ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

லக லக #2

April 6, 2016 by · 2 Comments 

   

chandrakumar-dmdk2* 227 தொகுதிகளில் போட்டி. 7 தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு. ஆனால் அவர்களும் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவார்கள் என்று அறிவித்து வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு விட்டார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெ. ஜெயலலிதா. இப்படி ஒரு பட்டாசை அதிமுகவினரே எதிர்பார்த்திருக்கவில்லை என்பது தான் உண்மை. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் எப்படி நடந்ததோ அப்படியே சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி குவிந்து விடும் என்ற நம்பிக்கை. பல கருத்துக் கணிப்புகளும் அதிமுகவுக்கு தான் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று கூறுகின்றன.

* தேமுதிக என்ற பழம் விழவில்லையென்றால் என்ன.. மரத்தையே வெட்டி வீழ்த்துவோம் என்ற எண்ணத்தில் தேமுதிகவிலிருந்து பலரை இழுக்க ஆரம்பித்துள்ளார்கள் திமுகவினர். அப்படியெல்லாம் செய்தால் தான் தாக்குப்பிடிக்க முடியும் என்ற நிலை போல. எப்படி இருந்த கட்சி இப்படி ஆகி விட்டதே என்று உச்சுக்கொட்டத் தான் முடிகிறது. தேமுதிக என்ற கட்சிக்காக விழும் வோட்டெல்லாம், ஒன்று கூட்டணிக் கட்சிக்காக விழுவது. அல்லது விஜயகாந்திற்காக விழுவது. அவருடைய மனைவி பிரேமலதா தேர்தலில் நின்றால் கூட அவருடைய தனிப்பட்ட செல்வாக்கிற்காக ஒரு வோட்டு கூட விழுவது சிரமம் தான். இந்நிலையில் பதவி சுகத்தை இவ்வளவு நாள் அனுபவித்து விட்டு இப்போது திமுகவிற்கு ஓடிப் போனவர்களுக்கு தப்பித்தவறி தேர்தலில் நிற்க சீட்டு கொடுக்கப்பட்டால், பரம்பரை திமுகக்காரன் கூட அவர்களுக்கு வோட்டுப் போட மாட்டான்.

* எங்கேயாவது ஏதாவது போராட்டம் என்றால் வைகோ கொதிநிலைக்குப் போய் விடுகிறார். அதுவும் கையில் மைக்கும், சுற்றிலும் தொலைக்காட்சி கேமராக்களும் தெரிந்து விட்டால் போதும்… எதிரில் வந்து நிற்கும் காவல்துறை உயரதிகாரிகளை ஏக வசனத்தில் பேச ஆரம்பித்து விடுகிறார். தொகுதிக்கு சொற்ப வோட்டுகளை வைத்துக் கொண்டிருக்கும் அரசியல்வாதியாக இருக்கும் போதே இப்படி என்றால், இவர் கையிலெல்லாம் பதவி கிடைத்து விட்டால் என்ன செய்வாரோ? அதனால் தான் மக்கள் படு புத்திசாலித்தனமாக அவருக்கெல்லாம் வாய்ப்பு கொடுப்பதில்லை. “நீ அரசாங்கத்திடம் சம்பளம் வாங்கும் வேலைக்காரன் தானே?” என்று காவல்துறை உயரதிகாரியிடம் ஏக வசனத்தில் கேள்வி கேட்டிருக்கிறார். ஆமாம். அவர் உழைகிறார். சம்பளம் வாங்குகிறார். வைகோ என்ன செய்கிறார்? எங்கிருந்து வருமானம்? எப்படி குடும்பத்தைக் காக்கிறார்? நாவடக்கம் தேவை வைகோ.

* இதுவும் வைகோ மேட்டர் தான். யாராக இருந்தாலும், “அவர்கள் கோடிக்கணக்கில் பணம் பெற்று விடுகிறார்கள்” என்று தடாலடியாகக் குற்றம் சாட்டுகிறார் வைகோ. “நீங்க கூடத்தான் 1,500 கோடி வாங்கிட்டீங்கன்னு சமூக வலை தளங்களில் கூறுகிறார்கள்” என்று கேள்வி எழுப்பியதற்கு பதில் கூடச் சொல்லாமல் பேட்டியிலிருந்து பாதியில் வெளிநடப்பு செய்த புண்ணியவான் தான் வைகோ. அதாவது அடுத்தவருக்கு என்றால் தக்காளிச் சட்னி. அவருக்கென்றால் ரத்தமாம்.

* அவசர அவசரமாக வேட்பாளர் பட்டியலை அறிவித்து அடுத்த நாளிலிருந்து வரிசையாக வேட்பாளர்களை மாற்றிக் கொண்டிருக்கிறார் ‘அம்மா’. அநேகமாக வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டிய கடைசி நிமிடம் வரை இந்த மாற்றம் நிகழ்ந்து கொண்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஒவ்வொரு தேர்தலிலும் இதை ஒரு வழக்கமாகவே வைத்துக் கொண்டிருக்கிறார். செண்டிமெண்ட்டோ என்னவோ. ஆனால் கட்சிக்காரர்கள் தான் பாவம். நித்திய கண்டம், பூரண ஆயுசு நிலைமை.

* குல்லுகப்பட்டர், காஷ்மீரத்துப் பாப்பாத்தி, அண்டங்காக்கை, பனையேறி என்றெல்லாம் இஷ்டத்திற்கு படுகேவலமாகவெல்லாம் திட்டியவரை ரவுண்டு கட்டி திரும்பத் திட்டும் காலம் இது போல. ஏற்கனவே ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஒருமுறை “கருணாநிதி எதையும் ‘ஊதி’ பெருக்குவதில் வல்லவர்” என்று நக்கலடித்ததற்கு, “ஐயகோ, என்னை ஜாதிப் பெயரைச் சொல்லி நக்கலடித்து விட்டார்” என்று ஒப்பாரி வைத்தவர் மு.க. இப்போது வைகோ அதுவே ஒருபடி மேலேயே போய், “கருணாநிதி உலகத்திலேயே பழமையான ‘தொழிலைச்’ செய்யலாம். அவருக்கு இசை ஞானமெல்லாம் உண்டு. நாகஸ்வரமெல்லாம் தெரியும்” என்றெல்லாம் பேசி,அதன் பிறகு சில மணி நேரங்களில் மன்னிப்பு கேட்டதெல்லாம் ‘அடேங்கப்பா’ ரகம். என்ன இருந்தாலும் கருணாநிதியின் பிரதான சிஷ்யராக இருந்தவரல்லவா வைகோ. அவர் பத்தடி பாய்ந்தால் இவர் ஐம்பதடி பாய மாட்டாரா என்ன?

sarath-karunas* தற்போது காங்கிரஸ் கட்சியில் இருக்கும் நடிகை குஷ்பு, திருநங்கையர்களைப் பற்றி கேவலமாகப் பேசி விட்டார் என்று அவருக்கு எதிராக திருநங்கையர்கள் காங்கிரஸ் கட்சியின் அலுவலகமான சத்தியமூர்த்திபவனில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள். சாதாரணமாகவே குஷ்பு வாயைத் திறந்தாலே சர்ச்சைக்குரிய பேச்சு தான் இருக்கும். இப்போது இளங்கோவனுடன் வேறு அரசியலில் இணைந்து விட்டார். கூவம் பெருக்கெடுத்து ஓடாதா என்ன?

* நடிகர் கருணாஸூக்கு அதிமுக கூட்டணிக் கட்சி என்று ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல சரத்குமாரை கொஞ்சம் அலையவிட்டு, மீண்டும் கூப்பிட்டு ஒரு தொகுதி கொடுக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் தான் இவர்கள் இருவரும் நடிகர் சங்கத் தேர்தலில் இரு துருவங்களாக நின்றார்கள். விஷால் அணி சார்பில் நடிகர் சங்கத் தேர்தலில் நின்று ஜெயித்தவர் கருணாஸ். “அது வேற. இது வேற. எனக்காக சரத்குமார் அண்ணன் வோட்டு கேட்டு வருவார்” என்று கூறியிருக்கிறார் கருணாஸ். அரசியல்லே இதெல்லாம் சர்வசாதாரணமப்பா.

தொடர்புடைய படைப்புகள் :

Comments

2 Responses to “லக லக #2”
  1. Kannan says:

    Superb comments… A common man’s mind voice is reflected here.!

  2. பாஜகவை இப்படி ஒதுக்கலாமா? இப்போது தமாகவுடன் கூட்டணீ அமையப்போகிறது…

மனசுல பட்டதை சொல்லுங்க

கடைசியாக : April 6, 2016 @ 7:23 pm