் போல் காட்சியளித்தது (அப்பாடா தலைப்பை ஜஸ்டிஃபை செய்தாகிவிட்டது). சிறப்பு அம்சமாக வாசலில் ஒரு மெர்சிடெஸ் கார் வைத்து Raffleகள் விற்றுக் கொண்டிருந்தார்கள். குலுக்கல் முறையில் கார் பரிசாக விழலாம் என்று பெரிய தட்டி வைத்து விளம்பரமெல்லாம் பிரமாதமாக இருந்தது. எங்களுக்கு முன்னர் சென்று கொண்டிருந்த நண்பர்கள் குழாமில் ஒருவர் லோக்கலில் மளிகைக் கடை வைத்திருக்கிறார்ப் போல. ‘சின்னக் கடை, பெத்த லாபம். பெத்த காரு, சின்ன ரேஃபல்’ என்று பஞ்சதந்திர திரைப்படத்தின் வசனங்கள் பேசி கலாய்த்துக் கொண்டிருந்தார்கள். கோவில் உள்ளே தெலுங்கும் தமிழும் சரிவிகிதத்தில் கலந்திருந்தது. நாம் இரண்டு வாக்கியம் பேசியவுடனேயே சட்டென நமது மொழியை கணித்து ‘அப்புறம்’ என்று பட்டர்கள் தங்கள் மார்கெட்டிங் திறமையை நிரூபித்துக் கொண்டிருந்தார்கள். பிரசாதமாக புளியோதரையும் தயிர்சாதமும் சாப்பிட்ட மாதிரி ஞாபகம். 

கிட்டத்தட்ட அதே போன்ற அமைப்புடன் கலிஃபோர்னியாவில் லிவர்மோர் ஊரிலும், நியூஜெர்ஸி ப்ரிட்ஜ்வாட்டரிலும் கோவில்கள் பார்த்தபோது எனது அமெரிக்க ஆகம தியரி உறுதியானது. லிவர்மோரில் உப கோவிலாக கொல்லைபுறத்தில் துர்க்கை சந்நிதி தனியாக கட்டப்பட்டிருக்கும். ஆறரை அடி உயரத்தில் ஒரு தமிழ் அர்ச்சகர் உற்சாகமாக வரவேற்று பூஜையெல்லாம் செய்து கொடுத்தார். அவ்வப்போது ராமர் பட்டாபிஷேகம், ஸ்ரீநிவாஸ திருக்கல்யாணம் என்று திருப்பதி ஸ்டைலில் பரபரப்பாக இருக்கின்ற கோவில். இன்னமும் பாரதவர்ஷமும் பரதகணட்த்திலும் இருப்பதாக உருவகித்துக் கொண்டு சங்கல்பம் செய்கிறார்கள். அர்த்தம் எல்லாம் யாருக்கு ஆகப் போகிறது. பாவத்தை செய்தால் போறாதா? புதுவருடம் பிறந்த ஒரு ஜனவரி திங்களன்று கோவிலுக்குப் போன போது கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. திருப்பதி பாணியில் மடித்து மடித்து க்யூவாக நிறுத்தி எல்லா சந்நிதியையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வெளிபோந்தால் தனியாக அர்ச்சகர்கள் வரிசையாக உட்கார்ந்து கொண்டு துளசி தீர்த்தமும், டிஷ்யூ பேப்பரோடு சக்கரை பொங்கலும் கொடுத்தார்கள். ராமருக்கும் கிருஷ்ணருக்கும் நடுவில் புது வருட ஸ்பெஷலாக திடீர் என்று ஒரு அனந்தசயனப் பெருமாள் பூ அலங்காரத்தில் சயனித்திருந்தார். ஓரிரு வாரங்களில் அவருக்கு முழு ஓய்வளித்து உள்ளே கொண்டு சென்றுவிட்டார்கள். இம்மாதிரி பெரிய கோவில்களுக்கு கமிட்டி, வாலண்டியர் என்று நிறைய ஆள்படைகள் இருந்தாலும் சில லோக்கல் ஸ்பானிஷ் மக்கள் பல பணிகளும் செய்து கொண்டிருப்பார்கள். நாளைய சரித்திரத்தில் ஒரு திருமங்கையாழ்வார் ஸ்பானிஷில் அரங்கன் சேவையாற்றியதைப் பற்றி பாசுரம் பாடினாலும் ஆச்சர்யமில்லை. 

லிவர்மோர் கோவிலை விட அருகாமையில் சான் ஹோசேவிலேயே ஒரு லக்ஷ்மி கணபதி கோவிலைக் கண்டறிந்தோம். ஆம். GPS கண்டுபிடிக்க முடியாத ஒரு கிட்டங்கியைத்தான் கோவிலாக மாற்றியிருந்தார்கள். அருகே ஒரு மசூதியும் சர்ச்சும் உண்டு. வசுதைவ குடும்பகம் இல்லையா? இங்கே அதிகம் தமிழ் குரல்கள் கேட்கலாம். பட்டர்களும் ஸ்மார்த்த தமிழர்களே. சமர்த்து தமிழரில்லையய்யா… சிவனை வழிபடும் சைவர்கள் என்று சொன்னேன். வட இந்தியர்கள் தொடங்கி, தெலுங்கர்கள் வழியாக தமிழர் கைக்கு வந்து சேர்ந்திருக்கும் கோவில் என்று நினைக்கிறேன். அதனால்தான் சித்தி விநாயகரும், வெங்கடேச பெருமாளும் வீற்றிருக்க தமிழ் சிவாச்சாரியர்கள் பூஜை செய்கிறார்கள். ஒரு மொபைல் சந்நிதியில் சிவபெருமான் லிங்க சொரூபியாக இருக்கிறார். அவ்வப்போது நகட்டி அந்தண்டை வைத்துவிட்டு ஹால் முழுவதற்குமாக சத்தியநாராயண பூஜை நடத்துவார்கள். பக்கவாட்டில் சின்னதாக ஒரு முருகன் மற்றும் நவக்கிரஹ சந்நிதியும் உண்டு. சித்தி, புத்தி என்று இரு தேவியருடன் ஆஜானுபாகுவான பிள்ளையாரை சந்தன காப்பில் பார்க்கும்போது அற்புதமாக இருக்கும். பிரம்மச்சாரி பிள்ளையாரெல்லாம் இரண்டு பெண்டாட்டிக் கட்டிக் கொண்டால் ஏன்தான் பெண் பற்றாக்குறை ஏற்படாது? நாளைய சந்ததியை எண்ணி சற்றே கவலையாகத்தான் இருக்கிறது. 

சான் ஹோசே கோவிலில் திருப்பதி பீமாஸ் புண்ணியத்தில் சாப்பாடு பிரமாதமாக இருக்கும். ஞாயிற்றுக் கிழமைகளில் இட்லி, பூரி, போண்டா, புளியோதரை என்று திமிலோகப்படும். மயில்சாமி / விவேக் புகழ் சிவசங்கர் பாபா அமெரிக்கா வந்திருந்த போது சான் ஹோசே கோவிலில் விசேஷ தரிசனம் தந்தார். அப்பொழுது திருப்பதி பீமாஸிலிருந்து கிச்சன் வந்து அமைத்து மசாலா தோசையெல்லாம் போட்டார்கள். எல்லாம் ஃப்ரீ. நான் மதிய உறக்கம் எல்லாம் முடிந்து மெதுவாக போவதற்குள் பாபாவின் சொற்பொழிவு முடிந்து கூட்டம் கிளம்பிவிட்டது. பாபா மட்டும் ஒரு சில அன்பர்களுக்கு பிரத்தியேக டிஜிடல் காமிரா தரிசனம் கொடுத்துக் கொண்டிருக்க அருகே சந்திக்கும் பாக்கியம் பெற்றேன். சற்றே வெளிறிவிட்டிருந்த டை அடித்த முடியுடனும் பிரயாணக் களைப்புடனும் அதிசயங்கள் செய்து காட்ட முடியாத ’மூட்’டில் இருந்தார். ’யாகவா முனிவரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்’ என்று அடிநாக்கு வரை வந்த கேள்வியை உள்நாக்கை மடித்து உள்ளே தள்ளிவிட்டு, எவ்வளவு எக்கிப் பார்த்தாலும் அவர் கண்களில் சந்திர சூர்யர்களைப் பார்க்க முடியாத ஏக்கத்துடன் கிளம்பினேன். 

சிவாச்சாரியர்கள் சின்சியராக ஒவ்வொரு நாளும் ஒரு கடவுளுக்கு என்று டைம்டேபிள் போட்டு பூஜை செய்தாலும், பெருமாள் சற்றே ஒதுக்கப்பட்டாற்ப் போலத்தான் இருந்தது. தசாவதாரம் வந்த புதிதில் அந்த பட்டர் பெருமாளை நமுட்டு சிரிப்போடு பார்த்து ‘பேரு மட்டும் கோவிந்தராஜ பெருமாளா இருந்திருந்தா… ஜஸ்ட் மிஸ் யா’ என்று சொன்னமாதிரி எனக்கு கனவெல்லாம் வந்தது.

பிரதி ஞாயிற்றுக் கிழமை ஒரு ஓரத்தில் தேமேயென்று இருக்கும் முருகனை பிரபலபடுத்தும் பொருட்டு பக்த கோடிகளோடு சேர்ந்து கந்த சஷ்டி கவசம் சொல்வது உண்டு. அன்பர் ஒருவர் முருகனின் அறுபடை வீட்டையும் விளித்து அரோஹரா கோஷம் எழுப்புவார். தொடர்ந்து கான்கார்டு முருகன், லிவர்மோர் முருகன், சான்ஹோஸே முருகன் என்று ஆறுமுகத்தாருக்கு அடிஷனல் படை வீடுகள் செட் செய்துவிடுவார். இன்னமும் 20-30 வருடங்களில் சான் ஹோஸே முருகனுக்கு ஒரு தொன்ம வரலாறு உருவாக்கி திருமுருகாற்றுப்படைக்கு அப்பெண்டிக்ஸாக சேர்க்க வாய்ப்புகள் இருக்கிறது. 

நான் சென்ற கோவில்களில் மிகவும் பிடித்த, அமைதியான சூழல் உள்ள கோவில் சான் ஹோசே லக்ஷ்மி கணபதி கோவில்தான். கூடவே அங்கு எப்பொழுதும் கிடைக்கும் மிகவும் அருமையான புளியோதரையும் தயிர்சாதமும். ஐ ரியலி மிஸ் இட்.

பென்சில்வேணியாவிற்கு குடிபெயர்ந்த போது ஆலண்டவுனில் இருக்கும் கோவிலைப் பற்றி கேள்விப்பட்டு ஓசி சாப்பாடு கிடைக்குமா என்று ஒரு ஓரத்தில் ஜனித்த ஆசையோடு போனேன். அது ஒரு பூரண இந்தியக் கோவில். ஒரு பக்கம் ஜைனர்களுக்கும், மறுபக்கம் சீக்கியர்களுக்கும் பாகம் செய்துவிட்டு நடுவில் ராதா கிருஷ்ணர் வீற்றிருந்தார். ராதா கிருஷ்ணருக்கு முன்னால் கொலுப்படியில் வைத்த மாதிரி சிவன், பெருமாள், கணபதி, அனுமார் என்று இன்ன பிற தெய்வங்கள். Poker முக பண்டிட் சரியாக மாலை 7:30க்கு துவங்கி இருபது நிமிடங்களில் ஆரத்தி அலங்காரங்கள் முடித்துவிட்டு ரிடையர் ஆகிவிடுகிறார். கோவிலுக்கு வரும் அன்பர்கள் பலரும் ஆண்டவனை விட அடுத்தவரோடு உரையாடுவதில் ஆர்வமாக இருப்பார்கள். கோல்ஃப் கிரவுண்டில் பிஸினஸ் டீல் முடிப்பது போல இந்தக் கோவிலில் பல முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கலாம். 

கோவிலை விட கோவிலுக்கான சஞ்சிகை ஒன்று பரபரப்பாக வலம் வருகிறது. அந்த சஞ்சிகையின் எடிட்டரை அண்மையில் சந்தித்த போது மிகவும் உத்வேகமாக தினப்படி கோவிலின் என்னவெல்லாம் நடக்கிறது என்று சொல்லிக் கொண்டிருந்தார். திங்கள் கிழமை அனுமார் நாற்பது சொல்கிறோம், வெள்ளிக்கிழமை விண்ணவன் ஆயிரம் சொல்கிறோம் என்று  பெரிய பட்டியலேப் போட்டார். நான் அடிக்கடி கோவிலுக்கு வருபவன் என்றதும் சுரத்து குறைந்து விடைபெற்று சென்றுவிட்டார். உண்மையில் இந்திய குடும்பங்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். வந்ததும் நேராக சமூகக் கூடத்திற்கு சென்று பண்டிகை கொண்டாட்டங்கள், கொண்டாட்டத்திற்கு ரிகர்சல், ரிகர்சலுக்கு மீட்டிங் என்று பீட்ஸா பானங்களுடன் கூடி களிக்கிறார்கள். அசந்து மறந்து கூட யாரும் ஆரத்தி சமயம் கூட கோவிலுக்குள் எட்டி பார்ப்பதில்லை. 

தற்போது இருக்கும் பகுதிக்கருகே ஸ்ட்ரௌட்ஸ்பர்கில் ஒரு அழகான சாரதாம்பாள் ஆலயம் இருக்கிறது. இது இந்தியாவின் சிருங்கேரி மடத்தின் கட்டுபாட்டில் இயங்குகிறது. இளமையான பட்டர்கள் சுருதி சுத்தமாக ருத்ரம், ஸுக்தம் எல்லாம் சொல்லி சாரதாம்பாளுக்கு பூஜை செய்கிறார்கள். பக்கத்தில் ஆதிசங்கரருக்கு ஒரு சந்நிதி இருக்கிறது. ’டுக்குருங் கரணே’ என்று ஆதிசங்கரர் மறுதளித்த சடங்குகளை விடாமல் பின்பற்றி வரும் அமைப்புதான் அவரது அத்வைத தத்துவத்தை போற்றி பாதுகாக்கிறது . சுப்ரமணியருக்கு சற்றே பெரிய சந்நிதி வைத்திருக்கிறார்கள். நான் முதன்முதலில் போனபோது சற்றே பெரிய பக்தர்கள் கூட்டம் சுப்ரமணிய புஜங்கம் சொல்லி விஸ்தாரமாக வழிபட்டுக் கொண்டிருந்தார்கள். ஆம். தமிழ் கூட்டம்தான். ஒரு சின்ன மூலையில் சில பல பக்தி புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கிறார்கள். குறிப்பிட்ட விலையென்றில்லாமல் வேண்டியதை எடுத்துக் கொண்டு பணத்தை உண்டியலில் சேர்த்து விடும்படி சொல்கிறார்கள்.

சாண்டா கிளாராவில் ஒரு பாலாஜி கோவில் இன்னமும் கட்டி முடிக்கவில்லை. தாற்காலிகமாக ஒரு சிறிய வீட்டில் வைத்து நடந்து வருகிறது. கர்நாடக மாநிலத்து பட்டர் வட இந்திய பாணியில் ராகம் போட்டு ருத்ரம் சொல்வது வேடிக்கையாக இருக்கும். ஆனால் வாரம் முழுவதும் பல பூஜைகளை கிரமமாக செய்து விடுவார். சங்கடஹர சதுர்த்தி, குரு பெயர்ச்சி, பிரதோஷம் போன்ற நாட்களில் ஸ்பெஷல் பூஜைகளுமாக பிரமாதப் படுத்துவார். 

லாஸ் ஏஞ்சல்ஸிலும், பிட்ஸ்பர்கிலும் பிரபலமான கோவில்களுக்கு ஒருமுறை சென்று வந்திருக்கின்றேன். இவ்வளவு கோவில்களை கவனித்ததில் புரிந்தது என்னவென்றால், அமெரிக்காவில் கோவில் கட்ட வேண்டுமென்றால் வெங்கடேச பெருமாள் மிக முக்கியம். அநேக கோவில்கள் ‘பாலாஜி கோவில்’களாகவே அறியப்படுகின்றன. ஸர்வதேவ நமஸ்காரம் ஸ்ரீ பாலாஜி பிரதிகச்சதி – எல்லா தேவதைகளுக்கு செய்யப்படும் வணக்கமும் பாலாஜி பெருமாளுக்கே போய்ச் சேருகிறது.

தொடர்புடைய படைப்புகள் :

4 thoughts on “கடவுள்களின் கார்னிவெல்

 • February 24, 2010 at 12:53 am
  Permalink

  I have visited many temples here.now i had an oppotunity to know temples in usa.

  Reply
 • February 19, 2010 at 12:35 pm
  Permalink

  சிக்காகோ அரோரா கோவில் கிட்டதட்ட ஹோட்டல் போல அகிவிட்டது. உணவு சுவையாக இருப்பதால் வருபவர்கள் சிலர் நேராக சாப்பிட சென்றுவிடுகிறார்கள். 2 வருடங்களுக்கு முன்னர் மசால் தோசை சட்னி என பலகாரக் கடைப் போல மேனு இருந்தது. இப்பொழுது எப்படி ?

  ஆனால் கோவில் இருக்கும் இடம் மிக அருமையான இடம். எனக்கு மிகவும் பிடத்த கோவிலும் இதுவே.

  Reply
 • February 19, 2010 at 11:36 am
  Permalink

  I have been to the Aurora temple several times. An excellent temple. They made a lot of modifications after few years. The food there is awesome.

  Reply
 • February 18, 2010 at 9:18 pm
  Permalink

  உங்கள் ஆன்மீகப்பயணக்கட்டுரை மிகவும் அருமை. அதிலும் ஹாஸ்யத்துடன் நீங்கள் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் உங்களுடன் சேர்ந்து பயணம் செய்த அனுபவத்தைத் தந்தது. நாங்கள் கேள்விப்படாத கோவில்களைப் பற்றித் தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : February 18, 2010 @ 8:22 pm