கொசு – 20

அத்தியாயம் இருபது

கடற்கரையில் அதிசயமாகக் கூட்டம் இல்லாதிருந்தது. தவிரவும் கவியத் தொடங்கியிருந்த இருளுக்குள் ஒளிய இடம் தேடி அலைகள் நெருக்கியடித்து முந்தியதில் கருமையின் இருவேறு வண்ணங்கள் மேலும் கீழுமாகக் கண்முன் விரிந்தன. உப்புச் சுவையுடன் வீசிய காற்றில் மேனி பிசுபிசுத்தது. இதமான சூழல் நிரந்தரமானால் எத்தனை நன்றாக இருக்கும் என்று முத்துராமன் நினைத்தான். பரவசத்தில் சட்டென்று அருகே அமர்ந்திருந்த சாந்தியின் இரு கன்னங்களை ஏந்தி முத்தமிட நெருங்குபவன் போல் அருகே தன் முகத்தைக் கொண்டுவந்தான்.

‘ஐயோ..’ என்றாள் சாந்தி.

சட்டென்று கரங்களை விலக்கிக்கொண்டவன், ‘மன்னிச்சிரு சாந்தி. ரொம்ப சந்தோசமா இருந்திச்சா? அதான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன்.’ என்று அரையடி நகர்ந்து அமர்ந்தான். இருளில் சாந்தி வெட்கப்படுவது போலிருந்தது. அழகாக இருந்தது. இன்னொரு முறை செய்யலாமா என்று யோசித்தான். வேண்டாம் என்று கட்டுப்படுத்திக்கொண்டு, அப்படியே சரிந்து படுத்து, தலைக்குக் கையை முட்டுக்கொடுத்தபடி அவளைப் பார்த்தான்.

‘நல்லாருக்கில்ல? ஆறு நாள்ள மாநாடு. பன்னெண்டு நாள்ல கல்யாணம்!’

சாந்தி சிரித்தாள். ‘எப்பப்பாரு மாநாட்டு நெனப்புத்தானா?’

‘இருக்காதா பின்ன? சொன்னேன்ல? எவ்ளோ பெரிய வேலை குடுத்திருக்காரு எங்க எம்.எல்.ஏன்னு யோசிச்சிப் பாரு. அவவன் இப்பிடி ஒரு சான்சு கிடைக்காதான்னு தேவுடு காத்துக்கிட்டிருக்கான் வருசக்கணக்கா. என்னமோ நமக்கு லக்கு. சடார்னு என்னென்னமோ நடக்குது வாள்க்கைல. எல்லாம் நல்லபடியா முடிஞ்சா செரிதான்.’

சாந்தி அவனை மிகவும் ஆழமாக ஊடுருவுவது போலப் பார்த்தாள். ஏதோ பேச விரும்புவது போலத் தோன்றியது. ஆனால் பேசத்தான் வேண்டுமா என்று தயங்குவதாகவும் பட்டது. பயம் அல்லது கவலை. அல்லது இரண்டுமே இல்லையோ? தனக்குப் புரியாத உலகம் குறித்த தயக்கமாக இருக்குமோ? எதுவானாலும் அவளுக்குத் தன் அரசியல் கனவுகளைப் புரியவைத்தே தீருவது என்று அவன் முடிவு செய்துகொண்டிருந்தான். அதனால்தான் திருநெல்வேலியிலிருந்து திரும்பியவுடன் மற்ற அனைத்தையும் தள்ளி வைத்துவிட்டு அவளைப் பிடித்து இழுத்துக்கொண்டு கடற்கரைக்கு வந்திருந்தான்.

‘இந்தா பாரு. நான் சொல்ல நெனைக்கறதையெல்லாம் கடகடன்னு சொல்லிடுறேன். ஒனக்கு என்னா புரிஞ்சிதுன்னு சொல்லு. புரியலன்னாலும் பரவால்ல. கேட்டுக்க. இதான் வாழ்க்கைன்னு முடிவு பண்ணிட்டேன். நான் கனாவுல கூட நெனைக்கல. என்னமோ வட்டச்செயலாளரு தயவுல குப்பத்துக்கு நாலு ரோடு வரும், தண்ணிக்கொழா வரும், கொசு மருந்து அடிப்பாங்க.. அத்தோட செரின்னு நெனச்சேன். அந்த வேலை அப்பிடியே நிக்குது இன்னிக்கி. எவன் என்னா செஞ்சான்னு தெரியல. ஆனா எம்.எல்.ஏ. கூப்ட்டுவிட்டு வேற வேல குடுக்குறாரு. பாளையங்கோட்டை மாநாட்டுக்கு வர்ற தலைவரு •பேமிலிய கவனிக்கற வேலை. அங்க இல்லாத ஆளா? அவனுகளுக்கு இல்லாத செல்வாக்கா? யோசிச்சிப் பாரு? குப்பை மாதிரி எங்கியோ மூலைல கெடக்குறவன். எனக்கு ஏன் இதெல்லாம் அமையணும்? சொல்லு? என் வாள்க்கைல என்னமோ மாறுதல் வரப்போவுதுன்னுதானே அர்த்தம்?’

‘அ.. ஆமா’ என்றாள் தயங்கியபடி.

‘நீ புரிஞ்சிக்கணும் சாந்தி. உம்புருசன் வெறும் டைலர் இல்ல. நாளைக்கு நான் கண்டிசனா எம்.எல்.ஏ. ஆவேன். அப்பால மினிஸ்டர் ஆவேன். எங்கப்பன், சித்தப்பன் கோட்டைகட்டி வீணா போன எல்லாத்தையும் சேத்துப் புடிப்பேன்.’

சாந்தி பேசாதிருந்தாள். சில வினாடிகள் அவனும் அமைதியாகவே இருக்க, மெல்லிய குரலில் அவள் தன் தயக்கத்தை வெளியே விட்டாள். ‘உங்க லட்சியமெல்லாம் நல்லாத்தாங்க இருக்குது. ஆனா நீங்க என்னா செய்யப்போறிங்கன்னு ஒரு செகண்டு யோசிச்சிப் பாருங்க? பச்சையா சொல்லணும்னா நெல புரோக்கர் வேலை! உங்க ஊரு எம்.எல்.ஏவும் அந்த ஊரு எம்.எல்.ஏவும் கொடநாட்ல நூறு ஏக்கரு வளைச்சிப் போட்டு வெச்சிக்கிறாங்க. அதை சல்லிசு ரேட்டுல புடிச்சிக் குடுத்துர முடியும். இத்த தலைவரு சம்சாரத்தாண்ட எடுத்து சொல்லி மேட்டர முடிச்சிக் குடுத்தா அவங்களுக்கு எதுனா நல்லது நடக்கும். இதானே?’

‘அப்பிடி இல்ல சாந்தி. இத அவங்களே கூட நேர்ல சொல்லிரமுடியும். எதுக்கு என்னை வுடறாங்க? அத்தை நீ யோசிச்சியா?’

அவள் யோசித்தாள். காரணம் ஏதும் தெரியவில்லை. ஆனால் முத்துராமன் சொன்ன காரணம் ஏற்கும்படியாக இல்லை.

இரு எம்.எல்.ஏக்களுக்கும் தலைவர் சம்சாரத்துடன் நேரடிப் பழக்கம் ஏதும் கிடையாது. முறையான அறிமுகம் இனிமேல் – இந்த மாநாட்டை ஒட்டி நேரப்போவதுதான். முதல் சந்திப்பிலேயே நூறு ஏக்கர் வருகிறது, வேண்டுமா என்று கேட்பதில் அவர்களுக்குச் சிக்கல் இருக்கிறது. தவிரவும் அவர்கள் வளைத்துப் போட்டிருக்கிற இடம். என்றால், வர்த்தகப் பேச்சாகிவிடும். மூன்றாம் நபர் ஒருவர் இடம் குறித்து எடுத்துச் சொல்லி, எம்.எல்.ஏக்கள் முன்னின்று முடித்துத் தருவார்கள் என்கிறமாதிரி விஷயத்தைத் திருப்பிச் சொன்னால் பலனளிக்கும்.

‘எனக்கு சுத்தமா வெளங்கல’ என்றாள் சாந்தி.

‘வெளங்கலியா? ரொம்ப ஈசி சாந்தி. எவனோ வெச்சிருக்கற நெலம்ங்கறமாதிரி ஒரு செட்டப்பு. நம்ம எம்.எல்.ஏங்க முடிச்சிக் குடுப்பாங்கன்னு சொல்லி நெருக்கமாயிட்டா அப்பால ஒரு தொடர்பு கிடைக்கும். இவங்க என்னா செய்யப்போறாங்க? பக்காவா ரிஜிஸ்டிரேஷன் முடிச்சிட்டு நயா பைசா வேணாம், அம்மிணிக்கு காணிக்கைன்னு சொல்லிருவாங்க.’

‘ஐயோ! நூறு ஏக்கரு காணிக்கையா?’

‘பின்ன? அரசியல் சாந்தி! நூறு ஏக்கரெல்லாம் ஒண்ணுமே இல்ல. ஆனா அந்த நிமிசம் அந்தம்மாவுக்கு எப்பிடி இருக்கும்னு யோசிச்சிப் பாரு. நூரு ரூவா நோட்டு ஒண்ண •ப்ரீயா குடுத்தாலே மனுச மனசு திக்குன்னும். நூறு ஏக்கரு நெலம்னா சொம்மாவா?’

‘பதிலுக்கு என்னா கெடைக்கும்?’

‘அக்டோபர்ல மந்திரிசபை விஸ்தரிக்கப் போறாங்களாம். அப்பிடின்னு மேல்மட்டத்துல ஒரு பேச்சு இருக்குது. அத்த கணக்குப் பண்ணித்தான் இவங்க இந்த ப்ளான் பண்றாங்கன்னு நெனைக்கறேன்.’

அவளுக்கு உண்மையிலெயே ஒன்றும் புரியவில்லை. ஆனால் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள மிகவும் ஆசைப்பட்டாள். தலைவர் மனைவிக்கு நூறு ஏக்கர் தோட்டம் கிடைத்துவிட்டுப் போகட்டும். எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களாகட்டும். இவனுக்கு என்ன லாபம் அதில்?

‘தெரியல சாந்தி. மெய்யா சொல்லணும்னா தெரியல. கவுன்சிலர் ஆக்குவாரு. இப்பத்திக்கி அதுதான் முடியும். ஆனா கட்சில சீக்கிரம் பெரியாளாயிர முடியும். அடுத்த எலக்சன்ல சேர்மன் ஆனாலும் ஆயிருவேன். அஞ்சு வருசத்துல எம்.எல்.ஏ. ஆயிரணும்னு ஒரு இது இருக்குது.’

‘அது எப்பிடிங்க முடியும். இந்த எம்.எல்.ஏ. இப்பமே செல்வாக்கோடத்தானே இருக்காரு? மினிஸ்டர் ஆயிருவாருன்னு வேற சொல்லுறிங்க. அப்புறம் நீங்க எங்கேருந்து எம்.எல்.ஏ ஆவுறது? இவரு ரிடையர் ஆவுற வரைக்கும் காத்திருப்பிங்களா?’

முத்துராமனுக்கு திக்கென்றிருந்தது. சரியான கேள்விதான். ஆனால் சரியான பதிலை இப்போது சொல்லிவிட முடியாது.

‘கேக்குறன்ல?’

‘என்னா சொல்லுறதுன்னு புரியல சாந்தி. அரசியலுங்கறது ஆபீசு உத்தியோகம் மாதிரி கெடையாது. எப்ப, எவனுக்கு பிரமோசன் கிடைக்கும்னு சொல்லமுடியாது. லக்கு வேணும். கொஞ்சம் நேக்கு வேணும். அப்பப்ப தப்புதண்டா செய்யவேண்டிவரும்.’

‘இப்ப என்ன தப்பு செஞ்சிருக்கிங்க? இதுவரைக்கும்?’

‘ஒண்ணுமில்ல சாந்தி. வட்ட செயலாளருக்கு இதுவரைக்கும் நான் திருநவேலி போயிட்டு வந்த மேட்டரு தெரியாது. என்னிய நம்பி அவர் வுட்டுட்டுப் போன குப்பத்து வேலைங்க அப்பிடியே கெடக்குது. ஏண்டா முடியலன்னு கேட்டாக்கா என்னா சொல்லுறதுன்னு தெரியல. தப்புன்னு பாத்தா அதுதான். ஆனா, வட்டத்துக்கு பயந்துக்கிட்டு இங்க இருந்திருந்தன்னா, எம்.எல்.ஏ. தொடர்பு கிடைச்சிருக்காது. அவரு சொன்ன ஜோலிய முடிக்கலைன்னா திரும்ப குப்பத்துல வந்து விழுந்திரவேண்டியதுதான்.’

சாந்தி வெகுநேரம் அமைதியாக இருந்தாள். பிறகு உறுதியான குரலில் சொன்னாள். ‘ஒண்ணு சொல்லட்டுங்களா? நீங்க என்ன வேணா செய்யிங்க. ஆனா சாக்கிரதையா இருங்க. எனக்கு இதெல்லாம் புரியல. உங்கள புடிச்சிருக்கு. கட்டிக்கிட்டா நல்லா இருப்பம்னுதான் தோணுது. ஆனா அரசியலெல்லாம் நம்மள மாதிரி சாமானியப்பட்டவங்களுக்கு சரிப்படுமான்னு ஒரு கவலை இருக்குது. உங்கள நான் எதுக்கும் தடுக்கமாட்டேன். ஆனா என்னியப்பத்தி எப்பவும் நெனைப்பிங்களா?’

முத்துராமனுக்கு திக்கென்றிருந்தது. அவள் கண்ணோரம் திரண்டு நின்ற ஒரு துளியைச் சடாரென்று துடைத்து, நெருங்கி தோளில் கைவைத்து அணைத்துக்கொண்டான்.

‘சே, என்னா பேசுற? சினிமா டைலாக்கு மாதிரி சொன்னாத்தான் லவ்வா? உன்னிய எப்பிடி நான் மறப்பேன்? பெரிசா ஆவணும்னு நெனைக்கறதெல்லாமே ஒனக்காகத்தான் சாந்தி.’

அவள் எழுந்து கண்ணைத் துடைத்துக்கொண்டாள். ‘சரி, எந்திரிங்க .நேரம் ஆயிருச்சி. போவோம்.’ என்று சொன்னாள்.

முத்துராமன் எழுந்துகொண்டான். எடுத்து வந்திருந்த பைக்கில் அவளை எக்மோர் குப்பத்தருகே கொண்டு இறக்கிவிட்டுவிட்டு திரும்ப வீடு வந்து சேரும்போது மணி ஒன்பதாகியிருந்தது. சாந்தியின் அப்பாவும் அம்மாவும், தான் இப்படி அவளை வெளியே அழைத்துச் சென்று வருவது குறித்து விமரிசனம் ஏதுமில்லாமல் இருப்பது அவனுக்கு ஆறுதலாக இருந்தது. ‘அட என்னா மாப்ள, வயசுக்காலத்துல நா அடிக்காத கூத்தா? நீங்க கட்டிக்கப்போற புள்ளதானே.. கூட்டிக்கிட்டுப் போங்க’ என்று சொன்னது மிகுந்த ஆறுதலாக இருந்தது. சற்று நேரம் பேசிவிட்டு, காப்பி குடித்துத் திரும்பி, வீடு வந்தபோது, வாசலில் இரண்டு கார்கள் நிற்பதைக் கண்டான்.

யாராக இருக்கும் என்று நினைத்தபடி உள்ளே போகவிருந்தவனை, தம்பி சடாரென்று வாசலிலேயே தடுத்து பின்பக்கம் தள்ளிக்கொண்டு போனான்.

‘என்னடா?’

‘உள்ள வராதிங்கண்ணே. சிங்காரண்ணன் வந்திருக்காரு.கையில அருவாளோட ரெண்டு பேரு கூட வந்திருக்காங்க. கொலவெறியில நிக்குறாரு. என்னா ஏதுன்னு புரியல. உன்னிய ரெண்டுல ஒண்ணு பாக்காம போவமாட்டேன்னு சொல்லுறாரு. ஒண்ணுமே புரியலண்ணே.’

(தொடரும்)

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : August 23, 2010 @ 1:54 pm