ஆதவன்

உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் கே.எஸ்.ரவிகுமாரின் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் வெளிவந்துள்ள தீபாவளி திரைவிருந்து 'ஆதவன்'.

கதைப்படி சூர்யா,ஒருவரை அடித்துக் கூட்டிக் கொண்டு வா என்றால் வெட்டிக் கொண்டு வரும் திறமையான கூலிப்படை நபர். 'முக்கிய வழக்கிற்கான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வரும் நீதிபதி முரளியைக் கொல்ல வேண்டும்'என்ற அசைன்மெண்ட் சூர்யாவிற்கு ராகுல்தேவ்விடமிருந்து வருகிறது. முதன் முறையாக சூர்யாவின் குறியிலிருந்து தப்பி விடும் முரளியைக் கொலை செய்ய வடிவேலுவின் துணையுடன் அவர் வீட்டுக்குள்ளே சமையல்காரராகக் குடிபோகிறார். முரளி குடும்பத்தில் உள்ள பாட்டி முதல் சிறுசுகள் வரை அனைவரின் உள்ளங்களிலும் இடம் பிடிக்கிறார். சரோஜாதேவியின் பேத்தி நயன்தாரா உள்ளத்தையும் கொள்ளை அடிக்கிறார். இடையிடையே நயனுடன் டூயட் பாடிக் கொண்டே, முரளியைக் கொல்லவும் முயற்சிக்கிறார். இம்முயற்சிகள் தோல்வியைத் தழுவ,நயன்தாராவிற்கு சூர்யா மேல் சந்தேகம் வர, தான் யார் என்பதை விவரிக்கிறார். சூர்யா யார், அந்தக் குடும்பத்திற்கும் அவருக்கும் என்ன தொடர்பு?, ராகுல் தேவ்வின் அசைன்மெண்டை முடித்தாரா? முரளியின் நிலை என்ன ஆனது? இறுதியில் நயன்தாராவைக் கரம் பிடித்தாரா? என்ற சிற்சிலக் கேள்விகளுக்கு படத்தின் இறுதியில் விடை கிடைக்கிறது. ஆடல், பாடல், ஆக்ஷன், காமெடி, செண்டிமென்ட் போன்ற மசாலாக்களைக் கலந்து ரசிகர்களைக் கவர முயற்சித்திருக்கிறார் இயக்குனர். ஆனால் பாடல்களைத் திரையிடுவதற்காகவே திணிக்கப்பட்ட சீன்கள்,பல படங்களில் பார்த்து ரசித்த காட்சிகளின் தொகுப்பு, ஊகிக்க முடிந்த பிளாஷ்பேக் காட்சிகள் போன்றவற்றைச் சரி செய்திருந்தால் ஆதவன் இன்னும் ஜொலித்திருப்பான்.

படத்தில் சூர்யாவைத் தவிர இன்னொரு நாயகனும் உண்டு, அவர் வேறு யாருமில்லை, வைகைப்புயல் வடிவேலு தான். வடிவேலு இப்படி சிரிக்க வைத்து எத்தனை மாதங்களாயிற்று? இவர் அவுரா பாலத்தில் சூர்யாவிடம் மாட்டிக் கொண்டு முழிக்கும் காட்சி சிறுவர் முதல் பெரியவர் வரை வயிறு குலுங்கச் செய்யும் காமெடி. சூர்யாவின் ஆக்ஷன் சரவெடியும் அபாரம், ஆனாலும் சூர்யா,ஆக்ஷன் காட்சிகளில் இத்தனை ரிஸ்க் தேவையா? என்று யோசிக்க வேண்டும். நயன்தாரா எலும்பும் தோலுமாகத் தன் பழைய அழகை இழந்து விட்டார். பாடல் காட்சிகளில் லாங் ஷாட்களில் மட்டும் ஓகே. இவர் நடிப்பிலும் எந்த முன்னேற்றமும் இல்லை.  மறைந்த மலையாள நடிகர் முரளியின் நடிப்பு அருமை. திரையுலகத்திற்கு இவரது இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று.நீண்ட காலங்களுக்குப் பிறகு சரோஜாதேவி குரலில் அதே குழந்தைத்தனம், நடிப்பில் முதிர்ச்சி. மேக்கப் விரும்பியாக வந்து சிரிக்க வைக்கிறார். மற்றபடி சாயாஜி ஷிண்டே, ஆனந்த்பாபு, அனு, இந்தி நடிகர் ராகுல்தேவ், ரமேஷ்கண்ணா, மனோபாலா அவரவர் பாத்திரங்களைச் செவ்வனே செய்துள்ளனர். படத்தில் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலினும் சின்ன பாத்திரத்தில் வந்து போகிறார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் 'ஹசிலி பிசிலி-அஞ்சனா', 'ஏனோ ஏனோ','மாசி மாசி' பாடல்கள் தாளம் போட வைக்கின்றன. ஸ்டண்ட் மாஸ்டர் கனல்கண்ணனின் முயற்சிகள் அபாரம். ரா.கணேஷ்ஷின் ஒளிப்பதிவு அற்புதம். கதை ரமேஷ்கண்ணாவாமே,அடுத்த முறை இன்னும் நல்ல கதையுடன் வருவார் என்று நம்புவோம். கதையும் திரைக்கதையும் பலவீனம் என்றாலும் பாடல்கள், ஒளிப்பதிவு, வடிவேலு-சூர்யா காமெடி படத்திற்கு மிகப் பெரிய பலம்.

அசலுக்கு மோசமில்லாமல் அனைத்துத் தரப்பினரையும் மகிழ்விக்கும் வண்ணம் படத்தை இயக்குவது ரவிக்குமாரின் ஸ்டைல். அந்த வகையில் ஆதவனும் ரசிகர்களை ஏமாற்றவில்லை.

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : January 5, 2010 @ 8:25 pm