ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

மீனாக்ஷி ஊரில் காமாக்ஷி ஊர்வலம்!

music01ஒரு கச்சேரி என்றால் என்ன எதிர்பார்ப்போம். வர்ணம், விநாயகர் மேல ஒரு பாட்டு, ரெண்டு மூணு பிரபல சாஹித்தியங்கள், கொஞ்சம் சூடு பிடித்த பின் ஸ்வரம் நிரவலோட ஒரு மெயின் ராகம், நேரம் இருந்தால் ஒரு ராகம் தானம் பல்லவி, தொடர்ந்து சில துக்கடாக்கள் என விளிக்கப்படும் ஜனரஞ்சகமான பாடல்கள், ஒரு தில்லானா, மங்களம். இப்படி ஒரு கட்டுக்கோப்பான நிகழ்ச்சி நிரலை ஒட்டி அன்றைய நிகழ்வு இருக்க வேண்டும் என்பதுதான் நம் எதிர்பார்ப்பாக இருக்கும். இதைத்தான் கச்சேரி பத்ததி என்கிறார்கள். இப்படி ஒரு நிரலைப் போட்டுத் தந்தது அரியக்குடி ராமானுஜ ஐயங்கார். பல காலமாய்த் தொடர்ந்து இதுதான் கச்சேரி என்பதற்கான கட்டமைப்பு. நான் இந்தக் கட்டமைப்பைத் தாண்டி வேறு வடிவங்களில் கச்சேரிகள் கேட்டதே கிடையாது. ஒரு மாலை முழுவதும் ஒரே ராகம் பாடுவார்கள், விடிய விடிய நடக்கும் கச்சேரிகளில் பிரதான ராகம் மட்டுமே பல மணி நேரம் இருக்கும் என்பதெல்லாம் படித்துத் தெரிந்து கொண்டவையே தவிர கேட்டது கிடையாது.

இந்தக் கட்டமைப்புதான் கச்சேரி என்றால் நான் செய்யப் போவது கச்சேரியே இல்லை என்று முதலிலேயே சொல்லிவிடுகிறார் டிஎம் கிருஷ்ணா. Like how a conference, that does not adhere to the traditional rules that govern conferences, is called an unconference, his recent performances can be termed as unconcerts or unkutcheris. இதற்கு அக்டோபர் 12ஆம் தேதி ஹூஸ்டனில் நடந்த கச்சேரி, (இப்படி சொல்லலாமா என்றே சந்தேகம் வருகிறதே) இதற்குச் சரியான உதாரணம்.

எடுத்த உடனேயே ராவே ஹிமகிரி குமாரி என்று தோடி ஸ்வரஜதி. அதைத் தொடர்ந்து புல்லாகிப் பூண்டாகி என்று மாயாமாளவகௌளையில் விருத்தமும் ஶ்ரீ நாதாதி குருகுஹோ என்ற தீஷிதர் க்ருதியும். மூன்றாவதாய் ஜானேரோ என கமாஸில் ஜாவளி. அதற்கு பின் சாலக பைரவியில் ராகம் தானம் பாடிவிட்டு பதவினி சத்பக்தி என்ற தியாகராஜர் கீர்த்தனை. அது முடிஞ்ச பின்னாடி சங்கராபரணம் ராகம் எடுத்துவிட்டு ஶ்ரீராம்குமாரை வாசிக்க வைத்து, அவர் ராகம் முடித்த உடனே சங்கராபரணம் சம்பூர்ணமானது இதில் இனி பாட்டு வேண்டாம் என ரீதிகௌளையில் த்வைதமு சுகமா என்ற பாடல். தொடர்ந்து பைரவி ராகம் பாடிவிட்டு மீண்டும் காமாக்ஷி என்று ஸ்வரஜதி. அதை அடுத்து மாண்ட் ராகத்தில் பாரோ கிருஷ்ணைய்யா எனப் பாடிவிட்டு பெஹாக்கில் இரக்கம் வராமல் போனது ஏன் என விசாரித்து அந்த ராகத்திலேயே தில்லானாவும் மங்களமும் பாடி இன்றைய நிகழ்ச்சியை நிறைவு செய்தார். பாடல்கள் இடம் பெற்ற வரிசை மட்டுமில்லாது ஒவ்வொரு பாடலிலும் தன் கற்பனைக்கேற்றவாறு என்னென்னவோ சித்து விளையாட்டுகள் செய்து கொண்டே இருந்தார். பைரவி ஸ்வரஜதியில் ஶ்ரீராம்குமார் ஸ்வரங்களை வாசிக்க இவர் பாடல் வரிகளைப் பாடியது, தில்லானாவில் நிரவல் போலப் பாடியது எல்லாம் இதற்கு உதாரணங்கள். மீனாக்ஷி கோலோச்சும் ஹூஸ்டனில் ஒன்றுக்கு இரண்டு காமாக்ஷி பாடல்களைப் பாடியதையும் கூட இதில் சேர்த்துக்கொள்ள வேண்டியதுதான்.

கச்சேரி என்பதுதான் அன்கச்சேரி ஆனதே தவிர எடுத்துக் கொண்ட ஒவ்வொரு பாடலும் மிக சிறப்பாக மிக ஆத்மார்த்தமாக இசைத்தார்கள். பார்வையாளர்களை மகிழச் செய்ய வேண்டும் என்பதற்காகச் செய்யப்பட்ட கச்சேரி என்றில்லாமல் தங்களுக்காக அவர்கள் மூவரும் மெய்மறந்து இசைத்துக் கொண்டிருந்த அந்தரங்கமான தருணத்தில் பார்வையாளர்களும் பங்கெடுக்க கிடைத்த வாய்ப்பாகத்தான் இந்த மாலை எனக்குத் தோன்றியது. கண்ணசைவுகளிலும் புன்னகைகளிலும் ஏற்படும் தகவல் பரிமாற்றங்கள், எதிர்பாரா மீட்டலுக்கு உடனடியாக ஒரு பாராட்டு என்று மூவரும் இசைந்து இசைத்த விதமே அத்துணை அழகு. இவர்கள் மூவரும் தொடர்ந்து ஓர் அணியாக வாசிப்பதால் இவர்களுக்கிடையே இருக்கும் புரிந்துணர்வு அபாரமானது. அடுத்து என்ன சங்கதி வரப்போகிறது அதற்கு என்ன பதில் தர வேண்டும் என்பதெல்லாம் தனியான முனைப்பின்றி இயல்பாகவே வந்துவிடுகிறது.

ஆனால் ஒன்று சொல்ல வேண்டும். அவசர அடியாக அசுர வேகத்தில் எல்லாப் பாடல்களையும் பாடுகின்ற இந்த காலகட்டத்தில் சௌக்கியமாகப் பாட இவரை விட்டால் ஆள் கிடையாது. தோடியில் இருந்தே அப்படி ஒரு நிதானம். ஒரு சுழிப்பு, ஆரவாரமின்றி அமைதியாக ஓடும் அகண்ட நதியினைப் போல எடுத்துக் கொண்ட ஒவ்வொரு ராகமும் மிளிர இந்த நிதானம் தேவையான ஒன்றாகத்தான் இருக்கிறது. கிருஷ்ணா தொடர்ந்து இந்த விதத்திலேயே பாடி வருவது மெச்சத்தக்கது. என்ன சொன்னாலும் கேட்கும் குரல். அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற தெளிவு. கச்சேரி களை கட்ட இவை போதாதா? பார்வையாளர்களைக் கட்டிப் போட்டு விடுகிறார். நிதானமாகப் பாடும் பொழுது அடிக்கடி Pause செய்தால் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. அதைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டால் இன்னமும் அமோகமாக இருக்கும். ராகம் பாடினால் அதைத் தொடர்ந்து அந்த ராகத்தில் எந்த பாடல் வரும் என்றெல்லாம் நாம் எண்ணும் பொழுது அவ்வளவுதான் என்று தாண்டிப்போய்விட்டால் கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருக்கிறது. இது நம்முடைய எதிர்பார்ப்பின் தவறு என்று தெரிந்தாலும், அப்படியே பழகிவிட்டதால் மாற்றிக் கொள்ளக் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது.

music02கிருஷ்ணாவின் அத்தனை முயற்சிகளுக்கும் அடித்தளம் ஆர்கே ஶ்ரீராம்குமார் என்றால் அது மிகையில்லை. நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துத் தந்த விட்டல் ராமமூர்த்தி தனது நன்றியுரையில் ஶ்ரீராம்குமார் கர்நாடக சங்கீதத்தின் அகராதி. தனக்கும் தன்னைப் போன்றவர்களுக்கும் எதேனும் சந்தேகம் வந்தால் அவரிடம்தான் செல்வோம் என்றார். அதற்கு மேல் நாம் சொல்ல என்ன இருக்கிறது. அத்தனை இருந்தும் பக்கவாத்தியங்களுக்கு உண்டான இலக்கணம் மாறாமல் தனக்குண்டான இடத்தில் தன்னுடைய வித்வத்தைக் காண்பிப்பது இவர் சிறப்பு.

இந்த மாதிரி சௌக்க காலத்தில் பாடும் பொழுது லய வாத்தியங்கள் வாசிப்பது மிகவும் சிரமம். இப்படிப் பாடும் பொழுது எப்பொழுது வாசிக்க வேண்டும் என்பதை விட எப்பொழுது வாசிக்காமல் இருக்க வேண்டும் என்பது ஒரு கலை. தொடர்ந்து உடன் வாசிப்பதால் அருண்பிரகாஷ் அதை தனது தனித்துவமாகவே ஆக்கிக்கொண்டு விட்டார். ஒரு முறை கூட அந்த சமயத்தில் பாடப்படும் உணர்வுக்குக் கொஞ்சமும் பங்கம் வரும்படி வாசிக்கவில்லை. கிருஷ்ணாவே தனக்கு வாசித்துக் கொண்டால் இப்படித்தான் வாசித்திருப்பார் என்று நான் மீண்டும் மீண்டும் நினைத்தேன். இதற்கும் இவர்களிடையே இருக்கும் புரிந்துணர்வே காரணம். இவர்கள் மூவருடன் ஒரு உபபக்கவாத்தியமும் இருந்திருந்தால் இன்னமும் கூட நன்றாக இருந்திருக்கும் என்ற எண்ணம் மேலோங்கியது. ஒருங்கிணைப்பாளர்கள் இதனைக் கவனத்தில் கொள்ளலாம்.

மொத்தத்தில் கச்சேரி என்ற நம்முடைய புரிதலின் பேரில் ஏற்படும் எதிர்பார்ப்புகளை தள்ளி வைத்துவிட்டு சென்றால் கிட்டத்தட்ட நாலு மணி நேரம் நல்ல இசை மழையில் நனைந்துவிட்டு வரலாம். நனைந்துவிட்டு வந்தேன்.

தொடர்புடைய படைப்புகள் :

மனசுல பட்டதை சொல்லுங்க

கடைசியாக : October 15, 2014 @ 12:06 am