ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

கொல்லத்தான் நினைக்கிறேன் – விமர்சனம்!

பைத்தியக்கார பயல்கள் விளையாட்டு போட்டிகளில் (Crazy boys in games) விளையாடுவது பற்றிய ஒரு ஆங்கில Spoof படம் முன்னர் வெளிவந்தது. அதே காலத்தில்தான் கிரேசி மோகனின் முதல் நாடகமான 'கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம்' நாடகப் பிரதி வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிறகு அம்மாதிரி நாடக வடிவங்கள் நிறைய படித்து, டிவியில் பார்த்து, ஒலிநாடாக்களில் கேட்டிருந்தாலும், இன்றும் அந்த முதல் பிரதியில் இருந்த புத்துணர்ச்சி மறக்க முடியாதது. எங்கள் பாட்டி முதற்கொண்டு எல்லாரும் சுற்றி உட்கார்ந்திருக்க அந்த பிரதியை எங்கள் அக்கா உரக்கப் படித்து காண்பிக்க கூட்டமாக 'குபீர்' 'குபீர்' என சிரிப்பு கொப்பளிக்க அனுபவித்தது ரசித்தோம்.

தமிழ் மேடை நாடகங்களில் 'மௌலி பள்ளி' (Mouli's School) என்று ஒன்று உண்டு. ஒய்ஜி மகேந்திரா, கிரேசி மோகன், எஸ்வி சேகர், வரதராஜன் போன்றோர் அந்த 'சிரிப்பு தோரண'வகையை தொடர்ந்து செயல்படுத்தி தமிழ் மத்தியதர குடும்பதினருக்கான ஒரு பிரதான பொழுதுபோக்கு சாதனமாக நிறுவி வந்திருக்கிறார்கள். இதில் ஒய்ஜிஎம் கொஞ்சம் சீரியஸ் டைப் எல்லாம் முயன்றிருக்கிறார். கிரேசி மோகன் சிச்சுவேஷனல் காமெடியில் கில்லாடி. அவருடைய 'கொல்லத்தான் நினைக்கிறேன்' நாடகத்தை அமெரிக்காவில் Stagefriends  என்ற அமெச்சூர் நாடகக் குழு அரங்கேற்ற சென்ற வாரயிறுதியில் நியுஜெர்ஸியில் அந்த மேடை நாடகத்தை நேரடியாக பார்க்கும் வாய்ப்பு அமைந்தது.

கிரேசியின் ஸ்க்ரிப்ட்கள் பெரும்பாலும் அவரது குழுக்காகவே வடிவமைக்கப்பட்ட கதையாக இருக்கும். அவரே எழுதிய 'அங்கே நெட்டையா ஒரு ஆள். இங்கே குட்டையா ஒரு ஆள். பல சைஸ்ல அடியாளுங்க வச்சிருக்கான்' என்ற சினிமா வசனம்போல தனது ட்ரூப்பில் உள்ள எல்லாருக்கும் ஏற்றவகையில் கேரக்டர் உருவாக்கி கதையை அதற்கு ஏற்றாற்ப்போல வளைத்துக் கொண்டே போவார். ஆள் மாறாட்டம், பொய்க்கு மேல் பொய் சொல்லி சமாளிப்பது, அங்கத வசனங்கள் என்று அடித்து விளையாடுவார். 'கொல்லத்தான் நினைக்கிறேன்' நாடகமும் அதே டெம்ப்ளேட்தான்.  அதே மாது, சீனு ஜோடி. அவருடைய நாடக / சினிமா கதாநாயகியாக 'ஜானகி' எஸ்டாப்ளிஷ் ஆவதற்கு முன்னர் எழுதிய நாடகமாக இருக்கலாம். இதில் மாதுவின் (நடி: ஸ்ரீநிவாசன்) மனைவியின் பெயர் கோமதி (நடி: ராதிகா).

ஸ்டேஜ்ஃப்ரெண்ட்ஸ் குழு மிகவும் திறமையாகவே அந்த ஸ்க்ரிப்டை adapt செய்திருந்தார்கள். மாதுவாக கிரேசி பாலாஜியின் லொள்ளுத்தனத்திற்கு பதிலாக இதில் சீனு (நடி:மோகன்) அதகளம் பண்ணுகிறார். மேடையை அவர் மிகவும் இயல்பாக உபயோகித்தது குறிப்பிடதக்கது. எஸ் வி சேகர் டிராமாக்களில் கவனித்திருக்கிறேன். மற்ற நடிக நடிகையர் கொஞ்சம் விறைப்பாக மேடையில் நின்றிருக்க சேகர் வெகு இயல்பாக மேடையில் உலா வருவார். ரிகர்சலில் செய்யாத சில புதிய gestures செய்வார். ஆனால் காட்சியோடு அது ஒட்டியபடி இருக்கும். மோகன் நடிப்பில் மேடை நாடகத்துக்கு தேவையான Loud Expressions மற்றும் டைமிங் சென்ஸ் சரியான விகிதத்தில் அமைந்திருந்தது.

மாதுவாக நடித்த ஸ்ரீநிவாசன் நடிப்பிலும் வயதிலும் வெகு சீனியர். ஆனாலும், கிரேசியின் மாது கேரக்டருக்கு ஈடுகொடுத்து கலகலப்பாக நாடகத்தைக் கொண்டு சென்றார். ஆரம்ப காட்சிகளில் ஜோக்கும் சிரிப்புமாக ஒவ்வொரு பாத்திரங்களாக அறிமுகம் ஆகி கதைக்களன் எஸ்டாபிளிஷ் ஆனவுடன் கிரேசி தனது ஃபேவரைட் களமான 'ஆள் மாறாட்டத்திற்கு' வந்து விடுகிறார்.

தான் கள்ளக்கடத்தல் செய்வதாக தானே சொல்லிக் கொள்ளும் மாசிலாமணிக்கு ஏப்ரல் 1-ம் தேதி இரண்டு பக்கமிருந்து பிரச்னைகள் வருகின்றன. பழைய பங்காளி காளிமுத்து ஜெயிலிலிருந்து மீண்டு வந்து பணம் கேட்டு மாசிலாமணியை நெருக்குகிறான். அவரிடம் வேலை பார்க்கும் சாது மாது தனது ஐந்து மாத சம்பள பாக்கிக்காக நியாயம் கேட்கிறான். மாதுவை மதிக்காத மாசிலாமணி, முரடன் காளிமுத்துவின் தாக்குதலிலிருந்து தப்பிக்க தான் இறந்துவிட்டதாக நடிக்க திட்டம் போடுகிறான். கூட்டாக அவரது வேலையாள் கோதண்டம். இது நாடகம் என்று தெரியாத மாதுவும் சீனுவும் நிஜமாகவே மாசிலாமணி கொலையாகிவிட்டார் என்று நினைத்து அவரை கோணி மூட்டையில் பேக் செய்கிறார்கள். நடுவில் ஒரு தேங்காய் மூட்டை, பிள்ளைக் கடத்தல்காரர்களின் மூட்டை, வைரக்கடத்தலுக்கான பூசனிக்காய் மூட்டை என ஆளாளுக்கு மூட்டையை மாத்தி விளையாட, இன்ஸ்பெக்டர் பாஷ்யம் துப்புதுலக்கி முடிக்கிறார்.

மாது வீட்டு ஓனராக சிவன்பிள்ளை (நடி: சேகர் கணேசன்) க்ரிஸ்பான பாத்திரம்.  ஆனால் அவருடைய பையன் பேனாவை உடைப்பது, பல்பை உடைப்பது என்று கொஞ்சம் பழைய காமெடியாக இருந்தது. பையன் பாத்திரத்தில் நடித்தவர் (நடி: கோகுல்) நாடகத்திற்கு புதுமுகமாம். சரளமாக நடித்திருந்தார்.

நாடகத்தின் ஒரே 'சக்தி' நிலையாக கோமதி பாத்திரம். ஆள் மாறாட்ட கேஸ்களை எளிதில் நம்பும் வெள்ளந்தி பாத்திரத்தில் ராதிகா பாந்தமாக நடித்திருந்தார். மாசிலாமணியாக நடித்த ரமணியும் ஒரு நாடக இயக்குநர். மூட்டைக்குள் முடங்கிக் கொள்ளும் பிணமாக நடித்தபோது அரங்கில் அப்ளாஸ் நிறைய. அவருடைய உதவியாளராக கோதண்டம் வேடத்தில் கணேஷ் சந்திரா நடித்திருந்தார். டாக்டராக மாறுவேஷத்தில் வருபவர் கூட கழுத்தில் கர்சீப் கட்டிக் கொண்டு வர, கம்பவுண்டர் மாறுவேஷத்திற்கு கணேஷ் வெள்ளைக் கோட்டு, கறுப்புதாடி என்று தனி 'லெவல்' காட்டிக் கொண்டிருந்தார். ரவுடிகளாக வந்த இருவருக்கும் நல்ல ’பேஸ்’ வாய்ஸ். பாத்திரத்திற்கு ஏற்ற உடல்வாகு.

பழைய பங்காளி காளிமுத்துவாக வரும் குருதான் இந்த நாடகத்தின் இயக்குநர். நல்ல வளமான குரல் மற்றும் வளமான மைக் இவருக்கு அமைந்துவிட்டது. ஒரு காட்சியில் தன்பெயரைத்தானே கூப்பிட்டுக் கொண்டே எண்ட்ரி கொடுத்து ஒரு 'அந்நியன்' எஃபெக்ட் உருவாக்கி காண்பித்தார். இன்ஸ்பெக்டர் பாஷ்யம் (நடி: சுரேஷ்) மாதுவை சீனுவையும் சந்தேகப்பட்டு குடையும் காட்சிகளுக்கு நல்ல பின்ணணி இசை சேர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும். நாடகத்திற்கு ஆடியன்ஸ்தரப்பிலிருந்து நல்ல வரவேற்பு இருந்தது. ஒரே ஒரு காட்சியில் வரும் டாக்ஸி டிரைவர் எண்ட்ரி கொடுக்கும்போது கூட கைதட்டி, விசிலடித்து மகிழ்ந்தனர். மொத்தத்தில் ஸ்டேஜ் ஃப்ரெண்ட்ஸின் அரங்கேற்றம் நல்ல ப்ரொஃபஷனலாக ஸ்க்ரிப்ட்டுக்கு நீதி  செலுத்தும் வகையில் அமைந்திருந்தது. நல்லதொரு பொழுதுபோக்கு அனுபவமாக இருந்தது.

 

'நாடகத்திற்கு உங்களுக்காக இரண்டு டிக்கெட்டுகள் எடுத்து வைத்திருக்கிறேன். கண்டிப்பாக மே 1-ல் வந்துவிடுங்கள்' என்று கணேஷ் சந்திரா சொன்னவுடன் ஆகா…. ட்விட்டரில் எவ்வளவோ சத்தாய்த்தும் மனிதர் நம்மை மதித்து டிக்கெட்டெல்லாம் எடுத்து கூப்பிடுகிறாரே என்று ஒரே ஃபீலிங்காகி, 'இந்த தடவ ஓக்கே கணேஷ். அடுத்த வாட்டி கண்டிப்பா டிக்கெட்டுக்கு காசு வாங்கிக்கனும் நீங்க… அக்காங்' என்று லைட்டாக ஒரு 'பிட்'டை போட்டு வைத்தேன். ஓசி டிக்கெட்டை உஷார் பண்ண என்னவெல்லாம் வாக்கு கொடுக்க வேண்டியிருக்கு என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். ஆனாலும் மனிதர் அசராமல் 'நான் வேண்டாம்னாலும் நீங்க விடவா போறீங்க. எப்படியும் கண்டிப்பா காசை கொடுத்திருவீங்க. அப்படியே, வெர்ஜினியா, வாஷிங்டன்ல்லாம் உஙகளுக்கு ஃப்ரெண்ட்ஸ் இருக்கறதா சொன்னீங்கள்ல? அவங்களுக்கும் சேத்து நாலு டிக்கெட் வாங்கிக்குங்க' என்று என் 'பிட்'டுக்கு மேல் பெரிய 'பிட்'டாக போட்டுவிட்டார். கிரேஸி கணேஷ்!

தொடர்புடைய படைப்புகள் :

Comments

One Response to “கொல்லத்தான் நினைக்கிறேன் – விமர்சனம்!”
  1. Geetha says:

    Naan Mr. Mohannin miga periya rasigaiii….enna konjam suthu potta seenu va irukar ….

மனசுல பட்டதை சொல்லுங்க

கடைசியாக : May 4, 2010 @ 10:34 am