ராவணன் : மணிரத்னம் துரத்திய மாயமான்

பெரும் பராக்கிரமசாலியாக அறியப்படும் இராமனாலே ஒரு மானை குறிவைத்து வேட்டையாட முடியவில்லை. இறக்கும் முன்னர் அந்த மாயமான் மாரீசனாக மாறி இராமனையே ஏமாற்றிவிடுகிறது. ஒடுக்கப்பட்ட மனிதர்களின் கதையை படமாக எடுக்க நினைத்து மணிரத்னம் அதைத்தவிர மற்ற எல்லாவற்றிலும் கவனம் செலுத்தியிருக்கிறார். தலையை சுற்றி மூக்கைத் தொடமுடியவில்லை. இடையில் சுஹாசினியின் தலை வேறு பெரிதாக தடுக்கிறது (அவர்தான் வசனம்). மகாபாரதத்திலிருந்து ஒரு இலையை திருப்பி ‘தளபதி'யாக வெற்றி கண்டது மணிரத்னத்தின் சாமர்த்தியம். ஆனால் ‘ராவணன்' மாயமானாக அவரை ஏமாற்றி விட்டது.

இதிகாசங்களில் தனித்துவம் என்னவென்றால் அவைகள் திறந்த வாசல்கள் கொண்ட வீடுகள் போல. எந்த வழியிலும் நாம் உள்நுழையலாம், வெளிவரலாம். மணிரத்னம் சற்றே புதுமையாக இராவணன் கதையை கொடுக்க முனைந்திருக்கலாம். அதனாலோ என்னவோ தலைப்பை ‘ராவணன்' என்று வைத்து 'ர'கரம் மொழிமுதல் வாராது என்ற இலக்கண விதியை மீறியிருக்கிறார். மற்றபடி அதிகம் ரொமாண்டிசைஸ் செய்யப்பட்ட காட்சிபடுத்தலினால் படம் தொய்ந்து, தேய்ந்து, தேங்கிய குட்டையாய் நின்றுவிட்டது.  

படம் முழுவதும் கண்ணுக்கு குளிர்ச்சியான அருவி, ஆறு, மழைக்காடு, வழுக்குப் பாறை என்று பசுமையான இடங்களை 'பச்சக்' என்று பிரதி எடுத்து கொடுக்கும் ஒளிப்பதிவு. ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவன் ப்ரொஃபைலுக்கு இன்னொரு சிறப்பான பக்கம். இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் பாடல்கள் கேட்க நன்றாகவே இருக்கிறது. ஏனோ பின்னணி இசை ஒரே டெம்பிளேட்டில் சுற்றி சுற்றி வருகிறது. பழங்குடி நடனம் என்ற பாணியில் வழக்கமான திரை நடனத்தையே பார்க்கிறோம். 

பழைய ‘சம்பூர்ண இராமாயணம்' போல், இராமனை அவதார புருஷனாக சித்திரித்து திரைப்படமாக எடுப்பது ஒரு பாணி. ஒவ்வொரு பாத்திரமாக அறிமுகப்படுத்தி அவற்றின் சிறப்புகளை எடுத்து சொல்லி, பிறகு இராமாயணக் கதையை நிகழ்த்தி காட்டுவது. இராமானந்த் சாகரின் டிவி சீரியல் பார்த்திருக்கிறீர்களா? இந்தப் பாணியில் எடுக்கப்பட்டதுதான். 

இன்னொரு பாணி, இராமாயணத்தை குறியீடாக (Metaphour) உபயோகபடுத்தி உங்களுடைய கதையை சொல்லிச் செல்வது. தீபா மேத்தாவின் சில திரைப்படங்களில் இன்னொரு பரிமாணத்தை தரும்வகையில் இராமாயண சீதா என்னும் Metaphor உள்ளீடாக இடம்பெறும். Fire திரைப்படத்தில் கதாபாத்திரங்கள் பெயர்கள் மற்றும் சில காட்சிகளில் இராமாயண சீதாவை குறியீடாக பார்க்கலாம்.  

மணி இரண்டுங்கெட்டானான பாணியில் ராவணனை சமைத்து நம்மை விழுங்கவும் விடாமல் துப்பவும் விடாமல் செய்துவிட்டார். உதாரணத்திற்கு, நடிகர் பிரபு சிங்கராசு என்ற பாத்திரத்தில் வருகிரார். ஆனால் அவர் பாத்திரத்தில் இராமாயண கும்பகர்ணனின் சாயலை வலிய திணித்திருப்பது (உருவ ஒற்றுமை உட்பட) நம்மை மணியின் கதையோடு ஒட்டாமல் வால்மீகியை நோக்கி ஓட வைக்கிறது. இந்த மாதிரி distractions இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலவீனம். அதைவிடக் கொடுமை நடிகர் கார்த்திக் அனுமார் பாத்திரம் ஏற்று நடிக்கிறேன் என்று காட்சிக்கு காட்சி குரங்கு போலவே கோமாளித்தனம் செய்கிறார். இது அவருக்கு மறுபிரவேசமாம். அவருடைய இன்னொரு மறுபிரவேசத்திற்காக காத்திருப்போம்.

வீரய்யன் என்கிற பழங்குடி இனத்தை சேர்ந்த பிரபலமான ஒருவனை போலீஸ் என்கௌண்ட்டர் செய்யத் தேடுகிறது (ஏன்?). இந்தத் தேடுதலின் உச்சமாக போலீஸ் சூப்பரிண்டெண்ட் தேவ் வீரய்யனின் தங்கை வெண்ணிலாவின் திருமண விழாவில் திடீர் பிரவேசம் செய்து வீரய்யனை சுட்டுவிட, வீரய்யன் உயிர்தப்பிக்கிறான். ஆனால் வெண்ணிலா போலீஸாரால் சின்னாபின்னபடுத்தப்பட்டு இறக்கிறாள். பழிக்கு பழியாக வீரய்யன் போலீஸ் சூப்பரிண்டெண்ட் தேவ்-வின் மனைவி ராகினியை கடத்தி சென்றுவிடுகிறான். காட்டில் வைத்து ராகினியை கொல்ல நினைத்து செயல்படுத்த முடியாமல் தவிக்கிறான். ராகினிக்கும் வீரய்யனின் Soft-corner புரிந்து தவிக்கிறாள். நடுவில் போலீசாரிடம் சமாதானம் பேச நினைக்கும் வீரய்யனின் தம்பியை தேவ் சுட்டுக் கொன்றுவிடுகிறான். உடன் வீரய்யன் போலீசாருடன் நேருக்கு நேர் மோத, தேவ்-வும் வீரய்யனும் ஒண்டிக்கு ஒண்டி சண்டையிடுகிறார்கள். கிளைமேக்ஸில் யார் யாரை ஜெயிக்கிறார்கள் என்பதே மிச்ச கதை.

மேலே சொன்ன கதை சுருக்கத்தில் மிகவும் சுலபமாக இராமாயண கதாபாத்திரங்களை பொருத்தி பார்த்துக் கொள்ளுங்கள். இறுதிக் காட்சி முடிந்தபின்னர் மணிரத்னம் ஏதாவது எழுத்தாளர் வேடத்தில் கதையில் நுழைந்து ‘நாந்தான் வால்மீகி' என்று சொல்லிக்கொள்வாரோ என்று நிச்சயமாக எதிர்பார்த்தேன். 

விக்ரம் வீரய்யனாக நடிக்கிறார். தன்னுள் வளரும் பொறாமையை பெருமையாக சொல்லும் காட்சியில் அவரும் பளிச். வசனமும் பளிச். அவர் முன்பு செய்த கேரக்டர்களின் பாதிப்பைத் தாண்டி புதியதாக எதுவும் தெரியவில்லை. ஏதோ குழந்தைகளை அதட்டும் கண்டிப்பு மாமா போல் ஐஸ்வர்யாவிடம் (ராகினி பாத்திரம்) ‘பக் பக்' என்று காமெடி செய்கிறார். அது ஐஸ்வர்யாவிற்கு மிகவும் பிடித்து விடுகிறதாம். தங்கையிடமும் வருங்கால மாப்பிள்ளையிடமும் கண்டிப்பு கலந்த அன்பை வெளிப்படுத்துகிறார். அருவியிலிருந்து குதிக்கிறார், பாலத்திலிருந்து பள்ளதாக்கில் விழுகிறார். ஒடுக்கப்பட்ட இனத்தின் பிரதிநிதியாக எந்த வலியையும் வெளிபடுத்தாத ஆழமில்லாத பாத்திரமாக அமைந்தது அவருடைய துரதிர்ஷ்டம்.

திரைப்பட போஸ்டரிலிருந்து ஷீல்டுவரைக்கும் ஐஸ்வர்யா ராயின் முகத்தை உபயோகிக்கும் உத்தேசத்தில் மணிரத்னம் இருக்கிறார். நளினமாக, அழகாக, திருத்தமாக, மீண்டும் நளினமாக, மீண்டும் அழகாக… ஐஸ்வர்யா ராய் போரடிக்கிறார். இந்த ராகினி பாத்திரத்திற்கான தனித்தன்மை என்னவென்றே புரியவில்லை. இந்தப் படத்தை பொருத்தவரை ஐஸ்வர்யா ராய் எக்ஸ்ட்ரா பேக்கேஜ் போலத்தான் தெரிகிறது. கிணற்று குழியிலிருந்து தப்பிக்க முயற்சிக்கும் போதும் கண் மை கரையாமல், விரித்த கூந்தலோடு, ரொம்பவே அழகாக துன்பப்படுகிறார். 

போலிஸ் சூப்பரிண்டென்ட் தேவ்-ஆக பிருத்விராஜ். அவருடைய அமைதியான அடர்த்தியான நடிப்பை நாம் நிறைய பார்த்திருக்கிறோம். இந்தப் படத்தில் அப்படி ஸ்கோர் செய்ய எந்த வாய்ப்பும் இல்லாமல் துப்பாக்கியும் கையுமாக சுற்றுகிறார். 

ஒரு காட்சியில் பழங்குடி இனத்தவர்கள் ஒவ்வொருவராக போலிசிடம் வந்து வீரய்யன் ஒரு மாவீரன், தயாளன், இந்திரன், சந்திரன் என்றெல்லாம் புகழ, பக்கத்தில் இருக்கும் கார்த்திக் 'இதெல்லாம் தப்பு' என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். இறுதியில் ஒருவர் ‘வீரய்யன், குடி, கூத்தியா என்று கும்மாளம் அடிக்கிறவன்' என்று சொல்ல கார்த்திக் 'இதுதான் சரி' என்கிறார். வீரய்யனுக்கு எதிராக இப்படித்தான் பொதுபுத்தி கட்டமைக்கப்படுகிறது என்று சொல்கிறார்ப் போல. அந்த ஒருக் காட்சியிலும் வீரய்யன் என்ன தவறு செய்கிறார் எதற்கு காவல்துறை என்கௌண்ட்டர் செய்ய நினைக்கிறது என்று ஒன்றும் புரியவில்லை.

படத்தில் தனியாக காமெடி ட்ராக் எதுவும் இல்லாத குறையை தீர்க்க ராகினி, தன்னை கடத்த வரும் வீரய்யனிடம் பாரதியார் பாட்டை பாடுகிறார். அதற்கு எசப்பாட்டாக வீரய்யனும் பாரதியார் பாட்டை பாடி நம்மை விலாநோக சிரிக்க வைக்கிறார்கள். 

பக்கம் பக்கமாக எழுதப்படும் உணர்ச்சி விவரிப்புகளை ஒரே காட்சியில் உயிர்ப்பாக காட்டுவது ஒரு கலை. மணிரத்னத்தின் பெரும் பலம் அவருடைய Scene Conceiving திறமை. அவர் சொல்ல நினைப்பதை நேரடியாக நம்மிடம் கடத்திக் கொண்டு வரும் திறமை படைத்தவர் என்பதை அவருடைய பழைய படங்கள் நமக்கு சொல்கின்றன.  
'நீங்க தொட்டா கம்பளி பூச்சி ஊர்ற மாதிரி இருக்கு' என்று துடுக்காக சொல்லும் இளம் மனைவி. 

போலிசாரால் சித்ரவதைப்பட்டு தூக்கியெறியப்படும் வாலிபன் அந்த போலிஸ் இன்ஸ்பெக்டரிடமே ‘நான் அடிச்சா நீ செத்திருவ' என்று அடிக்குரலில் சொல்லும் வன்மம்.

மனவளர்ச்சி குன்றிய தனது மூன்றாவது மகளைப் பற்றி மற்ற குழந்தைகளிடம் சொல்லும்போது 'அஞ்சல் ஸ்பெஷல் குழந்தை. அதுக்கு ஸ்பெஷல் அப்பா, அம்மா, ஸ்பெஷல் அண்ணா, அக்கா வேணும்' என்னும் அப்பாவின் பரிதவிப்பு. 

'அம்மாவும் பையனும் இங்க்லீஷ்லேயே பேசிக்கிறாங்களா?' என்று பட்டிகாட்டு பெண்ணின் மாமியார் வீட்டு மருட்சியை வெளிப்படுத்துவது,

ஒண்டு குடித்தனத்தில் அக்கம்பக்கத்து குழந்தைகள் ரயில் வண்டி விட்டுக் கொண்டே ஓட புதுத் தம்பதிகள் காதலோடு கட்டியணைத்துக் கொள்வது,

'ஆர் யு எ வெர்ஜின்' என்று தன்னை பெண்பார்க்க வந்திருக்கும் ஆடவனை சாதாரணமாக கேட்கும் சுதந்திரப் பெண்.

கல்யாணத்திற்கு பின் ஏற்படும் வீர்யமிழந்த காதலினால் ஏற்படும் அன்றாட சச்சரவுகளுக்கு தீர்வாக கணவனின் வாயைப் பொத்தி கன்னத்தில் முத்தமிடும் மனைவி…. 

இப்படி பலப் பல காட்சிகள் இன்றும் ஈரமாக நம் மனதில் இருக்கிறது…. ராவணனிலும் அப்படி ஏதாவது சொல்ல முடிந்தால் சந்தோஷமே. 

ஏனோ கடந்த சில திரைப்படங்களாக மணிரத்னத்தின் படைப்புகள் தேய்வழக்காகி அபாரமான தொழில்நுட்பத் திறனெல்லாம் விழலுக்கு இறைத்த நீராகி விடுகிறது. ஓய்வுகாலத்தில் கொடைக்கானலில் செட்டில் ஆகி கால்ஃப் விளையாடி கழிக்க ஆசையாம் அவருக்கு. அவருடைய ரசிகர்களின் சார்பாக அவருடைய ஆசை சீக்கிரமே நிறைவேற சனீஸ்வரனுக்கு நெய்விளக்கேற்றி பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

தொடர்புடைய படைப்புகள் :

3 thoughts on “ராவணன் : மணிரத்னம் துரத்திய மாயமான்

 • July 12, 2010 at 1:22 am
  Permalink

  தோழருக்கு வணக்கம். தங்களது திறனாய்வு மிகவும் சிறப்பாக இருக்கின்றது. கேலியும் கிண்டலும் உச்சம். இரசிக்க வைக்கின்றது. ‘நானும் சனீஸ்வரனுக்கு விளக்கேற்றி வைக்கிறேன்’. ஒடுக்கப்பட்டவன் என்று வடிக்கப்பட்ட பாத்திரம் ஓரிடத்தில் கூட வர்க்க உணர்வோடு வீறுகொண்டு எழாதவாறு கவனமாக உரையும், படைப்பும் அமைக்கப்பட்டிருப்பது பார்ப்பன சதி. அல்லது மணிரத்தினத்தின் படைப்புத்திறன். பாவம் ‘ராவண்’ என்று பெயர் வைத்து இந்தியிலும் ஓடவில்லை, ‘ராவணன்’ என்று பெயர் வைத்து இராமன் புகழ்பாடுவதால் தமிழகத்திலும் ஓடவில்லை. மணிரத்தினத்திற்கு தமிழ்ச்சமூக நிகழ்வுகளை பளிச் என்று சொல்லும் தைரியம் இல்லை. எ.கா.இருவர், ஆயுதஎழுத்து, இப்போது ‘ராவணன்’. இருவரில் பெரியாரையும் அண்ணாவையும் குழப்பி, ஆயுத எழுத்தில் திராவிடக் கட்சிகளை நேரடியாக விமர்சனம் செய்யமுடியாமல் தவித்து, ராவணனில் வீரப்பனையும், இராவணனையும் தெளிவுபடுத்தமுடியாமல் தலையைப் பியித்துக்கொண்டு. ஒரே வரியில் சொல்வதானால் ‘நீ சூத்திரன் என்றால், உன்னிடம் எந்த நியாயம் இருந்தாலும் பார்ப்பானை எதிர்த்துவிட்டால் நீ சாக வேண்டியது தான்’ இது மனுநீதி. மணிரத்தினத்தின் நீதி.

  Reply
 • June 26, 2010 at 1:38 pm
  Permalink

  உங்கள் விமர்சனம் மிகவும் அருமை. வாழ்த்துகள்.

  விக்ரம்,ஐஸ்வர்யாராய்,பிரித்விராஜ் என்ற சிறந்த & பிரபலமான கலைஞர்களை வைத்துக் கொண்டு பலவீனமான கதைக்கு உருவும் உயிரும் கொடுக்க எண்ணினது இயக்குனரின் தவறு. அதிலும் சுகாசினியை வசனம் எழுத விட்டது படத்தை இன்னும் மோசமாக்கியிருக்கிறது.

  கார்த்திக் மறுபிரவேசம் செய்யாமலே இருந்திருக்கலாம்.கார்த்திக் அனுமார் பாத்திரம் போல் குரங்கு சேட்டை செய்கிறார். தூது வரும் நேரத்திலாவது கார்த்திக்கைச் சொல்லின் செல்வராய்ச் சித்திரித்திருக்கலாம். முன்னா வீடணன் பாத்திரமாம். விக்ரம் அங்கிள் என்னம்மா தப்பு செய்தார்னு போலீஸ் அங்கிள் சுத்தறார் என்ற சிறு குழந்தையின் நியாயமான கேள்விக்குக் கூட பதில் இல்லை.

  பிரியாமணி நடிப்பதாக இருந்தால் கண்டிப்பாக அவரை மானபங்கம் படுத்தும் காட்சி இருந்தாக வேண்டும் என்ற விதி போலும். அவர் தன்னைப் போலீஸார் சித்ரவதை செய்ததாகச் சொல்லும் போதும் பார்க்கும் நமக்கு வேதனையோ கவலையோ வரவில்லை. இந்தக் கதையைக் கேக்கும் அண்ணன் விக்ரமின் செயலும் செயற்கைத்தனமான நடிப்பாகி பார்ப்பவரை ஒன்றச் செய்யவில்லை. மொத்தத்தில் வசனமும் சரியில்லை. பாத்திரங்களும் ஒன்றச் செய்யவில்லை. கதையைத் திரைக்கதையாக்கிய விதமும் அலுப்பூட்டுகிறது. ஒளிப்பதிவிற்கும் பாடல்களுக்கும் மட்டுமே பொக்கே கொடுக்கலாம். இந்தப் படத்தின் பிரம்மாண்டம் விழலுக்கு இழைத்த நீரானது.

  Reply
 • June 23, 2010 at 4:46 am
  Permalink

  இந்தப்படத்தை பற்றிய என்னுடைய கருத்துகளும் உங்கள் கருத்தும் ஒன்றாக உள்ளது, மணிரத்தினம் தமிழில் மட்டுமே படம் எடுத்தல் தமிழ்நாட்டு சூழலுடன் இருக்கும், இல்லையென்றால் அவர் ஓய்வு எடுப்பதே நல்லது

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : June 21, 2010 @ 8:42 pm