சுட்டீஸ்களுக்கு மைண்ட் மேப்ஸ் ஓர் எளிய அறிமுகம் – 06

முந்தைய பகுதி

'நரேன், எனக்கொரு டவுட்’ என்றபடி வந்தான் சீனு.

 
’என்ன? மைண்ட் மேப்லயா?’ சிரித்தான் நரேன்.
 
‘ஆமா, எப்படிக் கண்டுபிடிச்சே?’
 
’நானும் உன்னைமாதிரிதான், எங்க அக்கா மைண்ட் மேப்ஸ் பத்திச் சொல்லிக்கொடுத்தப்புறம் அடுத்த சில நாள் எனக்கு வேற எந்தச் சிந்தனையும் ஓடலை, ராத்திரி பகலா கையில கிடைச்ச பேப்பர்லயெல்லாம் கன்னாபின்னான்னு எதை எதையோ மைண்ட் மேப்பா வரைஞ்சு பார்த்தேன், விதவிதமா டவுட் வந்தது, அக்காவைக் கேள்வி கேட்டுத் துளைச்சுட்டேன்! நல்லவேளையா, அவங்க என்மேல கோவப்படாம, பொறுமையா எனக்குச் சொல்லிக்கொடுத்தாங்க.’
 
‘அப்புறம்? இப்பல்லாம் உனக்கு டவுட்டே வர்றதில்லையா? எல்லாம் தெளிவாப் புரிஞ்சுடுச்சா?’
 
‘அப்படிச் சொல்லமுடியாது, அப்பப்ப ஏதாச்சும் சந்தேகம் வரும், நானே வெவ்வேறவிதமா மேப்களை மாத்தி வரைஞ்சு பார்ப்பேன், ஏதாவது ஒண்ணு க்ளிக் ஆகிடும்’ என்றான் நரேன், ‘அப்படியும் பதில் தெரியலைன்னா, அக்காவுக்கு ஃபோன் போட்டுக் கேட்கவேண்டியதுதான்.’
 
’என்னடா இப்படிச் சொல்றே? மைண்ட் மேப்ல இதுதான் சரியான வழின்னு எதுவும் கிடையாதா? ஒத்தையா ரெட்டையா போட்டுப் பார்த்துதான் வரையணுமா?’
 
‘நான்தான் உனக்கு ஆரம்பத்திலயே சொன்னேனே, மைண்ட் மேப்ஸ் வரையறதுக்குன்னு உறுதியான ரூல்ஸ் எதுவும் கிடையாது, ஒரே விஷயத்தைப்பத்தி நீயும் நானும் வெவ்வேறவிதமா யோசிக்கலாம், அதனால நம்ம ரெண்டு பேரோட மைண்ட் மேப்ஸும் முழுக்க முழுக்க வெவ்வேறவிதமாக்கூட அமையலாம், ஆச்சர்யமே இல்லை!’
 
‘செமயாக் குழப்பறேடா நீ!’
 
‘சரி, அதை விடு, உனக்கு என்ன டவுட்? அந்த விஷயத்தைச் சொல்லு முதல்ல.’
 
சீனு பாக்கெட்டிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்துப் பிரித்தான், ‘இன்னிக்குக் காலையில எனக்குப் பிடிச்ச கிரிக்கெட்டர்ஸைப்பத்தி ஒரு மைண்ட் மேப் வரைய ஆரம்பிச்சேன், பாதி முடிக்கறதுக்குள்ள ஒரு பெரிய குழப்பம். அதான் உன்னைக் கேட்கலாம்ன்னு வந்தேன்.’
 
’அப்படி என்னடா பெரிய குழப்பம்?’ என்றபடி அந்தக் காகிதத்தை வாங்கிப் பிரித்தான் நரேன். விறுவிறுவென்று அதை மேலோட்டமாகப் பார்வையிட்டான்.
 
07    
 
'எல்லாம் சரியாதானே இருக்கு, என்ன பிரச்னை?’
 
’மேப் வரைய ஆரம்பிக்கும்போது எல்லாம் சரியாதான் இருந்தது, பாதித் தூரம் வந்ததும்தான் குழப்பம் ஆரம்பிச்சது’ என்றான் சீனு, ‘பவுலர்ஸ்ங்கற கிளைல கபில் தேவ் பேரை எழுதிட்டேன், அப்போதான் அவர் பிரமாதமான பேட்ஸ்மேனும் ஆச்சேன்னு ஞாபகம் வந்தது.’
 
‘அதேமாதிரி இயான் போதம் பேரு பேட்ஸ்மேன்ஸ் கிளையில இருக்கு’ என்று சுட்டிக்காட்டினான் சீனு, ‘ஆனா அவர் நல்ல பவுலரும்கூட.’
 
‘சரி, இப்ப என்ன பிரச்னை?’
 
‘கபில் தேவ், இயான் போதம் ரெண்டு பேரும் பேட்டிங், பவுலிங் ரெண்டுலயுமே பிரமாதமான ஆளுங்கங்கறதால, நான் அவங்க பேரை ரெண்டு இடத்துல எழுதணுமா? அது தப்பில்லையா?’
 
‘டேய் மக்கு, நான்தான் சொன்னேனே, மைண்ட் மேப்ல எதுவுமே தப்பில்லை’ என்றான் நரேன், ‘உனக்கு அவங்க ரெண்டு வெவ்வேற கிளைகள்ல இடம்பெறணும்ன்னு தோணிச்சுன்னா, தாராளமா ரெண்டு வாட்டி எழுதலாம், ஏன், பத்து வாட்டிகூட எழுதலாம்!’
 
‘ஆனா, இப்படி ஒரே பேரை வெவ்வேற கிளையில எழுதும்போது, இதுவும் அதுவும் ஒரே ஆள்தான்னு படிக்கறவங்களுக்குத் தெரியவேணாமா? அதுக்கு என்ன வழி?’
 
‘நோ ப்ராப்ளம், ஒரு மரத்தோட ஒரு கிளைக்கும் இன்னொரு கிளைக்கும் நடுவுல நூல் ஒண்ணைக் கட்டினமாதிரி, இந்த ரெண்டு கபில் தேவையும் ஒண்ணாப் பிணைச்சுட்டாப் போச்சு’ என்றபடி சீனுவின் மைண்ட் மேப்பில் இரண்டு வளைகோடுகளை வரைந்து அம்புக்குறிகளை இட்டான் நரேன்.
 
08
 
அவன் வரைவதை ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்த சீனுவின் முகத்தில் ஏமாற்றம், ‘இவ்ளோதானா?’ என்றான்.
 
‘பின்னே? இதென்ன ராக்கெட் சைன்ஸா? செம ஈஸிடா!’
 
‘ஒரே பேர் நம்ம மைண்ட் மேப்ல ரெண்டு வெவ்வேற இடங்கள்ல வந்தா, இந்தமாதிரி ஒரு கோடு போட்டு அதை இணைச்சுடணும், இல்லையா?’
 
’ஆமா, ஆனா, அது ஒரே பேரா இருக்கணும்ன்னுகூட அவசியமில்லை, உன்னோட மைண்ட் மேப்ல எந்த ரெண்டு கிளைகளுக்கு நடுவில தொடர்பு உண்டுன்னு நினைக்கறியோ அதையெல்லாம் இதுமாதிரி லிங்க் செஞ்சுடலாம், அதாவது, கோடு போட்டு இணைச்சுடலாம், அப்போதான் படிக்கறவங்களுக்கு அது சட்டுன்னு புரியும்.’
 
‘தொடர்புன்னா? புரியலையே!’
 
‘கொஞ்சம் பொறு’ என்று அதே மைண்ட் மேப்பில் இன்னொரு வளைகோட்டை வரைந்து இணைப்பு உண்டாக்கினான் நரேன். ‘இதைப் பாரு, புரியுதா?’
 
09
 
’ஓகே ஓகே’ என்று பலமாகத் தலையாட்டினான் சீனு, ‘மார்க் வாஹ், ஸ்டீவ் வாஹ் ரெண்டு பேரும் ப்ரதர்ஸ், அதனால அந்த ரெண்டு ப்ராஞ்சுக்கும் நடுவுல கோடு போட்டிருக்கே, கரெக்டா?’
 
‘ஆமா, இதுமாதிரி உன்னோட மைண்ட் மேப்ல வெவ்வேற மூலைல இருக்கற எந்த ரெண்டு விஷயங்களுக்கும் இணைப்பு உண்டாக்கலாம்’ என்றான் நரேன், ‘மைண்ட் மேப்ங்கறது ஒரு மையக் கருத்து, அதுலேர்ந்து சில கிளைகள், இன்னும் சில கிளைகள், இன்னும் சில கிளைகள்ன்னு பிரிஞ்சு போய்கிட்டே இருக்கும்போது, ஒண்ணுக்கொண்ணு சம்பந்தமே இல்லாத வெவ்வேற கிளைகளுக்கு நடுவுல சில தொடர்புகள் வரக்கூடும், அப்போ அதையெல்லாம் சரியாப் பதிவு பண்ணாம மிஸ் செஞ்சுட்டோம்ன்னா அப்புறம் பெரிய குழப்பம் வரும், அதைத் தவிர்க்கறதுக்குதான் இந்த இணைப்புகள் பயன்படுது.’
 
‘தேங்க்ஸ்டா’ என்று எழுந்தான் சீனு, ‘நான் கிளம்பறேன்.’
 
‘கொஞ்சம் பொறுடா, உன்னை இன்னும் குழப்பவேண்டியிருக்கு.’
 
‘என்னடா சொல்றே?’
 
‘இப்போ, உன்னோட கபில் தேவ், இயான் போத்தம் பிரச்னைக்கு லிங்க் போட்டுத் தீர்வு கண்டுட்டோம், இல்லையா?’
 
’ஆமா!’
 
’இந்தப் பிரச்னைக்கு இது ஒண்ணுதான் தீர்வுன்னு அர்த்தமில்லை, இதை வேற சில விதங்கள்லயும் தீர்க்கலாம்’ என்றான் நரேன், ‘ஒரே விஷயத்தை வெவ்வேற நபர்கள் வெவ்வேறமாதிரி மைண்ட் மேப்பாப் பதிவு செய்வாங்கன்னு நான் சொன்னேன்ல? அதைக் கொஞ்சம் முயற்சி செஞ்சு பார்ப்போம்’ என்றவன் காகிதத்தைத் திருப்பி ஏதோ வேகமாக வரையத் தொடங்கினான்.
 
10
 
சீனு முகத்தில் திருப்திப் புன்னகை, ‘சூப்பர்டா’ என்றான் மெல்ல, ‘கபில், இயான் போதம் ரெண்டு பேரையும் ஆல் ரவுண்டர்ஸ்ங்கற ஒரு தனிக் கிளைக்கு மாத்திட்டே, இப்போ குழப்பமே இல்லை, லிங்கும் தேவையில்லை!’
 
‘கொஞ்சம் பொறு, இன்னொரு வேலை பண்றேன்’ என்று சிரித்தான் நரேன், அதே காகிதத்தின் வேறொரு மூலையில் விறுவிறுவென்று இன்னொரு புதிய மைண்ட் மேப்பை உருவாக்கினான்.
 
11
 
சீனு தான் எழுதிய மைண்ட் மேப்பையும் இந்தப் புதிய மைண்ட் மேப்பையும் பலமுறை மாற்றி மாற்றிப் பார்த்தான். அவனுடைய நெற்றியில் குழப்ப ரேகைகள் நெளிந்தன.
 
‘என்னடா? ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்ன்னு புரியுதா?’ என்று சிரித்தான் நரேன்.
 
‘புரியுது, ஆனா நீ ஏன் இப்படி மாத்தியிருக்கேன்னு தெரியலை’ என்றான் சீனு, ‘நான் எழுதின மைண்ட் மேப் தப்பா?’
 
‘மைண்ட் மேப்ல சரி, தப்புன்னு எதுவும் இல்லை சீனு, ஒரே விஷயத்தை வெவ்வேறவிதமாப் பதிவு செய்யமுடியும்ங்கறதைக் காட்டறதுக்காக அப்படி மாத்தினேன்.’
 
‘அதாவது, நீ உன்னோட ஃபேவரிட் கிரிக்கெட்டர்ஸைப்பத்தி யோசிக்க ஆரம்பிச்சதும், உனக்கு பேட்ஸ்மேன், பவுலர்ங்கற கிளைகள் தோணியிருக்கு, அதிலேர்ந்து படிப்படியா சிந்திச்சு மேலே போயிருக்கே.’
 
‘ஆனா எனக்கு, ஃபேவரிட் கிரிக்கெட்டர்ஸ்ன்னு சொன்னதும், அவங்க பேரும் முகமும்தான் ஞாபகத்துல வந்தது, அதையே கிளைகளா வெச்சுகிட்டு நான் வேற ரூட்ல பயணம் செஞ்சிருக்கேன்.’
 
’நாம ரெண்டு பேரும் பதிவு செஞ்ச விஷயம் ஒண்ணுதான், அதை யோசிச்ச, எழுதின விதம்தான் வேற’ என்று சிரித்தான் நரேன், ‘இதை Mind Map Basic Structureன்னு சொல்வாங்க, அதாவது, இந்த மைண்ட் மேப் எப்படி அமையணும்ங்கற அடிப்படைக் கட்டுமானம்.’
 
’இந்த ஸ்ட்ரக்சர் எப்பவும் கரெக்டா அமையும்ன்னு சொல்லமுடியாது, ஏதாவது தப்பான ரூட்ல கிளம்புவோம், வழியில எதுனா பிரச்னை வரும், திரும்பி வந்து இன்னொரு ரூட்ல முயற்சி செய்வோம், இப்படிக் கொஞ்சம் கொஞ்சமா சரியான கட்டுமானத்தைக் கண்டுபிடிக்கணும்.’
 
‘பல நேரங்கள்ல இந்த ஸ்ட்ரக்சரைக் கண்டுபிடிச்சுட்டாலே பாதி பிரச்னை தீர்ந்தது, அதுக்கப்புறம் கோடிட்ட இடங்களை நிரப்பறமாதிரி கடகடன்னு விஷயங்களைக் கொட்டிடலாம்.’
 
சீனு தன் கையில் இருந்த மூன்று மைண்ட் மேப்களையும் ஆவலுடன் பார்த்தான், ‘ஒரே பிரச்னைக்கு இத்தனை தீர்வுகளா?’ என்பதுபோலிருந்தது அவன் முகபாவம்.
 
‘நரேன், இன்னும் ஒரு கேள்வி பாக்கியிருக்கு.’
 
‘என்னது?’
 
‘இப்படி நோட்லேர்ந்து பேப்பரைக் கிழிச்சு மைண்ட் மேப் வரையறோமே, ஒருவேளை அந்த ஒரு காகிதத்துக்குள்ள விஷயத்தைச் சொல்லமுடியாட்டி?’
 
‘இன்னும் கொஞ்சம் பெரிய காகிதமா எடுத்துக்கோ!’ என்று கண்ணடித்தான் நரேன்.
 
‘டேய், காமெடி பண்ணாதேடா, கொஞ்சம் சிக்கலான விஷயங்களையெல்லாம் மைண்ட் மேப்பா எழுதும்போது இந்தக் காகிதம்ல்லாம் போதாதுன்னு தோணுது.’
 
’உண்மைதான், அதுக்கு வேற சில டெக்னிக்ஸ் இருக்கு’ என்றான் நரேன், ‘நான் சொன்னமாதிரி பெரிய காகிதங்களைத் தரையில பரப்பி வெச்சுகிட்டு வரைவாங்க, நம்ம க்ளாஸ்ல இருக்கறாப்போல பெரிய போர்ட்களைப் பயன்படுத்துவாங்க, அவ்வளவு ஏன், காம்பவுண்ட் சுவத்துலகூட மைண்ட் மேப் வரையறவங்க இருக்காங்க.’
 
‘இவை எதுவும் சரிப்படலைன்னா, இருக்கவே இருக்கு, கம்ப்யூட்டர்!’
 
(தொடரும்)

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : March 4, 2013 @ 11:29 pm