1999 ம் வருடத் தேர்தல்

manmohan-singh_dec20இந்தியாவில் பொது தேர்தல் எப்போதுமே ஒரு திருவிழாதான். நாற்காலி நுனியில் உட்கார வைக்கும் த்ரில்லர்தான்!

தற்போது 16 வது பொதுத்தேர்தல்  முடிவடையும் நிலையில் இருக்கின்றன. வரும்  மே 16 ந் தேதி  முடிவுகள் அறிவிக்கப்பட்டு 16 வது மக்கள் சபை பதவிக்கு வரும். யார் ஆட்சி அமைக்கப்போகிறார்கள் என்று இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும்.

முதல் தேர்தல் 1951 வருடம் அக்டோபர் மாதம் ஆரம்பித்து 1952ம் வருடம் பிப்ரவரியில் முடிந்து, அந்த வருடம் ஏப்ரல் 17 அன்று முதல் மக்களவை நேருவின் தலைமையில்  பதவியேற்றது. 

"விதியுடன் ஒரு சந்திப்பை பல வருடங்களுக்கு முன்பு நாம் முடிவு செய்திருந்தோம். அந்த முடிவை செயலாக்கும் நேரம் இன்று வந்துவிட்டது….." நேருவின் புகழ் பெற்ற  Tryst With Destiny, என்கிற இந்த  சுதந்திர பிரகடன உரைக்குப்  பிறகு இந்திய அரசு முழுமையான ஒரு குடியரசாக  செயல்பட  ஆரம்பித்தது  1952 ல்தான்.  

489 இடங்களுக்கு  364 இடங்கள்  பெற்ற காங்கிரசுக்கு  அன்று இருந்த எதிர் கட்சிகள்,  பாரதீய ஜனதா சங், (இன்றைய பிஜேபியின் முதல் அவதாரம்) சோஷலிஸ்ட் கட்சி  மற்றும்  குடியரசு  கட்சி. 

முதல் 5 மக்களவை தேர்தல்களில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. எமர்ஜென்சிக்கு பிறகு வந்த 1977 வருட தேர்தலில் காங்கிரஸ்  சந்தித்த பெரும் தோல்விக்கு பின்னர், முதன் முறையாக காங்கிரஸ் அல்லாத கட்சியாக மொரார்ஜி தேசாயின் தலைமையில்  ஜனதா கட்சி ஆட்சி அமைத்தது. அதன் பின் வந்த மக்களவை  தேர்தல்களில் படிப்படியாக மாநிலக் கட்சிகளும்  வலுப்பெற ஆரம்பிக்க, மாநிலக் கட்சிகளின் ஆதரவுடன் தேசியக் கட்சிகள்  கூட்டணி ஆட்சி  அமைப்பதும், சில சமயம் கூட்டணிகள் சரிவராமல் ஆட்சிகள் கலைந்து மறு தேர்தல் வருவதும்  வழக்கத்தில் வந்தது. 

இப்படி ஒவ்வொரு தேர்தலும் மகேசனாகிய மக்கள்  தீர்ப்பின்படி மாறி மாறி சுழன்று கொண்டுதான் இருக்கிறது. 

இந்த சமயத்தில் 1999 ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தல் நினைவுக்கு வருகிறது. அந்த சமயத்தில் மன்  மோகன் சிங் தெற்கு டில்லி காங்கிரஸ்  வேட்பாளராக இருந்தார். ஆனால் ஜெயிக்க வில்லை. சுமார் 30 ஆயிரம் ஒட்டு வித்தியாசத்தில்  பிஜேபியிடம் தோற்றார். அந்த தேர்தலில் அவர் பிரசாரம் மேற்கொள்ளும்போது அவருடன் கூடவே  பயணம் செய்து செய்தியனுப்பினேன். அன்றைய  செய்தியை இன்று படித்தால் எப்படி இருக்கும்?  

15 வருடங்களுக்கு முன்னால் இருந்த மன்மோகன் சிங்  இதோ…….


பாட்டு, நடனம், வாழ்க… கோஷங்கள் சகிதம் தென் டில்லி புற நகர் பகுதி ஒன்றில் நகர்ந்துகொண்டிருந்த அந்த கும்பலுக்கிடையே, அந்த அமர்க்களத்துக்குள்ளே ஏதோ தெரியாத்தனமாக மாட்டிகொண்டதுபோல் தெற்கு  டில்லியின் காங்கிரஸ் வேட்பாளர். மன்மோஹன் சிங்  தென்படுகிறார்.

பொருளாதாரத்தில் புலி, இந்தியாவின்  பொருளாதார சீர் திருத்தங்களின் முன்னோடி, நல்ல மென்மையான மனிதர்,வம்பு தும்புகளுக்கு போகாமல் தானுண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர், எல்லாவற்றிற்கும் மேலாக மிக நாணயமானவர் என்றெல்லாம் விவரிக்கப்படும் இவர்  இதுவரை தேர்தலில் நிற்காத ஒரு அரசியல்வாதி. அரசு அதிகாரியாக பல நிலைகளில் பல வருடங்கள்  இருந்து பின்னர் ராஜ்ய சபா மெம்பராக ஆகி நாளடைவில் நிதியமைச்சரானவர். இப்போது தேர்தலில்  நிற்கும் நாள் வரை ராஜ்ய சபாவில் காங்கிரஸின் பாராளுமன்ற தலைவர்.  “எனக்கு வாழ்க்கையில் எல்லாமே கடவுள் புண்ணியத்தில் நிறைவாகவே உள்ளது. இனி எனக்கு தேவையானது என்று எதுவுமே கிடையாது…" என்று கூறுபவர். இப்போதும் தேர்தலில் நிற்க அவர் அத்தனைப் பிரியப்படவில்லை என்றும் கட்சி தலைமைக்கு கட்டுபட்டே அரை மனதாக
ஒத்துக்கொண்டதாகவும் சொல்லியிருக்கிறார்.

தெற்கு டில்லி, வழக்கமாக சுஷ்மா ஸ்வராஜின் கோட்டை. இந்த முறை அவருக்கு பதிலாக வி.கே. மல்ஹோத்ரா  பிஜேபியின் வேட்பாளர். பிஜேபியின் ராஜ்ய சபா தலைவரான இவருக்கு தெற்கு டில்லியில் நிறைய செல்வாக்கு உண்டு  என்றும் இவரை எதிர்த்து மன்மோஹன் சிங் வெற்றி பெறுவது கடினம் என்றும் சொல்கிறார்கள். 

பொதுவாக அறிஞர்கள் கூடும் கருத்தரங்குகள், தனிப்பட்ட முறையில் தொலைக்காட்சி கேள்வி நேரங்கள் இவற்றில் நன்றாக பேசும் இவருக்கு பொது மக்களிடையே நேரடி தொடர்பு கிடையாது என்பது இவரைப்பற்றி ஒரு முக்கிய விமரிசனம். 

முதல் முறையாக மக்களிடையே அவர்கள் இருப்பிடத்தில் சந்தித்து பேசுவது பற்றி இவர் என்ன நினைக்கிறார்? 

"மிகவும் வித்தியாசமாக உணருகிறேன். இது முழுக்க முழுக்க எனக்கு ஒரு புது அனுபவம்தான். ஆனால் மனதுக்கு மிக நிறைவாக இருக்கிறது. இப்படி பொது மக்களை அவர்களிடம் நேரில் சென்று அவர்கள் குறைகளை அறிவதில் நான் பல விஷயங்களைக் கற்றுகொள்கிறேன். சராசரி மக்களிடம் நெருங்கி பழக இது ஒரு நல்ல வாய்ப்பு." என்கிறார். 

பிரசாரம் ஆரம்பித்து சில நாட்களிலேயே மன்மோஹன் சிங்கிற்கு தன் கட்சியில் உள்ள உள்ளூர் அரசியலும் பூசலும் விளங்கியிருக்கும். ஏனென்றால், தொகுதி விஜயங்களுக்கு அந்தந்த தொகுதி எம் எல் ஏ கூட இருந்து உதவி செய்ய வேண்டும். தேர்தலில் செலவழிக்க தன்னிடம் பணமில்லை என்று முதலிலேயே மன்மோஹன் சொல்லியிருந்ததால், தொகுதியின் கட்சிகாரர்கள், எம்.எல்.ஏக்கள் செலவுகளைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது கட்சியின் முடிவு. ஆனால் பல தொகுதிகளில் இவரைப் பிடிக்காத எம்.எல்.ஏக்கள் இவரை அதிகம் கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறார்கள். சோனியா காந்தியின் "கிச்சன் காபினெட்டின்" முன்னாள் நபர் ஒருவரின் ஆதரவாளர்களின் அதிருப்தியையும் இவர் சம்பாதித்துக்கொண்டதன்  விளைவுதான்  இந்த அதிருப்தி.

இப்படி சில அதிருப்தியாளர்கள் இவருடன் தொகுதிகளுக்கு கூட சென்று உதவி செய்யாமல் கைவிட்டாலும், இவர் கடமையே கருத்தாய் சில சமயங்களில் தனியாகவே – தன் நெருங்கிய சில உதவியாளர்கள் துணையுடன் – பிரசாரம் செய்ய நேருகிறது. ஆனால் இவரது நண்பர்களும் உறவினர்களும் இவருக்கு பக்க பலமாக உதவுகிறார்கள்.

அவருக்கு தேர்தல் அனுபவமில்லை என்பது அவருடன் கூட சென்ற சில நிமிடங்களிலேயே நமக்கு விளங்கிவிடுகிறது. கட்சி தொண்டர்கள் சந்து பொந்துகளில் எங்கு திரும்பி எங்கு செல்வது என்றெல்லாம் அவர்களுக்குள் வாக்குவாதம் செய்யும்போது மௌனமாக ஒதுங்கி நிற்கிறார். மக்கள் கூட்டம் அதிகமாகி வேறு இடத்திற்கு நகரத் தொடங்கும்போது  தொண்டர்கள் இவரைக் கையைப் பிடித்துக்கொண்டு குழந்தையைப்போல் நடத்தி அழைத்துச் செல்வதையும்  பொறுத்துக்கொள்கிறார். அவர்கள் நுழையச் சொல்லும் வீட்டில், குருத்துவாராவில் நுழைகிறார்.

ஆனால் இவரது தேர்தல் அனுபவமின்மையை மக்கள் அத்தனைப் பொருட்படுத்துவதாக தெரியவில்லை. " இன்றைய அழுகிப்போன அரசியலில் இவர் ஒரு நல்ல மனிதர். சுத்தமானவர். காங்கிரஸ் பற்றி எங்களுக்கு மதிப்பு இருக்கிறதோ இல்லையோ மன் மோஹன் சிங்கை அவரது நாணயத்துக்கும், நல்ல குணங்களுக்கும் தேர்ந்தெடுப்பதில் எனக்கு தயக்கமெதுவுமில்லை," என்கிறார்  இவரது தொகுதியில் கறிகாய்கடை வைத்திருக்கும்  நரேந்திர சிங். "இவர் நிதியமைச்சராக இருந்தபோது இந்திய பொருளாதாரத்தை மிக நேர்த்தியாக சமாளித்தாரே…" என்று 
சிலாகிக்கிறார்   வாடிக்கையாளர் ஒருவர். நேர்மையானவர் என்பதெல்லாம் சரி… இவரது மென்மையான சுபாவம் இந்திய அரசியலுக்கு ஒத்து வருமா? " அதனால் என்ன? தீர்மானங்கள் எடுக்கும்போது சரியான முடிவைத் திட்டவட்டமாக எடுப்பதுதானே முக்கியம். இவரால் அது முடியும்." என்று இன்னும் சிலர் கருத்து தெரிவிக்கிறார்கள். 

தெற்கு  டில்லியில் சீக்கியர்கள் அதிகம். அதனால், சீக்கியர்களின் ஓட்டு இவருக்குதான் என்பது ஒரு வாதம். சொல்லப்போனால் இவரை இந்த தொகுதியில் நிற்கவைத்ததற்கே காரணம் சுமார் ஒரு லட்சம் சீக்கிய வாக்காளர்களின்  ஓட்டுகளைக் கவரதான். ஆனால், 1984ல் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த வன்முறைகளில் குற்றம் சாட்டப்பட்ட காங்கிரஸ்காரர்களுக்கு எதிராக இவர் ஒன்றும் சொன்னதில்லை என்கிற கோபம் சில சீக்கியர்களுக்கு இருக்கலாம்  என்கிறார்கள். தவிர, ரிஸர்வ் பேங்க் அதிகாரியாக இவர் இருந்தபோது 1984 வன்முறையில் அடிபட்டவர்களுக்கான  கடன் தொகையின் வட்டியைக் கைவிட்டுவிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டபோதும் அவர் அதை ஏற்றுகொள்ளவில்லை. குறைந்த பட்சம் வட்டிதொகையைக் குறைக்கக்கூட இல்லை…" என்று பிஜேபி வேட்பாளர் மல்ஹோத்திரா கூறி  வருகிறார். 

ஆனால் " கடந்தவை கடந்தவையாகவே இருக்கட்டும். இங்கே யாரும் அதையெல்லாம் மனதில் கொண்டதாக  தெரியவில்லை. கெட்ட கனவாக என்றோ மறந்துவிட்டனர். பழசை நினைவில் வைத்துகொண்டு இருப்பதில்  லாபமில்லை. எதிர்காலம் எப்படி அமையப்போகிறது என்பதைப் பற்றி சிந்திப்பதுதான் முக்கியம்." என்று சீக்கியர்கள் 1984 வன்முறைகளின் கசப்பு நினைவுகளை ஒதுக்கி வைத்து விட்டார்கள் என்கிறார் ஒரு வியாபாரி.

இப்படி முன்னாள் நிதியமைச்சருக்கு ஆதரவாக எண்ணங்கள் தொகுதியில் இருந்தாலும்  "அவர் நல்ல மனிதர்தான்,  ஆனால் எவ்வளவுதூரம் திறமையான ஆட்சியாளராக இருப்பார்…?" என்ற சந்தேககுரல்களும் நிறையவே இருக்கின்றன." நிச்சயமாக வாஜ்பாயின் சாமர்த்தியம் இவருக்கு வராது….பிரதமராக வாஜ்பாய்தான் சரி." என்கிறார்,  மன்மோஹன் சிங் தன் தொகுதியில் பிரசாரம் செய்வதைக் கவனித்தவர் ஒருவர். இவர் அடிப்படையில் டில்லிக்காரர் இல்லை என்பதும் இவருக்கு எதிராக சொல்லப்படும் ஒரு வாதம். (ராஜ்ய சபாவிற்கான மனுவில் இவர் அஸ்ஸாம் பிரஜை என்று குறிப்பிட்டுள்ளார்.)

கட்சி அடிப்படையில் மக்கள் முடிவு செய்தால் பிஜேபிக்கு வாய்ப்பும், தனிமனிதர் என்ற அடிப்படையில் முடிவு செய்தால் மன் மோஹன் சிங்கிற்கு வாய்ப்பும் என்ற ரீதியில் தேர்தல் முடிவு இருக்கலாம்.

பெரும்பாலான தொகுதி மக்கள் ஒரு தர்மசங்கடத்தில் இருக்கிறார்கள். இவர்கள் விருப்பம் வினோதமானது. "வாஜ்பாயைப் பிரதமர் பதவிக்காகவும், மன்மோஹன் சிங்கை நிதியமைச்சர் பதவிக்கும் தேர்வு செய்ய முடியுமா?!" என்று இவர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்!!

இதன் நடுவில் யார் வந்தால் என்ன நம் நிலை அப்படியேதான் இருக்கிறது….எதற்காக ஓட்டு போட வேண்டும் என்ற விரக்தி குரல்களும் ஆங்காங்கே கேட்கின்றன. 

இந்த நிலையில் தான் வெற்றி பெறும் சாத்தியக்கூறுகளைப் பற்றி மன் மோஹன் சிங்கின் அபிப்பிராயம்? "கட்டாயம் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்குள்ளது." என்று ஆணித்திரமாக சொல்கிறார். ஆனால், வாஜ்பாய் அரசின் மேல் மக்களுக்கு ஒரு நம்பிக்கை உருவாகியிருக்கிறது, என்கிறார்களே… இந்த நிலையில் மக்களிடம் என்ன சொல்லி உங்கள் பக்கம் இழுக்கப்போகிறீர்கள்? என்று கேட்டால்  "இன்றைய நிலையில் இந்தியாவுக்கு தேவை ஒரு நிலையான அரசாங்கம். மக்கள் கட்டாயம் மாறுதலை விரும்புகிறார்கள்…."என்று கையை உயர்த்தி அடித்து சொல்கிறார்."

 

சரித்திரம் இப்படித்தான் சுழலுமோ? 2014 க்கும் இது பொருந்துகிறதே… !!

""கடவுள் மேல் இந்தியர்களுக்கு நம்பிக்கை அதிகமாகிறதோ குறைகிறதோ…தெரியாது. ஆனால் கடவுளுக்குக் கட்டாயம் இந்தியா மேல் இன்னும் நம்பிக்கை  இருக்கிறது. பல தேசங்களில் பலவித ஆதி கலாசாரங்கள் – எகிப்திய கலாசாரம்  போன்றவை  காலப்போக்கில்
அழிந்துபோயின. ஆனால் 5000 வருடங்களுக்கு மேலாக இந்திய கலாசாரம் எப்படியோ பல இன்னல்களுக்கிடையே  பிழைத்துதான் வந்திருக்கிறது. இதற்கு ஓரளவு கடவுளின் கிருபை இந்தியா பக்கம் இருக்கிறது என்றுதான் நான் நம்புகிறேன்." 

இது, அந்த 1999  தேர்தலுக்கு  6 மாதங்கள் முன்பு அவர்  எனக்கு கொடுத்த வேறு ஒரு  பேட்டியில் கூறியது. அந்தப் பேட்டியும், அப்போதுதான் புதுக் கட்சி தொடங்கியிருந்த சரத் பவாரின் பேட்டியும்  அடுத்த வாரம் ……

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : June 2, 2014 @ 6:25 am