தாடிக்கும், டாடிக்கும் வேட்டு வைத்த மோடியும், லேடியும்

modi-jaya

இந்திய அளவில் பாரதிய ஜனதாவும், தமிழ்நாட்டளவில் அதிமுகவும் அடைந்திருக்கும் வெற்றி நிச்சயமாக பிரமாண்ட வெற்றிகள் தான்.

மோடியும், லேடியும் தேர்தலில் இணைந்து போட்டியிட்டிருந்தால், தமிழகத்திற்கு குறைந்தபட்சம் ஐந்து கேபினெட் அந்தஸ்து மத்திய அமைச்சர்கள் சர்வ நிச்சயமாக கிடைத்திருந்திருப்பார்கள்.

அநேகமாக தேர்தலுக்குப் பிறகு அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று எண்ணி தான் அதிமுக தனித்து களமிறங்கியிருந்திருக்கும்.

தனித்து நின்றால் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி உறுதி என்று ஜெ.விற்கு ஆலோசனை கொடுத்த நபரை கண்டிப்பாக பாராட்டியே தீர வேண்டும். அந்த ஆலோசனையை அப்படியே செவிமடுத்து கம்யூனிஸ்டுகளை கழட்டி விட்ட ஜெயலலிதா தான் உண்மையிலேயே அரசியல் சாணக்யி.

ஆனாலும் தமிழகம், மேற்கு வங்காளத்தைத் தவிர மீதி நாடெங்கிலும் வீசிய மோடி அலையில், பாரதிய ஜனதா தனிப் பெரும்பான்மையை அடைந்து விட்டதால் அதிமுகவின் தயவு அதற்கு இப்போதைக்கு தேவைப்படாது. ஆனாலும் மாநிலங்களவையில் பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் எண்ணிக்கை குறைவு.

எனவே எந்நேரம் வேண்டுமானாலும் மோடிக்கு ஜெ., அல்லது மம்தா ஆகியோரின் ஆதரவு தேவைப்படலாம். ஏற்கனவே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பு ‘அனைத்து கட்சிகளையும் அரவணைப்போம்’ என்கிற ரீதியில் பாரதிய ஜனதா தரப்பில் அறிவித்ததற்கு இதுவும் ஒரு காரணம்.

மன்மோகன்சிங் பெயரில் சோனியா & ராகுல்காந்தி குடும்பத்தினர் நடத்திய அரசு எந்தவொரு விஷயத்திலேயுமே நற்பெயர் எடுக்கவில்லை. எனவே நாடு முழுதும் மக்கள் காங்கிரஸூக்கு பெரும் பாடம் கற்பித்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் அதிமுக 25 இடங்கள் வரை தான் பெறும் என்று அனைத்து ஊடகங்களும் தெரிவித்தன. ஆனாலும் எல்லா கணிப்புகளையும் மீறி 37 இடங்களைக் கைப்பற்றியது எப்படி?

நான்காண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சி நடந்தபோது நினைத்த போதெல்லாம் மின் தடை. அப்போதெல்லாம் கரண்ட் கட் ஆனாலே, “ஆற்காட்டார் வந்திட்டாருப்பா” என்று தான் மக்கள் சொல்வார்கள். திமுக ஆட்சி வீழ 2ஜி ஊழல், குடும்ப ஆட்சி, என்பதையெல்லாம் தவிர மின் தடையும் பெரும் இடத்தைப் பெற்றது. இப்போது அதிமுக ஆட்சியிலும் மின் தடைக்கு குறைச்சலில்லை. 

ஆனாலும் மக்கள் மின் தடையையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஏன்?

அடிப்படையிலேயே அண்ணாதுரை தலைமையில் திமுக ஆட்சியைக் கைப்பற்றியது முதலே அதில் எம்.ஜி.ஆரின் பங்கும் உண்டு. பிறகு கருணாநிதி ஆட்சிக்கு வந்ததிலும் எம்.ஜி.ஆரின் பங்கு மகத்தானது. எம்.ஜி.ஆர். தனிக்கட்சி தொடங்கிய பிறகு.. தமிழக அரசியல் என்றால் எம்.ஜி.ஆர். தான். அவரைச் சுற்றி தான் அரசியல். அவரது மறைவுக்குப் பிறகு அது அப்படியே ஜெ.விடம் வந்துவிட்டது. 1996-லும், 2006-லும் திமுகவிற்கு கிடைத்த வெற்றிகளெல்லாம் கூட அதிமுகவின் மீதான மக்கள் அதிருப்தியின் வெளிப்பாடு தான். அதனால் தான் 2006-ல் கூட திமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் எம்.ஜி.ஆர்., ஜெ. ஆகியோரை மையப்படுத்தி மட்டுமே! அதனால் தான் தனித்து நின்றாலும் சாதனை படைக்க முடிந்திருக்கிறது அதிமுகவினால்.

சரி.. 37 தொகுதிகளில் ஜெயித்தாலும் அமைச்சரவையில் இடம் பெற முடியாதே அதிமுகவினால்? அதனால் என்ன பயன் என்று கேட்டு திருப்திப்பட்டுக் கொள்கிறார்கள் படுதோல்வியடைந்த திமுகவினர்.

இங்கே தான் ஜெ.வின் அரசியல் இருக்கிறது. அவர் அடுத்ததாக என்ன முடிவு எடுப்பார் என்பதை யாராலும் கணிக்க முடியாது. இந்திய அளவில் பாரதிய ஜனதா, காங்கிரஸூக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய கட்சியாக அதிமுக உருவெடுத்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக திரிணாமுல் காங்கிரஸ் இருக்கிறது. ஏற்கனவே மூன்றாவது அணி ஆட்சி அமைக்கவிருந்தால் ஜெ. பிரதமராக ஆதரவு தருவோம் என்று மம்தா கூறியிருந்திருக்கிறார். 

பாரதிய ஜனதாவும் கூட  ஜெ.வை பகைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பாது. அதுவும் மோடி அதிமுகவுக்கு அனுசரணையாகவே நடந்து கொள்வார். தமிழகத்தில் பாரதிய ஜனதா கூட்டணி சார்பில் பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கக்கூடும். சுகாதாரத்துறை அமைச்சராவார் என்று அந்தக் கட்சியின் தொண்டர்கள் பேசிக் கொள்கிறார்கள். அப்படி வாய்ப்பு கிடைத்தாலும் அதன்பிறகு பாரதிய ஜனதா என்ன சொல்கிறதோ அதைக் கேட்டாக வேண்டிய கட்டாயம் பா.ம.க.விற்கு. 

தேமுதிக, மதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளுக்கு வெற்றி பெற வைக்கும் அளவிற்கு வாக்கு வங்கி இல்லை என்பது இப்போதும் நிருபணமாகியுள்ளது. இந்தச் சூழலில் நாடு முழுவதிலும் எல்லா இடங்களில் வெற்றி பெற்றாலும் தமிழகத்தில் காலூன்ற முடியாமல் தவிக்கும் பாரதிய ஜனதா, வரும் தமிழக சட்டசபைத்தேர்தலில் குறைந்தது இரட்டை இலக்க இடங்களிலாவது போட்டியிட்டு ஜெயிக்கத்தான் விரும்பும். அப்படி ஒரு கட்டத்தில் அதிமுகவுடன் இணைந்து போட்டியிடுவதைத் தவிர அதற்கு வேறு வழி கிடைக்காது.

அப்படி சட்டசபைத்தேர்தலை முன்வைத்து அதிமுகவுடன் இணக்கமாக செயல்பட இப்போதே பாஜக முடிவெடுக்கும். அப்படி ஒரு சூழலில் இன்னமும் சில மாதங்களில் மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம் கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

காங்கிரஸோடு மோதல் போக்குடன் செயல்பட்டது போல பாரதிய ஜனதாவுடன் மோதல் போக்கில் செயல்பட விரும்பமாட்டார் ஜெ. 

திமுகவைப் பொறுத்தவரை இது ஒரு வரலாற்று தோல்வி. இந்த அதிர்ச்சியிலிருந்து திமுக மீண்டெழ நாள்பிடிக்கும். இந்தத் தேர்தலில் 10 இடங்களையாவது பிடித்தால் மு.க.ஸ்டாலினுக்கு மகுடாபிஷேகம் சூட்டப்படும் என்று கட்சியினர் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் அழகிரியின் விருப்பப்படி திமுக படு தோல்வி அடைந்திருக்கிறது. பல தொகுதிகளில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சியுடன் இறுதி வரை கூட்டணி வைத்து விட்டு, கடைசியாக அதனை கழட்டி விட்டு புனித பிம்ப வேடம் போடும் திமுகவை மக்கள் நம்பத் தயாராக இல்லை என்பதையே இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

திமுகவிற்கென 25%க்கு மேல் வாக்கு வங்கி இருக்கிறது என்று இதுநாள் வரை அவர்கள் சொல்லிக் கொண்டிருந்த கணக்கும் தவறாகிப்போய் விட்டது. இதே ரீதியில் சென்றால் அடுத்த சட்டசபைத் தேர்தலிலும் கூட திமுகவுக்கு மூன்றாவது இடம் தான் கிடைக்கும்.

நரேந்திர மோடி பிரதமரானதை வரவேற்றுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. முதல்வர் ஜெ.விடமிருந்து இன்னமும் அது குறித்து கருத்து எதுவும் வரவில்லை.

அநேகமாக மே-21ம் தேதியன்று புதிய அமைச்சரவை பதவியேற்கும் என்று தெரிகிறது. ராஜீவ்காந்தி நினைவு தினம் அன்று தான் என்பது முரண்நகை.

மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு ஜெ. கலந்து கொள்ளச் செல்வாரா? அப்படிச் சென்றால் அதன் பிறகு அரசியல் இன்னமும் சூடு பிடிக்கும். அப்படிச் செல்லவில்லையென்றால்… அதை விட அதிகமாக சூடு பிடிக்கும்.

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : May 16, 2014 @ 2:00 pm