ஆசிரியர் : மீனா கணேஷ் -    Tamiloviam ISSN 1933-732X

சிங்கம்

May 31, 2010 by · 2 Comments 

   

மிளகு தூக்கலாய்! இஞ்சி சீரகம் பட்டை கிராம்பு மற்றும் இன்னபிற சுறுசுறு விறுவிறு ஐட்டங்களையும் போட்டு , அம்மியில் வைத்து அரைத்து , நல்ல குறும்பாட்டு கறியை வாங்கி, சின்ன சின்ன துண்டுகளாக வெட்டிப்போட்டு , கொஞ்சம் நல்லி எலும்புகளையும் போட்டு , கொஞ்சம் மஞ்சள் நிறைய மிளகாய்த்தூள் என சேர்த்து நன்றாக வேக வைத்து , சோத்துல விட்டு பினைஞ்சு அப்படியே ஒரு நல்லி எலும்ப கடவாயில் வைத்து கடித்தால்.. காரம் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரைக்கும் சும்மா சுர்ர்ர்னு ஏறும் .. அப்படி ஒரு உணர்வைத்தரும் திரைப்படத்தை கடைசியாக எப்போது பார்த்தேன் என்பது நினைவில் இல்லை.

முரட்டு மீசை! உருட்டு விழி! உயரம்தான் கொஞ்சம் கம்மி. துரைசிங்கம்! சூர்யா. நேர்மை,நாணயம், உண்மை , உழைப்பு , கடமை தவறாத காவல் அதிகாரி. அவரை விரட்டி விரட்டி காதலிக்கு ஆறடி அனுஷ்கா! கையில் அரிவாளை எடுத்தால் வெட்டுவார், துப்பாக்கியை எடுத்தால் சுடுவார் அந்த வில்லன் பிரகாஷ்ராஜ். முடிவெட்டி பல வருடமான செம்பட்டை மண்டை சுமோ வில்லன்கள் , வீர வசனங்கள் , புஜங்கள் , முறுக்கேறும் நரம்புகள் , குத்துப்பாட்டு , இறுதியில் சேஸிங் , நடுவில குடும்பம் சென்டிமென்ட் வகையாறக்கள் என் போட்டு கிளறி கிண்டி எடுத்தால் மணக்க மணக்க காரமான சிங்கம் தயார்!

காக்க காக்க சூர்யாவை விட இதில் லோக்கல் பிளேவரில் கிராமத்து போலீஸாக சூர்யா. முரட்டுத்தனமான போலீஸாக லோக்கலாக இறங்கி தியேட்டர் அதிர வசனம் பேசுகிறார். அவருக்கு அது நன்றாக பொருந்துகிறது. மூன்றுமுகம் ரஜினியை நினைவூட்டினாலும் நல்ல நடிப்பு. அனுஷ்கா விரட்டி விரட்டி காதலிக்கிறார். டூயட் பாடுகிறார். நல்ல வேளையாக கதையின் பல இடங்களை அவரை வைத்தே நகர்த்துகிறார் இயக்குனர். அதனால் படம் முழுக்க வருகிறார். ஹீரோவுடனான உயர பிரச்சனை இயக்குனருக்கு பெரிய தொல்லையாக இருந்திருக்கலாம். அதனால் படத்தில் இருவரும் இணைந்து நிற்பது போன்ற காட்சி கூட இல்லை.. பாடல்களில் கூட கேமராவை கோணலாக வைத்தும் , நடனத்தில் சீரிய இடைவெளி விட்டும் சூர்யாவின் உயரப்பிரச்சனையை தீர்த்துள்ளதாக தெரிகிறது.

பல நாட்களுக்குப் பின் வில்லனாக பிரகாஷ்ராஜ். பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி இல்லை. லூசுத்தனமாக எதையாவது செய்து ஹீரோவிடம் தோற்கிறார். படம் முழுக்க அவருடைய அக்மார்க் டேய்.. டேய்…தான். விவேக்கின் காமெடி பல இடங்களில் சிலிர்க்க வைக்கிறது. அடடா டபுள் மீனிங் டமாக்கா! வெண்ணிற ஆடையார் ரசிகர்களுக்கு நல்ல விருந்து.

இயக்குனர் ஹரியிடமிருந்து சில்ரன் ஆப் ஹெவனை எதிர்பார்த்து படம் பார்க்க செல்வீர்களேயானால் உங்களுக்கு மூளையில் ஏதோ கோளாறாக இருக்கலாம். அல்லது தமிழ்ப்படங்கள் பார்க்காதவராக இருக்கலாம். அவருக்கே உரிய அதிரடிபாணி கதைநகர்த்தல். அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா மாதிரியான அற்புதமான வசனங்கள் (படத்திற்கு வசனமெழுத டிஸ்கவரி சேனல் உதவி பெற்றிருப்பார்கள் போல படம் முழுக்க சிங்கபுராணம்தான்). வீரம் சொட்ட சொட்ட திரைகதை அமைக்கும் பாணி , அதில் வில்லனை பந்தாட ஹீரோ எடுக்கும் புத்திசாலித்தனமான யுக்திகள். எல்லாமே மிகச்சரியாக திட்டமிட்டு செய்திருக்கிறார் இயக்குனர். நிச்சயம் படத்தின் வெற்றிக்கு ஒரே காரணம் ஹரி மட்டும்தான்.

படத்தின் பெரிய மைனஸ் நீள…மான வசனங்கள். சில நாடகத்தனமான குடும்ப சென்டிமென்ட் காட்சிகள்! முன்பாதி மொக்கையான காதல் காட்சிகள். அனுஷ்காவை காட்டினாலே அய்ய்யோ பாட்டு போட்டுருவானுங்க போலருக்கே என்று அலறுகின்றனர் ரசிகர்கள். படம் முழுக்க லாஜிக் மீறல்கள் ஆயிரக்கணக்கில் இருந்தாலும் ரசிகனின் முதுகில் பெவிகால் போட்டு சீட்டோடு சீட்டாக ஒட்டவைத்துவிடுகிறது திரைக்கதை.சிங்கம் சீறிப்பாய்கிறது.
 

தொடர்புடைய படைப்புகள் :

Comments

2 Responses to “சிங்கம்”
 1. shan says:

  I never Expect like this movie from surya.. utter waste this movie..
  How many times watching the same movie from different actors?
  Is this sence to say good film?
  I am a surya fan..but I cann’t accept a waste film from good actot.

 2. shubha says:

  good entertainer for surya fans. sizzling anushka and good screenplay also.

மனசுல பட்டதை சொல்லுங்க

கடைசியாக : May 31, 2010 @ 4:44 pm